மக்கள் அதிகாரம்

“ஸ்டெர்லைட் வழக்கு – மக்கள் அதிகாரத்தினருக்கு எதிராக ஆதாரம் இல்லை” அரசு வழக்கறிஞர்

க்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கீழ்க்கண்ட 15 பேரை முன் அறிவிக்கையின்றி கைது செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த, மருது, ராஜ்குமார், ராமலிங்கம், பிச்சை, ரங்கராஜன், திருமுருகன், பிரகாஷ், சரவணன், மலைசாமி, உசிலை ஜெயபாண்டி, மானாமதுரை செல்வகணேஷ், கோவில்பட்டி மாரிமுத்துதூத்துக்குடி செல்வகுமார், தூத்துக்குடி ராமர், திருநெல்வேலி அமுதன்.

மே 22 ஸ்டெர்லைட் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் என்ற பொய்ப்பிரச்சாரத்தை போலீசு மட்டுமின்றி, துக்ளக், தினமலர், குமுதம் ரிப்போர்ட்டர், தமிழ் தி இந்து, தினமணி போன்ற ஊடகங்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் தொடர்ந்து செய்து வருவது வாசகர்களுக்குத் தெரியும்.

இந்தப் பொய்ப்பிரச்சாரத்தின் அடிப்படையில்தான் சட்ட ஆலோசகர்களான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த பலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களன்றி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் எல்லோருடைய பெயரையும் ஒப்புதல் வாக்குமூலங்களில் எழுதி வைத்துக் கொண்டு, அவர்களுடைய வீடுகளில் நள்ளிரவில் புகுந்து சோதனையிடுவது, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவது, உடனே போலீசிடம் சரணடையவில்லையென்றால் கொன்று விடுவோம் என்று குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

எனவே, யார் மீதெல்லாம் வழக்கு இருப்பதாக போலீசு மிரட்டியதோ அவர்கள் அனைவரின் சார்பிலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுச் செய்யப்பட்டது. அவ்வாறு மனுச்செய்த 15 பேரின் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது “இந்த 15 பேர் மீதும் வழக்கு ஏதும் இல்லை” என்று சொன்னார் அரசு வழக்கறிஞர்.

மக்கள் அதிகாரம்
இந்த மக்கள் விரோத கும்பல்தான் மக்கள் அதிகாரத்தை ‘கருவருக்கப்’ போகிறதாம்!

வழக்கே இல்லை என்றால் எதற்காக வீடு புகுந்து மிரட்டினார்கள்? யார் மீதும் வழக்கே இல்லை என்றால், மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் கலவரம் செய்தார்கள் என்ற பிரச்சாரத்துக்கு என்ன ஆதாரம்? இந்த பொய்யும் பித்தலாட்டமும்தான் போலீசின் வழக்கமான வழிமுறைகள்.

வழக்கு இருப்பதாக சொல்லி குடும்பத்தினரை மிரட்டுவது, நீதிமன்றத்தில் முன் பிணை கேட்கும்போது வழக்கு இல்லை என்று கூறி முன்பிணை மனுவை தள்ளுபடி செய்ய வைப்பது, முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு புதிதாக வழக்கு போட்டு கைது செய்வது – இந்த தந்திரத்தை முறியடிக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

“புதிய வழக்கு என்ற பெயரில் இந்த 15 பேரைக் கைது செய்யக் கூடாது. அவ்வாறு இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 41-அ பிரிவின்படி முன் அறிவிக்கை அளித்து நேரில் விசாரித்து, அதன் பின்னர்  உரிய ஆதாரம் இருக்கிறது என்றால்தான் கைது செய்யவேண்டும். இதற்கிடையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களில் இவர்கள் ஈடுபடக்கூடாது” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மக்கள் அதிகாரம் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருக்கிறது, ஆதாரம் இருக்கிறது” என்று கடந்த இரண்டு மாதங்களாக கூவினார்களே, அதன் உண்மையான யோக்கியதை இதுதான். ஊடக யோக்கிய சிகாமணிகள் போலீசிடம் இது குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.

1 மறுமொழி

  1. சமூக விராேதிகள் என்று கூறியவர்கள் தான் இனி அந்த நபர்களை அடையாளம் காட்ட வேண்டும் … நீதித்துறை அவர்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்குமா …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க