கேள்வி : இன்றைய அரசியல் தலைவர்களில் முனைவர் தொல்.திருமாவளவன் ஆளுமையும், அறிவாற்றலும் மகத்தானது அப்படியிருக்க ஊடகங்களாலும், நாளேடுகளாலும் எது அவரை மறைக்கடிக்கப்படுகிறது?

வேல்முருகன் சுப்பிரமணியன்

ன்புள்ள வேல்முருகன் சுப்பிரமணியன்,

நீங்கள் சொல்வது போல அவர் ஊடகங்களால் மறைக்கப்படுவது இல்லையே! தொண்ணூறுகளில் தமிழ் இந்தியா டுடே, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற இதழ்களின் அட்டைப் படத்தில் அவரது நேர்காணல்கள் இடம்பெற்றன. விசிக ஒரு அரசியல் கட்சியாக துவங்கிய பின்னர் ஊடகங்கள் அவரை தொடர்ந்து கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.

செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவரது நேர்காணல்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களிலும் பொதுவானவர்களால் அவர் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவராகவே இருக்கிறார்.

இவையெல்லாம் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சாத்தியமில்லை. அப்போது இருந்த தலித் கட்சிகளின் தலைவர்களெல்லாம் ஊடகங்களால் தனிச்சிறப்பாக கவனிக்கப்படுவதில்லை.

பொதுவாகவும் ஒரு சீர்திருத்த முறையிலும் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, கொடியங்குளம் போன்று ஆதிக்க சாதி எதிர்ப்பு போராட்டங்களின் பங்களிப்பு காரணமாக இந்த மாற்றம் நடந்திருக்கிறது. அதே நேரம் தேர்தல் அரசியல் வெளியில் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனியாகவோ தீர்மானகரமாகவோ செல்வாக்கு செலுத்த இயலாத நிலை காரணமாக உங்களுக்கு அப்படித் தோன்றலாம்.

சமூக ரீதியில் பார்ப்பனியத்தின் சாதிக் கட்டுமானம் அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தும் போது அது வாக்கு வங்கி அரசியலில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. வாக்கு வங்கி அரசியல் மூலம் சாதி தீண்டாமை பிரச்சினைகளை தீர்க்க இயலாது என்பதன் பின்னாலும் திருமாவளவனின் வரம்புகள் அடங்கிப் போய்விடுகின்றன. சமூகத்தைப் புரட்டிப் போடுகின்ற போராட்டம் நடக்காதவரை இத்தகைய சாதி ரீதியான பாகுபாடுகள் ஏதோ ஒரு வகையில் இருக்கவே செய்யும்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
♦ வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

♦ ♦ ♦

கேள்வி : மனிதனுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பௌத்தம், மற்றும் பல மதங்கள் இருக்கும் போது, மிருகங்களும், பறவைகளும் எந்த மதம்???

ஜெ. ஜெகதீசன்

ன்புள்ள ஜெகதீசன்,

கடவுளும், மதங்களுமே மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் போது விலங்கு – பறவைகளுக்கான ‘மதங்களை’ மனிதர்கள்தான் ஒதுக்க வேண்டும். சமாதானத்தின் குறியீடாக புறாக்களை நாம்தான் பயன்படுத்துகிறோம்.

ஆனால் புறாக்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே! போலவே மனித சமூக வளர்ச்சியில் ஆதி காலத்தில் இனக்குழுக்களாக இருந்த மக்கள் தத்தமது குலத்தின் அடையாளமாய் தமது பகுதியில் தம் வாழ்வோடு பிணைந்தும் அதிகமிருந்தும் திகழ்ந்த விலங்கு, பறவைகளை வைத்துக் கொண்டனர்.

அவற்றை தெய்வமாக கற்பித்தும் வணங்கினர். இந்து மதத்தில் சேவல், பெருச்சாளி, மயில், பசு, புலி, சிங்கம், நந்தி போன்றவை தெய்வங்களின் வாகனமாய் மாறியதும் அப்படித்தான்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : ஸ்டெர்லைட் ஆலையைத்தான் தமிழக அரசு மூடி விட்டதே… அப்புறம் ஏன் வழக்கு நடக்கிறது?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

தமிழக அரசு மூடியது சட்ட விரோதமென வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வை ஒட்டி மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகவும் நீதிமன்றங்களின் இடையூறு இன்றியும் மூடுவதற்கு தமிழக அரசு இங்கே தாமிர உற்பத்திக்கு இடமில்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் வேதாந்தா சுலபமாக நீதிமன்றத்தில் வென்று விட்டு ஆலையை திரும்பவும் திறக்க முயற்சிக்கும். தற்போது அந்த திசையில்தான் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. அடிமை எடப்பாடி அரசு அப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்காது. எடுக்க வைக்கவேண்டியது போராடும் தமிழக – தூத்துக்குடி மக்களின் கடமை!

நன்றி!

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

♦ ♦ ♦

கேள்வி : அரபு நாடான கத்தாரில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

பொதுவாக இங்கு (அனைத்து அரபு நாடுகள்) குடியுரிமை உள்ள அரபு நாட்டவா்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் அளவுக்கு வசதியாக வச்சுருக்காங்க.

நாட்டின் நிர்வாகமும் சீா் கெடாமல் இருக்கு. தப்பு பண்ணகூடாதுன்னு ஒரு பயம் இருக்கு.

ஒரு வேளை இங்க பிரச்சனை இருந்தாலும் நமக்கு தெரியாத மாதிரி பாத்துக்குறாங்களா?

இந்த மாதிரி நம்ம (இந்தியா) ஜனநாயக நாட்ல இல்ல.

இது ஜனநாயகத்தின் தோல்வியா இல்ல மன்னராட்சியின் வெற்றியா?

இதனால தான் உலகம் முழுவதும் வலது சாரி சிந்தனை சரியா இருக்கும்னு தோணுதா.

இது மனித நேயத்துக்கு விரோதமானதா ?

அப்டினா சிறுபான்மை மக்கள் எங்க போவாங்க?

சீனா இடது சாரி. அவுங்க பொருளாதாரம் பிரச்சனை இல்லாம தான இருக்கு…

பொன்ராஜ்

ன்புள்ள பொன்ராஜ்,

இருபதாம் நூற்றாண்டில் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, எண்ணெய் பொருளாதாரம் வந்து விட்டது. அதன் செல்வத் திளைப்பில் அனைத்து வளைகுடா நாடுகளும் செழிக்கின்றன. அந்த செழிப்பின் வலிமை கொண்டு ஆளும் ஷேக்குகள் தத்தமது நாட்டின் மக்களுக்கு கொஞ்சக் கிள்ளிக் கொடுக்கின்றனர். அதுவே பெரிய சலுகையாக, போதுமான வசதியாக இருக்கிறது.

மாதிரிப் படம்

வளைகுடா நாடுகளில் நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் மக்களே அனைத்து துறைகளிலும் பணியாட்களாக இருக்கின்றனர். வளைகுடா மண்ணின் மைந்தர்கள் அதற்கு மேற்பட்ட வேலைகளில் இருக்கின்றனர். ஆளும் ஷேக்குகள் ஆண்டைகள் என்றால், ஆளப்படும் அரபு மக்கள் சூபர்வைசர்கள், பணிக்கு வந்த வெளிநாட்டு மக்களோ கூலி அடிமைகள்…!

வளைகுடா நாடுகளில் பலவற்றில் மன்னாராட்சி நீடிப்பதற்கு அமெரிக்காவின் ஆசியும், வர்த்தக நலனும் முக்கிய காரணம். எண்ணெய் பொருளாதாரம் முழுவதும் அமெரிக்க பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஜனநாயகத்தை மறுத்து விட்டு ஆட்சி நடத்தும் ஷேக்குகளை அமெரிக்கா எப்போதும் கைவிடாமல் ஆதரித்து வருகிறது.

மறுபுறம் தமது உள்நாட்டு மக்களிடம் இஸ்லாமிய ஆட்சி, ஷரியத் சட்டங்கள் என்று மதவாதத்தை கிளறிவிட்டும் மன்னர்கள் தத்தமது ஆண்டைத்தன ஆட்சியை தொடர்கின்றனர். இந்த வகாபியிசத்தின் முன்னிலைப்படுத்தலுக்கும் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது.

நீங்கள் பணிபுரியும் கத்தார் நாட்டில் 2022-ம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக தனிநகரையே உருவாக்கி வருகிறது கத்தார். இதற்கான கட்டிட இதர அடிக்கட்டுமான வேலைகளுக்காக ஆசிய ஏழை நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான தொழிலாளிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் கொடிய பணிச்சுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் அதாவது இறந்து போயுள்ளனர்.

ஐம்பது டிகிரி வெப்பத்தில் 12 முதல் 15 மணி நேரம் வேலை செய்யும் இத்தொழிலாளிகளின் நிலைமை ஒரு கொத்தடிமையைப் போன்றது. வேலையை விட்டு ஓட முயன்றால் சிறை. இது குறித்த விரிவான கட்டுரையை இணைப்பில் படிக்கவும்.

இந்த நிலைமை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும். அதே கத்தாரில் நீங்கள் பணிபுரிந்தாலும் இந்த அடிமை உலகம் உங்களது கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்தியா ஏழை நாடாக இருந்தாலும் இங்கே ஏழைகளுக்கு குரல் கொடுக்கும் குறைந்தபட்ச உரிமையையாவது இங்குள்ள பெயரளவு ஜனநாயகம் வழங்குகிறது. அங்கே அது கூட இல்லை!

எனவே அங்குள்ள குடிமக்களுக்கு இருக்கும் சலுகைகள் சுரண்டலிலிருந்து கிடைக்கும் கழிவுத் தொகை. அங்கிருக்கும் கறாரான நீதி நிர்வாகம் கூலித் தொழிலாளிகளை கொல்வதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுகிறது. இந்த நிர்வாகத்தின் மீதான பயம் பணிக்குச் சென்ற ஏழைத் தொழிலாளிகளின் ஏதுமற்ற அவலநிலையின் காரணமாக நிலவுகிறது.

அரபுலகில் இருக்கும் வலது சாரி மன்னராட்சிகளும், அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் வலதுசாரி ஜனநாயக ஆட்சிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. முன்னது அரசன், அரசு சார்பில் இருக்கும் நேரடி சர்வாதிகாரம். பின்னது சட்டம், ஜனநாயகத்தின் பெயரில் திகழும் மறைமுக சர்வாதிகாரம். இன்றைக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் போராடி வருவது போல அரபுலகில் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு அங்குள்ளவர்களும் சரி, சென்றவர்களும் சரி போராடி விட முடியாது.

சீனா குறித்து ஏற்கனவே பதிலளித்துள்ளோம். அதையும் பாருங்கள்!

கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

4 மறுமொழிகள்

 1. கேள்வி : மனிதனுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பௌத்தம், மற்றும் பல மதங்கள் இருக்கும் போது, மிருகங்களும், பறவைகளும் எந்த மதம்???

  ஜெ. ஜெகதீசன்

  ஜெகதீசன் அவர்களே, உலகில் மதமே இல்லை, நீங்கள் மதம் என்று சொல்லும் மதங்களை பற்றி கொஞ்சம் விளங்கினாள் மதம் என்பது இல்லை என்று புரியும்

  இந்து – இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள், பேனாவில் வசிப்பவர்கள் சீனர்கள் என்பது போல், ஆக இந்து என்பது மதமல்ல,
  முஸ்லிம் – இஸ்லாம் மதம் என்று குரான் கூறவில்லை, இறைவனை அடைய சரியான வழி இஸ்லாம்,
  கிறிஸ்தவம் – ஏசு கிறிஸ்து உயிரோடு இருந்த வரை கிறிஸ்துவம் என்ற மதம் இல்லை,
  பௌத்தம் – புத்தரை கடவுளாக (புத்தர் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை) தவறாக ஏற்றதால் புத்த மதம்

 2. அண்ணன் திருமா அவர்களைப் பற்றியான பதில் அருமை.அவர் மதிக்கப்படுகின்ற தலைவர் ஆயினும் ஓட்டு அரசியலில் சமூக மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லை என்றுணர்த்தும் அவரின் இந்த அரசியல் தேக்க நிலையை அண்ணனும் அவர் தம் தம்பிமார்களும் பரிசீலிப்பார்களா ?

 3. கத்தாரில் பணிபுரியும் அந்த பணிகளுக்கிடையிலும் அரசியல் அறிந்து கொள்ள அதன் வழி கேள்வி கேட்கும் பொன்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

 4. ராஜபக்சவிடம் பரிசு வாங்கிய கட்டப்பஞ்சாயத்து பண்ணி வயறு வளர்க்கும் திருமாவின் ஆளுமை நகைப்புக்குரியது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க