கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – காலந்தோறும் மனிதர்கள் நன்றியுடன் நினைவு கூரவும், மனவலிமை பெறவும் பயன்படும் பெயர்கள். கம்யூனிசம் என்பதைப் “பேயாகப்” பார்த்து முதலாளிகளும் ஆளும் வகுப்பும் 170 ஆண்டுகளுக்கு முன் நடுங்கினர் என கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளது. உண்மையில் இன்றளவும் கம்யூனிசத்தைப் “பேயாகவே” பார்க்கிறது ஆளும் வகுப்பு.

இருவரும் எதனால் ஆளும் வகுப்பிற்குப் ‘பேயாக” மாறிப்போனார்கள் என்பதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் பேசு பொருள். 170 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களது அறிவுணர்ச்சி மூலம் உருவாகி, எதிர் வரும் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டிய அறிக்கையை, உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு விளக்கவுரைகளுடன், அச்சிட்டுப் பரப்பிக் கொண்டாடுகின்றனர்.

தமிழில் சோவியத் வெளியீடாக, சில பத்து பைசாக்களுக்கு விற்கப்பட்ட ரா.கிருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பு பெரும்பாலானவர்களைச் சென்றடைந்துள்ளது.

… அறிக்கையின் உள்ளடக்கம் தாண்டி, அதன் இன்றைய பொருத்தப்பாடு குறித்த, அதாவது அறிக்கையில் இருக்கும் கருத்துகள் செயல் வடிவில் நம் கண்முன் உள்ளதைப் பற்றிய புரிதலை தமிழ்ச் சமூகத்திற்கு தரவேண்டியதன் முயற்சியே இந்த மொழியாக்கம். வழக்கம் போல் உள்ள மொழிபெயர்ப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, சொல்லுக்குச் சொல் விளக்கம் என்ற முறையைத் தவிர்த்து, சொற்களுக்குப் பொருள் தரவேண்டி சிறு/குறு வாக்கியங்களைப் பயன்படுத்துவது என்னும் முறையும், வாக்கியத்தின் கருத்தை உள்ளடக்கிய, இயைந்த சில வாக்கியங்களை அமைத்து அதன் பொருளை விளக்கும் முறையும் இந்த மொழியாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எதற்காக இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதற்கான விளக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிக்கையின் பொருத்தப்பாடு பற்றிப் பேசுபவர்கள் பாட்டாளி, மூளை உழைப்பாளி என அனைத்து மட்டங்களிலும் உருவாகவேண்டும். அதுவே செயலாற்ற வேண்டிய சமூகத்திற்கான தொடக்கநிலைப் பாடம். தன்னளவில் கருத்தைத் தெளிவுபடுத்தக் கூடிய சொற்களும், வாக்கியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இம்முறை, மார்க்சியத்தை கொண்டு சேர்க்கப்பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

… மார்க்ஸ் எங்கெல்ஸ் – மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை பில் கஸ்பர் வடிவமைத்துள்ளார்.

அறிக்கையின் உள்ளடக்கத்தில், மூலதனம் அதன் வளர்ச்சிப் போக்கில் அடையும் பல்வேறு நிலைகளைப் பற்றியும், அதன் அடிப்படையில் மாறும் சமூகத்தைப் பற்றியும் விளக்குவதன் மூலம் கம்யூனிஸ்ட் அறிக்கை, உலகப் பொதுமறையாகிவிட்டது எனக் கூறலாம். குறிப்பாக 1990 – கள் முதல், உலகம் தழுவிய மூலதனப் பாய்ச்சலை, உலகமயமாக்கல் எனும் நிகழ்வை , அதை ஒட்டி நமது சமூகத்தில் நடந்த மாற்றங்களை, வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்திற்கு வாக்கியம் தொடர்புபடுத்தி படிக்கும் போதுதான் அதன் முழு வீச்சும் நமக்குப் பிடிபடும்.

உயர் தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாட்டையும், அதன் பிறகு தொழிலாளி வகுப்பு தன் ‘மதிப்பை’ எவ்வாறு பறிகொடுக்கும் என்பதையும் திரைப்படம் போலக் காட்சிப் படுத்துகிறார்கள் மார்க்சும் எங்கெல்சும். தொடர்ந்து விரிவடைந்து செல்லும் மூலதனத்தின் எல்லைகளைக் குறிபார்த்துச் சொல்லும் அறிக்கை அத்துடன் நில்லாது, மாற்றங்களை எதிர்கொள்ளும் சமூகத்தில் ஒவ்வொரு வகுப்பினரது நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகளைத் தெளிவாக விரித்துரை செய்கிறது. வரலாற்றுக் கடமையாக பாட்டாளிகளின் முன்னுள்ள எதிர்காலப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் கூறுகிறது.

கடந்த கால வரலாற்றில் சமூக சமத்துவம் தொடர்பான, முன்னோடிகளாக இருந்த போக்குகளை ஆய்வு செய்து, மதிப்பீடுகளையும், எச்சரிக்கைகளையும் தருவதன் மூலம், கம்யூனிச சமூகம் படைக்கப்படும் பொழுது தேவைப்படும் முன்நிபந்தனைகள் மற்றும், முன்தயாரிப்புகளை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் முன்னறிவிப்புகளாகத் தந்துள்ளனர்.

தங்களது அறிக்கையின் விளைவுகளைத் தங்கள் காலத்திலேயே கண்டு, உறுதி கொண்ட அவர்கள் மேலும் பல பத்தாண்டுகள் அக்கருத்தியலில் ஊன்றி நின்று பல்வேறு படைப்புகளின் மூலம் கம்யூனிசத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.

உலக அளவில் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிய தரவுகளை உள்ளடக்கிய கட்டுரைகள் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அறிக்கையும், மூலதனம் நூலுமே அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ள நூல்களாக இன்றும் இருக்கின்றன.

படிக்க :
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

மனித சமூகக் கட்டமைப்பைப் பற்றி இயற்கையிலிருந்து பெறப்பட்ட அறிவிலிருந்தும், சமூக அமைப்பை இயக்கும் ஆற்றல்களைப் பற்றிய கள ஆய்வுகளிலிருந்தும், வரலாற்று நிலைகளில் காணப்பட்டத் தரவுகளின் அடிப்படையிலும் இருவராலும் எழுதப்பட்டதே கம்யூனிஸ்ட் அறிக்கை. மனித குலத்தின் மீதான பேரன்பும், கண்முன் எழுந்த கடமையும், இறுதிவரை தொடர்ந்த உழைப்பும் நிரம்பியுள்ள அவர்களது எழுத்துகள் அனைத்தும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாத தனித்தன்மையைக் கொண்டுள்ளன.

கம்யூனிஸ்ட் அறிக்கை, சமூக வளர்ச்சி நிலைகளின் பிறப்பு, நடப்பு , முடிவு என அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்காகவும்,மூலதனம் – அதன் நுட்பமான அறிவுச்செறிவிற்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில், இன்றைய காலகட்டத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் படித்துச் செயலாற்றிட வேண்டியே விடியலின் இந்த வெளியீடு. (முதல் நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

.. மூலதனத்தைப் படித்து புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. இதைக் கருத்தில் கொண்டே டேவிட்ஸ்மித் எழுதிய, விளக்கப்படங்களுடன் கூடிய இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நூலில் படங்களுடன் (பில் ஈவன்ஸ்), மூலதனத்தின் பிழிவை உயிர்ப்புடன் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாகத் தருகிறார் டேவிட்ஸ்மித். மூலதனத்தின் இன்றைய பொருத்தப்பாட்டை விளக்கி கூடுதலாக ஒரு இணைப்பையும் தந்திருக்கிறார்.

உலகை இயக்கிக் கொண்டிருக்கும் ‘பரம்பொருளான’ மூலதனத்தைப் பற்றிய தொடக்கநிலைப் புரிதலுக்கு 18 தலைப்புகளின் வழியாக நம்மை கொண்டு செல்வதில் டேவிட் ஸ்மித் வெற்றி பெறுகிறார். மேலும் விரிவாக மார்க்சின் மூலதனத்தைப் படிப்பதற்கு தூண்டும் நூல் இது. தமிழ் வாசகர்கள் இதற்கு மேல் தோழர்கள் தியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் மொழியாக்க நூல்களுக்கு செல்ல வேண்டும். (இரண்டாம் நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

… உதாரணத்திற்கு ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கொள்வோம். மளிகைக் கடையில் உள்ளவரை அதன் பயன்பாடு செயலற்றதாகவே இருக்கும். அது தரமான உணவுப் பொருளாகவே இருந்தாலும் உண்ணப்படுவதற்கு முன் அதற்கான பரிவர்த்தனை மதிப்பை நிரூபிக்க வேண்டும். மக்கள் பசியிலே வாடினாலும் கூட அந்த ரொட்டித் துண்டை யாருமே வாங்கவில்லை என்றால் அது தானாகவே கெட்டு அழுகிவிடும்.

அனைத்து பண்டங்களுக்கும் இதே நிலைதான். விற்கப்படவில்லை என்றால் பயனில்லை. இதுதான் தனிச்சொத்தின் அடிப்படை. அப்படியே எடுத்து இலவசமாக வழங்கிவிடுவதற்காக எந்த ஒரு பண்டமும் உருவாக்கப்படுவதில்லை. (இரண்டாம் நூலிலிருந்து பக்.43)

.. மகிழ்ச்சி உள்ளிட்ட பல மனித உணர்வுகளை, ஹார்மோன்களை மூளையில் உருவாக்க இணையத்தையும் கைப்பேசியையும் நம் கையில் தந்துள்ள முதலாண்மை, மனிதர்களின் பல உணர்வுகளை அக்கருவிகளின் வழியே நிறைவுறச் செய்கிறது. இப்போது நிலவும் சமூக நிலை குறித்த அதிருப்தி, மாற்றம் விழையும் வேட்கை, நம்பிக்கைகளை வலுப்படுத்தும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் தரவுகளைத் தேடும் பண்பு போன்றவை முதற்கொண்டு, மனிதனின் அகம் சார்ந்த ஆசைகள், பிறழ்ச்சிகள் மற்றும் மதிப்பற்ற பண்பு நலன்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொள்வதும், பரப்புவதும் பெரும்பாலும் செயல்வடிவம் இன்றியே இணையம் வழி நடந்தேறி விடுகின்றன. இவ்வஞ்சனையின் பலிகடாக்களாக மக்கள் மாறிவரும் சூழலில் மார்க்சியக் கல்விக்கு அவர்களைத் தயாரிப்பது என்பது ஒரு சவாலாகவே உள்ளது. குரங்கு தன் குட்டிக்குப் பேன் பூச்சி பார்ப்பது போல், தமது இரண்டு கைகளையும் கைப்பேசிக்குத் தந்து விட்ட மனிதர்களிடம் மார்க்சைத் தவழவிட வைப்பதற்கு முதலில் எதைச் சொல்லி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியும்? தங்களது உழைப்பை, வாழ்க்கையைத் திருடும் முதலாளியப் பொருளாதார சமூக அமைப்பையா? அதைக் காப்பாற்றும் அரசு ஒடுக்கு முறைகளையா? ஆனால் சூழலியல் சிக்கல்களை முதலாளியப் பொருள் உருவாக்கம் மற்றும் பரிமாற்ற முறையுடன் இணைத்து, நிலவும் நெருக்கடிகளின் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் போது, அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாகவும் சில இடங்களில் கூடுதலாகவும் சூழல் நெருக்கடிகள் பயணிப்பதைக் காண முடிகிறது. (மூன்றாம் நூலுக்கான பதிப்புரையிலிருந்து …)

மார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள்)

முதல் நூல் : காரல் மார்க்ஸ் பிரடெரிக் ஏஞ்செல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை
தொகுப்பும் விளக்கமும் : பில் கஸ்பர்

தமிழில் : கே.சுப்பிரமணியன்

இரண்டாம் நூல் : காரல் மார்க்ஸ் மூலதனம்
சித்திரவடிவில் : டேவிட் ஸ்மித்

தமிழில் : ச.பிரபுதமிழன், சி.ஆரோக்கியசாமி

மூன்றாம் நூல் : மாந்தர் கையில் பூவுலகு
ஆசிரியர் : பரிதி

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3-வது தெரு,
உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576772 | 94434 68758
மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 968
விலை: ரூ 600.00

சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கின்றன …

கடை எண் : 182, 183

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க : commonfolksperiyar books

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க