தி.மு.க அரசானது ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவானது 86,600 பேரிடமிருந்து கருத்துகளை பெற்றும், அரசிடமிருந்து புள்ளி விவரங்களைப் பெற்றும் ஓர் அறிக்கையை தயாரித்தது. அதனடிப்படையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தயாரித்த அறிக்கையானது மக்கள் பார்வைக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதியன்று வெளியிடப்பட்டது.
அவ்வறிக்கையின் மீது பா.ஜ.க-வின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக சங்கிகள் பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். அப்படி அவர்கள் அளந்த கதையென்ன? அதற்கான பதிலடிகள் என்ன? என்பதைப் பார்ப்போம்.
000
படிக்க :
நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
கட்டுக்கதை #1 : நீட் வருவதற்கு முன்னால் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களிலிருந்து தான் 65% மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். பள்ளிகளின் கட்டணம் 1 முதல் 5 லட்சம் வரை இருந்தது.
நீட் வந்த பிறகு எந்த மாவட்டமும் ஆதிக்கம் செலுத்தாமல், சாதாரண கிராமத்தில் இருக்கக் கூடிய மனிதன் கூட – எந்த இடத்தில் படித்தாலும் கூட – தேர்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையை நீட் தான் கொடுத்தது.
அதாவது, வியாபார சந்தையாக 3 முதல் 4 மாவட்டங்கள் கல்வியை வைத்திருந்தது உடைக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கலாம் என்ற நிலைமை வந்துள்ளது.
அதைப் பற்றி ஏன் ஏ.கே.ராஜன் அறிக்கை ஏன் பேசவில்லை?
நீட் வந்த பிறகுதான் பணமுதலைகள் கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறார்கள்.
விளக்கம் : நீட் வருவதற்கு முன்னால் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் அதிக பணம் கட்டிப் படிக்கும் மாணவர்கள்தான் அதிகமாக மருத்துவத்தில் சேர்ந்தார்கள் என்ற கூற்று உண்மை தான்.
நீட் வந்த பிறகு வியாபார சந்தையாக கல்வியை 3 முதல் 4 மாவட்டங்கள் வைக்கப்பட்டிருந்தது உடைக்கப்பட்டது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் வந்த பிறகு தனியார் பள்ளிகளின் கட்டணம் நீட்டிற்கு நாங்கள் கோச்சிங் கொடுக்கிறோம் என்ற அடிப்படையில் அதிகரித்துதான் உள்ளது.
பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற கல்வியாளர்கள் நீட் வந்த பிறகு தனியார் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பிலிருந்தே கோச்சிங் மற்றும் 8-ஆம் வகுப்பிலிருந்தே கோச்சிங் என்று அதற்கேற்ப கட்டணம் நிர்ணயித்து பெற்றோர்களிடம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், நீட் வந்த பிறகு தனியார் கோச்சிங் செண்டர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது. ஏ.கே.ராஜன் அறிக்கையானது மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களில் 97.5 சதவீத மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் படித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 400 கோச்சிங் சென்டர்களின் வருவாய் ஆண்டிற்கு சுமார் ரூ.5,000 கோடி என்று கூறியுள்ளது.
மேற்கூறிய கூற்றிலிருந்து பார்க்கும்போது கோச்சிங் செண்டர்களுக்கு போகாமல் நீட் தேர்வில் பாஸ்-ஆக முடியாது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதாவது பணம் கட்டி படிக்காமல் பாஸ் ஆக முடியாது.
மற்றொருபுறம் நீட் தேர்வில் பாஸ் ஆனாலும் அதிகப் பணம் கட்டிதான் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்க முடியும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒரு வருடத்திற்கு 20 முதல் 25 லட்சம் வரையும், தனியார் கல்லூரிகளில் ஒரு வருடத்திற்கு 9 முதல் 10 லட்சம் வரை சட்டபூர்வ / திரைமறைவு அங்கீகாரத்தோடு கட்டணங்கள் வசூலிப்பதாக கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
உண்மை நிலவரங்கள் இப்படி இருக்கும்போது, சங்கிகளோ நீட் தேர்வு வந்த பிறகு பண முதலைகள் கட்டுப்படுத்தப்பட்டதாக பச்சைபொய்யை கூறிவருகின்றனர்.
000
கட்டுக்கதை #2 : 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர், 10 சதவீத பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், 15 சதவீத பட்டியல் இன மக்கள், 5 சதவீத மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு நீட் தேர்வின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எந்தவித குந்தகமுமின்றி சரியான முறையில் மாணவர்களுக்கு நீட் தேர்வில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி பயின்ற மாணவர்களில் 190 பேர் மட்டுமே (2006 – 2015 வரை மொத்தம் 190 மாணவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு 2020-ல் மட்டும் 450-க்கும் அதிகமான அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயில தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
விளக்கம் : கடந்த 2020-ல் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிகளில் பயின்ற 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், 2006 – 2015 வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி பயின்ற மாணவர்களில் 190 பேர் மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதனால் நீட் தேர்வினால் முன்பைவிட அதிகப்படியான அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள் என்ற கூற்று அண்ணாமலை போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது.
2020-ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 450 பேருக்கும், 2006 – 2015 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 190 பேருக்கும் வேறுபாடு உள்ளது. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங் முறை பின்பற்றப்பட்டது. அதனால், நீட் கோச்சிங் செண்டர்களுக்கு செல்ல அவசியம் இல்லாத, அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வந்தனர்.
ஆனால், 2020-ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 450 பேரும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படித்து இருந்தாலும் நீட் கோச்சிங் செண்டர்கள் மூலம் படித்து வந்தவர்கள் தான்.
ஏ.கே.ராஜன் அறிக்கையின்படி, 97.5 சதவீத மாணவர்கள் கோச்சிங் செண்டர்களுக்கு சென்று தேர்ச்சி அடைந்தவர்கள்தான். அதுமட்டுமில்லாமல் REPEATERS என்று அழைக்கப்படும் பள்ளிப் படிப்பை முடித்தபிறகு வேறு எதையும் படிக்காமல் கோச்சிங் செண்டர்களுக்கு சென்று அந்தப் படிப்பை மட்டும் 2 முதல் 3 வருடம் படித்தவர்கள்தான் அதிகப்படியான அளவில் தேர்ச்சி பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி பார்க்கும்போது, வருடத்திற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் கட்டி படிக்கும் பின்புலம் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்களால்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இடஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஆனால் இதற்கு முன்னர், பணம் கட்டி கோச்சிங் செண்டரில் படிக்க முடியாத கிராமப்புற ஏழை மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று நீட் வந்த பிறகு அவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையாகிறது.
நீட் தேர்வில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதால் சமூகநீதி காக்கப்படுகிறது என்று சமூக நீதி காவலர்களாக புதிய அவதாரம் எடுக்கின்றனர், சங்கிகள். அதுவும் உண்மையா என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
இடஒதுக்கீடு அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் அதன் மூலம் பயன்பெறுபவர்கள் குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்த மேல்தட்டு வர்க்கத்தினர்தான்.
தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் யாரால் பணம் கட்டி கோச்சிங் செண்டர்களில் படிக்க முடியுமோ, அவர்கள்தான் நீட் மூலம் தேர்வாகிறார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஏழை மாணவர்கள் தேர்வாகுவது கிடையாது.
இந்த நீட் தேர்வு முறையானது மக்களை பணக்கார வர்க்கம் மற்றும் ஏழை வர்க்கம் என்று பிரித்து பணக்கார வர்க்கத்தை மட்டும் மருத்துவராக அனுமதிக்கிறது. ஏழை வர்க்கத்தை மருத்துவ படிப்பிலிருந்து வெளியேற்றுகிறது.
சமூகநீதி என்பதே அனிதா போன்ற கிராமப்புற மாணவர்களை அதாவது கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியைப் பெறச் செய்வதுதான். ஆனால், இங்கோ இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், கடைநிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட  மக்கள் அதனால் பலனடைவதில்லை.
000
கட்டுக்கதை #3 : பன்னிரெண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து மத்திய அரசானது மருத்துவ சீட்டை அதிகப்படுத்தி உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள்தான் படிக்கப் போகிறார்கள். இப்படி மத்திய அரசானது மாணவர்களின் நலனைப் பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறது. நீட் ஏழை மாணவர்களின் நலனுக்கானது.  தமிழக மருத்துவக் கட்டமைப்பை அது மேம்படுத்தும்.
விளக்கம் : ஏ.கே.ராஜன் அறிக்கை, நீட் தேர்வானது தொடர்ந்து இன்னும் 10 வருடம் அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பானது சுதந்திரத்திற்கு முந்தைய நிலைக்கு செல்லும் என்று கூறியுள்ளது.
ஏ.கே.ராஜன் ABP நாடு என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 2,600-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமங்கள் தோறும் உள்ளன. அதன்மூலம் கிராம மக்கள் பயன்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனை வேண்டும். கோச்சிங் சென்டருக்கு  பணம் கட்டி நுழைவுத் தேர்வு எழுதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணத்தில் மருத்துவம் படித்து வெளியே வருபவர்களுக்கு அப்படிப்பட்ட சிந்தனை இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. போட்ட பணத்தை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும்.
தமிழ் மீடியம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நீட் வந்த பிறகு 14.88 சதவீதத்திலிருந்து 1.99 சதவீதமாக குறைந்துள்ளது. இது இன்னும் குறையும் என்று அறிக்கை கூறியுள்ளது.
ஆனால், மறுபுறம் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் 4.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் படிக்கிறார்கள். அவர்கள் மருத்துவ சீட்டுகளை 50 சதவீதத்திற்கு மேல் கைப்பற்றுகிறார்கள். சி.பி.எஸ்.இ-யில் பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்க மற்றும் பணக்கார வர்க்கத்தின் பிள்ளைகள்தான் படிக்கிறார்கள்.
பணம் இருந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற காரணங்களால் மக்களுக்கு சேவை செய்யும் விருப்பமுள்ள கிராமப்புற, ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பிலிருந்து இயல்பாக வெளியேற்றப்படுகின்றனர். அதைதான் அறிக்கை பிரதிபலிக்கிறது.
10 வருடங்களில் இப்படிப்பட்ட மருத்துவ கட்டமைப்பில் படித்து வெளியே வரும் மருத்துவர்களுக்கு மருத்துவத்தை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. அதனால், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எந்த மருத்துவர்களும் வரப்போவது கிடையாது. அதனால், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்படும் பேரபாயம் இருக்கிறது.
மருத்துவம் என்பது ஒரு சேவை. அதை மக்களுக்கு எப்படி எளிமையாக கொடுப்பது என்பது பற்றி அரசு தான் சிந்திக்க வேண்டும். அதிகப்படியான ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுவது, அங்கேயே மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதுதான் மருத்துவக் கட்டமைப்பை பலப்படுத்தும். மக்களும் அதிக அளவில் பயன்பெறுவர்.
தமிழகத்தில் புதியதாக கட்டப்படும் 12 மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் படிக்கப்போவதாக கூறப்படுவதில் ஒரு முக்கியமான விசயம் மறைக்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மேல்தட்டு வர்க்கத்தின் பிள்ளைகள் தான் அவற்றில் படிக்கப் போகிறார்களே ஒழிய ஏழை மாணவர்கள் அல்ல, என்பதுதான் அது.
000
படிக்க :
நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !
INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?
மேற்கூறியவைகளிலிருந்து பார்க்கும்போது ஏ.கே.ராஜன் அறிக்கையானது, நீட் தேர்வின் மூலம் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர் என்பதையும், பணக்கார வர்க்கத்தால் மட்டும்தான் மருத்துவம் படிக்க முடியும் என்பதையும், நீட் தேர்வு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டால் மருத்துவக் கட்டமைப்பு மோசமாகும் என்பதையும் புள்ளி விவரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளது.
அதனால்தான் அண்ணாமலை உள்ளிட்ட சங்கிகளால் இந்த அறிக்கையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களையும்,  அரை உண்மைகளையும் பேசி அறிக்கையை திரிக்கின்றனர்.
இப்படிப்பட்ட மோசமான மருத்துவக் கட்டமைப்பையே சிதைக்கும் நீட் தேர்வை, தி.மு.க. சட்டப் போராட்டத்தின் மூலம் ரத்து செய்துவிடும் என்று நம்பி வீட்டில் அமர்ந்திருப்பது ஏழைகளுக்கான மருத்துவக் கல்வியை பகற்கனவாக்கிவிடும். வீதியில் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே மருத்துவக் கல்வியை மட்டுமல்ல, வருங்காலத்தில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே காப்பாற்ற முடியும்.

அமீர்

1 மறுமொழி

  1. நீட் தேர்வு தனியார் கல்லூரிகள் donation வாங்குவதை தடுத்து விட்டது என்பது சங்கிகளின் கூற்று. ஆனால் Physics மற்றும் Chemistry பாடங்களில் 0 மதிப்பெண்/negative mark பெற்றவர்களுக்கு கூட MBBS சீட் தனியார் கல்லூரிகளில் கிடைத்துள்ளது. இது donation இல்லமலா நடந்திருக்கும்? நீட் தேர்வில் pass mark மட்டும் எடுத்துவிட்டு (அதிக cut-off பெறவில்லை என்றாலும் கூட) பணம் வைத்திருந்தால் மருத்துவர் ஆகலாம் என்பதையே இது காட்டுகிறது.
    https://m.timesofindia.com/india/some-mbbs-students-got-0-or-less-in-neet-papers/articleshow/65002249.cms

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க