கேள்வி : உள்நாட்டில் வேலையில்லை வெளிநாடு சென்றால் கடனை அடைக்கலாம், பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்ற கருத்தை எப்படி பார்ப்பது, அப்படி சென்றால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா?

கவின்

ன்புள்ள கவின்,

நமது மக்களில் கணிசமானோர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தனிச்சிறப்பாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமும் உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட அளவில் மூளை உழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

உலகளாவிய பொருளதார நெருக்கடி காரணமாக இந்நாடுகளில் வேலை வாய்ப்புகள் அருகி வருகின்றன. உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் சுமார் ரூ. 25,000 முதல் 50,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். இவர்களுக்கான பணிச்சுமை அதிகம், வாழ்வோ! ஒரு சிறையைப் போன்று இருக்கிறது. குவைத், துபாய் போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கட்டுமான தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர்.

வளைகுடாவில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் சொற்ப ஊதியம் பெறுவதோடு ஆயுள் தண்டனைக் கைதி போல வாழ்கிறார்கள். வளைகுடா நாடுகளின் செல்பேசி ஆப்-களில் ஆன்லைன் அடிமை விற்பனை புகைப்படம் போட்டே விற்கப்படுகிறது. இது குறித்து பிபிசி ஒரு ஆவணப்படத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கையும் குறைந்த ஊதியத்தில் காலத்தை ஓட்டுவதாக இருக்கிறது. இரண்டு முதல் நான்கு இலட்ச ரூபாய் வரை கடன் வாங்கி வெளிநாடு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளிகள் பல்லைக் கடித்து விட்டு நான்கைந்து ஆண்டுகள் பணிபுரிந்தால் கடனை அடைத்து விட்டு ஓரிரு இலட்ச ரூபாயை மட்டும் சேமிக்கிறார்கள். இத்தகைய வேலைகளும் இப்போது அருகி வருகின்றது. பலர் திரும்பியிருக்கின்றனர். அதே நேரம் வெளிநாட்டில் ஒரு சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதான மாயை காரணமாக திரும்புவோருக்கு இணையாக நாட்டை விட்டு வெளியோருவோரின் எண்ணிக்கையும் இருக்கிறது.

இறுதியில் வெளிநாட்டுக்கு வேலைகளுக்கு ஆள் எடுக்கும் தரகர் நிறுவனங்களே அதிகம் சம்பாதிக்கின்றனர். பலர் திரும்பி இங்கே ஏதாவது ஒரு வேலை பார்த்து மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஓட்டலாம் என்று எண்ணுமளவு வெளிநாட்டு வேலை அச்சுறுத்துகிறது. தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்தோரில் பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். சிறுகச் சேர்த்த பணத்தை வைத்து தென்னந்தோப்பு போட்டு, வீடு கட்டி பின் அனைத்தையும் இழந்து தற்போது திரும்பவும் முதலிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் அவலத்தில் இருக்கிறார்கள்.

மேற்குலகில் மூளை உழைப்பு வேலைகளுக்காக செல்வோரின் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்றாலும் அந்த வாய்ப்பு கிடைப்பது தற்போது கடினமாகி வருகிறது.

எனவே  முதலாளித்துவ நெருக்கடி சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்தில் கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்வது அவ்வளவு சிறப்பான யோசனை அல்ல!

♦ ♦ ♦

கேள்வி: “மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் ” என்று ஓபிஎஸ் புதல்வர் கூறியது பற்றி ….?

எஸ். செல்வராஜன்.

ப்புதல்வர் தனது எம்.பி லெட்டர் பேடிலேயே மோடியின் படத்தை பிள்ளையார் சுழி போல போட்டிருக்கிறார். டயரைத் தொழுது அமைச்சாரன ஜந்துவின் வாரிசு, அப்பாவின் டயர் இமேஜுக்கு குறைவில்லாமல் அடிமைத்தனத்தை அம்மணமாக காட்டுவதில் சக்கை போடு போடுகிறார்.

எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு, ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு ஒரு டயர் உழவு!

♦ ♦ ♦

கேள்வி : இஸ்லாமியர்களை, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அழிக்க நினைப்பதற்கான காரணம் என்ன?

பிரகாஷ்

ன்புள்ள பிரகாஷ்,

பொதுவில் பாசிசக் கட்சிகள் அனைத்தும் தமக்கென நேர்மறையான கொள்கைகளை கொண்டிருப்பதில்லை. எதிர்மறையான கொள்கைகள், கற்பனையான வில்லன்களை உருவாக்கியே அவர்கள் மக்களை திரட்டுகிறார்கள். ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் யூதவெறுப்பை கிளப்பியே ஹிட்லர் ஜெர்மானியர்களின் தேசபக்தியை கிளப்பி விட்டார். அதே போன்று ஆங்கிலேயர்களின் ஆசியுடன் துவங்கப்பட்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-ம் இந்துக்களை திரட்ட முசுலீம்கள் எனும் கற்பனையான எதிரிகளை கட்டமைத்து அதற்கு விதவிதமான புனைவுகளை உருவாக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.

அதனால்தான் 1925-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் துவங்கப்பட்டு செயல்படுவதற்கு ஆங்கிலேயர்கள் அனுமதி அளித்தார்கள். பதிலுக்கு சங்க பரிவாரத்தினரும் சுதந்திரப் போராட்டத்திற்கு நாமம் போட்டுவிட்டு முசுலீம் எதிர்ப்பு கலவரத்தில் ஈடுபட்டு தமது விசுவாசத்தை நிறுவினார்கள். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் இந்து உயர் சாதியினர் விரும்பியே இந்த முஸ்லீம் வெறுப்பை மேற்கொண்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இரண்டாம் தலைவரான கோல்வால்கரின் உரைகளை ‘ஞானகங்கை” என்றொரு நூலாக தொகுத்திருக்கிறார்கள். அதில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 159-ல் உள்நாட்டு அபாயங்கள் என்ற தலைப்பில் முதல் அபாயமாக முஸ்லீம்களை குறிப்பிடுகிறார் கோல்வால்கர். பாகிஸ்தான் பிரிந்து போன பிறகும் அந்தக் கோரிக்கையை ஆதரித்த முசுலீம்கள் பலர் இங்கேயே தங்கி பாகிஸ்தான் ஆதரவு சதி வேலையை செய்வதாக அவர் பேசுகிறார். ஒவ்வொரு மசூதியும் ஒரு குட்டி பாகிஸ்தான் போன்று செயல்படுகிறது, அங்கே ஆயுதங்களை பதுக்கியிருக்கிறார்கள், இந்துக்களை கொல்வதற்கு திட்டம் போடுகிறார்கள், மசூதி முன்னே இந்துக்கள் ஊர்வலம் போக முடியாது, வடகிழக்கில் வங்கதேச முசுலீம்கள் ஊடுறுவி இரண்டு மடங்காக பெருகி விட்டனர் என்று தனது துவேசத்தை விலாவாரியாக அடுக்குகிறார் கோல்வால்கர். இதற்கு ஆதரவாக காங்கிரசு ஆட்சியாளர்கள் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதுதான் இன்று தேசிய குடிமக்கள் பதிவேடாக முசுலீம்களை அகதிகளாக்கும் அமித்ஷாவின் திட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. சங்க பரிவாரங்கள் தனது முசுலீம் துவேச பிரச்சாரத்திற்கு வரலாறு, அரசியல், புராணம், மத நம்பிக்கைகள், பண்பாட்டு விசயங்கள் என்று பல்துறைகளிலும் பல்வேறு கதைகளை கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதற்கு கணிசமான இந்துக்களும் பலியாகி இருக்கிறார்கள்.

முசுலீம்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள், அதனால் அவர்களது உடலில் ஒருவித நாற்றம் வரும், அதை மறைப்பதற்கு செண்ட் அடிப்பார்கள், நாம் வேட்டி கட்டினால் அவர்கள் லுங்கி உடுத்துவார்கள், நாம் தாடி எடுத்தால் அவர்கள் தாடி வைப்பார்கள், குல்லா போடுவார்கள், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினை பாக் அணி வென்றால் பட்டாசு வெடிப்பார்கள், பாகிஸ்தான் கொடியை அவ்வப்போது தமது குடியிருப்புகளில் ஏற்றுவார்கள் என்று இந்த விசமப் பிரச்சாரத்திற்கு முடிவே இல்லை.

முஸ்லீம் கடைகளில் வாங்கக் கூடாது, முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது என்று அவர்களை ஒதுக்க வேண்டியும் பிரச்சாரம் செய்கிறார்கள். வரலாற்றை பொறுத்த அளவில் முகலாயர் ஆட்சியில் இங்கே வாள் கொண்டு இஸ்லாம் நிலை நாட்டப்பட்டது, இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டன என்று அடித்து விடுகிறார்கள். சொல்லப் போனால் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்ட கோவில்களை விட முஸ்லீம் மன்னர்கள் இடித்த கோவில்கள் உண்மையில் குறைவு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பும், ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு முன்பும் இத்தகைய இஸ்லாமிய துவேச வெறுப்பு இந்திய துணைக் கண்டத்தில் இல்லை. தற்போது தொட்டதுக்கெல்லாம் முஸ்லீம்களை குற்றம் சொல்லி, பயங்கரவாதம், காஷ்மீர் சிறப்புச் சலுகை, கோமாதவைக் கொல்கிறார்கள், வங்கதேச அகதிகள் பெருத்து விட்டார்கள் என்று ஒவ்வொன்றிலும் சட்டப்படியே அடக்குமுறையை ஏவிவிடுகிறார்கள்.

எனவே இந்துத்துவத்தின் வாழ்வும் இருப்புமே இஸ்லாமிய வெறுப்பில்தான் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. அதை பிடுங்கி விட்டால் அங்கே உருப்படியாக ஏதுமில்லை. கோல்வால்கர் தனது உள்நாட்டு அபாயம் என்ற தலைப்பில் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகளையும் இதே போன்று குறிப்பிடுகிறார்.

இப்படி கற்பனையாக எதிரிகளை உருவாக்கி அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை பிரச்சாரம் செய்து பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளும், நெருக்கடிகளும் அதிகரிக்கும் காலத்தில் மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பவும், மழுங்கடிக்கவும் இந்த உத்தி முதலாளிகளுக்கு பயன்படுவதால் அவர்களில் பலர் பாசிசத்தை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் அம்பானி, அதானி முதல் பலர் சங்க பரிவாரத்தின் புரவலர்களாக இருக்கின்றனர். அப்படித்தான் பாஜகவும் தனது தேர்தல் நிதியாக நூற்றுகணக்கான கோடி ரூபாயை திரட்ட முடிகிறது.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க