03.02.2022
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின்,
பாசிச மோடி அரசின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
பத்திரிகை செய்தி
ட்டுக்கு தாடியும் மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று என்றார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட்டுக்கு எதிராக தமிழகமே ஓரணியில் திரள்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி, கிருஷ்ணசாமி போன்ற எதிரிகள் மற்றும் துரோகிகளை தவிர வேறு யாரும் வெளிப்படையாக நீட்டுக்கு ஆதரவாக பேச முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் போராடி வந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா  நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
படிக்க :

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !

அதன் மீது நீட் தேர்வு, மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு முடியும் வரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஆளுநர் ரவி, தற்பொழுது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தை கூறி சட்ட மசோதாவை அனுப்பியுள்ளார்.
மக்களால், மக்களே தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஆட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர் மூலம் இணை ஆட்சி நடத்துவது தான் பாசிச மோடி அரசின் நோக்கம். அதையே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி மாநில அரசுகளை செயல்படாமல் செய்தும் வருகின்றனர்.
நீட் தேர்வினால் தற்கொலை செய்து இறந்துபோனவர்கள் பலர், தங்கள் மருத்துவ கனவை கைவிட்டோர் ஏராளம். இப்படி மாணவர்களின் மருத்துவக் கனவை சூறையாடிய நீட்டுக்கு ஆதரவாக தான் ஒன்றிய அரசும் ஆளுநரும் செயல்படுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும் ஒன்றை, மாநில சட்டமன்றம் எதிர்க்கும் ஒன்றை ஆளுநரால் திணிக்க முடியும் என்றால் இதற்குப் பெயர்தான் மானங்கெட்ட மக்களாட்சியா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் உரிமையையும் மறுக்கும் ஒரு நபருக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்காக கொடுக்க வேண்டும்?
முன்னாள் போலீஸ் அதிகாரியான ரவி, ஆளுநராக இருந்து தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக காவல் கொட்டடியில் அடைக்கப் பார்க்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தமிழகத்தில் அலைஅலையாய் எழ வேண்டும். அந்த நீட் எதிர்ப்பு அலையில் ஆளுநர் ரவி மட்டுமல்ல, பாசிச மோடி அரசின் கொட்டமும் ஒடுக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க