நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 06

புதுக் கோட்டு இல்லாமல் தீராது என்பதை அப்போது தான் அக்காக்கிய் உணர்ந்தான். அவன் இதயத் துடிப்பு நின்றது போல் ஆகிவிட்டது. எப்படித் தைத்துக்கொள்வது? எதைக் கொண்டு? எந்தப் பணத்தால்? விழாக் கால சிறப்பூதியம் ஒருவேளை கிடைக்கலாம் என்பது உண்மையே. ஆனால் அந்தப் பணத்தைத்தான் முன் கூட்டியே பங்கீடு செய்து ஒதுக்கி வைத்தாகி விட்டதே. புதுக் காற்சட்டை வாங்காமல் முடியாது; அப்புறம் பழைய காலணிகளுக்குப் புதிதாக மேல்தோல் தைத்துக்கொடுத்த செம்மானுக்குக் கடனைத் தீர்த்தாக வேண்டும்; தையல்காரியிடம் மூன்று சட்டைகளும், பெயர் குறிப்பிட முடியாத உள்ளாடைகளும் தைக்கக் கொடுக்க வேண்டும்; ஆகமொத்தம் போனஸ் பணம் பூராவும் ஒரு காசு பாக்கியில்லாமல் செலவழித்தாக வேண்டும். ஒருவேளை இயக்குநர் பெரிய மனது பண்ணி விழாக்கால போனஸ் தொகையை நாற்பதுக்குப் பதில் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது ரூபிள் ஆக்கினார் என்றே வைத்துக் கொண்டாலுங்கூட, மிஞ்சுவது என்னவோ, மேல்கோட்டுக்கு வேண்டிய முதலோடு ஒப்பிட்டால் கடலில் துளி போலச் சொற்பந்தானே.

பெத்ரோவிச் சில வேளைகளில் வெறி கொண்டவன் போல அளவு மதிப்பில்லாமல் வாய்க்கு வந்த விலையைச் சொல்லிவிடுவான் என்பது அவனுக்குத் தெரியும். தையல்காரனின் மனைவிகூட, “எய், மூளை புரண்டுபோச்சா, கேட்கிறேன், மடையா! மற்றச் சமயங்களில் அடிவிலைக்குச் செய்து கொடுக்க ஒத்துக் கொள்றே. இப்ப என்னடான்னா உன் பெறுமானத்துக்கும் அதிகமான தொகையைக் கூசாமல் கேட்கிறே!” என்று விளாசுவாள். இதெல்லாம் அக்காக்கிய் அறிந்தது தான். எண்பது ரூபிளுக்குக் கோட்டு தைத்துக்கொடுக்க பெத்ரோவிச் இணங்குவான் என்பதை அவன் அறிந்திருந்தான். இருந்த போதிலும், எண்பது ரூபிளுக்கு எங்கே போவது? இந்தத் தொகையில் பாதி வேண்டுமானால் கிடைக்கும்: பாதித் தொகையைச் சிரமமின்றித் தேடிவிடலாம். ஒருவேளை பாதித் தொகைக்குக் கொஞ்சம் கூடுதலாகவே கிடைத்துவிடும். மற்றப் பாதிக்கு எங்கே போவது?

பாதித் தொகை எங்கிருந்து கிடைக்கும் என்பதை வாசகர்கள் முதலில் தெரிந்துகொள்வது அவசியம்.

செலவழிக்கும் ஒவ்வொரு ரூபிளிலும் அரைக்காசை, பூட்டிய உண்டியல் பெட்டியில் போட்டு வைப்பது அக்காக்கியின் வழக்கம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சேர்ந்த செப்புக் காசுகளையெல்லாம் வெள்ளி நாணயங்களாக மாற்றிக்கொள்வான். இப்படி அவன் நீண்ட காலமாகச் சேர்த்துவந்த படியால், பல ஆண்டுகளில் நாற்பது ரூபிளுக்கும் மேலே சேர்ந்துவிட்டது. ஆகவே தேவைப்பட்ட தொகையில் பாதி அவன் கையிலிருந்தது; ஆனால் மறு பாதிக்குப் போவதெங்கே? இன்னும் நாற்பது ரூபிள் எங்கிருந்து கிடைக்கும்?

அக்காக்கிய் திரும்பத் திரும்ப யோசனை செய்தபின், குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சாதாரணச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்; அதாவது மாலை நேரத் தேநீரை நிறுத்த வேண்டும்; இரவில் மெழுகுவத்தி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், வேலை இருந்தால் வீட்டுச் சொந்தக்காரியின் அறைக்குப் போய் அவளது விளக்கு வெளிச்சத்தில் செய்ய வேண்டும்; தெருவில் போகும் போது, காலணி அடிப்பாகம் சீக்கிரம் தேய்ந்து விடாமலிருக்க கூழாங்கல்லோ தட்டைக்கல்லோ பாவிய இடங்களில் முடிந்த வரை மெதுவாக அடி வைத்து, நுனிக்காலால் நடப்பது போல நடக்க வேண்டும்; துணிகளை அபூர்வமாக எப்போதாவது தான் வெளுக்கப் போட வேண்டும்; அவை நைந்து விடாமலிருக்கும் பொருட்டு, ஒவ்வொரு தடவையும் வீடு திரும்பியதுமே அவற்றைக் களைந்துவிட்டு, ட்வில் அங்கியை மட்டுமே (காலமே இரக்கங்கொண்டு விட்டு வைத்திருந்த மிகப் பழைய ஆடை இது) அணிய வேண்டும் என நிச்சயித்தான்.

உண்மையாகச் சொன்னால், அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு இம்மாதிரி கட்டுச் செட்டாக இருப்பது முதலில் மிகவும் கஷ்டமாகத் தானிருந்தது; பின்னால் அவனுக்குப் பழக்கமாகிவிடவே எல்லாம் சுளுவாய்ப் போயிற்று; மாலையில் பட்டினி கிடப்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை, ஏனெனில் அவனது எண்ணங்களெல்லாம் வரப்போகும் மேல்கோட்டைப் பற்றிய யுக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாலேயே நிறைந்திருந்தபடியால் ஆன்மீக உணவு அவனுக்கு ஏராளமாகக் கிடைத்துவந்தது. தன்னுடைய வாழ்வே முன்னைவிட இப்போது அதிக முழுமை பெற்றது போலவும் தான் மணந்து கொண்டுவிட்டது போலவும் தன் அருகே யாரோ இருப்பது போலவும் தான் தனியாள் அன்று என்பது போலவும் அன்புக்குகந்த தோழி ஒருத்தி தனது வாழ்க்கைத் துணைவியாக இணங்கி விட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது – இந்தத் தோழி வேறு யாருமல்ல, கனமாகப் பஞ்சு வைத்து, என்றுங் கிழியாதபடி அழுத்தமான உள்துணி கொடுத்துத் தைத்த அதே மேல்கோட்டுத்தான்.

படிக்க :
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

அவன் முன்னைக் காட்டிலும் அதிகக் குதூகலமாகவும், திட்டவட்டமான லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி முன்னேறுகின்ற சுபாவத்தில் அதிக உறுதியுடனும் விளங்கினான். அவன் முகத்திலிருந்தும் செயல்களிலிருந்தும் ஐயப்பாடும் நிச்சயமின்மையும், சுருக்கமாகச் சொன்னால் அவன் சுபாவத்திலிருந்த உறுதியற்ற ஊசலாட்டமெல்லாம் தானாகவே மறைந்து போயிற்று. சிற்சில சமயம் அவன் விழிகளில் ஒளிசுடரும், மூளையில் மிகமிக அடாத, துணிகரம் நிறைந்த கருத்துகள் மின்வெட்டுப் போலப் பளிச்சிடும். அதாவது, மார்ட்டன் மென்மயிர்த் தோல் காலருக்கே ஆர்டர் கொடுத்து விட்டால் என்ன என்று. புது மேல்கோட்டைப் பற்றிய இந்தச் சிந்தனைகள் எல்லாம் அலுவலக வேலையில் அவன் மனம் அநேகமாக ஈடுபடாதவாறு அடித்து விட்டன. விளைவாக ஒரு முறை ஓர் ஆவணத்தை நகலெடுக்கையில் பிழை செய்ய இருந்து “ஐயையோ!” என்று உரக்கக் கத்தி, சிலுவைக் குறி இட்டுக்கொண்டான். மாதம் ஒரு முறையாவது பெத்ரோவிச்சைச் சென்று கண்டு, மேல் கோட்டைப் பற்றியும், துணியை எங்கே வாங்குவது நல்லது, எந்த நிறத்தில், என்ன விலையில் என்றெல்லாம் சர்ச்சை செய்து விட்டு, முகத்தில் ஓரளவு கவலை தென்பட்ட போதிலும், விரைவில் இதையெல்லாம் வாங்கி விடுவோம், மேல் கோட்டு தயாராகிவிடும் என்ற மனத் திருப்தியுடன் வீடு திரும்புவான்.

குறைந்தது ஓர் ஆண்டிற்காவது சாதாரணச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்; அதாவது மாலை நேரத் தேநீரை நிறுத்த வேண்டும்; இரவில் மெழுகுவத்தி எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், தெருவில் போகும் போது, காலணி அடிப்பாகம் சீக்கிரம் தேய்ந்து விடாமலிருக்க கூழாங்கல்லோ தட்டைக்கல்லோ பாவிய இடங்களில் முடிந்த வரை மெதுவாக அடி வைத்து, நுனிக்காலால் நடப்பது போல நடக்க வேண்டும் …

உண்மையில் அவன் கனவு கண்டதை விட வெகு முன்னதாகவே எல்லாம் நடந்தேறியது. அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக இயக்குநர் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு நாற்பதோ நாற்பத்தைந்தோ அல்ல, முழுதாக அறுபது ரூபிள் போனஸ் வழங்கினான்! இவனுக்கு மேல் கோட்டு தேவை என்பதை இயக்குநர் ஊகித்துக்கொண்டானா தற்செயலாக இப்படி நிகழ்ந்ததா, தெரியாது. எப்படியோ இந்த வகையில் மட்டுமே அதிகப்படியாக இருபது ரூபிள் கிடைத்து விட்டது. இது வேலையைத் துரிதப்படுத்தியது. மேற்கொண்டு இரண்டு மூன்று மாதங்கள் குறைப் பட்டினியாகக் கழித்தபின் அவனிடம் ஏறக்குறைய எண்பது ரூபிள் உண்மையாகவே சேர்ந்து விட்டது. சாதாரணமாக நிம்மதியாயிருக்கும் அவன் நெஞ்சு படபட வென்று அடித்துக்கொண்டது. மறுநாளே பெத்ரோவிச்சையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனான். மிக அருமையான துணி வாங்கினார்கள். இதில் வியப்பொன்றுமில்லை: ஆறு மாதங்களுக்கு மேலாக முன்யோசனை செய்து, மாதந்தவறாமல் கடைகளில் சுற்றிப் பார்த்து விலையை நிதானப்படுத்திக் கொண்ட விஷயமாயிற்றே இது! இதன் விளைவாகத்தான், பெத்ரோவிச்சே கூறினான்: “இதைக் காட்டிலும் உயர்வான துணி கிடையவே கிடையாது”. உள்ளே கொடுத்துத் தைப்பதற்குக் காலிக்கோதான் என்றாலும் நல்ல ரகத்தில் உறுதியான துணி வாங்கினார்கள். அது பட்டைவிட எவ்வளவோ மேல் என்றும் உண்மையாகவே பார்வைக்கு அதிக எடுப்பாகவும் மழமழப்பாகவும் இருக்கிறதென்றும் பெத்ரோவிச் சொன்னான். மார்ட்டன் மென்தோல் மெய்யாகவே கிராக்கி ஆனபடியால் அவர்கள் அதை வாங்காமல் அதற்குப் பதிலாக, கடைவீதியில் உள்ளவற்றுள் மிகமிக உயர்வான பூனைத் தோலை – தூரப் பார்வைக்கு மார்ட்டன் போலவே காணப்படும் – வாங்கிக் கொண்டார்கள். பெத்ரோவிச் இரண்டே வாரங்களில் தைத்து முடித்துவிட்டான் – அதுவும் ஏகப்பட்ட பஞ்சுப் பற்றை உள்ளே கொடுக்க வேண்டி இருந்தது, இல்லாவிடில் இன்னும் முன்னதாக முடித்திருப்பான். தன் வேலைக்குக் கூலியாகப் பன்னிரண்டு ரூபிள் வாங்கிக் கொண்டான் – கூலியை மேலும் குறைப்பதற்கு வழியே இல்லை; மெல்லிதாக இரட்டை மடிப்புக் கொடுத்து முழுதும் பட்டு நூலால் தைத்து, அப்புறம் ஒவ்வொரு மடிப்பையும் பற்களால் அழுத்திச் சீர்படுத்தி, மடிப்புக்களின் மேல் பலவிதத் தடங்களைப் பதிய வைத்திருந்தான் பெத்ரோவிச்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க