Tuesday, September 27, 2022
முகப்பு சமூகம் தொலைக்காட்சி புனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி

புனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி

-

புனேவில் இயங்கிவருகிறது, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி (FTII). இதன் தலைவர் பதவியில் தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சவுகானை மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சகம் நியமித்திருக்கிறது. யார் இந்த சவுகான்? பா.ஜ.க-வில் 20 வருடமாக இருந்திருக்கிறார், பிரபல இந்தி தொடரான மகாபாரதத்தில் ‘யுதிஷ்டிரர்’ (தருமர்) வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதைத் தாண்டி கஜேந்திர சவுஹானை யாருக்கும் தெரியாது.

FTII போராட்டம்
சவுகான் நியமனத்தைக் கண்டித்து காலவரையற்ற போராட்டமும், வகுப்பு புறக்கணிப்பும் தொடர்கின்றன

இவருடைய நியமனத்தைக் கண்டித்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12-06-2015 முதல் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டமும், வகுப்பு புறக்கணிப்பும் 20 நாட்களாக தொடர்கின்றன. மாணவர்கள் மட்டுமன்றி கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், திரைத்துறையினரும், ஏற்கனவே சேர்மன் பதவி வகித்த அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநில புனே நகரில் 1960-களில் தொடங்கப்பட்டது தான் “ இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி (Film & Television Institue of India)’. தன்னாட்சி நிறுவனமான இது மத்திய அரசின்  செய்தி மற்றும் ஒளிபரப்பத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. உலகளவில் கொஞ்சம் பெருமை பெற்ற இந்த நிறுவனத்தில் 30 ஆசிரியர்கள் மற்றும் 400 மாணவர்கள் படிக்கின்றனர். பேரா. யு.ஆர். அனந்த மூர்த்தி, அடூர் கோபாலகிருஷ்ணன், நசிருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், ஷியாம் பெனகல் போன்றவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து வந்தவர்கள்.

புனே திரைப்படக் கல்லூரி
பேரா. யு.ஆர். அனந்த மூர்த்தி, அடூர் கோபாலகிருஷ்ணன், நசிருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், ஷியாம் பெனிகல் போன்றவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து வந்தவர்கள்.

சரி, இப்படிப்பட்ட கல்வி நிறுவனத்தில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவருக்கு என்ன வேலை? நாட்டின் கல்வி-கலை நிறுவனங்களில் பார்ப்பனியத்தை திணிக்கும் முகமாகவே பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்த நியமனத்தை செய்துள்ளது. கஜேந்திரனின் தகுதியே அதை உரக்கக் கூவுகிறது.

போராடும் மாணவர்களின் குற்றச்சாட்டுகள் இவைதான்…

1. கஜேந்திர சவுகானுக்கும் FTII-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்நாள் வரை இங்குள்ள மாணவர்களுடனோ அல்லது துறை சார்ந்த கலைஞர்களுடனோ எந்தவித தொடர்புமே இல்லாமல் இருந்து வந்தவர்.

2. இங்கு கொடுக்கப்படும் பயிற்சி முறைகளைப் பற்றி இவருக்கு எந்த விதமான அனுபவமும் இல்லை, அறிவுமில்லை; மற்றும் இங்கு நடந்த எந்த நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பெறவோ இல்லை தலைமை தாங்கியதோ இல்லை.

3. கலைத்துறையைப் பற்றி எந்தக் கண்ணோட்டமோ அல்லது கல்விமுறையோ எதுவுமே இல்லாத  இவரால் எந்தப் பங்களிப்பையும் இந்த நிறுவனத்திற்கோ அல்லது மாணவர்களுக்கோ தரமுடியாது.

4. மோடியின் நிழலுருவம் இந்த வளாகத்துக்குத் தேவையில்லை

கஜேந்திர சவுகான்
பிரபல இந்தி தொடரான மகாபாரதத்தில் ‘யுதிஷ்டிரர்’ (தருமர்) வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதைத் தாண்டி கஜேந்திர சவுஹானை யாருக்கும் தெரியாது.

போராடும் மாணவர்களின் தரப்பு மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தித் துறைக்கு இது குறித்து புகார் மனு அனுப்பியிருந்தும் இதுவரை அங்கிருந்து எந்த முறையான பதிலும் வரவில்லை. மாறாக போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று சவுகானுடைய நியமனத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

FTII-ன் சேர்மன் பதவிக்கு சவுகானை விடத் தகுதியற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை இதுவரை அரசியலே பேசாத பல அறிஞர் பெருமக்கள், திரைத்துறை கலைஞர்கள் கூட சுட்டிக் காட்டுகிறார்கள்.

பா.ஜ.க-வின் அரசியல் பின்னணியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உள்ளே நுழைந்த சவுகான் தன்னுடைய தகுதியின்மை குறித்த குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்காமல் வெற்று வாய்ச்சவடாலாக “என்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்த நினைத்திருந்தால் என்னால்  நாடாளுமன்ற வேட்பாளராகக் கூட போட்டியிட்டிருக்க முடியும்; மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வாருங்கள்! நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்; மேலும் தயைகூர்ந்து எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று திமிராகவும் அதே சமயம் பம்மியும் பதிலளித்துள்ளார். கெஞ்சுவதைப் போன்று கொல்வது பாசிஸ்டுகளின் உத்தி.

முன்னதாக, மோடிக்கு சொம்படித்து ஒரு மொக்கையோ மொக்கை குறும்படம் எடுத்து பிரபலமானவர் சைலேஷ் குப்தா FTII-ல் கவுன்சில் உறுப்பினராக்கப்பட்டார். “Shapath Modi ki ”(மோடியின் சபதம்) என்ற குறும்படத்தில் மோடி டீ-பாயாக ஆரம்பித்து PM-பாயாக ஆனால் எப்படியெல்லாம் செயல்படுவார் என்பதை முன்வைத்து படத்தை எடுத்து மோடியின்  இதயத்தில் இடம்பிடித்தார் அவர்.

அந்தப் படத்தைப் பார்த்து திரைப்பட உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. ஆனால், சைலேஷ் குப்தா இப்போது திரைப்படக் கல்லூரி கவுன்சில் உறுப்பினர்.

’ஜெய் பீம் காம்ரேட்’ , ‘வார் அண்ட பீஸ்’, ‘பாம்பே அவர் சிட்டி’ ‘ இன் த நேம் ஆஃப் காட்’ போன்ற ஆவணப் படங்களை இயக்கி தயாரித்த ஆனந்த் பட்வர்தன் கூறும் போது  “இந்த நிறுவனத்தைக் காவி மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இதைப் பார்க்க முடியும்; நாடு முழுவதையுமே காவி மயமாக்க முற்படும் போது இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சவுகான் நியமனத்தை பற்றி அம்பலப்படுத்துகிறார்.

கண்டன ஆர்ப்பாட்டம்
சவுகான் நியமனத்தைக் கண்டித்து கேரளாவில் ஆர்ப்பாட்டம்

திரைத்துறை இயக்கத்தில் இறுதியாண்டு படிக்கும் ஒரு மாணவர்  “கஜேந்திர சவுகானுக்கு அனுபவமோ, இயல்பான தலைமைத்துவமோ அல்லது தரமான படைப்புக்களோ இல்லை..மாறாக முற்றிலும் இவருடைய பதவிக்குப் பின்னால் பா.ஜ.க என்னும் அரசியல் சாயம் மட்டுமே உள்ளது” என்கிறார்.

FTII- மட்டுமல்ல, இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக பார்ப்பன வெறிபிடித்த சுதர்சன ராவ் என்ற கோமாளியை கடந்த ஆண்டு நியமனம் செய்தனர். இந்த திமிர் பிடித்த முட்டாள் வருணாசிரம தர்மம் என்பது சரியானதே என்று நியாயப்படுத்துவதுடன், ஆர்.எஸ்.எஸ்-உடன் நேரடித் தொடர்புடைய ’இதிகாஸ் சங்காலன் யோஜனா’ என்ற அமைப்பின் தலைவராக ஆந்திராவில் இருந்து செயல்பட்டு வந்தவர். மேலும் இஸ்லாமியர்கள் ஆண்ட காலம் இந்துக்களுக்கு இருண்ட காலம் என்ற பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நடிகை ஸ்மிருதி இரானியின் கல்வி மோசடி குறித்த ஒரு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதாவது ஒரே கால கட்டத்தில் பி.ஏ படித்ததாக ஒரு வேட்பு மனுவிலும், பி.காம் படித்திருப்பதாக வேறு ஒரு வேட்பு மனுவிலும் தாக்கல் செய்திருக்கிறார். ஐ.ஐ.டி-ல் APSC அமைப்பைத் தடை செய்த அமைச்சகம் இவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

சி.பி.எஸ்.ஈ பள்ளிகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவிற்கு, ஆர்.எஸ்.எஸ்-ன் வித்யாபாரதி எனும் காவி கல்வி நிறுவன கோஷ்டியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தீனா நாத் பத்ராவை நியமனம் செய்தனர். இவர் தான் “லார்ட் கணேஷ்’-க்கு அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து யானை முகத்தைப் பொருத்தியதாக ஒரு கைப்பிள்ளை காமடியை அவிழ்த்து விட்டவர். இது தொடர்பான புத்தகம் “தேஜோ மயி பாரத்” குஜராத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகத் திணிக்கப்பட்டுள்ளது.

இந்தித் திரைப்பட சென்சார் போர்டில் பாஜக ஆதரவு பெற்ற பகலாஜ் நிகலானியை நியமனம் செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-ல் பின்னணி உள்ள இவரும் கஜேந்திர சவுஹான் நியமனத்தை ஆதரித்து பேசி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்காக ’Har Har Modi, Ghar Ghar Modi’

என்ற வீடியோவைத் தயாரித்துப் பிரச்சாரம் செய்தவர்தான் இந்த நிகலானி. இந்தியத் திரைத்துறையில் முற்போக்குப் படங்கள் வருவதற்கான ஒரு சில சாத்தியக்கூறுகளையும் இனி சென்சார் போர்டு தடை செய்யும் அபாயம் உள்ளது.

சவுகான் நியமனம் - கண்டன போராட்டம்
“சவுகான் திரும்பிப் போ”

கோயாபல்ஸுகள் (ஹிட்லரின் அமைச்சர்) வந்துவிட்டால் அறிவுக்கு அங்கே என்ன வேலை? கல்வி நிறுவனங்களில் பார்ப்பனியத்தை திணித்து விட்டால் மக்களை இந்துமதவெறி அரசியலுக்குள் அணிதிரட்டுவது சுலபம் என்று பார்ப்பன இந்துமதவெறியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் விளைவு அவர்கள் நினைப்பதன் எதிர் விளைவாகவே இருக்கும் என்பது நிச்சயம். இங்கே கூட பாருங்கள், பூனா திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பா.ஜ.க, மோடி கும்பலுக்கு எதிராக மாறிவிட்டனர். இந்த புதிய தலைமுறை கலைஞர்கள் நாளை படமெடுக்கும் போது அது இந்துத்துவாவின் உச்சிக் குடுமியை பிடித்து உலுக்குவது உறுதி.

இது தொடர்பான செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க