கேள்வி : பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு அந்தந்த நாட்டின் பணத்தை அனுப்புகிறார்கள். அவற்றின் இந்திய பண மதிப்பின் அளவுகொண்டு அந்த பணம் இந்திய பணமாக மாற்றப்பட்டு தத்தம் குடும்பங்களை சென்றடைகிறது. இந்த பணப் பரிமாற்றம் மூலம் இந்திய அரசிற்கு எவ்வாறு அந்நிய செலவாணி அல்லது டாலர் கிட்டுகிறது? அதாவது இந்தியா இதனால் எவ்வாறு பயனடைகிறது?

S.S.கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் செலவாணியில் ஊதியம் பெறுகிறார்கள். பிறகு அதை வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செலவாணி மாற்றும் வணிகர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பும் போது அந்தப் பணம் அந்தந்த நாட்டின் செலவாணிக்குரிய டாலர் மதிப்பில் மாற்றப்பட்டு டாலராக இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. அந்த டாலரை வைத்துக் கொண்டு அதற்கேற்ற அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றப்பட்டு பணம் அனுப்புவோரின் குடும்பத்திற்கு போய்ச் சேருகிறது. இப்படித்தான் ரிசர்வ் வங்கியின் இருப்பில் டாலர் மற்றும் யூரோ அந்நியச் செலவாணியாக இருப்பில் சேர்கிறது.

அதே போன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர், கல்வி படிக்கப் போகும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஆகியோர் போகும் போது இந்திய ரூபாயை அளித்து அதற்குரிய டாலரை பெற்றுக் கொண்டு செல்கிறார்கள். அப்போது டாலர் இருப்பு ரிசர்வ் வங்கியில் குறையும். அதே போன்று இறக்குமதிக்கான தொகை அனுப்பும் போதும் டாலர் இருப்பு குறையும். ஏற்றுமதி செய்யும் போது பெறப்படும் தொகை டாலராக இருப்பில் அதிகரிக்கும். இதன்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டினர், அந்நிய நிதி நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்வதற்கும், அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கி நிறைய விதிமுறைகளையும் ஏற்பாடுகளையும் வைத்திருக்கிறது.

2017-ம் ஆண்டின் கணக்கின்படி வெளிநாட்டில் இருந்து, அதிக பணம் பெற்ற நாடுகளில், 6,900 கோடி டாலருடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 4 லட்சத்து, 55 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் ஆகும். அவ்வகையில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களால் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலவாணி இருப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அந்நியச் செலவாணி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அந்த அளவு அந்த நாடு செல்வ மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதார வளர்ச்சியின்மையை பார்க்கும் போது இந்த அந்நியச் செலவாணி இருப்பால் பெரிய பலனில்லை.

இன்றைக்கு இந்தியாவில் இருந்து பணிக்காக புலம் பெயர்ந்தோர் அதிகம் இருக்கும் போது மற்ற நாடுகளை விட தாயகத்திற்கு அதிக பணம் அனுப்பும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. தற்போது உலக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் வேளையில் வெளிநாட்டு வேலைகளும், ஊதியமும் குறைந்து இந்தத்தொகை உள்நாட்டிற்கு வரும் அளவு குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் மேற்குலகிற்கும், வளைகுடாவிற்கும் பணியாட்கள் பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவதால் இந்த தொகை அவ்வளவு சீக்கிரம் குறையவும் செய்யாது. ஆக இந்திய அரசு தனது சொந்த மக்களுக்கு வாழ்வளிக்காத நிலையில் வெளிநாட்டில் வேலை செய்யும் மக்கள் தமது நாட்டின் அன்னியச் செலவாணி இருப்பை கூட்டி வருகிறார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : தமிழகம் மற்றும் இலங்கையை தாண்டி பல உலக நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் என்னுடைய கேள்வி பல நாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து இணைப்பு பாலமாக இருக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டுடையதே…. இருந்தும் இதுவரை இந்நாள் முதலவரோ, முன்னாள் முதல்வர்களோ ஏன முயற்சிக்கவில்லை….?

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருக்கை அமைக்க ஆர்வம் காட்டும் நம் அரசு ஏன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்க இதுவரை முயற்சிக்கவில்லை… தொடர்பே இல்லாமல் இருப்பதால் பல நாடுகளில் தமிழை எழுதவும் பேசவும் மறந்து தமிழரின் அடையாளங்களை இழந்து வருகிறார்கள்.. மொரீசியஸ், கயானா, பர்மா, ரீயூனியன், செசெலஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் பெருமளவு வாழ்ந்தும் தமிழ் நாட்டுடனும் தமிழுடனும் தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள்..

சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூட தமிழக தொழிலாளர்கள், வேறு நாட்டு பிரஜைகளாக தமிழர் என்ற உணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்… மத்திய அரசு நடத்தும் பிரேவேசி மாநாடு (வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு) போல் வெளிநாடு வாழ் தமிழர்களின் மாநாடு ஏன் ஆண்டுதோறும் தமிழக அரசின் மூலம் நடத்த கூடாது… உலக தமிழர்களை ஒன்றிணைக்க என்ன வழி ?

சுதாகர் சௌந்திரம்

ன்புள்ள சுதாகர் சௌந்திரம்,

கெடு வாய்ப்பாக சன் டிவி-யின் சீரியல்களும், விஜய் டி.வி-யின் பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள்தான் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கின்றன. இந்த ஒன்றிணைதலில் தமிழுக்கு இடமில்லை. தமிழ் பண்பாட்டிற்கும், மொழிக்கும் கூட இடமில்லை. ஆங்கிலம் கலந்த தமிழில் மேட்டுக்குடி பாங்கு மட்டுமே மின்னுகிறது. இந்நிகழ்ச்சிகளின் நுகர்வுக் கலாச்சார அடையாளத்தைப் பார்த்தால் அது எந்த நாட்டிற்கும் பொருந்தும். அது தமிழுக்கு மட்டுமே உரியது அல்ல.

மாதிரிப் படம்

நீங்கள் சொல்வது போல தமிழ்நாடுதான் உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதில் முன்னணிப் பாத்திரம் ஆற்ற வேண்டும். இன்று தமிழ் மக்கள் இல்லாத இடமே இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., ஆளும் கட்சிகளாய் இருக்கும் போது நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடுகள் அக்கட்சிகளின் செல்வாக்கை தெரிவிக்கும் வண்ணமாய் மட்டுமே நடத்தப்பட்டன.

மற்ற நாடுகளில் உள்ள அரசு நிர்வாகங்களில் பங்கேற்கும் தமிழ் பிரதிநிதிகள் பெயருக்கு பங்கேற்பார்கள். மற்றபடி இன்றைக்கிருக்கும் எடப்பாடி அரசு போன்ற அடிமைகள், உள்நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு செல்லாக் காசாக திகழும் போது இவர்கள் எப்படி உலகளாவிய அளவில் தமிழ் மக்களை இணைக்க முடியும்?

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது என்பதை அறிந்தும் அதிமுக அரசு அந்த மசோதா திருத்தத்தை ஆதரிக்கிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாய் வாழ்கிறார்கள். இப்படி உள்நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு வஞ்சகம் புரிகிறது அதிமுக அரசு.

படிக்க:
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
♦ வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

ஆனால் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையின் போதும், ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தமது தோழமையை வெளிப்படுத்தினார்கள். போராட்டம் நடக்காத நாடே இல்லை எனுமளவுக்கு உலக நாடுகளில் தமிழ் மக்களின் போராட்டங்கள் நடந்தன. இன்றைக்கு இணையம் இருக்கிறது. இணையத்தின் மூலம் இந்த ஒன்றிணைதல் ஓரளவுக்கு நடக்கிறது. எனினும் போராட்டத்தின் மூலம் இணையும் தமிழ் மக்களை தொடர்ந்து நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கணக்கில் கொண்டும் இணைப்பது, ஒன்றிணைப்பது குறித்து இணையத்தில் இருக்கும் முற்போக்கு தமிழ் நண்பர்கள் ஆலோசிக்க வேண்டும். அரசு செய்ய முடியாத இணைப்பை நாம் செய்ய வாய்ப்பிருக்கிறது.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா எனும் நிகழ்வை மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வந்தது. தற்போது அதை உலகத் தமிழ் மக்கள் இசை விழாவாக நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. தோழர்கள் அது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

மற்றபடி உலகில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பது, தமிழின் வரலாறு, தமிழர்கள் சென்ற நாடுகள், அந்த புலம் பெயர்ந்த வரலாறு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் தன்னார்வலர்களால் மட்டும் செய்து விடமுடியாது. தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஓரளவு முயற்சிக்கலாம். இப்போதைக்கு இணையத்தில் அந்த ஒன்றிணைவுக்கான முதல் கட்ட நகர்வை முன்னெடுப்போம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க