உ.பி: நீட் பயிற்சி மாணவியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் இந்துமதவெறிக் குண்டர்களாலும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்தவர்களாலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

த்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நீட் பயிற்சி மையம் ஒன்றில் 17 வயது மாணவி நீட் பயிற்சி பெற்று வந்துள்ளார். அம்மாணவியை அப்பயிற்சி மையத்தின் இரண்டு ஆசிரியர்கள் ஆறு மாதங்களாக வீட்டில் அடைத்துவைத்து ஈவிரக்கமற்ற முறையில் பாலியல் வன்கொடுமை செய்துவந்த சம்பவம் வெளியாகி அம்மாவட்ட மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவம் தொடர்பாக அப்பயிற்சி மையத்தின் உயிரியல் ஆசிரியர் சாஹில் சித்திக் மற்றும் வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் ஆகிய இரண்டு ஆபாச வெறிப்பிடித்த மிருகங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாலியல் வல்லுறவு, போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2022-ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள விடுதியில் தங்கி மாணவி நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். அப்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்ற காரணத்தைக் கூறி, மாணவியை கல்யாண்பூரில் உள்ள தனது நண்பனின் குடியிருப்புக்கு சித்திக் ஏமாற்றி வரவழைத்துள்ளான். இன்னும் பல மாணவிகளும் இந்த கொண்டாட்டத்திற்கு வருவதாக சித்திக் கூறியதை நம்பி மாணவி சென்ற நிலையில் அங்கு வேறு யாரும் வரவில்லை. இந்நிலையில், குடியிருப்புக்கு வந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து, அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதை காணொளியாகவும் பதிவு செய்துள்ளான்.

இக்காணொளியை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். மேலும், அம்மாணவியை ஆறு மாதங்கள் தனது வீட்டில் அடைத்துவைத்து தான் விரும்பும் போதெல்லாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மற்றொரு மிருகமான விகாஸூம் அம்மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்.

ஆறு மாதங்களுக்கு பிறகு கான்பூர் வந்த அம்மாணவியின் தாயார், அந்த மிருகங்களிடமிருந்து தன்னுடைய மகளை மீட்டு அழைத்து சென்றுள்ளார். குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மாணவி போலீசிடம் புகார் அளிக்கவில்லை. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன் பயிற்சி மையத்தில் மற்றொரு மாணவிக்கு சித்திக் பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் காணொளியை மாணவி கண்டுள்ளார்.

எனவே இந்த ஆபாசவெறி பிடித்த மிருகங்களால் தன்னைப் போன்று பல மாணவிகள் பாதிக்கப்படுவதை உணர்ந்த அம்மாணவி, இனிமேல் எந்த மாணவியும் பாதிக்கப்படக்கூடாது என முடிவு செய்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை கடந்த நவம்பர் எட்டாம் தேதி போலீசிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகே இம்மிருகங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவமானது உத்தரப்பிரதேசத்தில் மாணவிகள் மத்தியிலும் அவர்களின் பெற்றோர் மத்தியிலும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயிற்சி மையத்தின் ஆசிரியர் அவரது வீட்டில் அடைத்து வைத்து மாணவிகளை வன்கொடுமை செய்வது பயிற்சி மையத்தின் துணையின்றி நடக்குமா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!


மறுபுறம், உத்தரப்பிரதேசத்தில் இந்துமதவெறிக் குண்டர்களாலும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்தவர்களாலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். சான்றாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஃபருக்காபாத் மாவட்டம் காயம்கஞ்ச் கிராமத்தில் 15 மற்றும் 18 வயதுடைய இரண்டு தலித் பெண்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இவ்வாறு ரெளடி சாமியாரான யோகி ஆதித்தியநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி பா.ஜ.க. கும்பல் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தாங்கள் ஆளும் மாநிலங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக பா.ஜ.க. கும்பல் வாய்ச் சவடால் அடிக்கும் நிலையில், உண்மையில் அம்மாநிலங்களில் பெண்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க