வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி

காந்தியைச் சுட்ட அதே துப்பாக்கிதான்
காந்தி சுடப்பட்ட அதே நாளிலும் வெடிக்கிறது

மக்களின் விடுதலைக்கான
நீண்ட போராட்டத்திலிருந்து
காந்திக்கு இதே நாளின் அந்தியில்
ஒருவன் நிரந்தர விடுதலை அளித்தான்

அதே நாளில் விடுதலைக்கான ஊர்வலத்தில்
ஒருவன் மாணவர்களை நோக்கி
துப்பாக்கியால் சுடுகிறான்
‘இதோ நான் உங்களுக்கு விடுதலையைக்
கொண்டு வருகிறேன்’ என்று முழங்குகிறான்

அதே துப்பாக்கி
பெயர்கள்கூட அதிகம் மாறவில்லை
இன்று ராம்பக்த் கோபால்
அன்று கோபால் கோட்ஸே
ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு
அன்று குண்டடிபட்ட காந்தி
‘ஹேராம்’ என்றார்
இன்று சுடுகிறவன்
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்கிறான்

வெள்ளைக் கொடியை ஏந்தியிருந்த
ஒருவனின் கைகளில் ரத்தம் பெருகுகிறது
அந்தக் கொடிமேல்
நெருப்பின் வண்ணமாய்
அந்த ரத்தம் பெருகுகிறது

கருப்புப் படைகள் ஆயத்தமாகிவிட்டன
நேற்று தடிகளோடு வந்தார்கள்
இன்று துப்பாகியோடு வருகிறார்கள்
நாளை வதைமுகாம்களுக்கான
வாகனங்களோடு வருவார்கள்

கடந்த மாதம் போராடுகிறவர்களின் மேல்
குண்டாந்தடிகளை பாய்ச்சிய காவலர்கள் முன்
ஒருவன் துப்பாக்கியுடன் நடனமாடுகிறான்
இது தனது அரசு
இது தனது படை என்று
முழுமையாக நம்புகிறான்

நாம் அமைதி ஊர்வலங்களை நிறுத்தக்கூடாது
துப்பாக்கிகளைக் கண்டு நாம் அமைதியிழக்கக்கூடாது
துப்பாக்கியின் சப்தத்தைவிட வலிமையானது
அமைதியின் சப்தம்
அவர்கள் பதிலுக்கு நீங்கள் சுடவேண்டும்
என்று விரும்புகிறார்கள்
அது வெளிப்படையான ஒரு அழைப்பு
இந்த தேசம் எங்கும் விரியும் மனிதத் சங்கிலியினை
அறுப்பதற்கான அழைப்பு

காந்தி சுடப்பட்ட நாளில்
இன்னொரு துப்பாக்கி வெடிக்கிறது
காந்தி இந்த முறை சாகவில்லை
அந்த வெடியோசையில் உயிர்த்தெழுகிறார்

எந்த வெடியோசையையும் மீறி எழுகிறது
ஆஸாதி.. ஆஸாதி… என்னும் பேரோசை!

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க