பத்திரிகை செய்தி
13.01.2020
எடப்பாடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்திருந்தார் என்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி, ஏதோ பயங்கரவாதியை கைது செய்வதைப் போல நள்ளிரவில் மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகனைக் கைது செய்திருக்கும் காவல்துறையின் செயல் மிகக் கீழ்த்தரமான அடக்குமுறை.
போலிசின் மிரட்டலுக்கு அஞ்சி அவரது அரங்கைப் பறித்ததுடன் அவர் மீது பொய்ப் புகார் கொடுத்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) செயல் மிகக்கேவலமானது. பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ‘பபாசி’ காட்டிக்கொடுக்கும் துரோகத்தைச் செய்திருக்கிறது.
ஒரு புத்தகம் தடைசெய்யப்படாத நிலையில் அதனை விற்பனை செய்யக்கூடாது என்று கூற பபாசிக்கு எந்த உரிமையும் இல்லை. அரசுக்கு எதிராக கருத்துக்கள் கொண்ட புத்தகங்களை விற்கக்கூடாது என்றால் பபாசி தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்களை விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, புத்தகக் கண்காட்சி நடத்துவதை விட்டுவிடலாம். எடப்பாடி அரசு தொடர்ந்து மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அரசியல் செயல்பாடுகளை ஒடுக்கி வருவதுடன் எழுத்தாளர்களையும் ஒடுக்குகிறது.
திரு. அன்பழகன் அவர்களை நீதிபதி சிறையில் அடைக்க மறுத்தப்போதும் காவல்துறையினர் நீதிபதியை மிரட்டும் தொனியில் பேசி சிறையில் அடைத்துள்ளனர். அரசியல் சட்டம், ஐ.நா. மனித உரிமைச் சாசனம் ஆகியவை வழங்கியுள்ள அடிப்படை கருத்துரிமை மீது தொடுக்கப்படும் இத்தாக்குதலை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேபோல் பபாசியின் ’எட்டப்ப’-தனத்தையும் வன்மையாக கண்டிக்கிறது.
எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிகையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.