Friday, May 14, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்

சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்

-

நினைத்தாலே இனிக்கும் திருநெல்வேலி அல்வா போல கிழக்குலகின் பூலோக சொர்க்கமாக போற்றப்படுவது சிங்கப்பூர். பத்து வருடங்களுக்கு முன் வீட்டு வேலை செய்வதற்காக இந்த சொர்க்கத்திற்கு வண்டியேறியவர் கமலா. கிழக்கு தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஆட்களை ஏற்றுமதி செய்யும் தரகர் மூலமாக சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்

வயது வந்த பெண்கள் மூவரைக் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கமலா. ஆஸ்துமாவால் அவதிப்பட்ட அப்பாவால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆதலால் கமலாவின் அம்மாவும் வீட்டிலிருந்த மூணு கறவை மாடும் இக்குடும்பத்திற்கு ஏதோ கொஞ்சம் சோறு போட்டனர். வயிற்றுக்கு கிடைத்தாலும் மூன்று பெண்களை திருமணம் செய்து கொடுப்பதற்கு வீட்டில் வழியில்லை. இந்த நிலையில் தான் கடன்பட்டு சிங்கப்பூர் சொர்க்கத்திற்கு சென்றார் கமலா.

குடும்ப கஷ்டம் தொண்டையில் முட்டி கண்ணில் வழிந்து, இதயத்தை கனக்கச் செய்து முடக்கிவிடும். அந்த அவலத்தை தீர்த்துவிடலாமென ஆசைகாட்டிய சிங்கப்பூர் குறித்த கதைகளை அவள் ஏராளம் கேட்டிருந்தாள். அதனால் அவளிடம் உருவாகியிருந்த கற்பனைகள் எதிர்பார்ப்புகளும் ஏராளம்.

தனக்கும் தனது குடுபம்பத்திற்குமான சிறப்பான எதிர்காலம் யாரும் தட்டிச் செல்லாத படி சிங்கப்பூரில் இருப்பதாக எண்ணினாள் அந்த பேதைப் பெண். பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காமல், கிராமம் தவிர உலகம் தெரியாதவளுக்கு சிங்கப்பூரைப் பற்றி என்ன தெரியும்? பறக்கும் பயணம், வானுயர்ந்த கட்டிடங்கள், பகலாக்கும் இரவு விளக்குகள், குப்பையில்லா சாலை, நடத்துனர் இல்லா பேருந்து, கை நிறைய சம்பளம் இதுதான் சிங்கப்பூரை பற்றி அவள் தெரிந்து வைத்திருந்தது.

இனி கமலா சொன்னதையே கேளுங்கள்.

“கணவன் மனைவி வேலைக்கு போற குடும்பம். அந்த வீட்டுல ஒரு பெரியம்மா, ரெண்டு குழந்தைங்க அவங்கள பாத்துக்கணும். இருவதாயிரம் சம்பளம், தங்குறதுக்கு தனி ரூமு, நல்ல சாப்பாடு, வசதியான வாழ்க்கை எந்த தொந்தரவும் இருக்காது. நம்ம தமிழ் காரங்கதான். ஒங்க வீடு மாதிரி நீ இருக்கலாம் இதுதான் வேலை”யின்னு தரகர் சொன்னாரு.

கேக்க சந்தோசமாதான் இருந்துச்சு. நானும் நம்ம வீடு மாதிரி பாத்துக்கணும். குழந்தைங்க கிட்ட அன்பா நடந்துக்கணும். அவங்களும் பிரியமா நடந்துக்குவாங்க. நாலு மாசம் போனதும் அம்மாவ வயல் வேலைக்கி போக வேண்டான்னு சொல்லனும். தங்கச்சிக்கி கல்யாணம் பண்ணி வச்சுட்டு நாம பண்ணிக்கணும்னு நெஞ்சு நிறைய ஆசைங்களோடதான் போனேன். என்னத்த சொல்லறது போ! இலவு காத்த கிளி பழத்துக்காக பாத்து நின்ன கதைதான் என்னோடதும்.

sad maid 5அதிகாலையில எழுந்திருச்சு வேலை பாக்க ஆரம்பிச்சா பெறவு படுக்குறதுக்கு நடு ராத்திரி ஆயிரும். படுக்கைய விட்டு எழுந்திருக்க முடியாத பெரிய அம்மாவுக்கு எல்லா பணிவிடையும் செய்யணும். மலங்கழிக்க வச்சு,குளிக்க வச்சு, சாப்பாடு குடுத்து, தலவாரி, (நல்ல வேளையா அந்த அம்மா கிராப்பு வெட்டியிருந்தாங்க), மாத்திர மருந்து குடுத்து, டிவி போட்டு விட்டுட்டு வந்தா அடுத்த பத்து நிமிசத்துல டாண்ணு கூப்புடும். “ரிமோட்டு கீழ விழுந்துருச்சு எடுத்து குடு”. “பாத்ரூம் வர்ரா மாரி இருக்கு” ஏதோ ஒண்ணச் சொல்லி என்ன விடவே விடாது.

சமையல் கட்டுலதான் நான் படுத்துக்கணும். சின்னக் குழந்தைய தூங்க வச்சுதான் வீட்டம்மா கிட்ட படுக்க வைக்கனும். அதுக்காக நானும் அவங்க ஏசி ரூம்ல கொஞ்ச நேரம் இருக்குற மாறி வரும். ஆனா நான் இருக்குறதையே அவங்க ஒரு பொருட்டா எடுத்துக்க மாட்டாங்க. புருசன் பொஞ்சாதி அன்னியோன்யமா இருக்குறது குத்தமில்ல. ஆனா என்ன ஒரு வேலை பாக்குற ஜடமுன்னு நினைச்சுக்குவாங்க. அந்த நேரத்துல வர்ர ஆத்தரம் இருக்கே! சரி பெறவு அவங்க பழக்க வழக்கம் அந்த மாதிரின்னு நினைச்சுக்கிட்டேன்.

இவங்கள பாத்துக்கறது மட்டுந்தான் வேலையின்னு சொன்னாங்க. போனப்புறம் சமையலும் செய்ய சொன்னாங்க. இதே மாதிரி தரகர் சொன்ன சம்பளம் இருபதாயிரத்துக்கு பதிலா ஒம்பதாயிரம்தான் சம்பளம்ணு கண்டிசனா சொல்லிட்டாங்க. இப்பிடி வாக்கு மாறலாமான்னு யாரைக் கேக்க, இல்லை யாருகிட்ட புகார் கொடுக்க!

சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்எந்திரிச்சதும் சமையல் கட்டுலதான் முதல் வேலை. காலையில டிபனு அதுவும் புள்ளைங்களுக்கு தனி, நூடுல்ஸ், பிரெட் ரோஸ்ட், காரமில்லாத நெய் பருப்பு சாதம், அரை வேக்காடு முட்டை இது போக குழந்தை விரும்பி கேக்கறது இப்படி ஒரு லிஸ்ட்டு. பெரியவங்களுக்கு தனியா மூணு காயோட கொழம்பு, ரசம், அப்பளம்னு ஒரு பெரிய பட்டியல் இருக்கும். இடையில ஜூஸ்சு மாலையில காபி, பலகாரம் தினுசு தினுசா வெச்சு வெறுப்பேத்துவாங்க. நாமள்ளாம் ஒரு நாளைக்கு ஒரு வேள சோத்த முழுங்கிட்டு மிச்ச நேரம் கடுங்காப்பி, நீராகராமுன்னு உழவு மாடாட்டம் வேலை செய்வோம். இவங்களுக்கு திங்கறதே பெரிய வேலை.

அசைவம் வாரத்துல ரெண்டு நாள் உண்டு. நடக்குறது, பறக்குறது, நீந்துறதுன்னு மூணு வகைக்கும் கொறையாது. போன ஒரு வருசத்துலேயே குமரியா இருந்த எனக்கு பாதி ஆயுசு கொறஞ்சா மாறிப் போச்சு. என்ன செய்ய! வீட்டு நெலமைய நெனச்சு மனச தேத்திகிட்டு இருந்தேன். ஆனா அந்த நேரத்துல, “ஏண்டா பொறந்தோ”ன்னு தோணும். குழந்தைங்க ரெண்டும் எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அது மட்டும் சில நேரம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்.

இதையெல்லாம் விட வீடு சுத்தம் செய்றதுதான் எனக்கு பெரும் பாடு. ஜன்னல் கதவுல ஆரம்பிச்சு டாய்லட்டு மூடி வரைக்கும் பளபளன்னு இருக்கணும். இல்லன்னா வீட்டுக்காரக்கா பேயாட்டம் கத்தும்.

அந்த அக்கா இல்லாத நேரத்துல வீட்டுக்கார ஆம்பளை எசகு பிசகா நடந்துகிட்டா என்ன பன்றதுன்னு ஒரு பயம் இருந்துச்சு. குப்பை கூட்டுறவ கூட இங்க சிவப்பாதான் இருப்பாங்களாம், தொட்டா ஒட்டிக்கிற என்னோட கருப்ப யாரு தீண்டப் போறாங்கன்னு தைரியமாத்தான் சிங்கப்பூரு வந்தேன். ஆனா அந்த விசயத்துல வீட்டுக்கார அண்ணன் நல்ல மாதிரி.

ஒரு நாள் தலத்தூக்க முடியாம காய்ச்சல் வலியில படுத்திருந்தேன். சமைக்க வேணாம்னு ரெஸ்டெடுக்க சொன்னாங்க. ஓட்டல்லேருந்து சாப்பாடு வரவழச்சாங்க. மாத்தர மருந்து வாங்கி கொடுத்து அனுசரணையா பாத்துக்கிட்டாங்க. எனக்கு ஒரு பக்கம் சந்தோசமா இருந்துச்சு.

sad maid 3என்னடான்னு பாத்தா இது எல்லாமே அவங்க அடுத்த நாளைக்கு பிக்னிக் போகும் போது பசங்கள பாத்துக்கறதுக்கு இந்த ஜடம் தேவப்படும்கிறதுக்கான தயாரிப்புதான்னு தெரிஞ்சதும் மனசு ஒடிஞ்சு போச்சு.

மூச்சு விட நேரம் இல்லாம இருப்பேன். ஆனா போன் செய்ய மாட்டேங்குறேன்னு அம்மா ஒரே அழுகையா பேசும். இங்க அனுமதி இல்லாம எதுவும் செய்ய முடியாத என்னோட நிலைமை அவங்களுக்கு புரிய வாய்ப்பில்லன்னு நெனச்சுக்குவேன். ஊருக்குள்ளேயே ஏதாச்சும் வேலைக்கி போய்ட்டு தாயோட பிள்ளையா இருந்துருக்கலாம்னு அடிக்கடி தோணும். ஆனா வட்டிக்கி வாங்குன கடனை நெனச்சுகிட்டு சுருண்டடிச்சு படுத்து தூங்கிருவேன். பெறவு நாம நெனச்சாலும் சிங்கப்பூரை விட்டு வந்துர முடியாது. போன அன்னைக்கே பாஸ்போட்ட புடிங்கி வச்சுக்கிட்டாங்க.

நான் போயி நாலு மாசத்துலேயே என் தங்கச்சியும் சிங்கப்பூர் வந்துட்டா. என்னப்போல அவளும் ஒரு வீட்டுல வேலக்காரிதான். பத்து நிமிச பயணம்தான், ஆனா சந்திச்சுக்க முடியாது. மொதலாளிமாருங்க ஒத்துக்க மாட்டாங்க. அதனால தேக்காங்கற எடத்துல மூணு மாசத்துக்கு ஒருதடவ சந்திச்சுக்குவோம். ரெண்டு பேரோட மொதலாளியும் ஒரே நேரத்துல அனுமதிக்கணும்னு கடவுள வேண்டிக்குவேன்.

ஏதோ கொஞ்சம் நகைநட்ட சேத்து ஒரு கல்யாண வாழ்க்கைய தேடிக்கறதுக்கு அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் ஆறு வருச வாழ்க்கையை விலையா கொடுத்தோம். சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை ரெண்டு வருசத்துல அடச்சுட்டு ரெண்டு வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.

“என்னப்பா மகளோட கல்யாண சாப்பாடு எப்ப போடப்போற”ன்னு யாறாச்சும் எங்கப்பா கிட்ட கேட்டா, கிண்டல் செய்றாங்களா அக்கறையா கேக்குறாங்கலான்னு தெரியாது. அப்படி எவனாச்சும் கேட்டுட்டா அன்னைக்கி வீடே எழவு விழுந்த மாறி ஒருத்தர் மொகத்த ஒருத்தர் பாக்க முடியாது. சரி அம்மா கூட வயல் வேலைக்கி போகலாமுன்னா நம்ம சாதியில வயசு வந்த பொண்ணுங்க வயல் வேலைக்கி போக மாட்டாங்கன்னு கௌரவம் பேசும் எங்க அம்மா. என்ன செய்றதுன்னு புரியாமதான் எது நடந்தாலும் விதி விட்ட வழின்னு சிங்கப்பூர் போனேன்.

சிங்கப்பூரு போயி சீமாட்டியா வந்தேன்னு நினைக்காத. நம்மூர்ல இருந்து பொழைக்கப்ப போன எல்லா பொம்பளைங்களும் என்ன மாதிரிதான். சேதாரம் ஜாஸ்தி.

…………..

பெரு மூச்சோட கதையை சொல்லி முடிச்சுட்டு கமலா போயிட்டா.

மூணு எருமை கறவை மாடு, அதை நம்பி அஞ்சு ஜீவன்கள் என்ற குடும்பச் சூழ்நிலையை சிங்கப்பூருக்கு ஆள் அனுப்பும் தரகர் பயன்படுத்தி கொண்டார். இவ்வளவிற்கும் இத்தகைய தரகர்கள் யாரும் இப்பெண்களுக்கு அன்னியர்கள் இல்லை. அவர்களது சாதி, ஏன் உறவினராக கூட இருப்பார்கள். எனினும் இப்படி ஏமாற்றுகிறோம் என்று இவர்களும், ஏமாற்றப்படுகிறோம் என்று அந்தப் பெண்களும் நினைப்பதில்லை. சிங்கப்பூரும் இத்தகைய ஏமாற்றை வைத்துத்தான் அப்பாவி பெண்களை சுரண்டி ஆடம்பரமாக வாழ்கிறது.

சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்வயது வந்த பெண்களை வயல் வேலைக்கு அனுப்புவதை அவமானமாக கருதி குண்டி கழுவுனாலும் சிங்கப்பூருக்கு போய் கழுவி விடுவதையே ஆதிக்க சாதி மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் என்னவோ இந்த அடிமைத்தனத்தை அவர்கள் ஒரு பொருட்டாய் கவலைப்படுவதில்லை. ஆனா கமலாவைப் போன்ற பெண்களுக்கு சிங்கப்பூரின் மகத்துவத்தை பற்றி யாராவது சொன்னால் ரத்தம் கொதிக்கும். அது சுரண்டப்பட்ட ஒரு தொழிலாளியின் இரத்தமும் சதையுமான வாழ்க்கை.

கமலாவைப் போல் அருகாமை மாவட்டத்தைச் சேர்ந்த “ஒரு 25 வயது இளம் பெண் சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக சென்றார். பிறகு அவர் திரும்பிய போது மனநிலை பாதிக்கப்பட்டு சித்த பிரமை பிடித்தவர் போல் நைட்டி மட்டுமே அணிந்து கொண்டு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். விமான நிலைய அதிகாரிகள் அவர் பாஸ்போர்ட்டை வைத்துதான் விபரம் தெரிந்து கொண்டார்கள்” என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி வந்தது. இந்த பாதிப்பின் கதை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் கமலாக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

–    சரசம்மா

(உண்மைச் சம்பவம். பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன.)

 1. இங்கு குறைந்த பட்ச ஊதியம் 350ல் இருந்து 400சிங்கை டாலர்கள்,

  மற்றும் மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை விடுமுறை உண்டு

  மற்றும் பணிபெண்ணின் பாதுகாப்பு சிங்கையில் மிக முக்கியம்.

  வேலை இவர் சொல்லுாம் போல் புழிந்து எடுத்துவிடுவார்கள்.

  இங்க மனிதநேயாம் காண்பது மிக அரிது,

  இவருக்கு ஏதாவது சிரமம் என்றால் உடனே காவல் நிலையத்தை அலைக்கலாம் நன்றாக உதவி செய்வார்கள்

  மற்றும் இங்கு நிறைய இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் (??) வேலை செய்கின்றார்கள்.

  இவர்களை இங்குள்ளவர்கள் மிக இலப்பமாக நடத்துவார்கள்… மற்றும் இங்கு மிகுந்த மனஅழத்தம் அனைவரிடமும் காணலாம்…

  அவர்களுக்கு எதாவது காரியம் அகவேண்டும் என்றால் மட்டுமே அவர்கள் முகத்தில் போலியான சிரிப்பையும் அன்பையும் காணலாம்.

  நம்ப ஊர் பெண்கள் இங்கு வேலைக்கு வருவதற்கு பதிலாக நம் நாட்டிலேயே விவசாய வேலை அல்லது வேறதாது வேலை செய்து பிழைத்துக்கொள்ளளாம்

 2. We have Pros and Cons when you go abroad for work:

  Cons:
  • When you live/work there, you need to adapt to their work culture; it takes time.
  • It’s challenging to blend into their society; no need to ignore our society or culture
  • You pay a huge price to live in a country far away from home (esp North America & Australia); a visit involves high costs and other difficulties
  • You don’t get to celebrate any functions in the way you wish, or attend any events of family & friends
  • Need to take care of kids save them from their culture

  Pros:
  • You get excellent exposure to higher work ethics, international business, Healthy competition, etc
  • Respect for individuals, knowledge, skills, straight forward life
  • Fairness & equal opportunities – no reservation, no preference for anyone in general
  • Very high standard of life (clean air to breathe, neat roads to travel, everything organized to make your life easier)
  • High value for the money you spend/earn; learn to manage time; live with your self-esteem
  • Kids grow with an excellent attitude, learn to be independent. We find Indians everywhere.

  • //Fairness & equal opportunities – no reservation, no preference for anyone in general //

   Since there is no caste system and Untouchability there is no reservation. But what is the case in India?? Country with full of caste discrimination

   • Naveen,

    You compare situations today and 10-15 years before; you will realize how improved are we.
    I don’t say it doesn’t exist at all; but it’s blown out of proportion. Just for the heck, people exaggerate and speak out of thin air.

 3. ஏதோ நம் ஊரில் வேலைக்கு வரும் பெண்களிடம்
  பச்சாதாபமாக நடந்துகொள்கிற மாதிரியும்,சிங்கையில்

  கசக்கி பிழிகிற மாதிரியும்…..
  அதே சிங்கையில், இரவு நேரத்தில் தெரியும்
  கண்ணாடி தொழில்நுட்ப வல்லுனர் மாதம் 2 லட்சம்
  வாங்குகிறார்…
  படிப்பு+திறமை=வெளி நாட்டில் அதிக வருமானம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க