privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்

தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்

-

“நான் அந்தக் கல்லூரியில் ஒருநாளும் மருத்துவ மாணவனாக இருந்தது இல்லை; கொத்தனராக, சித்தாளாகத்தான் இருந்தேன்.”

– எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கண்ணதாசன்

மிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்திற்கு அருகிலுள்ள பங்காரம் கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டதை உலுக்கும் விதத்தில் எடுத்துச் சொல்லும் வாக்குமூலம் இது. கண்ணதாசனுக்கு மட்டுமல்ல, மோனிஷாவிற்கும், சரண்யாவிற்கும், பிரியங்காவிற்கும் மருத்துவராவதுதான் கனவாக, இலட்சியமாக இருந்தது. கண்ணதாசன் தனது கனவைச் சிதைத்த கல்லூரி நிர்வாகத்தை, அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். மோனிஷாவும், சரண்யாவும், பிரியங்காவும் அப்போராட்டத்தின் களப்பலியாகிவிட்டார்கள்.

தனியார்மயத்தின் நரபலி (இடமிருந்து) பிரியங்கா, மோனிஷா, சரண்யா
தனியார்மயத்தின் நரபலி (இடமிருந்து) பிரியங்கா, மோனிஷா, சரண்யா

அந்தக் கல்லூரி மாணவர்களின் குறைகளை அரசு நிர்வாகம் காது கொடுத்துக் கேட்டிருந்தால், கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கும் அரசின் கண்காணிப்பு உறுப்புகள் சரியாகச் செயல்பட்டிருந்தால் எனப் பல “இருந்தால்”களை அடுக்கிய பிறகு, அந்த மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்காது என்று ஊடகங்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் அப்படிபட்டதொரு கருத்து தொக்கி நிற்கிறது. இக்கல்லூரி விவகாரத்தில் அதிகார வர்க்கம், குறிப்பாக, இந்திய மருத்துவத்திற்கான இயக்குநரகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை உயர்நீதி மன்றம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளாமல் அலட்சியமாகவும், சிவப்பு நாடாத்தனத்துடனும் நடந்து கொண்டுவிட்டதாகக் கருதிக் கொள்வது, நடந்த குற்றத்தில் அவர்களுக்குள்ள பங்கை, குறிப்பாக அக்கல்லூரியை நடத்திவந்த குற்றக்கும்பலின் கூட்டுக் களவாணியாக அதிகார வர்க்கம் இருந்திருப்பதை இருட்டடிப்பு செய்வதாகும்.

எஸ்.வி.எஸ் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகள், அடாவடித்தனங்களை எதிர்த்து துணிந்து போராடிவரும் மாணவர்கள்

“நீ காசு கொடுக்குற, நான் பல்கலைக்கழகத்திடமிருந்து சர்டிபிகேட் வாங்கித் தருகிறேன்” என மாணவர்களிடம் கூறி வந்திருக்கிறார் அக்கல்லூரியின் தாளாளர்களுள் ஒருவரான சுப்பிரமணியன். இது, கல்லூரி என்ற போர்டுக்குப் பின்னே மறைந்துகொண்டு மாணவர்களை வேட்டையாடிய கும்பலின் ஆணவத்தையும் கிரிமினல்தனத்தையும் மட்டும் எடுத்துக்காட்டவில்லை. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் அக்கல்லூரியின் நிர்வாகிகளுக்கும் இடையே இருந்துவந்த கூட்டுக் களவாணித்தனத்தையும் புட்டு வைக்கிறது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஜான்சி சார்லஸ், சென்னையிலுள்ள அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் மணவாளன், மாலதி என எஸ்.வி.எஸ். கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியத்தோடு மிக நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த நெருக்கம்தான் சுப்பிரமணியத்திற்கும் அவரது மனைவி வாசுகி சுப்பிரமணியத்திற்கும் கல்லூரி என்ற பெயரில் ஒரு கொத்தடிமைக் கூடத்தை நடத்தும், மாணவர்களை ஏ.டி.எம். மெஷின் போலப் பாவிக்கும் துணிவைத் தந்திருக்கிறது.

“வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அடிக்கட்டுமான வசதிகள் இல்லாமல் இருப்பது; உரிய தகுதிகொண்ட ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது; அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிப்பது; அரசால் தடை செய்யப்பட்டுள்ள நன்கொடைகளை வசூலிப்பது; இவற்றுக்கு உரிய ரசீது வழங்காமல் இருப்பது; ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொத்தடிமைகளாக நடத்துவது” எனத் தனியார் கல்லூரிகளில் நடக்கும் சட்டவிரோதமான முறைகேடுகளும் கிரிமினல்தனங்களும் அம்பலமாவது புதியதல்ல. ஆனால், நாம் கேள்விப்பட்டவற்றுக்கும் அப்பாற்பட்டு, நினைத்தும் பார்க்கமுடியாத வக்கிரத்தோடு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை ஆட்டிப் படைப்பதையும்; இதற்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் அதிகார வர்க்கம் நடந்து வருவதையும் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

* * *

வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்க காடுகளுள் புகுந்து கருப்பின மக்களை வலைவீசிப் பிடித்து அடிமையாக்கியதைப் போல, எஸ்.வி.எஸ். கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் கலந்தாய்வு நடக்கும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே அப்பாவி மாணவர்களை அமுக்கிப் பிடித்திருக்கிறார். இந்த அப்பாவிகளுள் பெரும்பாலோர் கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவர்கள். இக்கல்லூரியில் சேர்ந்த மூன்றாவது மாதத்திலேயே வெளியேறிவிட்ட சென்னை-வேளச்சேரியைச் சேர்ந்த விநோதினி, “கலந்தாய்வு நடந்த இடத்திலேயே தனது மூலச் சான்றிதழ்களை வாசுகி சுப்பிரமணியன் வாங்கிக் கொண்டதாக”க் கூறுகிறார். இந்த முறைகேடுகள் கலந்தாய்வு நடத்திய அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.

இயற்கை மற்றும் யோகா மருத்துவ படிப்பிற்கான முதலாண்டு-முதல் பருவத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.25,000. எஸ்.வி.எஸ். கல்லூரியைப் பொருத்தவரை வாசுகியின் வாயிலிருந்து வருவதுதான் கட்டணம். விநோதினி மூன்று மாதத்திற்குள்ளாகவே எண்பதாயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருப்பதாகக் கூறுகிறார். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறிவிட்ட கண்ணதாசன் முதலாண்டு முதல் பருவத்திற்கு 1,49,500 ரூபாய் கட்டியிருக்கிறார். விழுப்புரம்-அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பனிடமிருந்து ரூ.1,75,000 பிடுங்கப்பட்டிருக்கிறது. முதல் பருவக் கட்டணமாக ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒரு இலட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

தாளாளர் வாசுகி, கல்லூரி முதல்வர் கலாநிதி மற்றும் வாசுகியின் மகள் சுவாகத் வர்மா
மூன்று மாணவிகளின் மர்மச்சாவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ள தாளாளர் வாசுகி, கல்லூரி முதல்வர் கலாநிதி மற்றும் வாசுகியின் மகள் சுவாகத் வர்மா

முதலாண்டு இரண்டாம் பருவத்திற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், அரசின் இந்த உத்தரவெல்லாம் வாசுகியின் ராஜ்ஜியத்தில் செல்லாக் காசு. இது மட்டுமின்றி, முதலாண்டு படிக்கும்பொழுதே இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணங்களை விருப்பம் போல நிர்ணயித்து வசூலிக்கும் வேட்டையும் நடந்திருக்கிறது. அக்கல்லூரி மூடப்படும் நேரத்தில் மூன்றாமாண்டு படித்து வந்த கார்த்திகேயன் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், அரியர்ஸ் கட்டணம் எல்லாம் சேர்த்து இதுவரை 11 இலட்சம் ரூபாயைக் கட்டி அழுதிருப்பதாகக் கூறுகிறார். இக்கல்லூரியிலிருந்து வெளியேறி விட்ட சென்னையைச் சேர்ந்த தமிழரசி என்ற மாணவியின் தந்தை மணிவண்ணன், தன்னிடமிருந்து மூன்றரை இலட்ச ரூபாய் பிடுங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஒரு மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான ஆய்வகம், நூலகம் மட்டுமல்ல, மாணவ-மாணவியருக்கான விடுதி, சாப்பாடு கூடம் என எதுவுமே எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரியில் இருந்ததில்லை. ஆனால், இவையெல்லாம் இருப்பது போல தனித்தனியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரி தற்பொழுது மூன்று மாடிகளைக் கொண்டதாக எழுந்து நிற்கிறது. இது முழுக்க முழுக்க மாணவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் மாடு போல வேலை வாங்கப்பட்ட மாணவர்களது உழைப்பால் உருவானதாகும்.

. கட்டிடத்தின் காங்கிரீட்டுக்குத் தண்ணீர் ஊற்றுவது, செங்கல், மணல் மூட்டைகளை மேல்மாடிக்கு ஏற்றுவது, கலவை போடுவது, இரும்புக் கம்பிகளை இறக்குவது, டாய்லெட் சுத்தம் செய்வது, கள்ளக்குறிச்சிக்குப் போய் வாசுகி குடும்பத்திற்கு டிஃபனும், பாலும், காய்கறிகளும் வாங்கி வருவது, கல்லூரி வளாகத்தைப் பெருக்கி சுத்தம் செய்வது – மருத்துவம் படிக்கும் கனவோடு அக்கல்லூரிக்குச் சென்ற ஒவ்வொரு மாணவனும், மாணவியும் கொத்தனராக, சித்தாளாக, எடுபிடியாக மாற்றப்பட்ட துயரக் கதை இது.

மாணவர்களின் நிலையைவிட மாணவிகளின் நிலை இன்னும் பரிதாபகரமாக இருந்திருக்கிறது. வாசுகியின் காலைப் பிடித்துவிடுவது, அவரது புடவை, ஜாக்கெட்டைத் துவைத்துப் போடுவது, அவர் பல் துலக்குவதற்கு பேஸ்ட் எடுத்துக் கொடுப்பது, குளிப்பதற்குத் துண்டு எடுத்துக் கொடுப்பது, பாத்ரூமைச் சுத்தம் செய்வது என அடிமைகளைப் போல கேவலமாக நடத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் “கர்ம யோகா” எனக் கூறி, மாணவர்களின் தலையில் சுமத்தியிருக்கிறார், வாசுகி. தங்கள் குழந்தைகள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர்களிடம், “இது குருகுலம்; அப்படித்தான் இருக்கும்” என நியாயப்படுத்தியிருக்கிறார். மாணவர்களின் பணத்தில், மாணவர்களின் உழைப்பில் மகாராணியைப் போல வாழ்க்கை நடத்திய வாசுகி, அம்மாணவர்களைப் பட்டினி போடவும் தயங்கியதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு சாப்பாட்டை ஐந்து பேர் பகிர்ந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இருந்தோம் என்கிறார்கள் மாணவர்கள். “பெண்கள் பட்டினி கிடந்தால் தப்பில்லை” என்று இந்த அநியாயத்திற்கு பண்பாட்டு வியாக்கியானம் தந்திருக்கிறார், வாசுகி.

* * *

“ஒவ்வொரு நாளும் வெள்ளை கோட்டைப் போட்டுக் கொண்டு வகுப்பறையில் படுத்துத் தூங்கினோம்” என்கிறார், கண்ணதாசன். சில நாட்கள் வகுப்பு என்ற அதிசயம் நடந்திருக்கிறது. அப்பொழுது சீனியர் மாணவர்கள்தான் ஆசிரியர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில், எம்.டி. எலெக்ட்ரோபதி மருத்துவம் படித்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் வாசுகி மாணவர்களைக் கூட்டி உட்கார வைத்துப் பாடம் நடத்துவாராம். தேர்வில் என்னென்ன கேள்விகள் வரும், அதைப் பாடப்புத்தகத்தைப் பார்த்து காப்பியடிப்பது எப்படி என்பதுதான் அவர் எடுக்கும் வகுப்பு.

“சேர்ந்துவிட்டோம், லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டிவிட்டோம், பெற்றோர்கள் மனமுடைந்து போவார்கள்” என்பதையெல்லாம் யோசித்து, கல்லூரி நிர்வாகம் இழைத்த கொடுமைகளையெல்லாம் தமது பெற்றோர்களிடம் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் மருகிமருகித் தமக்குள்ளேயே புழுங்கித் தவித்திருக்கிறார்கள், மாணவர்கள். விசயத்தைக் கேள்விப்பட்டு விசாரிக்க வந்த தமிழரசி என்ற மாணவியின் தந்தை மணிவண்ணனைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டவும் தயங்கவில்லை வாசுகி. போலீசு துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் அவருக்கே இந்த நிலை என்றால், கிராமத்துப் பெற்றோர்ளை வாசுகி எப்படியெல்லாம் அச்சுறுத்தியிருப்பார்? மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு கல்லூரிக்கு மாறிவிடலாம் என்று முயன்றால், மீதி இருக்கும் வருடங்களுக்கும் பணத்தைக் கட்டினால்தான் டி.சி.யைத் தருவேன் என்பதுதான் வாசுகியின் பதில்.

இக்கல்லூரி தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு தொடங்கியே கல்லூரியில் நடைபெறும் கட்டணக் கொள்ளை, அடாவடித்தனங்கள் குறித்து அரசிடம் மாணவர்கள் புகார் அளித்து வந்துள்ளனர். பல மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தட்டிக் கேட்டு, வாசுகியோடு நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் தட்டிக் கேட்கத் துணிந்தவர்களை ஒழுக்கங்கெட்டவர்களாக, காமுகர்களாக, கிரிமினல்களாக அவதூறு செய்திருக்கிறார், வாசுகி. “நீ புகார் கொடுத்தா, நான் கவர் கொடுப்பேன்” எனப் பச்சையாகக் கூறி, அம்மாணவர்களைத் திகைத்துப் போக வைத்திருக்கிறார்.

எஸ்.வி.எஸ் ஊர்வலம்
எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆள் பிடிப்பதற்காக கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஊர்வலம்

தன்னைத் தட்டிக் கேட்ட கண்ணதாசனிடம், “நீ என் கைய புடிச்ச இழுத்ததா போலீசில் புகார் கொடுப்பேன். அதற்கு என் புருசனே சாட்சி சொல்வார்” என பஜாரி போலக் கூறி, அவரை மிரட்டியிருக்கிறார். கட்டிய பணத்திற்கு ரசீது கேட்டுத் தொடர்ந்து போராடி வாங்கிக் கொண்டதற்காக, ஐயப்பன் என்ற மாணவர் மீது தனது கல்லூரியின் பெயரில் போலி ரசீது புத்தகங்களை அச்சடித்து வைத்திருப்பதாக சின்ன சேலம் போலீசில் பொய்புகார் அளித்தார் வாசுகி. பிறகு, இந்தப் புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென்றால், மீதியுள்ள கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தைக் கட்ட வேண்டும் என அவரது விதவைத் தாயை மிரட்டிப் பணத்தைக் கறந்திருக்கிறார்.

இதைவிடக் கேவலமாக, தன்னை எதிர்க்கும் மாணவர்களை நிர்பந்தப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக அல்லது ஆய்வகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ஒரு மன்னிப்பு கடிதத்தை அவர்கள் கைப்பட எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, அதனைக் காட்டியே மாணவர்களை அடக்கியிருக்கிறார். இதற்கு ஒத்துழைக்காத மாணவர்களை போலீசைக் காட்டியும், டி.சி.யில் கைவைத்து விடுவேன் என்று மிரட்டியும்; மாணவிகளிடம், உனது நடத்தையை அசிங்கப்படுத்திவிடுவேன் எனப் பயமுறுத்தியும் மாணவர்களின் எதிர்ப்பை மழுங்கடித்திருக்கிறார். இதனால்தான் இறந்துபோன மாணவிகள் தங்களது ‘தற்கொலை’ கடிதத்தில், “எங்களை கேரக்டர் லெஸ் என்று மேடம் சொன்னால் நம்பாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கும் மேலாக, தன்னை எதிர்க்கும் மாணவர்களை அடக்கி வைக்க தனது கணவரின் தாழ்த்தப்பட்ட சாதி பின்புலத்தையும், ரவுடிகளையும் பயன்படுத்தியிருக்கிறார், வாசுகி. “தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கல்லூரியை அழிக்கப் பார்க்கிறார்கள்” எனச் சாதியை முன்னிறுத்தி, தனது குற்றங்களை மறைக்க முயன்றிருக்கிறார். ஆதிதிராவிடர் புரட்சிக் கழகம் என்ற பெயர்ப்பலகை தலித் அமைப்பைச் சேர்ந்த பெரு.வெங்கடேசன், தலித் ரகு உள்ளிட்ட கிரிமினல்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டதற்கு ஐயப்பனும், கண்ணதாசனும் சாட்சியங்களாக உள்ளனர். தலித் சாதி பின்புலத்தை வைத்துக்கொண்டு வாசுகியும் சுப்பிரமணியும் இழைத்த அநீதிகளை எந்தவொரு தலித் இயக்கமும் ஒருமுறைகூடத் தட்டிக் கேட்கவில்லை என்பது விசாரணைக்குரிய ஒன்று.

இக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுள் ஆகப் பெரும்பாலோர் மிகமிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணதாசன் ஆடு,மாடுகளை விற்றுத்தான் கட்டணம் கட்டியதாகக் கூறுகிறார். ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஐயப்பன் கடன் வாங்கி கட்டணங்களைக் கட்டியிருக்கிறார். இறந்துபோன பிரியங்காவின் விதவைத் தாய் ஜெயந்தி கூலி விவசாயி; மோனிஷாவின் தந்தை மின்சார வாரியத்தில் ஒப்பந்தக் கூலியாகப் பணியாற்றும் லைன்மேன்; சரண்யாவின் தந்தை விவசாயி. அதிகார வர்க்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டு வந்த வாசுகியைத் தனியாளாக எதிர்த்து நிற்க முடியாத நிலையில், வகுப்புகளே நடக்காத கல்லூரியில் பெயருக்குப் படிப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையில் பல மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிட்டனர்.

“உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சினை. படிக்காமல், விசயம் தெரியாமல் மருத்துவம் பார்ப்பது தவறானது” என்ற அறவுணர்வின் அடிப்படையில் படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறியதாகக் கூறும் கண்ணதாசன், “ 2008 முதல் 2012 வரை இந்தக் கல்லூரியில் சேர்ந்த 82 மாணவர்களுள் 76 மாணவர்கள் படிப்பை இடைநிறுத்தி வெளியேறி விட்டதாக”க் கூறுகிறார். 2008-இல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இருந்து இதுவரை ஒருவர்கூட பதிவுபெற்ற இயற்கை மருத்துவராக வெளிவந்தது இல்லை. இந்த இழிநிலையை மருத்துவப் பல்கலைக்கழகமும், இந்திய மருத்துவ இயக்குநரகமும் கண்டு கொள்ளவுமில்லை.

– குப்பன்
_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க