privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்தமிழகம்நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !

நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !

-

ன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,590/-, மோட்டா ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,550/- என நிர்ணயித்து, 2017 – 18 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது, மைய அரசு. இந்த விலையோடு ஊக்கத் தொகையையும் சேர்த்து, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,660/-, மோட்டா ரக நெல்லுக்கு ரூ.1,600/- என நிர்ணயித்து கொள்முதல் விலையை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் டெல்லியில் அணிதிரண்டு கடந்த நவம்பரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இந்தியாவெங்கும் விவசாயிகள் தமது விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிக்கக் கோரிப் போராடி வருகிறார்கள். அக்கோரிக்கையை அடைவதற்காகத் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை அரசின் கொடிய அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மைய அரசும் தமிழக அரசும் அறிவித்திருக்கும் இந்த ஆதார விலைகள் நெல் உற்பத்திச் செலவை ஈடுகட்டுவதற்குக்கூடப் பயன்படப் போவதில்லை. ஆதார விலை, அதற்கும் மேலே ஊக்கத் தொகை என ஆட்சியாளர்கள் காட்டும் ஜிகினாவெல்லாம் விவசாயிகளை மீண்டும் ஏமாற்றி, அவர்களின் வயிற்றில் அடிக்கும் பொருளாதாரத் தாக்குதலாகவே உருவெடுத்து நிற்கின்றன.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 2014 -ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்வதற்கு ரூ.1,424 செலவாகும் எனக் கணக்கிட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இடுபொருட்களின் விலையும் பிற வாழ்க்கைச் செலவுகளும் ஏறியிருப்பதைக் கணக்கில் கொண்டால், நெல் உற்பத்திச் செலவு இருநூறு, முன்னூறு என மேலும் அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்க வாய்ப்பில்லை. பிற மாநிலங்களிலும் நெல் உற்பத்திச் செலவு தமிழகத்தைவிடப் பெருமளவு குறைவாக இருக்க வாய்ப்பேயில்லை.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போது எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட விவசாய கமிசன், உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரை விவசாயிகளின் அத்தியாவசியமான வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்றபோதும், இந்தக் குறைந்தபட்ச, கட்டுப்படியாகக்கூடிய விலையைத் தருவதற்குக்கூட மைய அரசு தயாராக இல்லை.

சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டால், 2014 -ஆம் ஆண்டே நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,100 -க்கு மேல் நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட நெல் கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக்கூட ஈடு கட்டவில்லை. 2015 – 16 ஆம் ஆண்டில் மோட்டா ரகத்துக்கு ரூ.1,410, சன்ன ரகத்துக்கு ரூ.1,450; 2016 – 17 ஆம் ஆண்டில் ரூ.1,470 மற்றும் ரூ.1,510; 2017 – 18 ஆம் ஆண்டில் ரூ.1,550 மற்றும் ரூ.1,590.

ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகள் ஆயிரம், இரண்டாயிரம் என அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களிடமிருந்து, அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய இலாபத் தொகையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில், அதனைவிட ஆயிரம் ரூபாய் குறைவாக நிர்ணயித்து, போராடிவரும் விவசாயிகளை எள்ளி நகையாடியிருக்கிறார்கள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

எந்தவொரு உற்பத்தியாளராவது தனது உற்பத்திப் பொருளை, உற்பத்திச் செலவைவிடக் குறைவான விலைக்கு விற்பதற்குச் சம்மதிப்பானா? ஆனால், அரசோ, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறித்துவிட்டு, கொள்முதல் விலை என்ற பெயரில் அவர்களின் அடிவயிற்றில் அடித்துவருகிறது. தமது உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெரு முதலாளிகளுக்கு அளித்திருப்பதோடு, அவர்களுக்கு மானியங்கள், கடன் தள்ளுபடி, வரித் தள்ளுபடி உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் அரசு, விவசாயிகளுக்கோ உர மானியம் வழங்குவதற்குக்கூட ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடுகிறது.

டிராக்டரை வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனமாகப் பட்டியல் இடுகிறது. கடன் தள்ளுபடி கேட்டுப் போராடினால், போலீசை இறக்கிவிட்டு அடித்து அவமானப்படுத்துகிறது, துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலையும் செய்யத் துணிகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, குறுவை அறுவடை தொடங்கும் வேளையில், அதாவது அக்டோபர் 1 -ஆம் தேதியே நெல் கொள்முதல் விலையை அறிவித்து, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலும், ஊழல், கொள்ளையடிப்பதிலும் மட்டுமே அக்கறையும் கவனமும் கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, மிகச் சாவகாசமாக மூன்று மாதங்கள் கழித்து, சனவரி முதல் வாரத்தில்தான் கொள்முதல் விலையை அறிவிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்ததோ, அதில் ஒருபைசாகூட கூட்டி வழங்கப்படவில்லை.

இவ்வளவு அலட்சியமாக கொள்முதல் விலையைத் தாமதமாகவும் குறைவாகவும் அறிவித்து, கொள்முதல் நிலையங்களையும் இனிதான் திறக்க வேண்டும் என்ற நிலையில், குறுவை அறுவடை செய்த விவசாயிகள் தமது விளைச்சலைத் தனியாரிடம் வந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டனர். விவசாயிகளின் இந்த இக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டுள்ள தனியார் கமிசன் மண்டி ஏஜெண்டுகள், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலைக்கும் கீழாக விவசாயிகளிடமிருந்து குறுவை நெல்லைக் கொள்முதல் செய்திருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறார், பா.ம.க. நிறுவனர் ராமதாசு.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி, அதற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையும் காப்பீட்டுத் தொகையும் இன்னமும் பெருமளவு விவசாயிகளுக்குக் கிடைக்காத அவலம், இந்த ஆண்டு பருவ மழை பரவலாகப் பெய்தாலும், பெய்த மழை விளைச்சலுக்குப் போதாது என்ற இக்கட்டான நிலை – இப்படித் தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில், எரிகிற கொள்ளியில் எண்ணெயை எடுத்து ஊற்றியது போல, விவசாயிகள் கோரியதையும்விட ஆயிரம் ரூபாய் குறைவாக கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, ஒன்று விவசாயத்தை விட்டு வெளியேறு, இல்லையா, வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு ஒழிந்து போ எனத் திமிராக அறிவித்திருக்கிறார்கள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைத் தர மறுக்கும் மோடி அரசுதான், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என சவுண்டுவிட்டு வருகிறது. நூறு ரூபாய்கூட ஊக்கத் தொகையாகத் தர மறுக்கும் எடப்பாடி அரசுதான், கால்வாய்களை, கண்மாய்களைத் தூர்வாரும் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் 300 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கொள்ளையடித்திருக்கிறது.

பா.ஜ.க.வும், அதனின் அடியாள் படையான எடப்பாடியும் விவசாயிகளை ஏமாற்றிவரும் மோசடிப் பேர்வழிகள் மட்டுமல்ல. அவர்கள் விவசாயிகளின் எதிரிகள். அவர்களிடம் கெஞ்சிப் பயனில்லை என்பதைக் காலம் உணர்த்தி விட்டது. இனி, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அந்த எதிரிகளிடமிருந்து பிடுங்கிக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

-குப்பன்

-புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க