பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அமல்படுத்திய முதலாண்டில் 10 விவசாயிகளில் மூன்றுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரூ. 6,000 பெற்றுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 2018, டிசம்பர் முதல் 2019, நவம்பர் வரை ஒராண்டிற்கு ஒதுக்கிய தொகையில் 41% மட்டுமே மோடி அரசாங்கம் செலவழித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25% விவசாயிகள் மட்டுமே மூன்று தவணைகளிலும் பயனைடைந்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் 8 மாதங்களை விட அதற்கு முன்பு ஐந்து வாரங்களில் தான் பி.எம் கிசானின் கீழ் அதிக விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் பெற்ற தரவுகளிலிருந்தும், வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் இது அம்பலமாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் கிசான் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேகம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்பது கோடி விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலுக்கு முன்னர் முடிவடைந்த முதல் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் பதிவு செய்யும் வேகம் குறைந்துவிட்டது.

படிக்க:
♦ எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

சுமார் 75% விவசாயிகளுக்கு திட்டம் போய் சேரவில்லை:

டிசம்பர் 2018-க்கும் 2019 டிசம்பர் தொடக்கம் வரையிலும் 3.85 கோடி விவசாயிகள் மட்டுமே ஒவ்வொரு தவணையிலும் ரூ. 2,000 பெற்றுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 14.5 கோடி விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6,000 கிடைக்கும் என்று திட்டம் தொடங்கப்பட்ட போது அரசாங்கம் மதிப்பிட்டது.

திட்டத்தின் முதல் ஆண்டில் 26.6% விவசாயிகள் மட்டுமே பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ .6,000 பெற்றுள்ளனர்.

அதிகாரிகளால் மோசமாக செயல்படுத்தப்பட்டது அல்லது விவசாயிகளின் தரப்பில் பொருத்தமான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சிக்கல் நிகழ்ந்திருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு காலப்பகுதியில் 44% விவசாயிகள் இரண்டு தவணைகளையும் (ரூ. 4,000), 52% விவசாயிகள் ஒரே தவணையும் (ரூ .2,000) மட்டுமே பெற்றுள்ளனர். அதாவது முதலாண்டில் 48% விவசாயிகள் ஒரு தவணை கூட பெறவில்லை.

பாதி விவசாயிகள் ஒரு தவணை (ரூ .2,000) கூட பெறவில்லை. டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை – பயனடைந்த விவசாயிகளின் விழுக்காடு

கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 7.6 கோடி விவசாயிகள் ஒரு தவணையாக ரூ .2,000 பெற்றதாக அமைச்சகம் வழங்கிய தரவுகள் கூறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதன் படி பார்த்தால் 6.8 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ஒரு தவணை கூட பெறவில்லை என்று தெரிய வருகிறது.

அரசாங்கம் நினைத்தபடி முதல் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 14.5 கோடி விவசாயிகளுக்கும் திட்டம் சென்றிருந்தால் இதற்கான செலவு ரூ. 87,000 கோடியாக (ரூ .6,000 x 14.5 கோடி) இருந்திருக்கும். ஆனால் உண்மையான செலவு அதில் 41% (36,000 கோடி ரூபாய்) மட்டுமே.

படிக்க:
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
♦ பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !

தேர்தல்களுக்குப் பிறகு ஆமை வேகம்:

மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 24, 2019 அன்று பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே வாக்காளர்களை முதல் தவணை (டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019) சென்றடைவதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது.

இதன் பொருள் முதல் காலாண்டில் இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த அரசாங்கத்திடம் ஐந்து வாரங்கள் மட்டுமே இருந்தது. இருப்பினும், இந்த காலகட்டத்தில்தான் பெரும்பாலான விவசாயிகள் பிரதமர் கிசானின் கீழ் பதிவு செய்யப்பட்டனர்.

தேர்தலுக்கு பிறகான எட்டு மாதங்களை விட அதிகமான விவசாயிகள் மக்களவை தேர்தலுக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை ஒவ்வொரு காலாண்டிலும் பிரதமர் கிசானின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை (கோடியில்)

(குறிப்பு : தொழில்நுட்ப ரீதியாக இந்த திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து 2019 மார்ச் 31 வரை மட்டுமே முதல் காலாண்டிற்காக இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்ய அரசாங்கத்திற்கு நேரம் இருந்தது. மூலம்: வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்)

திட்டத்தை புதிதாக தொடங்கும் அதே நேரத்தில் இந்தியா முழுமைக்குமான திட்டத்தை செயல்படுத்துவதற்கான மிகக் குறைந்த திறன் மட்டுமே இருந்த போதிலும், 4.74 கோடி விவசாயிகளை மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாகவே அதாவது 2019 பிப்ரவரி 24 முதல் மார்ச் 31 வரை வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் பதிவு செய்ய முடிந்தது.

அதன் பிறகு வேகம் கணிசமாகக் குறைந்தது. அதாவது இரண்டாவது காலகட்டத்தில் நான்கு மாத காலப்பகுதியில் வெறுமனே 3.08 கோடி புதிய விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டனர். 2019, நவம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலகட்டத்தில் 1.19 கோடி விவசாயிகளை மட்டுமே (முதல் காலகட்டத்தில் பதிவு செய்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே) அரசாங்கம் பதிவு செய்ய முடிந்தது.

இது தேர்தல்களுக்குப் பிறகு இரண்டாவது காலகட்டத்தில் ஆதார் கட்டாயமாகிவிட்டதால் அதன் தகவல்களை சரிப்பார்ப்பதில் ஏற்பட்ட சிக்கலை இதற்கு காரணமாக அரசாங்கம் கூறியுள்ளது. திட்டத்தின் முதல் காலகட்டத்தில் ஆதார் கட்டயமாக்கப்படவில்லை.

இதனால் ஆதார் இணைப்பு அக்டோபரில் தளர்த்தப்பட்டது. ஆயினும் மூன்றாவது காலகட்டத்தில் விவசாயிகளை பதிவு செய்வது குறைந்து இறுதியில் 1.19 கோடி விவசாயிகள் அதாவது முதல் காலகட்டத்தை விட நான்கில் ஒரு பங்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டனர்.

படிக்க:
♦ மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

தொடக்கத்தில் விவசாயிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் மிகையாக மதிப்பிட்டிருக்கலாம் என்று வேளான் அமைச்சகம் இதற்கு வேறொரு காரணம் கூறுகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் ‘யார் விவசாயி’ என்ற வரையறையின் அடிப்படையில் பார்த்தால் அரசாங்கம் மதிப்பிட்டதை விட விவசாயிகள் அதிகமாக இருக்கக்கூடும் என்பதை காட்டுகிறது.

அரசாங்கத்திற்கு தேவையான தரவுகளை வழங்குவதில் விருப்பமற்ற அணுகுமுறையுடன் இருக்கும் சில மாநிலங்களும் இந்த சிக்கலுக்கு பொறுப்பேற்க வேண்டும். சான்றாக, இந்த திட்டத்தின் கீழ் பங்கேற்க மறுத்து விட்டதால் ஒரு விவசாயியின் விவரங்களை கூட மேற்கு வங்கம் வழங்கவில்லை. அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி மேற்கு வங்கத்தில் 68 லட்சம் விவசாயிகள் இருக்க வேண்டும். ஆனாலும் பிரதமர் கிசானின் கீழ் மேற்கு வங்கத்தில் பயனாளிகள் யாருமில்லை.

பயனாளிகள் குறித்த தகவல்களை மாநிலங்கள் வழங்காத வரை மைய அரசாங்கத்தினால் பணத்தை வழங்க முடியாது. எதார்த்ததில் மாநிலங்கள் கேட்டால் மட்டுமே பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

பாஜக ஆளும் மாநிலங்களும் கூட இதில் குற்றவாளிகள் தான். கர்நாடகா, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே 2.5 கோடி விவசாயிகள் கணக்கில் வராமல் உள்ளனர். பீகாரில் மட்டும் 1.13 கோடி பேர் கணக்கில் வராமல் உள்ளனர். அங்கு 1.5 கோடி விவசாயிகளில் 44 லட்சம் விவசாயிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நான்காவது காலகட்டத்தில் ஆறு கோடி விவசாய குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்:

திட்டத்தின் முதலாண்டுக்கு பிறகு (டிசம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான) நான்காவது தவணைக்காக ஆறு கோடி விவசாயிகளின் கணக்குகளில் ரூ .2,000 பணம் போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2020 ஜனவரியில் அறிவித்துள்ளார்.

தற்போது நான்காவது காலகட்டத்தில், ஆறு கோடி விவசாயிகளின் கணக்குகளில் ரூ .12,000 கோடியை மோடி போட்டிருக்கிறார். 2019, நவம்பர் 30 -க்குள் ஒன்பது கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில் வெறும் ஆறு கோடி விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் சென்றது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நவம்பர் 30 -க்குப் பிறகு அதிகமான விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். அந்த தரவு இன்னும் கிடைக்கவில்லை.

ரூ .12,000 கோடி பரிமாற்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், 2020 மார்ச் வரை பிரதமர் கிசானின் கீழ் செலவிட வேண்டிய தொகையில் (ரூ .95,000 கோடி) 50% மட்டுமே அரசாங்கம் செலவிட்டுள்ளது.

பொருளாதார சரிவை சமாளிக்க மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உட்பட பல முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே வாதிடுகின்றனர். கிராம பொருளாதார சரிவு, வேலையிழப்பு என்று உள்நாட்டில் மக்களின் வாங்கும் திறன் கடுமையாக சரிந்திருக்கும் நேரத்தில் இது போன்ற திட்டங்களின் கீழ் மக்களுக்கு மேலும் பணத்தை வழங்குவது தான் சரியான முடிவாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் 47,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் இருப்பது எந்த அளவிற்கு மக்கள் விரோதமாக மோடி அரசாங்கம் இருக்கிறது என்பதையே அம்பலப்படுதுகிறது.


தமிழாக்கம் : 
சுகுமார்
நன்றி :  தி வயர்.