நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 05

முதல் பாகம்

“புதுசா” என்ற சொல் காதில் பட்டதுமே அக்காக்கியின் கண்கள் இருண்டன, அறையிலிருந்தவை எல்லாம் தாறுமாறாகச் சுழன்றன. அவனுக்குத் தெளிவாகப் பார்க்க முடிந்த ஒரே பொருள் பெத்ரோவிச்சின் பொடி டப்பி மூடிமேலிருந்த ஜெனரலின் காகிதம் ஒட்டிய முகம் மட்டுமே.

“புதுசாவது, ஒன்னாவது? விளங்கலே” என இன்னும் எதோ கனவு காண்பவன் போலக் கூறிய அக்காக்கிய் அக்காக்கியெவிச், “அதுக்கு வேண்டிய பணம் எங்கிட்ட இல்லையே” என்றான்.

பெத்ரோவிச்சோ, மிருகத்தனமான அலட்சிய பாவத்துடன், “ஆமாம், புதுசாத் தைத்துக் கொள்ள வேண்டியது தான்” என மறுபடியும் சொன்னான்.

“ஊம்…. அப்படிப் புதுசுதான் வேண்டும் என்றால் அதற்கு எப்படி… என்ன…”

“அதாவது, என்ன செலவாகும்ணு கேட்கிறீங்களா?”

“ஆமாம்.”

”ம்ம்… ஐம்பது ரூபிள் நோட்டு மூனைத் தனியா எடுத்து வைக்க வேண்டியது தான்” என்று அர்த்த பாவனையுடன் உதடுகளைக் குவித்துக்கொண்டான் பெத்ரோவிச்..

மற்றவர்களுக்குக் கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்துவதில் பெத்ரோவிச்சுக்கு மிகவும் விருப்பம். ஒருவனைத் திடீரென மண்டையில் சாத்துவது போல எதாவது சொல்லி விட்டு, அவன் எப்படித் திக்குமுக்காடுகிறான் என்று ஓரக் கண்ணால் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

“மேல்கோட்டுக்கு நூற்றைம்பது ரூபிளா!” என்று கத்திவிட்டான் பாவம் அக்காக்கிய். எப்போதும் தணிந்த குரலில் பேசுவதைச் சிறப்பியல்பாகக் கொண்ட அவன் வாழ்க்கையிலேயே உரக்கக் கத்தியது இதுதான் முதல் தடவை போலும்.

“ஆமாம், ஐயா. அதுவும் எந்த மாதிரிக் கோட்டு என்பதைப் பொருத்தது. கழுத்துப் பட்டைக்கு மார்ட்டன் மென்மயிர்த் தோலும் குல்லாவுக்குப் பட்டு உள்துணியும் வைச்சா இருநூறு வரை பிடிக்கும்” என்றான் பெத்ரோவிச்.

தையல்காரன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாமலும் கேட்க முயலாமலும் அவன் விளைத்த அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமலும் அக்காக்கிய் கெஞ்சும் குரலில், “இந்தாப் பாரு, பெத்ரோவிச். கொஞ்சம் தயவு பண்ணேன். இன்னும் சிறிது காலத்துக்கு உபயோகிக்கிறது மாதிரி எப்படியாவது தைத்துக் கொடேன்” என்று குழைந்தான்.

“அதுதான் முடியாதுன்னு சொன்னேனே. பாடும் பாழ், பணமும் வீண் விரயம்” என்றான் பெத்ரோவிச்.

படிக்க :
வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !
CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

இதைக் கேட்டபின் அக்காக்கிய் ஒரேயடியாக உளஞ் சோர்ந்து அங்கிருந்து அகன்றான். தையல்காரனோ, அவன் சென்ற பிறகும் வெகுநேரம் வரை வேலையைத் தொடராமல் உதடுகளை அர்த்தபாவனையுடன் குவித்தவாறு நின்று கொண்டிருந்தான். தன்னையும் தாழ்த்திக் கொள்ளவில்லை, தையல் கலையையும் இழிவுபடுத்தவில்லை என்ற எண்ணம் அவனுக்கு மன நிறைவளித்தது.

வீதிக்கு வந்த அக்காக்கிய் கனவு காண்பவன் போலிருந்தான். “ஆக விஷயம் அப்படியாக்கும், ஊம்?” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். “இந்த அளவுக்கு வரும் என்று நான் உண்மையில் நினைக்கலே…” என்று கூறி விட்டு, சற்று நேர மௌனத்துக்குப் பின், தொடர்ந்தான்: “ஆக விஷயம் கடைசியில் இப்படியாச்சு! இந்த நிலை வரும் என்று கொஞ்சம் கூட நினைக்கலே…” மீண்டும் நீண்ட மௌனம். அப்புறம் அவன், “அப்படியா சேதி! அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே… அடேயப்பா, என்ன விபரீதம்… எவ்வளவு சங்கடமான நிலைமை!” என்றான்.

இப்படி முணுமுணுத்து விட்டு, எங்கு போகிறோம் என்பதைக் கவனிக்காமலே, வீடு செல்லும் வழிக்கு நேர் எதிர்த்திக்கில் விடுவிடென்று நடந்தான். புகைக் குழாய் சுத்தம் செய்பவன் ஒருவன் பாதையில் எதிர்ப்பட்டு, தனது கரிபடிந்த விலாவால் அவன்மேல் உராய்ந்து அவன் தோளைக் கருப்பாக்கி விட்டான்; கட்டுமானம் நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டின் உச்சியிலிருந்து கையளவு காரை அவன் மீது பொத்தென்று விழுந்தது. அவனோ, இவை எவற்றையும் கவனிக்கவே இல்லை. நீள்பிடிக் கோடரியைப் பக்கத்தில் சாய்த்து வைத்து விட்டு, கொம்புச் சிமிழிலிருந்து மூக்குத் தூளைக் குழித்த கைமுட்டிமேல் தூவிக் கொண்டிருந்த போலீஸ்காரன் ஒருவன் மேல் முட்டிக் கொண்ட போதுதான் அவனுக்குக் கொஞ்சம் உணர்வு வந்தது; அதுவும் போலீஸ்காரன் அவனைப் பார்த்து, “எய், என்ன மோதுறே? இடம் போதலையோ நடைபாதையில்?” என்று அதட்டியதனால். இந்த அதட்டல் அவனைச் சுற்று முற்றும் பார்க்க வைக்கவே அவன் நடையை வீட்டை நோக்கித் திருப்பினான்.

வீடு சேர்ந்த பின்புதான் அவன் தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, தனது நிலைமையை உள்ளபடியே தெளிவாகக் கண்டு, விஷயத்தைத் தனக்குத் தானே விவாதிக்கலானான் – அரைகுறை வாக்கியங்களில் அல்ல, யுக்திப் பொருத்தமாகவும் ஒளிவுமறைவின்றியும் – அந்தரங்கமான சொந்த விஷயங்களைப் பேசுவதற்குத் தகுதி வாய்ந்த அறிவாளி நண்பனிடம் உரையாடுவது போல.

“ஊஹும். முடியாது. பெத்ரோவிச்சிடம் இப்போது பேசுவது கூடாது. வீட்டுக்காரியிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது, அதுதான் அப்படி… ஞாயிற்றுக்கிழமை காலையில் போய்ப் பார்க்கிறேன், அதுதான் நல்லது. சனிக்கிழமை ராத்திரி பூராவும் குடித்ததன் விளைவாக மறுநாள் காலையில் ஒற்றைக் கண்ணை இடுக்கிக்கொண்டு உறங்கி வழிந்தபடி, மறுபடி ஊக்கம் வருவதற்கு ஒரு கிளாஸ் குடித்தால் நன்றாயிருக்குமே என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பான். மனைவியோ பணங் கொடுக்கமாட்டாள். ஆகவே நான் வந்து பத்துக் காசோ, கொஞ்சம் அதிகமோ கொடுத்தால் தானே வழிக்கு வருவான், அப்போது மேல்கோட்டைப் பற்றி… என்ன நான் சொல்கிறது…”

உறங்கி வழிந்தபடி, மறுபடி ஊக்கம் வருவதற்கு ஒரு கிளாஸ் குடித்தால் நன்றாயிருக்குமே என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பான். மனைவியோ பணங் கொடுக்கமாட்டாள். ஆகவே நான் வந்து பத்துக் காசோ, கொஞ்சம் அதிகமோ கொடுத்தால் தானே வழிக்கு வருவான்…

இவ்வாறு தனக்குள் எண்ணிக் கொண்ட அக்காக்கிய் அக்காக்கியெவிச் பெருத்த ஆறுதல் அடைந்து, ஞாயிறு எப்போது வரும் என எதிர்பார்த்திருந்தான். ஞாயிறும் வந்தது. பெத்ரோவிச்சின் மனைவி வீட்டைவிட்டு எங்கோ கிளம்பிச்செல்வதைத் தொலைவிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த அக்காக்கிய் அக்காக்கியெவிச் நேரே வீட்டிற்குள் புகுந்தான். பெத்ரோவிச் சனிக்கிழமை இரவுக் களியாட்டத்தின் விளைவாக உண்மையிலேயே கடுமையாக மாறுகண் போட்டுக் கொண்டு, தொங்கும் தலையைச் சிரமத்துடன் நிமிர்த்தி வைத்தவாறு தூங்கி வழிந்தான்; இவ்வளவெல்லாமிருந்தும் அக்காக்கிய் அக்காக்கியெவிச் வந்த காரியம் என்ன என்று தெரிந்ததுமே, ஏதோ சைத்தான் விலாவிலே குத்தி விட்டது போலத் துள்ளி நிமிர்ந்து, “முடியவே முடியாது. புதுக்கோட்டு தைக்கக் கொடுங்க” என்று சொல்லிவிட்டான். அக்காக்கிய் அக்கணமே பத்துக் காசை அவன் கையில் திணித்தான். “ரொம்ப நன்றி, உங்களை வாழ்த்திக் குடித்துக் கொஞ்சம் தெம்பு ஏத்திக்கிறேன். ஆனா மேல்கோட்டைப் பற்றி வீணாகக் கவலைப்படாதீங்க. அது இனி எதுக்கும் உருப்படாது. புதுக் கோட்டுக்கு அளவு கொடுங்கள், அருமையா தைத்துத் தருகிறேன். அது மட்டும் நிச்சயம்” என்றான் பெத்ரோவிச்.

அக்காக்கிய் பழங்கோட்டைப் பழுதுபார்ப்பது பற்றி இன்னும் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் பெத்ரோவிச் அவன் பேச்சைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், “புதிய மேல்கோட்டு கட்டாயமாகத் தைத்துத் தருகிறேன். என்னால முடிந்த வரையில் நல்லாச் செய்து தாறேன். புது பாணிக்கேற்ப காலருக்கு வெள்ளிக் கிளிப்பு வைக்க வேண்டி வந்தாலும் வரலாம்” என்று கூறினான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க