புல்வாமா தாக்குதல்: தேர்தல் வெற்றிக்காக 40 பேரை கொன்ற பாசிச கும்பல்!

2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாகவும் இருக்கலாம்.

டந்த சில தினங்களுக்கு முன்பு “தி வயர்” என்ற தனியார் செய்தி ஊடகம் நடத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மோடி அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு ஆளுநராக இருந்தவர்தான் இந்த சத்யபால் மாலிக். 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-வை ரத்து செய்த போதும் புல்வாமா இராணுவ தாக்குதல் சம்பவம் நிகழ்வின் போதும் அம்மாநில ஆளுநராக இருந்து பணியாற்றியவர். அதன் பின் கோவா, மேகாலாயா மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் “தி வயர்” ஊடக நேர்காணலில் பங்கேற்ற அவர், இந்திய துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்தார்.

நேர்காணலில் பேசுகையில், “நான் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த வேளையில் உளவுத்துறை எச்சரிக்கை அடிப்படையில், துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்பு கருதி, ஜம்மு-வில் இருந்து அவர்களை இராணுவ எல்லை பகுதிகளுக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர் மற்றும் விமான சேவை உதவி கேட்டு உள்துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டேன். அவர்கள் என்னுடைய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி 40 ராணுவ வீரர்கள் பலியானர்கள்” என்றார்.

மேலும், “துணை ராணுவ வீரர்கள் இப்படி இறந்து போனதற்கு அலட்சியமாக செயல்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் தவறான அனுகுமுறை குறித்து நீங்கள் பொதுவெளியில் ஏதுவும் பேச வேண்டாம்” என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக மோடியை குற்றம் சாட்டியுள்ளார் மாலிக்.


படிக்க: புல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி !


அதன்பின் இந்திய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவலை தொடர்பு கொண்டு, நம்முடைய அலட்சியத்தால்தான் இச்சம்பவம் நடந்துள்ளது, இதற்கு நாமே பொறுப்பு என பேசியபோது “சகோதரர் மாலிக் தயவுசெய்து கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருங்கள், இது வேறு விஷயம்” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார் என்கிறார் சத்தியபால் மாலிக். ஆளும் கட்சியின் முன்னாள் ஆளுநரே இவ்வாறு பேசியது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது சத்யபால் மாலிக் கூறிய கருத்து சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு பெரும் விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது.

முன்னாள்ஆளுநரான சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் பற்றிய இக்கருத்துக்களை கூறுவதற்கு முன்பே, என்.ஐ.ஏ உயர்மட்ட குழு ஒரு விசாரணை நடத்தி அறிக்கையை வெளியிட்டது. அதன் மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் பல சந்தேகங்களை முன்வைத்து நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

“ராணுவ வீரர்களை அழைத்து செல்லும் தரைவழி சாலையில் குறுக்கே பல இணைப்பு சாலைகள் வந்து சேர்கின்றன. அவற்றை முறையாக சோதனையிடாமலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளாமலும் 2000-திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரை 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அழைத்து சென்றது ஏன்? இப்படி இவர்களை அழைத்து செல்வது வழக்கமான ராணுவமுறை அல்ல. அனைத்து வாகனங்களும் தொடர்ச்சியாக அணிவகுத்துச் சென்றதே தாக்குதலுக்கு சாதகமாக அமைந்தது. மேலும் கடுமையாக உளவுத்துறை எச்சரித்தபோதிலும் ஏன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பற்ற முறையில் தரைவழி மார்க்கமாக அழைத்து செல்லப்பட்டனர்? 300 கிலோ பயங்கரமான வெடி மருந்துகளை கொண்ட வாகனம் இந்திய ராணுவப்படை சோதனைகளையெல்லாம் மீறி 10 நாட்கள் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது எப்படி?
பின்பு சரியான நேரத்தில் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி ராணுவ வீரர்களின் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது எப்படி? ஆயுதமேந்திய படையுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்கள் ராணுவ வீரர்களுடன் சென்றனவா?” போன்ற பல்வேறு சந்தேகங்கள் அப்பொழுது இருந்தே எழுப்பபட்டது.


படிக்க: புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !


தற்போது சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துக்களை கணக்கில் கொண்டால் அத்துணை ராணுவ வீரர்கள் இறந்து போவார்கள் என்று தெரிந்தே தங்களுடைய ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக அவர்களை மோடி அரசு பலியிட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அன்று ஆட்சியில் அமர்திருந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் ராணுவ வீரர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என்றும் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் கூறியது. மேலும் ராணுவ வீரர்களின் ‘தியாக’த்தை அரசியலாக்கி ராணுவ வீரர்களின் மரணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நம் அனைவரின் வாயை அடைத்தது தேசப்பற்றை ஏலம் எடுத்துள்ள காவிக்கும்பல்.

இவ்வாறு பேசிய தேசபற்றாளர்களின் தலைவர் மோடிதான் புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்று முடிந்த ஆறு மாதங்கள் கழித்து மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் “புல்வாமா போன்ற தாக்குதல்களை முறியடிக்க சிந்தித்து வாக்களியுங்கள்” என்று மேடையில் பேசினார். மேலும், தீவிரவாதி மற்றும் பயங்கிரவாதிகளை ஒழிக்க வந்த தலைவனாக தன்னை வெளிகாட்டிக்கொண்டு தேர்தலை சந்தித்தார்.

புல்வாமா தாக்குதல் பற்றி நம்மை பேசக் கூடாது விவாதிக்க கூடாது என்று கூறிய இவர்கள்தான் அந்த தாக்குதல் சம்பவத்தை மேடையில் பேசி மக்கள் மத்தியில் அனுதாப வாக்குகளை சேகரித்தனர். மேலும் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை உருவாகி கொண்டிருந்த அந்நேரத்தில் 2019 தேர்தலுக்கு சாதகமாக புல்வாமா தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியமைத்தது பாசிச கும்பல்.

இத்தகைய தங்களின் நாசகர தந்திரங்களை அம்பலப்படுத்தியதால் ஆவேசப்பட்டு சத்யபால் மாலிக் மீது சி.பி.ஐ-யை ஏவி விட்டிருக்கிறது மோடி அரசு. ஆனால் இதோடு மோடி அரசு ஓய்ந்துவிடாது. 2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாக இருக்கலாம் அல்லது புல்வாமா தாக்குதலில் நடந்ததை போல குறிப்பிட்ட மக்களை தெரிந்தே கொன்றுவிட்டு அதை வைத்து அரசியல் செய்வதாகவும் இருக்கலாம். இந்த பாசிச கும்பலின் நயவஞ்சக அரசியலுக்கு பலியாகாமல் இக்கும்பலை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க