நிக்கொலாய் கோகல்
நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 07

ந்த நாள்… நிச்சயமாக எந்த நாள் என்று குறிப்பிடுவது கடினம், எனினும், பெத்ரோவிச் கடைசியில் மேல் கோட்டைக் கொண்டுவந்து கொடுத்த அந்த நாள், அக்காக்கியின் வாழ்க்கையில் மிகப் பெரிய முக்கியத்துவமுள்ள நாள் என்பதில் சந்தேகமே இல்லை. பெத்ரோவிச் அதைக் கொண்டுவந்தது அதிகாலையில், அக்காக்கிய் அலுவலகம் புறப்படுவதற்குச் சற்று முன்பு. கடுங் குளிர்காலம் அப்போது தான் தொடங்கியிருந்தது, குளிரின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதற்கான குறிகள் தென்பட்டன. ஆகவே, வேறு எந்தச் சமயத்திலும் மேல்கோட்டின் வருகை இப்போது போல இவ்வளவு உவப்பாக இருந்திராது. பெத்ரோவிச் நல்ல தையல்காரனுக்கு உரிய தோரணையில் தானே மேல்கோட்டை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். அவன் முகத்தில் அப்போது திகழ்ந்தது போன்ற ஆழ்ந்த கம்பீரத்தை அக்காக்கிய் முன்னர் கண்டதே இல்லை. தான் சாதித்த காரியம் சாதாரணமானது அன்று என்பதையும் பழங்கோட்டின் உள் துணியை மட்டும் மாற்றித் தைப்பவர்கள் அல்லது அதைப் பழுதுபார்ப்பவர்களான தையல்காரர்களிலிருந்து புதுக்கோட்டுக்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்களை வேறு பிரிக்கும் பெரிய வித்தியாசத்தைத் தான் வெளிப்படுத்திக் காட்டிவிட்டதையும் அவன் முழுமையாக உணர்ந்திருந்தது புலப்பட்டது.

மேல்கோட்டைப் பெரிய கைக்குட்டையால் சுற்றிக்கொண்டு வந்திருந்தான்; அப்போது தான் வெளுத்து வந்த கைக்குட்டை அது; பிரித்த அப்புறமே அதை மடித்து, உபயோகிப்பதற்காகப் பைக்குள் வைத்துக் கொண்டான். கோட்டை வெளியிலெடுத்து, கர்வந்தோன்றச் சுற்றுமுற்றும் பார்த்தான், இரு கைகளாலும் அதைப் பிடித்துக்கொண்டு அக்காக்கியின் தோள்கள் மீது லாகவமாகப் போட்டான்; பிறகு அதை இழுத்து விட்டுக் குனிந்து, பின் பக்கம் கையால் தேய்த்துச் சுருக்கங்களைப் பிரித்துச் சீர்படுத்தினான்; அப்புறம் அதை அக்காக்கிய் அக்காக்கியெவிச்சின் உடலைச் சுற்றி, முன்பக்கம் கொஞ்சம் போலத் திறந்திருக்கும்படி மாட்டினான். இளமை கடந்துபோன அக்காக்கிய், கரங்களைக் கோட்டுக் கைகளுக்குள் நுழைத்து அளவு பார்க்க விரும்பவே, பெத்ரோவிச் கைகளை நுழைக்க அவனுக்கு உதவி செய்தான். அவ்வாறு அணிந்து கொண்டபோதும் கோட்டு சரியாயிருந்தது. மேல்கோட்டு கச்சிதமாகப் பொருந்தியிருந்ததில் சந்தேகமே இல்லை.

பெத்ரோவிச் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், தான் விளம்பரப் பலகை மாட்டிக்கொள்ளாமல் சின்னத் தெருவில் குடியிருப்பதனாலும், அக்காக்கியை நெடுங்காலமாக அறிந்திருப்பதனாலுமே மேல்கோட்டு தைப்பதற்கு இவ்வளவு குறைவாகக் கூலி வாங்கியதாகச் சொல்லிக்கொண்டான். நெவ்ஸ்கிய் வீதியிலே கொடுத்திருந்தால் தையல் கூலி மட்டுமே எழுபத்தைந்து ரூபிள் வாங்கிக் கொண்டு விட்டிருப்பார்கள் என்றான். அக்காக்கிய் இந்த விஷயம் பற்றிப் பெத்ரோவிச்சுடன் விவாதிக்க விரும்பவில்லை. தவிர, பெருமையடிக்க பெத்ரோவிச் அள்ளிவீசிய பெரும் பெருந்தொகைகள் அவனுக்குக் கலவரமூட்டின. தையல்காரனுக்குக் கூலி கொடுத்து நன்றி கூறிவிட்டு, அக்கணமே புதிய மேல்கோட்டை அணிந்துகொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான். பெத்ரோவிச் வீதிவரை வந்து அவனை வழியனுப்பிவிட்டு, ஒரே இடத்தில் நின்று, தான் தைத்த கோட்டின் பின் அழகை நெடுநேரம் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு, குறுக்குச் சந்து வழியாகப் பாய்ந்து சென்று தன் படைப்பான கோட்டை மீண்டுமொரு முறை வேறு கோணத்திலிருந்து, அதாவது முன்புறமிருந்து நோக்கும் பொருட்டு வீடு செல்லும் வழியை விட்டு வேண்டுமென்றே விலகி ஓடினான்.

இதற்கிடையில் அக்காக்கிய் இன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான். தான் புதிய மேல்கோட்டு அணிந்திருப்பதை அவன் கணமேனும் மறக்கவில்லை. உள்ளிருந்து பொங்கிய மன நிறைவால் பல முறை புன்முறுவல் பூத்தான். உண்மையாகவே கோட்டில் இரண்டு அனுகூலங்கள் இருந்தன: முதலாவது, கதகதப்பாயிருந்தது; இரண்டாவது, நன்றாகத் தைக்கப்பட்டிருந்தது. நடப்பதைக் கூட உணராமல் மிதந்து சென்றவன் திடீரென்று தான் அலுவலகம் சேர்ந்துவிட்டதைக் கண்டான். நடையில் மேல்கோட்டைக் கழற்றி, முன்னும் பின்னும் நன்றாகப் பார்வையிட்டுவிட்டு, வாயில் காப்போனின் விசேஷப் பொறுப்பில் ஒப்படைத்தான்.

அக்காக்கிய் புதிய மேல்கோட்டு தைத்துக்கொண்டு விட்டான், பழைய ‘கப்போத்’ காலாவதியாகிவிட்டது என்ற செய்தி எப்படியோ துறை முழுவதிலும் நொடியில் பரவிவிட்டது. அந்தக் கணமே எல்லாரும் அவனது மேல்கோட்டைப் பார்வையிடுவதற்காக வாயில் காப்போனருகே ஓடினார்கள். வாழ்த்துக்களும் வரவேற்பு மொழிகளும் அவன்மீது பொழியலாயின. முதலில் அக்காக்கிய் புன்னகை மட்டுமே புரிந்தான், பின்பு அவனுக்குக் கூச்சமாயிருந்தது. அப்புறம் எல்லாரும் அவனைச் சூழ்ந்துகொண்டு புதிய மேல்கோட்டு வந்ததைக் கொண்டாட வேண்டுமென்றும், தங்களெல்லாருக்கும் ஒரு விருந்தாவது கொடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தத் தொடங்கவே அக்காக்கிய் ஒரேயடியாகக் குழப்பமடைந்து, என்ன செய்வது, என்ன சொல்வது, இந்த எக்கச்சக்கமான நிலைமையிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தெரியாமல் திகைத்தான். சில நிமிடங்களுக்கு அப்புறம் அவன், முகமெல்லாம் கன்றிச் சிவக்க, அது புதிய கோட்டே இல்லையென்றும், இப்படித் தான் எதோ என்றும், பழங்கோட்டே தான் என்றும் சிரித்து மழுப்பினான்.

கடைசியில் எழுத்தர்களில் ஒருவன், அதுவும் அலுவலகத்தின் உதவித் தலைமை எழுத்தன், தான் அகந்தை பிடித்தவனே அல்ல, கீழ்நிலையிலிருப்பவர்களையும் ஆளாக மதிப்பவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவே, “அப்படியே இருக்கட்டும்! அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்குப் பதிலாக நான் கொடுக்கிறேன் விருந்து. இன்று மாலை தேநீர் விருந்துக்கு என் வீட்டுக்கு வரும்படி எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன். அதோடு கூட இன்று என் பெயர் நாளும் வாய்த்துக் கொண்டது” என்றான். எழுத்தர்கள் அனைவரும் இயல்பாகவே அவனுக்கு வாழ்த்துக் கூறி அவனது அழைப்பை விருப்புடன் ஏற்றுக் கொண்டார்கள். அக்காக்கிய் தனக்கு வசதிப்படாது என்று சொல்லிப் பார்த்தான், ஆனால் அது நடவாதெனவும், வெட்கக்கேடு, அவமானம் எனவும் எல்லாரும் சேர்ந்து ஒரே போடாய்ப் போடவே, அவன் தப்பிக்க வகையில்லாது போயிற்று. ஆயினும், இதைச் சாக்கிட்டுச் சாயங்காலமும் மேல்கோட்டைப் போட்டுக்கொண்டு நடக்கலாம் என்பது பிறகு நினைவுக்கு வந்ததும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

படிக்க :
நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

அன்று முழுவதுமே அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு மாபெருந் திருநாளாகத் திகழ்ந்தது. உவகை ஊற்றெடுத்துப் பொங்க வீடு திரும்பினான், மேல்கோட்டைக் கழற்றி நிதானமாகச் சுவரில் மாட்டினான், மேல்துணியையும் உள்துணியையும் பார்த்து மகிழ்ந்த வண்ணம் சிறிது நேரம் நின்றான், அப்புறம் நைந்து திரித்திரியாய்ப் போயிருந்த பழங்கோட்டை வேண்டுமென்றே வெளியிலெடுத்து, புதுக்கோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். பழங்கோட்டைப் பார்த்ததும் அவனுக்கே சிரிப்பு வந்தது: புதிதற்கும் பழையதற்கும் அவ்வளவு வித்தியாசம்! சாப்பிடும் வேளை முழுவதும் தனது ‘கப்போத்’ இருந்த அவல நிலையை எண்ணி எண்ணி முறுவலித்த வண்ணமாயிருந்தான். சந்தோஷமாகச் சாப்பிட்டான், சாப்பாடு முடிந்த பிறகு நகல் எழுதவில்லை, ஓர் ஆவணங் கூட நகல் எடுக்கவில்லை, அந்தி சாயும் வரை கட்டிலில் படுத்துப் பேரின்பம் கண்டான். பின்பு வீண் காலங்கடத்தாமல் மளமள வென்று உடையணிந்து, மேல்கோட்டைத் தோளில் மாட்டிக்கொண்டு வீதிக்கு வந்தான்.

தேநீர் விருந்தளித்த எழுத்தன் திட்டமாக எங்கே வசித்து வந்தான் எனக் கூற முடியாததற்கு வருந்துகிறோம். நமது நினைவாற்றல் தீவிரமாகப் பிசகத் தொடங்கியிருக்கிறது; பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ளவை எல்லாம், எல்லாத் தெருக்களும் வீடுகளும், நமது மூளையில் ஒன்றோடொன்று கலந்து குழம்பியிருப்பதால், அவற்றை ஒழுங்குபடுத்திக் காண்பது கொஞ்சம் கடினந்தான். அது எப்படியாயினும் விருந்து கொடுத்த எழுத்தன் நகரின் மிக நல்ல பகுதி ஒன்றில் வசித்தான் என்பது மட்டும், அதாவது, அக்காக்கியின் வீட்டு அருகாமையிலேயே வசிக்கவில்லை என்பது மட்டும் சந்தேகத்துக்கு இடமற்ற விஷயம்.

முதலில் அக்காக்கிய் ஆள் நடமாட்டமற்ற, விளக்கு வெளிச்சம் குறைந்த தெருக்கள் வழியே செல்ல நேர்ந்தது. ஆனால் அவன் உதவித் தலைமை எழுத்தனின் இல்லத்தை நெருங்க நெருங்க வீதிகள் கலகலவென்று மக்கள் நிறைந்து, பளிச்சிடும் விளக்கு வசதிகளோடு விளங்கின. ஆட்கள் அதிகமாக எதிர்ப்பட்டார்கள், ஒயிலாக உடையணிந்த மாதர் தென்பட்டனர். ஆடவர் பலர் விலையுயர்ந்த நீர்நாய்த்தோல் காலருடன் இலகினார்கள். பித்தளைக் குமிழ்கள் பதித்த மரக் கிராதி வடிவான வாடகை ஸ்லெட்ஜுகளுடன் எழைக் கிராம வண்டிக்காரர்கள் அரிதாகவே காணப்பட்டனர்; மாறாக, வண்டிக்காரர்கள் பெரும்பாலும் சிவப்பு மகமல் தொப்பியணிந்து எடுப்பான தோற்றத்துடன் விளங்கினார்கள், அவர்களது ஸ்லெட்ஜுகள் அரக்குச் சாயம் பூசப்பெற்று கரடித் தோல் மூடு போர்வையுடன் திகழ்ந்தன. பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட பெட்டி வண்டிகள், வெண்பனி மீது சக்கரங்கள் கரகரக்க வீதிகளில் விரைந்தோடின.

அக்காக்கிய் இவற்றையெல்லாம் ஏதோ புதுமையைக் காண்பதுபோல வியந்து நோக்கினான். எத்தனையோ ஆண்டுகளாக அவன் மாலை நேரத்தில் அறையை விட்டு வெளிச் சென்றதே கிடையாது. விளக்கொளி நிறைந்த கடை சன்னல் ஒன்றின் எதிரே சில நிமிடங்கள் நின்று, அழகிய பெண்ணொருத்தி காலணியைக் கழற்றுவது போலத் தீட்டப்பட்டிருந்த வண்ண ஓவியத்தைக் கண் கொட்டாது பார்த்தான்; ஓவியப் பெண் காலணியைக் கழற்றிய விதத்தில் வடிவாக அமைந்த அவளது கால் முழுதும் தெரிந்தது; அவளுக்குப் பின்னே, கிருதாக்களும் வனப்பு வாய்ந்த குறுந்தாடியுமாக இலகிய ஆடவன் ஒருவன் பக்கத்து அறை வாயிலுக்கு வெளியே தலையை நீட்டி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அக்காக்கிய் தலையை அசைத்தான், புன்னகைத்தான், பின்பு தன் வழியே நடந்தான். எதற்காக அவன் புன்னகைத்தான்? எந்த விஷயத்தை இதற்குமுன் அவன் கண்டதே இல்லையோ, ஆயினும் எந்த விஷயத்தைப் பற்றிய ஆசை நம்மில் ஒவ்வொருவரது உள்ளத்தின் ஆழத்திலும் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ, அந்த விஷயத்தைக் கண்டதனால் நகைத்தானோ? அல்லது, வேறு பல எழுத்தர்களைப் போலவே அவனும், “அட இந்தப் பிரெஞ்சுக்காரன்கள் இருக்கிறான்களே! இவன்களை என்ன சொன்னாலும் போதாது. எதாவது அந்த மாதிரி வேண்டுமென்று ஆசை வைத்துவிட்டான்களோ, அந்த மாதிரித்தான்…” என்று நினைத்தானோ? ஒருவேளை அவன் இப்படி நினைக்கவே இல்லையோ என்னவோ. ஒருவன் உள்ளத்திலே புகுந்து அவன் எண்ணுவதை எல்லாம் தெரிந்து கொள்வது முடியாதல்லவா? கடைசியில் அவன் உதவித் தலைமை எழுத்தன் வசித்து வந்த வீட்டை அடைந்தான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க