நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 04

க்காக்கியின் மேல்கோட்டும் சக எழுத்தர்களின் பரிகாசத்திற்கு இலக்காய் விளங்கியதென்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லி விட வேண்டும், மேல்கோட்டு என்ற மதிப்புயர்ந்த பெயரைக் கூட இழந்து, வீட்டிலணியும் கோட்டு எனப் பொருள்படும் “கப்போத்” என்ற அவப்பெயரைப் பெற்றிருந்தது அது. அதன் தையல் பாங்கு உண்மையிலேயே விசித்திரமானது தான்: அதன் கழுத்துப்பட்டை மற்ற இடங்களுக்கு ஒட்டுப் போடுவதற்காகக் கத்தரிக்கப்பட்டு வந்ததால் ஆண்டுக்கு ஆண்டு அளவில் சிறுத்துக்கொண்டே போனது. ஒட்டுக்களோ, தையல்காரனின் கலைத்திறனைக் காட்டவில்லை; விளைந்தது சாக்கு மூட்டை போன்ற, அழகற்ற பொருள். மேல்கோட்டில் என்ன கோளாறு என்பதைக் கண்டுகொண்ட அக்காக்கிய் அதைச் சீர்படுத்துவதற்காக பெத்ரோவிச் என்ற தையல்காரனிடம் எடுத்துச் செல்லத் தீர்மானித்தான். எங்கோ ஒரு வீட்டின் பின்கட்டில் நான்காவது மாடியில் குடியிருந்த இந்த பெத்ரோவிச், ஒற்றைக் கண்ணும், அம்மைத் தழும்பு முகமும் கொண்டவனாயினும் எழுத்தர்கள், மற்றவர்கள் ஆகியோரின் காற்சட்டைகளையும் கோட்டுகளையும் பழுது நீக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்திவந்தான் – அதாவது அவன் குடிமயக்கமின்றி நிதானமாகவும், வேறு எதேனும் திட்டங்களைப் போட்டு மூளையைக் குழப்பிக் கொள்ளாமலும் இருக்கும் வேளைகளில்.

இந்தத் தையல்காரனைப் பற்றி விரிவாக வருணிப்பது தேவையில்லை தான், எனினும் கதையில் வரும் எல்லாவிதமான பாத்திரங்களையும் முழுமையாகச் சித்திரிப்பது இக்காலத்திய பாணியாகி விட்டபடியால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை; இதோ, பெத்ரோவிச்சைப் பற்றிப் பார்ப்போம். ஆரம்பத்தில் அவன் வெறுமே கிரிகோரிய் என்றே அழைக்கப்பட்டான், யாரோ நிலப்பிரபுவின் பண்ணையடிமையாயிருந்தான்; விடுதலை பெற்ற பின்பே அவன் தன்னைப் பெத்ரோவிச் என அழைக்கலானான், எல்லா விழா நாள்களிலும் அளவுமீறிக் குடிக்கத் தொடங்கினான்; முதலில் பெரிய திருநாள்களில் மட்டுமே குடித்தான், பிறகு சர்ச் விழாக்கள் ஒவ்வொன்றிலும், உண்மையில் நாள் காட்டியில் சிலுவைக்குறி இடப்பட்ட நாள்களில் எல்லாம் குடிக்க ஆரம்பித்தான். இந்த விஷயத்தில் அவன் பாட்டன் -முப்பாட்டன் காலத்திலிருந்து வழிவழி வந்த மரபையே கடைப்பிடித்தான்; மனைவியுடன் சச்சரவிடுகையில் அவளை மத விசுவாசம் அற்றவள், ஜெர்மன்காரி என்று பழித்துவந்தான். மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டதால் அவளைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லுவது அவசியம்; ஆயினும் வருந்தத்தக்க விஷயம், பெத்ரோவிச்சுக்கு மனைவியுண்டு, அவள் தலைக்குட்டை அணிவதில்லை, மூடுதொப்பியே போட்டுக்கொள்வாள் என்பது தவிர அவளைப் பற்றி நாம் அறிந்தது சொற்பமே. அழகைப் பொருத்தவரை பெருமை பாராட்டிக் கொள்ள அவளிடம் ஒன்றும் இல்லை. அது எப்படியாயினும், வீதியில் அவளைச் சந்தித்த போது மூடுதொப்பியின் அடிவழியே அவள் முகத்தை உற்றுப் பார்த்தவர்கள், மீசையை முறுக்கிய வண்ணம் விந்தைக் குரலில் உறுமும் சிப்பாய்கள் மட்டுமே.

பெத்ரோவிச் குடியிருந்த வீட்டின் மாடிப்படிகள் – அவற்றுக்கு உரிய நியாயத்தைச் செலுத்துவதானால் நீராலும், கழிவுநீராலும் சொதசொதவென்று நனைந்து ஊறி, கண்களைக் கரிக்க வைக்கும் சுள்ளென்ற ஸ்பிரிட் நெடியால் நிறைந்திருந்தன (இந்த நெடி பீட்டர்ஸ்பர்க் நகரின் பின்மாடிப் படிகளுக்கெல்லாம் பொதுவான சிறப்பியல்பு என்பதுதான் உலகறிந்த சேதியாயிற்றே). மாடிப்படி எறும் போதே அக்காக்கிய், மேல்கோட்டைச் செப்பஞ் செய்வதற்கு பெத்ரோவிச் என்ன கூலி கேட்பானோ என்று எண்ணியவனாக இரண்டு ரூபிள்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது என மனத்துக்குள் நிச்சயித்துக் கொண்டான். பெத்ரோவிச்சின் வீட்டுக் கதவு திறந்திருந்தது, ஏனென்றால் அவன் மனைவி எதோ மீனைப் பொரியல் செய்கையில் கிளப்பிய புகை சமையல் அறை முழுதும் மண்டி, கரப்பான் பூச்சிகள் கூடக் கண்ணில் படாதவாறு அடித்திருந்தது. அக்காக்கிய், வீட்டு எஜமானிக்குக் கூடத் தெரியாதபடி சமையலறையைக் கடந்துபோய், முடிவில் தையல்காரனின் அறையை அடைந்து, அங்கே வர்ணம் பூசப்படாத அகன்ற மர மேசை மீது துருக்கியப் பாதுஷா போல மண்டியிட்டு அமர்ந்திருந்த பெத்ரோவிச்சைக் கண்டான். வேலையில் ஈடுபட்டிருக்கும் தையல்காரர்களின் வழக்கம் போல அவன் வெறுங்கால்களுடன் உட்கார்ந்திருந்தான். அக்காக்கியின் பார்வையில் முதலில் பட்டது பெத்ரோவிச்சின் கால் கட்டை விரல்; ஆமையோடு போன்று தடித்து முடிடாய்க் கோணல் மாணலான நகங்கொண்ட அந்த விரல் அக்காக்கிய்க்கு நன்கு பரிச்சயமானது. பட்டு, பருத்தி நூல் கண்டு ஒன்று பெத்ரோவிச்சின் கழுத்திலிருந்து தொங்கியது; அவன் முழங்கால் மேல் கிடந்தது எதோ கந்தையுடை. கடந்த ஓரிரு நிமிடங்களாக நூலை ஊசியில் கோக்க முயன்று தோல்வியுற்ற பெத்ரோவிச் இருண்ட அறை மீதும், நூல் மேலுமே கோபங்கொண்டு, “போக மாட்டேங்குது சனியன்! என் உயிரை வாங்குது துப்புக்கெட்ட சனியனே!” என்று வாய்க்குள்ளாகவே கிசுகிசுத்தான். பெத்ரோவிச் எரிச்சலாக இருக்கும் நேரம் பார்த்து வந்தோமே என்று அக்காக்கிய் வருந்தினான். பெத்ரோவிச் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அல்லது “மிடாக்கணக்கில் சாராயத்தைக் குடித்து விட்டு உட்கார்ந்திருக்கிறான், ஒற்றைக் கண் பிசாசு!” என அவன் மனைவி சொல்வது போன்ற நிலையிலிருக்கும் போது அவனிடம் வேலையை ஒப்படைப்பதுதான் அக்காக்கிய்க்குப் பிடிக்கும்.

அந்த மாதிரி நிலையிலிருக்கையில் பெத்ரோவிச் சாதாரணமாக மிகவும் விட்டுக்கொடுப்பான், எந்தக் கூலிக்கும் இணங்கி விடுவான்; அது மட்டுமன்று, தலைவணங்கி நன்றி வேறு தெரிவிப்பான். அப்புறம் அவன் மனைவி அக்காக்கியிடம் கண்ணீரும் கம்பலையுமாக வந்து கணவன் குடிமயக்கத்திலிருந்ததால் மிகக் குறைந்த கூலிக்கு ஒப்புக்கொண்டு விட்டதாக முறையிடுவாள் என்பது உண்மையே; என்றாலும் பத்து காசு கூடக் கொடுத்துவிட்டால் போதும், விஷயம் தீர்ந்துபோகும். இப்போதோ பெத்ரோவிச் மிகவும் நிதானத்தோடிருந்தான், இதனால் எரிச்சலும் புடைச்சலுமாக, எதற்கும் இணங்கிவராத மன நிலைமையில் விளங்கினான்; என்ன கூலி கேட்பானோ, சைத்தானுக்கே வெளிச்சம். இதைப் புரிந்து கொண்ட அக்காக்கிய், வழக்குமொழியில் சொல்வதுபோல, மெதுவாக நழுவப் பார்த்தான், ஆனால் அதற்குள் சுணங்கி விட்டது: பெத்ரோவிச் தனது ஒற்றைக் கண்ணை இடுக்கிக்கொண்டு அவனையே உறுத்து நோக்கினான். அக்காக்கிய் வேறு வழியின்றி, “வணக்கம், பெத்ரோவிச்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று. பெத்ரோவிச் அவன் என்ன கொணர்ந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள அக்காக்கியின் கைகளையே குத்திட்டுப் பார்த்தவாறு, “வணக்கம், ஐயா, நலந்தானே?” என்று விசாரித்தான்

“ம்ம்… நான் வந்து… பெத்ரோவிச், உன்கிட்டே… ஒரு காரியமாக…” என்றான் அக்காக்கிய் அக்காக்கியெவிச்.

அக்காக்கியின் பேச்சில் உருபிடைச் சொற்கள், வினையுரிச் சொற்கள், எவ்விதப் பொருளுமற்ற அசைகள் ஆகியவையே பெரும் பகுதி விரவிவரும் என்பதை இங்கே தெரிவித்து விடுவது அவசியம். விஷயம் கொஞ்சம் கடினமாயிருந்தால், வாக்கியங்களை முடிக்காமலே அந்தரத்தில் விட்டு விடுவது அவன் வழக்கம். “இது… வந்து… முக்கியமாக என்னவென்றால்…” என்று ஆரம்பித்து விட்டு, சொல்ல வேண்டியதைச் சொல்லியாகி விட்டது என்ற நினைப்பில் வாக்கியத்தை முடிக்க மறந்து, அப்படியே தொங்கலில் விட்டு விடுவான்.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

“என்ன கொண்டு வந்திருக்கிங்க?” என வினவிய பெத்ரோவிச் அதே சமயம் அக்காக்கியின் உடுப்பைக் கழுத்துப்பட்டையிலிருந்து தொடங்கி, கைகள், முதுகு, பின் நுனி, பொத்தான் துவாரங்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை தனது ஒற்றைக் கண்ணால் நோட்டமிட்டான். அது அவன் கைப்படத் தயாரித்ததாகையால் இவையெல்லாம் அவனுக்கு மிக மிகப் பரிச்சயமானவையாயிருந்தன. உடையை இம்மாதிரிப் பார்வையிடுவது தையல்காரர்களின் தொன்று தொட்ட பழக்கந்தான்; வாடிக்கைக்காரர்களைக் கண்டதும் முதன் முதலாக அவர்கள் செய்வது இது தானே.

“நான் வந்து… பெத்ரோவிச்… இந்த இதை… மேல் கோட்டு இருக்கே… துணி கொஞ்சம் போல… வந்து… இதோ… மற்ற எல்லா இடத்திலேயும் அழுத்தமாத்தான் இருக்கு…. நல்ல அழுத்தமா… கொஞ்சம் தூசிபடிந்தாற்போல இருக்கு… பார்வைக்கு எதோ பழசாகி விட்டது போல… ஆனா புத்தம் புதிசு… எதோ ஓரிடத்தில் மட்டுந்தான் கொஞ்சம் போல… முதுகுப் பக்கம்… அப்புறம் தோள்பட்டையில் லேசாக விட்டுப் போயிருக்கு… அதோடு இந்தத் தோள்பட்டையிலும் கொஞ்சம் போல… இதோ… அவ்வளவுதான். வேலை ஒன்றும் பிரமாதமில்லை…” என்றான் அக்காக்கிய்.

பெத்ரோவிச் ‘கப்போத்’ என மற்ற எழுத்தர்கள் பெயரிட்டிருந்த மேல்கோட்டை வாங்கி, முதலில் மேசை மேல் பரப்பி, நீண்ட நேரம் பார்வையிட்டு விட்டுத் தலையை அசைத்துக் கொண்டே சன்னல் புறம் கையை நீட்டி, குறட்டில் இருந்த பொடி டப்பியை எடுத்தான். அதன் மேல் எதோ ஜெனரலின் உருவப்படம் பதிந்திருந்தது. ஆனால் யார் என்று தெரியாதபடி ஜெனரலின் முகமிருந்த இடம் விரலால் அழுத்தி உட்குழிக்கப்பட்டு அதன் மேல் சதுரக் காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சிமிட்டாப் பொடி உறிஞ்சிய பின்பு பெத்ரோவிச் மேல் கோட்டைக் கையில் விரித்துப் பிடித்தவாறு வெளிச்சத்துக்கு நேரே காட்டி, மற்றொரு முறை பரிசீலனை செய்து விட்டு மீண்டும் தலையை அசைத்தான். அப்புறம் உள்பக்கத்தை வெளியே புரட்டி நோட்டமிட்டவன், மறுபடியும் தலையை அசைத்து, ஜெனரல் உருவத்தின் முகத்தில் காகிதம் ஒட்டிய பொடி டப்பி மூடியைத் திறந்து, பொடியை மூக்கில் திணித்துக் கொண்டபின் டப்பியை மூடி ஒரு புறமாக வைத்து விட்டு, “ஊஹும். ஒட்டுப்போட்டு மாளாது. நைந்து போன சங்கதி” என்று கடைசியில் வாய் மலர்ந்தான்.

இந்தச் சொற்களைக் கேட்டதுமே அக்காக்கியின் நாடி விழுந்துபோயிற்று. “ஏன் முடியாது, பெத்ரோவிச்?” என்று மன்றாடும் குழந்தை போன்ற குரலில் வினவினான். “அட தோள்பக்கம் மட்டுந்தானே கொஞ்சம் போல விட்டுப் போயிருக்கு! உங்கிட்ட ஏதாவது துண்டுத்துணி இருக்குமே…” என்று அழாக்குறையாய்ச் சொன்னான்.

“துண்டுத் துணிக்கென்ன, கிடைக்கும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனா ஒட்டுத் தைக்கத் தான் முடியாது. இது ஒரேயடியா இத்துப் போன சமாச்சாரம். ஊசி பட வேண்டியதுதான், தும்பு தும்பாய்ப் போயிரும்” என்றான் பெத்ரோவிச்.

“தும்பு தும்பாய்ப் போகட்டுமே. உடனே சேர்த்து ஒட்டுப் போட்டுவிடேன்.”

“அட என்ன சொல்றீங்க! ஒட்டை எதன் மேலே போடுறதாம்? கெட்டிப் படுத்துகிறதுதான் எப்படி? துணி என்று பெயர் தானே ஒழிய ஊதினாப் பறந்துபோகும்.”

“கிடக்கு, எப்படியாவது கெட்டிப்படுத்து. அப்படி ஒரேயடியாகச் சொன்னால் அப்புறம்!..”

பெத்ரோவிச் உறுதியாக ”முடியாது” என்றான். “ஒன்னுமே செய்ய முடியாது. சங்கதி படு பாடாவதி. நான் சொல்றதைக் கேளுங்க. குளிர்காலம் வந்ததும் இதை நீள நீளப் பட்டியாகக் கிழிச்சு காலிலே சுத்திக்கங்க. என்னா காலுறையாலே கதகதப்பு உண்டாக்க முடியாது. இந்தக் காலுறை விவகாரம் இருக்கிறதே, இது ஜெர்மன்காரன் குயுக்தி, பணம் பறிக்க வழி (சமயம் வாய்த்த போதெல்லாம் ஜெர்மானியர்களைத் தூற்றுவதில் பெத்ரோவிச்சுக்குப் பிரியம்); மேல்கோட்டு விஷயத்தைப் பொருத்த வரையில் நீங்க புதுசாத் தைத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க