ன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு இந்த ஆண்டில் இதுவரை இரண்டு பேரை காவு வாங்கியிருக்கிறது. சேலம் மாவட்டம் கூளையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகனாகிய தனுஷ் என்ற மாணவரும், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றும் நவீன பார்ப்பனிய சனாதன தர்மத்தை நடைமுறைப்படுத்தும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி சட்டம் இயற்றியது ஒன்றிய அரசு. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அடிமை எடப்பாடி அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு பல மாணவர்கள் பலியாகினர். அரியலூர் மாணவி அனிதாவின் மரணம், தமிழக மாணவர்களை தட்டியெழுப்பியது. தமிழக மக்களிடம் நீட் தேர்வின் அபாயத்தைக் கொண்டு சேர்த்தது.
கடுமையான போராட்டங்களையெல்லாம் போலீசைக் கொண்டு அடக்கிவிட்டு, போராடிய அமைப்புகள் மீதும் முன்னணியாளர்கள் மீதும் எண்ணிலடங்காத வழக்குகளைப் போட்டது அன்றைய எடப்பாடி அரசு. தொடர்ந்து மக்கள் அரங்கிலிருந்து நெருக்குதல் அதிகமான சூழலில் நீட் தேர்வை விலக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கண் துடைப்பு நாடகத்தை நடத்தியது அடிமை எடப்பாடி தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு.

படிக்க :

நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!

நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !

ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கலைத்துவிடும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதா என்ற மக்களின் ஏக்கத்தை அறிந்து கொண்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலில், நீட் தேர்வை ஒழிப்போம் என தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவித்தது திமுக. தமிழகத்தில் நிலவிய அதிமுக மற்றும் பாஜக வெறுப்பு அலையின் காரணமாகவும், நீட் தேர்விலிருந்து விலக்கு, எழுவர் விடுதலை உள்ளிட்ட வாக்குறுதிகள் காரணமாகவும் வெற்றி பெற்றது திமுக அரசு.
ஆட்சியில் அமர்ந்ததும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ராஜன் கமிட்டியை அமைத்தது திமுக அரசு. அதற்கு எதிராக வழக்கு தொடுத்தது பாசிச பாஜக. ராஜன் கமிட்டி அறிக்கை கடந்த ஜூலை மாதமே சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, திமுக அரசு.
நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை கடந்த 13-09-2021 அன்று நிறைவேற்றியது தமிழக அரசு. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவளிக்காமல் வெளிநடப்பு செய்தது பாசிச பாஜக.
சட்டம் இயற்றி ‘நீட்’ஐ ரத்து செய்யமுடியுமா ?
சட்டம் இயற்றப்பட்டாலே நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுவிட முடியுமா ?, என்றால் அது சாத்தியமில்லை. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ஆட்சிக் காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
எமர்ஜென்சி ஆட்சி முடிவுற்ற பின்னரும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு கல்வியில் தனியார்மயத்தை உள்நுழைக்கும் வேலையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வந்தன, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு மற்றும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுகள்.
கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்பட்சத்தில், கல்வி தொடர்பாக மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அனைத்தும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களுக்கு உட்பட்டுத் தான் இருக்க முடியும். தற்போது ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்பது ஊரறிந்த இரகசியம். அப்படி இருக்கையில் சட்டம் நிறைவேறாது.
நீட்டுக்கு விலக்கு கேட்டு சட்டரீதியாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும், இறுதியில் கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதைக் காரணம் காட்டி எளிமையாகவே உச்சநீதி மன்றத்தில் முறியடிக்கப்படும் என்பது கண்கூடு.
எதார்த்தம் இப்படி இருக்க, சட்டரீதியாக திமுக போராடி நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தரும் என்று ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியிருப்பது வெறுமனே வாய்ச்சவடால்தான்.
ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அமர்ந்த பாசிசக் கும்பல், தனது பாசிச நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தத் துவங்கியது. அதற்கு முந்தைய காங்கிரசு ஆட்சி, மக்கள் போராட்டங்களைக் கண்டு அஞ்சி எந்தச் சட்டங்களையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் தயங்கி நின்றதோ, அந்தச் சட்டங்களையெல்லாம் தனது பெரும்பான்மை பலத்தினால் நிறைவேற்றியது பாஜக.
அந்த வகையில் நீட் தேர்வை தடாலடியாக நடைமுறைப்படுத்தியது பாஜக. தமிழகத்தில் ஆட்சி செய்த அடிமை எடப்பாடி அரசு புழுவைப் போல அமைதியாக அதனை ஏற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையையும் அமல்படுத்த தயாராக இருக்கிறது பாஜக அரசு.

படிக்க :

பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !

தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்

நீட் மசோதாவிற்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தும் அதே வேளையில், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வைத் தரும்.
அப்படி ஒரு விசயத்தை ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பாசிசக் கும்பல் ஒருபோதும் அனுமதிக்காது. ஏனெனில், கல்வி, கலாச்சாரம் என அனைத்தின் மூலமாகவும் தமது காவி பாசிசத்தையும், கார்ப்பரேட் பாசத்தையும் காட்டத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல். ஆகையால் கல்வியை தமது பிடியிலிருந்து விட்டுப் போக ஒருபோதும் அனுமதிக்காது இந்த பாசிசக் கும்பல்.
நீட் தேர்வை ரத்து செய்ய வீதியில் இறங்கி போராடும் அதே வேளையில், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதையும் கோரிக்கையாக முன் வைத்து தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், முற்போக்குக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இடைவிடாத உறுதியான போராட்டத்தை வீதியில் இறங்கி நடத்தவேண்டும். நீட்டை ஒழிப்போம் எனக் கூறும் ஸ்டாலின் இத்தகைய போராட்டங்களை நடத்த தனது கட்சித் தொண்டர்களை முடுக்கி விடுவாரா ?

இன்று சட்டரீதியாக நீட்டை எதிர்ப்போம் என்று கூறும் ஸ்டாலினுக்கு கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே இத்தகைய பிரச்சினைகள் தீரும் என்று தெரியாதா ? கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர என்ன முயற்சிகளை எடுக்கப் போகிறார் ஸ்டாலின் ? குறைந்தபட்சம் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்தும் இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வைத்து நெருக்கடி கொடுக்கச் செய்வதற்காவது முயற்சிப்பாரா  ?

இதையெல்லாம் செய்யாமல், வெறுமனே சட்டப் போராட்டம் என்று ஸ்டாலின் சொல்வதெல்லாம், பாம்புக்கும் நோகாமல், தடிக்கும் நோகாமல் தாக்கும் நடைமுறைதான். பழியைத் தூக்கி சட்டத்தின் மீதும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் மீதும் போட்டுவிட்டு நல்லபிள்ளை பெயர் எடுத்துக் கொள்வதுதான் ஸ்டாலினின் நோக்கம்.

பாசிசம் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்வதற்கு கல்வியைப் பயன்படுத்தும் வேலையையும், கல்வியை கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் ஒப்படைக்கும் வேலையையும் செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிக்க கல்வி காவிமயமாவதைத் தடுக்க வேண்டும். அது வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலமும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை நிர்பந்திப்பதன் மூலமும் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.

வினவு செய்திப் பிரிவு
கர்ணன்

1 மறுமொழி

  1. நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என்பதற்கான சான்றுதான் இந்த தீர்மானமே தவிர வேறு எதுவும் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க