நீட்டுக்கு எதிராக நாடு முழுவதும் பற்றிப்படரும் மாணவர் போராட்டங்கள்!

இன்றும் (ஜூன் 11) தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

0

டந்த மே 5 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. கிட்டத்தட்ட 24 இலட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்தேர்வில் 67 பேர் முழுமதிப்பெண் (720-க்கு 720) பெற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் ழுமதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டப்படும் ராஜஸ்தானில் மட்டும் 11 பேர் மதிப்பெண் பெற்றிருப்பது மாணவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நீட் தேர்வில் 720/720 என்ற மதிப்பெண்ணை ஓரிருவர் மட்டுமே பெறுவது வழக்கம்; அதிகபட்சமாக 2021 ஆம் ஆண்டில் மூன்று பேர் முதல் மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்). அவ்வாறெனில், ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மார்க் 1 என மொத்தம் 5 மதிப்பெண் குறைக்கப்படும். ஒருவேளை கேள்விக்கு விடை தெரியாமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண் மட்டும் குறையும். எனவே, இரண்டாம் மதிப்பெண் 716 என்றும், மூன்றாவது மதிப்பெண் 715 என்றும்தான் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தேர்ச்சி பெற்ற பலரின் மதிப்பெண் 719, 718 என இருப்பது மோசடி நடந்திருப்பதை உறுதி செய்கிறது.

ஜூன் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பத்து நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூன் 4 அன்றே, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது. அப்போதே, நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency – NTA) மீது சந்தேகம் எழுந்தது. வெளியான நீட் தேர்வு முடிவுகளில் காணப்படும் குளறுபடிகள் முறைகேடுகளை உறுதி செய்கிறது.


படிக்க: நீட் மோசடி: தேர்வை‌‌ ரத்து செய்வது தான் தீர்வு | தோழர் யுவராஜ்


‘தகுதிவாய்ந்த’ மருத்துவர்களை உருவாக்கப்போவதாகக் கூறி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் மோசடி என அனைத்து விதமான பித்தலாட்டங்களும் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடி குறித்தி விசாரிக்கக் கோரியும் நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று (ஜூன் 10) நீட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் கல்வி அமைச்சகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஜே.என்.யூ மாணவர்கள் சங்கம் (JNUSU) சார்பாக நேற்று கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

முற்போக்கு மாணவர் அமைப்புகள் அனைத்தும் மறுதேர்வு நடத்தக்கோரும் மாணவர்களுக்கு உறுதுணையாகப் போராடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கூட நீட்டுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்றும் (ஜூன் 11) தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள மத்திய கலால் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள மத்திய கலால் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்

இது தவிர சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


படிக்க: உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி


முன்னதாக, ஜூன் 7 அன்று மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க-வின் கூட்டணி அரசாங்கம், 2024 நீட் தேர்வு முடிவுகள் மாணவர்களை வஞ்சிப்பதாகவும், அரசுப் பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதாகவும் அமைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறியது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

ஆனால் நீட் மறுதேர்வு குறித்தான வழக்குகளை இன்று (ஜூன் 11) விசாரித்த உச்ச நீதிமன்றமோ ஜூலை 8 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. மேலும், நீட் 2024 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை நடத்த எவ்வித தடையும் இல்லை என்றும் கூறிவிட்டது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் கண்டிப்பாக என்.டி.ஏ அரசாங்கத்தைப் பணிய வைக்கும். நீட் மறுதேர்வு வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டங்கள் நீட்டுக்கு எதிரான போராட்டங்களாக – நீட்டை தடை செய்யக் கோரும் போராட்டங்களாக – வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க