டந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலை 3 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எங்கே இருக்கிறார் என நாடு தேடிக்கொண்டிருந்தது. நான்கைந்து மணி நேரம் கழிந்த பிறகும்கூட பிரதமர் பற்றிய தகவல் இல்லை. அன்று 2.30 முதல் 4.30 மணி வரை ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் ‘ஷூட்டிங்கில்’ இருந்ததாக காங்கிரஸ் கட்சியும் சில ஊடகங்களும் கூறின. ஆனால், என்ன ‘ஷூட்டிங்’ என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த இருபதாண்டுகளில் இந்திய இராணுவத்தின் மீது காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர்.

புல்வாமா தாக்குதல் நடத்தபட்ட சமயத்தில் பிரதமர் எங்கே இருந்தார் என எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் கேள்வி கேட்ட நிலையில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பிரதமர் ராம்நகர் அருகே புலிகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்தார் என தெரிவித்தார். ஜிம் கார்பெட் சரணாலய நிர்வாகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. ரவி சங்கர் குறிப்பிட்ட ராம்நகர் கார்பெட் சரணாலய பகுதியில்தான் அமைந்துள்ளது.

படிக்க:
♦ புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

பிப்ரவரி 14 தேதி வாக்கில், மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் கிரில்ஸ் இந்தியாவில் முக்கியமான நபருடன் சூட்டிங்கில் இருப்பதாக தனது ட்விட்டர் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவுகள் சில நாட்களில் அழிக்கப்பட்டன. இந்த விவரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், திங்கள்கிழமை டிஸ்கவரி சேனல் வெளியிட்ட விளம்பரத்தில் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் மோடி ஜிம் கார்பெட் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் தோன்றியிருக்கிறார். அதில், “சுற்றுச்சூழலையும் வன உயிரினங்களையும் எப்படிப் பாதுகாப்பது என உலக மக்களுக்கு சொல்லப்போகிறேன்” என்கிறார் பிரதமர். ‘நாட்டைக் காப்பாற்றும் இராணுவ வீரர்கள்’ என முழங்கிய மோடி, அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்ட நிலையில், வனத்தைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறார் என சமூக ஊடகங்களில் மக்கள் சிரித்து வைத்திருக்கின்றனர்.

பத்திரிகையாளர் ரவி நாயர், ‘இறந்த இராணுவ வீரர்களுக்கு மோடி செலுத்தும் அஞ்சலி இது’ என்கிறார்.

பேன்னர்ஜி-யின் பதிவு இது…

#பியர்கிர்ல்ஸ் : மோடிஜி, பொழுது சாய ஆரம்பிச்சிருச்சு. டின்னருக்கு என்ன பண்ணலாம்?
#மோடிஜி : அந்தா தண்ணி குடிச்சிட்டிருக்குல ஒரு மாடு..
#பிகிர்ல்ஸ் : அத அடிச்சு சாப்டப் போறோமா?
#மோடிஜி : இல்ல, அது கொஞ்ச நேரத்துல உச்சா போகும். கோமூத்திராவ ரெண்டு மடக்கு குடிச்சிட்டு குப்புறபடுப்போம்.

ஜெட் லீ-யின் கற்பனை இது..
பேர் கிரில்ஸ்: மோடி ஜி, இது எதன் கழிவு?
மோடி: என்னுடைய அரசின் கீழ் இந்திய பொருளாதாரம்.

ஜெட் லீ-யின் மற்றொரு கற்பனை உரையாடல்
பேர் கிரில்ஸ்: இதுவரை நீங்கள் செய்த செயல்களில் காட்டுத்தனமான செயல் எது?
மோடி: நவம்பர் 8, 2016-ம் ஆண்டு ‘மித்ரோன்’ என சொன்னதுதான்.

“உண்மையில் பேர் கிரில்ஸ் மோடியை கடினமான சூழ்நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்பினால், அவரை பத்திரிகையாளர் சந்திப்பு அழைத்துச் செல்ல வேண்டும்” என யோசனை தருகிறார் ஸ்ரீவத்சவா.

“கேமராக்களுக்கு முன்பு மட்டும் வாய்விட்டு சிரிக்கும் மோடியை, அப்படி எந்த ஜோக் எல்லா காலத்திலும் சிரிக்க வைக்கிறது என அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்கிறார் அங்கூர் ஸ்டார்க்.

மோடி என்னுடன் போட்டிப்போட விரும்புகிறாரா? நான் டிஸ்கவரி ஆஃப் இந்தியா எழுதினேன். அவர் டிஸ்கவரி இந்தியா சூட்டிங்கில் இருக்கிறார் என பகடி செய்கிறது ஜவஹர்லால் நேரு பெயரில் உள்ள இந்த ட்விட்டர் பதிவு.

மோடியின் செயலை பகடி செய்தும் ஆதரித்தும் சமூக ஊடகங்கள் நேற்றைய தினம் பரபரப்பாகின. ஆனால், இராணுவ பலத்தை தனது பராக்கிரமமாகப் பறைசாற்றிக் கொள்ளும் தனது சவடாலை, காஷ்மீரின் பிரதான சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திப் பொய்யாக்கிய நிலையில், அது பற்றிய பிரக்ஞையும் உணர்ச்சியும் இல்லாமல் ஒரு நாட்டின் பிரதமர் கேமரா முன் நிற்கிறார். இது பிரதமரின் சுயமோகத்தையும் பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் முன்வைக்கும் தேசபக்தி போலியானது என்பதையும் ஒருசேரக் காட்டுகிறது. குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட பிரதமருக்கு  இல்லை என்பதையும் இது காட்டுகிறது.


அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா,  ஸ்க்ரால்