Wednesday, October 9, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?

சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 12

”முசுலீம்களும், கிறித்தவர்களும் எல்லா இடங்களிலும் தனிக்குடியிருப்பில் ஒதுங்கி வாழ்வது ஏன்? அவர்கள் இந்துக்களுக்கெதிராக தேச – விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், திட்டமிடுவதற்கும் இதுவே காரணமாவதால், இந்தத் தனிக் குடியிருப்புகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.”

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் முதல், இந்து முன்னணி இராம.கோபாலன் வரை  பலர் பேசி, எழுதி வரும் ஒரு அவதூறு.

முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.

ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.

குடியிருப்பு, தொழிலில் மட்டுமல்ல; உண்பது, உடுத்துவது, கேளிக்கை, சுடுகாடு என மொத்த வாழ்க்கையிலும் பார்ப்பனியத்தின் தனித்தன்மை காப்பாற்றப்பட்டு வருகிறது. நீர் கலந்து தயாரிக்கப்படும் ‘கச்சா’ உணவு தீட்டு. நெய் அல்லது சுத்தமான எண்ணெயில் தயாரிக்கப்படும் ‘பக்கா’ உணவு சுத்தமானது. கச்சா உணவை தன் சாதியினரிடமும், பக்கா உணவை தனக்கு கீழ் உள்ள சாதியிலும் பெற்றுக் கொள்ளலாம். வட இந்திய மேல் சாதியினரிடம் இந்த ‘உணவுத் தீண்டாமை’ இன்றும் நிலவுகிறது.

பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது. சமீபகாலம் வரை உணவு விடுதிகளில் இருந்த ‘பிராமணாள் கபே, சைவாள் கபே’ போன்ற பெயர்கள் யாத்திரை வரும் பார்ப்பனர்களின் புனிதத்தைக் காப்பாற்றத்தான் ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பன இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அதிதி பூசை’ (விருந்தினர்களை உபசரித்தல்) பார்ப்பன ‘மேல்’சாதியினரை மட்டும் குறித்தது. சேவைச்சாதியினர் சமைத்து மிகுந்துபோன உணவை தானமாகப் பெறுவார்கள். பூசை – புனஸ்காரங்களுக்கு வரும் ஐயர் பச்சரிசியை மட்டும் தானமாகப் பெறுவார்.

வட இந்தியாவின் பார்ப்பன – ‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன கமலபதி திரிபாதி என்ற உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அதற்கோர் உதாரணம். அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம், எம்.சி.ஏ. புத்திரனுக்கு இதே உட்பிரிவில் வெல்  – எஜுகேட்டட் பெண் தேவை’ என்றுதான் மணவிளம்பரம் கொடுப்பான். ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா வாடகைக்கு உள்ளது. பிராமின்ஸ் மற்றும் சைவாள் தொடர்பு கொள்க’ – இவ்விளம்பரம் சென்னையில் அடிக்கடி வெளிவரும்.

20-ஆம் நூற்றாண்டின் கணினி யுகத்திலேயே கிராமம், நகரம், சென்னை, தில்லி, அமெரிக்கா என்று எல்லா இடங்களிலும் தனி வாழ்க்கை முறையைத்தொடர்பவர்கள் யார் என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி இந்துமத வெறியர்களின் அவதூறைப் பரிசீலிப்போம்.

கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகமெங்கும் முசுலீம் குடியிருப்புகளில் போலீசு காவல் அரண் வைத்துச் சோதிப்பதாக நாளேடுகள் செய்தி வெளியிடுகின்றன. ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, அவர்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இது அப்பட்டமான பொய். ஏற்கனவே பார்த்ததுபோல சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தாங்களே தெரிவு செய்து தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. முசுலீம்களுக்கும் இது பொருந்தும்.

சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமங்களை விடுங்கள், நகரங்களில் கூட சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.

எனவே, இசுலாமிய மக்களின் தனிக்குடியிருப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு சாதி வர்க்கத் துவேசமாகும். பம்பாய், கோவை, திருவல்லிக்கேணி கலவரங்களில் சேரிகளில் முஸ்லீம் மக்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மக்களே முசுலீம்களைத் தாக்கினர். தனியாக இருந்தும் ஏழைகளாக இருந்தும் இரு பிரிவினரையும் ஒருவரையொருவர் மோதவிட்டிருப்பது தான் இந்து மதவெறியர்களின் சமீபத்திய சாதனையாகும்.

எனவே, சாதி  – மதக் கலவரங்களுக்காகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றால் – இந்து மதவெறியர்கள், சாதி வெறியர்கள் வாழும் அக்ரஹார – ‘மேல்’ சாதிக் தெருக்கள்தான் கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல மக்கள் விரோத – தேசவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு நகரத்தின் பணக்கார வர்க்கம் வாழும் பகுதிகளையும், நட்சத்திர விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும்.

– தொடரும்.

முந்தைய பாகங்களுக்கு :

  1. கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை உண்மையே.

    தனிப்பட்ட முறையில் எனக்கு பிராமணர்களை ‘பார்ப்பனர்கள்’ என்று குறிப்பிடுவதற்கு மனத்தடை உள்ளது. அதாவது, தலித்துகளை ‘ஹரிஐன்’ என்று (இக்காலத்தில்) குறிப்பிடமாட்டோம் இல்லையா? அதற்கு இணையாக இதுவும் தயக்கமாக இருக்கிறது. இந்தச் சொல்லாடல் பற்றி அது derogatory – யா இல்லையா, பார்ப்பணர்கள் அப்படி அழைக்கப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யாராவது எழுதங்களேன்.

    • ”பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..”

      “பேராசைக்காரனடா பார்ப்பான்..”

      என 100 ஆண்டுகளுக்கு முன்பே பாடியவர் இவர்களால் பார்ப்பான் எனத் தூற்றப்படும் பாரதி.

      அந்தணர்களை பார்ப்பனர் / பார்ப்பார் என பேரன்புடன் குறிக்கும் மரபு பழந்தமிழ் இலக்கியங்களில் உண்டு. வருந்தாதீர்கள் அனானி.

    • இழிவு படுத்தும் நோக்கத்தில் சொல்லப்படுவது அல்ல பார்ப்பனர் என்ற சொல்.பிராமணர்-Brahman- Brahmin -என்ற வடமொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்தான் பார்ப்பனர் எனபது.அது மட்டுமல்ல பிராமணர் என்று சொல்லும்போது அவர் பிரம்மனின் தலையில் பிறந்தவர்,உயர்ந்த பிறவி,ஏனையோர் தாழ்ந்த சாதி சூத்திரன் பஞ்சமன் என்ற கட்டுகதையைஎல்லாம் ஒப்புக் கொள்வதாகிறது.எனவேதான் பிறவியிலேயே இழிவு கற்பிக்கப்படுவதை மறுக்கும் வகையில் மான உணர்வு உள்ளோர் பிராமணர் என்பதை விடுத்து தமிழ் சொல்லான பார்ப்பனர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.ஆகவே பிறரை இழிவு படுத்துவதற்கு அல்ல தம் மீது இழிவு சுமத்தப்படாமல் இருக்கவே பார்ப்பனர் என்ற சொல்.

  2. // முசுலீம்களும், கிறித்தவர்களும் எல்லா இடங்களிலும் தனிக்குடியிருப்பில் ஒதுங்கி வாழ்வது ஏன்? //

    தங்களது தொழுகை, பிரார்த்தனைகள், சமய நெறிகளுக்கு இடையூறுகளும், அதனால் வரும் தகராறுகளையும் தவிர்க்க விரும்பியதால் இருக்கலாம்.

    // அவர்கள் இந்துக்களுக்கெதிராக தேச – விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், திட்டமிடுவதற்கும் இதுவே காரணமாவதால், இந்தத் தனிக் குடியிருப்புகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். //

    12 மணி நேரமா கதவில் காதை வச்சிருக்கேன்.. ஒண்ணுமே கேட்கமாட்டேங்குதே..

    // பார்ப்பன ‘மேல்’சாதியினர் ‘பச்சரிசி’ உண்பதற்குக் காரணம், புழுங்கல் அரிசி சூத்திர – பஞ்சமர்களால் அவிக்கப்படுவதினால்தான். //

    பார்ப்பனர்கள் அவ்வப்போது கிடைக்கும் தானத்தில் சமைத்து சாப்பிடவேண்டும். சேமித்து வைக்கப்படாது. விரைவில் கெடாத புழுங்கிய நெல்லோ, அரிசியோ சேர்த்துவைக்கும் வழக்கத்தைத் தூண்டும் என்பதால் பார்ப்பனர்கள் பச்சரிசி மட்டும்தான் தானமாகப் பெறவேண்டும் என்று அன்னாடங்காய்ச்சியாக்கிவிட்டார்கள். அது வழக்கமாகிவிட்டது.

    // பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு பயிறு வகைகளை சமீபகாலம் வரை பார்ப்பனர்கள் உண்பதில்லை. இப்படித் தீட்டுப்பட்ட காய், பயிறு வகைகள் இன்றைக்கும் கோவில் கருவறைகளில் நுழைய முடியாது //

    தீட்டு என்றால் மஞ்சள் கிழங்கு பூசையிலும், இஞ்சி சாப்பாட்டிலும் எப்படி வந்தது.??

    • //தங்களது தொழுகை, பிரார்த்தனைகள், சமய நெறிகளுக்கு இடையூறுகளும், அதனால் வரும் தகராறுகளையும் தவிர்க்க விரும்பியதால் இருக்கலாம். //

      அவர்களை இந்த நிலைப்பாட்டிற்கு தள்ளியது யார்? இந்துத்துவ வெறியர்கள் தேவையற்ற மத கலவரங்களை ஏற்படுத்தி அவர்களை இந்த நாட்டின் எதிரிகளாக சித்தரித்து பயம் நிறைந்த வாழ்வையே அவர்களுக்கு பரிசாக கொடுத்து சமுக நல்லுரவுக்கு தீங்கு விலைவிப்பதின் பெயர் என்ன? இந்தியா இந்துகளின் தேசம் என்ற ஆர் எஸ் எஸ்யின் கொள்கையை நிலைநாட்டவா? இல்லை இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் அவர்கள் அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நோக்கமா?.

      //12 மணி நேரமா கதவில் காதை வச்சிருக்கேன்.. ஒண்ணுமே கேட்கமாட்டேங்குதே..//

      உங்களுக்கு தெரிந்தது கூட இராம கோபலனுக்கும் மோகன் பகவத்துக்கும் தெரியவில்லை.

      //பார்ப்பனர்கள் அவ்வப்போது கிடைக்கும் தானத்தில் சமைத்து சாப்பிடவேண்டும். சேமித்து வைக்கப்படாது. விரைவில் கெடாத புழுங்கிய நெல்லோ, அரிசியோ சேர்த்துவைக்கும் வழக்கத்தைத் தூண்டும் என்பதால் பார்ப்பனர்கள் பச்சரிசி மட்டும்தான் தானமாகப் பெறவேண்டும் என்று அன்னாடங்காய்ச்சியாக்கிவிட்டார்கள். அது வழக்கமாகிவிட்டது.//

      பார்ப்பனர்கள் அவ்வப்போது கிடைக்கும் தானத்தில் என்ற வாக்கியத்தின் உள்ளறுத்தம் என்ன? நாங்கள் எப்பவும் பிச்சை எடுக்க மாட்டோம் எப்பயாவது தான் பிச்சை எடுப்போம் ஆனால் பிச்சை எடுக்கும் பொழுது சுட சுட தான் சாப்பிடுவோம் அப்படி சமைத்து தறுவதும் கூட புதுசாக இறுக்க வேண்டும் என்று எந்த அன்னாடங்காய்ச்சியும் சொல்ல மாட்டார்கள். உங்கள் வேதத்தில் நீங்கள் மாமிசம் எப்படி பங்கு பிரித்து கொள்ள வேண்டும் அதை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விரிவாக சொல்லபட்டுள்ளதே ஆனால் நீங்கள் சேர்த்துவைக்கும் வழக்கத்தைத் தூண்டும் என்பதால் பார்ப்பனர்கள் பச்சரிசி மட்டும்தான் தானமாகப் பெறவேண்டும் என்ற வாதத்தை சொல்வது முறன்பாடாக இல்லையா? மாமிசத்தையே வைத்து சாப்பிடும் பொழுது அரிசியை வைத்து சாப்பிட்டால் என்ன பெரிய கேடு வந்துவிடும். வழக்கத்தை மாற்றுவது உங்களுக்கு புதிது இல்லையே.

      • // அவர்களை இந்த நிலைப்பாட்டிற்கு தள்ளியது யார்? இந்துத்துவ வெறியர்கள் தேவையற்ற மத கலவரங்களை ஏற்படுத்தி அவர்களை இந்த நாட்டின் எதிரிகளாக சித்தரித்து பயம் நிறைந்த வாழ்வையே அவர்களுக்கு பரிசாக கொடுத்து சமுக நல்லுரவுக்கு தீங்கு விலைவிப்பதின் பெயர் என்ன? இந்தியா இந்துகளின் தேசம் என்ற ஆர் எஸ் எஸ்யின் கொள்கையை நிலைநாட்டவா? இல்லை இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் அவர்கள் அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நோக்கமா?. //

        பக்கத்து வீட்டு பாய் “லா இலாஹா இல்லல்லாஹ்” என்று தொழும் வேளை “சாமியே சரணம் அய்யப்பா” என அடுத்த வீட்டுக்காரன் சரணகோசம் எழுப்பினால், பாய்க்கு மனக் கண்ணில் தோன்றுவது யாராயிருக்கும்?! நீங்கள் இஸ்லாமியரிடமோ, கிறிஸ்தவரிடமோ போய் கலந்தாலோசித்துவிட்டு, அவர்களின் விருப்பங்களையும் கேட்டுக் கொண்டு பின் அவர்களுக்காக பேசுங்கள் செந்தமிழரே.

        // பார்ப்பனர்கள் அவ்வப்போது கிடைக்கும் தானத்தில் என்ற வாக்கியத்தின் உள்ளறுத்தம் என்ன? நாங்கள் எப்பவும் பிச்சை எடுக்க மாட்டோம் எப்பயாவது தான் பிச்சை எடுப்போம் ஆனால் பிச்சை எடுக்கும் பொழுது சுட சுட தான் சாப்பிடுவோம் அப்படி சமைத்து தறுவதும் கூட புதுசாக இறுக்க வேண்டும் என்று எந்த அன்னாடங்காய்ச்சியும் சொல்ல மாட்டார்கள் //

        தானத்தை(நன்)கொடை என்றும் சொல்லலாம், பிச்சை என்றும் சொல்லலாம். அது வாங்குபவனைப் பற்றி கொடுப்பவன் என்ன நினைக்கிறான், எந்த நோக்கத்திற்காக கொடுக்கிறான் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அன்னாடங்காய்ச்சி என்றாலே அன்று கிடைத்தை வைத்துத்தான் சமைத்து சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவன் என்றுதான் பொருள். சூடாகச் சாப்பிடுகிறானா, ஆறவைத்து இரவிலும் சாப்பிடுகிறானா என்பதெல்லாம் அவன் விருப்பத்தையும், தேவையையும், அளவையும் பொறுத்தது.

        // உங்கள் வேதத்தில் நீங்கள் மாமிசம் எப்படி பங்கு பிரித்து கொள்ள வேண்டும் அதை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விரிவாக சொல்லபட்டுள்ளதே ஆனால் நீங்கள் சேர்த்துவைக்கும் வழக்கத்தைத் தூண்டும் என்பதால் பார்ப்பனர்கள் பச்சரிசி மட்டும்தான் தானமாகப் பெறவேண்டும் என்ற வாதத்தை சொல்வது முறன்பாடாக இல்லையா? //

        மாமிசம் சாப்பிட்டுக்கொண்டும், பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால்தான் நீங்கள் கூறும் முரண்பாடு வரும்.

  3. //அமெரிக்காவில் கணிப்பொறி அடிக்கிற அம்பி கூட ‘வடமாள், கொண்டின்ய கோத்திரம், மிருகசீரிஷ நட்சத்திரம்//
    உம்ம முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையா… உண்மையில் நீர்தான் கண்ணை மறைக்கும் பேப்பர்புழுதி என்று தலைப்பு போட்டுக்கணும்… தேவர் கவுண்டர் பிள்ளைமார் முதலியார்வாள் முதல் தலித் வரை வெளிநாடு வாழ்பவர் எத்தனைபேர் தன் சுயசாதி வேண்டும் என்று போட்டுக் கொள்கிறார்கள்… பேப்பர் கட்டிங் வேண்டுமா… இல்லை அவதுறே உன் பெயர் தான் வினவு என்று மாற்றிக் கொள்கிறீரா… முடிந்தால் சன்டிவி போன்ற டிவிக்கள் முதல் நாளேடு திருமண விளம்பரத்தை பார்த்துக் கொள்ளும்… உம்மால் முடியாது… காரணம் பார்ப்பன் என்றால்தான் முற்போக்கு பட்டம் கிடைக்கும்.. புரட்சித் தலைவி முதல் நீர் வரை பட்டத்துக்காக அலைகிறார்களே… அய்யகோ….

    • \\தேவர் கவுண்டர் பிள்ளைமார் முதலியார்வாள் முதல் தலித் வரை வெளிநாடு வாழ்பவர் எத்தனைபேர் தன் சுயசாதி வேண்டும் என்று போட்டுக் கொள்கிறார்கள்\\
      மிக்க சரி.. அமெரிக்க மண்ணை மிதித்துவிட்ட எந்த இஞ்சினியரும், இஞ்சிநிச்சியும் திருமத்துக்கு ஆயிரம் டிமாண்டுக்கள் வைத்துள்ளனர்… இதில் சாதி, மத, வேறுபாடே இல்லை… வெவ்வேறு சாதியில் காதலிப்பவர்களே, NRI ஆகிவிட்டால் அந்த காதலை மறந்து விடும் அளவுக்கு மோசமாகிவிடுகின்றனர்…இது நடைமுறை உண்மை..
      அமெரிக்காவில் செட்டிலாகும் பார்ப்பனனும் சிக்கன் பர்கர் தின்கிறான், பறையனும் ஐ ஹேட் பீப் என்று பீட்டர் விடுகிறான்…
      இன்றைக்கு ஒரு மனிதன் பார்ப்பானா, பறையனா என்று தீர்மானிப்பது அவனிடம் உள்ள பணமும், நுனி நாக்கு ஆங்கில வளமும் தான்… பணம் வந்தால் பார்ப்பானும் பள்ளனும் ஒன்றுதான்… பணம் இல்லையென்றால் இரண்டு பேர் வாயிலும் மண்ணுதான்…
      ஒடப்பரும், உதயப்பரும் ஒப்பப்பர் ஆகிவிட்ட காலம் இது…
      மற்றபடி, கோயில் குருக்கள்கள், சட்டை அணியாமல் டூ வீலேரில் பறக்கும் மாங்கல்யம் தந்துனானே அய்யர்கள், வெள்ளுடை பாதிரியார்கள், எங்கு சென்றாலும் புனித குல்லா அணிந்து செல்லும் இஸ்லாமியர்கள், கடவுள் இல்லவே இல்லை என கடவுளை ஆத்திகனை விட அதிகம் நினைத்து புண்ணியம் கட்டி கொள்ளும் கருஞ்சட்டை தி.க. சாதிக்காரன் , செஞ்சட்டை கம்யுனிஸ்ட் சாதிக்காரன் ஆகிய இவர்கள் தான் தங்கள் மதத்தையும், சாதியையும் அறிவிக்கும் வண்ணம் தங்களை உடையலங்காரம் செய்கின்றனர்…
      இரவு 12 மணிக்கு நைட் கடையில் சிகரெட் பிடிக்கும் பிபிஒ மக்கள் யாரையும், இவன் பாப்பன், இவன் இஸ்லாமியன், இவன் கிர்த்தவன், இவன் பறையன், இவன் பள்ளன் என அடையாளம் காண முடியாது… இதுதான் இன்றைய நிலை…

      • //இன்றைக்கு ஒரு மனிதன் பார்ப்பானா, பறையனா என்று தீர்மானிப்பது அவனிடம் உள்ள பணமும், நுனி நாக்கு ஆங்கில வளமும் தான்… பணம் வந்தால் பார்ப்பானும் பள்ளனும் ஒன்றுதான்…//

        அப்படியா அப்ப தாள்த்தபட்ட மக்களிடத்தில் பணமும் நுனி நாக்கு ஆங்கிலமும் இருந்தால் பார்ப்பனியர்களை போல் நேராக திருப்பதி வெங்கடாசலப்பதி கருவறைக்கு சென்றுவிட முடியுமா?

        //மற்றபடி, கோயில் குருக்கள்கள், சட்டை அணியாமல் டூ வீலேரில் பறக்கும் மாங்கல்யம் தந்துனானே அய்யர்கள், வெள்ளுடை பாதிரியார்கள், எங்கு சென்றாலும் புனித குல்லா அணிந்து செல்லும் இஸ்லாமியர்கள், கடவுள் இல்லவே இல்லை என கடவுளை ஆத்திகனை விட அதிகம் நினைத்து புண்ணியம் கட்டி கொள்ளும் கருஞ்சட்டை தி.க. சாதிக்காரன் , செஞ்சட்டை கம்யுனிஸ்ட் சாதிக்காரன் ஆகிய இவர்கள் தான் தங்கள் மதத்தையும், சாதியையும் அறிவிக்கும் வண்ணம் தங்களை உடையலங்காரம் செய்கின்றனர்…//

        திராவிடமும் கமியூனிசமும் மதங்களா? சும்மா எதாவது எழுத வேண்டியது

        • \\தாள்த்தபட்ட மக்களிடத்தில் பணமும் நுனி நாக்கு ஆங்கிலமும் இருந்தால் பார்ப்பனியர்களை போல் நேராக திருப்பதி வெங்கடாசலப்பதி கருவறைக்கு சென்றுவிட முடியுமா\\

          ஒரு ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பார்ப்பனன் என்னதான் ஏழெட்டு வேதங்கள் கற்று தேர்ந்த மகா பண்டிதனாக இருப்பினும் அவனிடம் பணம் புகழ் இல்லையெனில் அவனுக்கும் திருப்பதி உள்ளிட்ட ஆலயங்களில் இலவச தரிசன க்யு தான் நண்பரே… அவன் பார்ப்பனன் என்ற அடையாளத்தை கூறி கருவறை பக்கமெல்லாம் போகவே முடியாது…

          \\திராவிடமும் கமியூனிசமும் மதங்களா? சும்மா எதாவது எழுத வேண்டியது\\
          தற்குறிப்பேற்ற அணி!

          • //ஒரு ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பார்ப்பனன் என்னதான் ஏழெட்டு வேதங்கள் கற்று தேர்ந்த மகா பண்டிதனாக இருப்பினும் அவனிடம் பணம் புகழ் இல்லையெனில் அவனுக்கும் திருப்பதி உள்ளிட்ட ஆலயங்களில் இலவச தரிசன க்யு தான் நண்பரே… அவன் பார்ப்பனன் என்ற அடையாளத்தை கூறி கருவறை பக்கமெல்லாம் போகவே முடியாது…//

            இதுக்கு பேரு தான் தெளிவா எழுதுறதா நினைச்சி கொழப்புறது…!!! “காசு இருக்கிற பள்ளன் கருவறைக்குள் நுழைய முடியுமா?” என்ற கேள்விக்கு “காசு இல்லாத பார்ப்பான் கூட உள்ளே போகமுடியாது” என்பது பதிலா?

      • //இரவு 12 மணிக்கு நைட் கடையில் சிகரெட் பிடிக்கும் பிபிஒ மக்கள் யாரையும், இவன் பாப்பன், இவன் இஸ்லாமியன், இவன் கிர்த்தவன், இவன் பறையன், இவன் பள்ளன் என அடையாளம் காண முடியாது… இதுதான் இன்றைய நிலை//

        இவங்களோட கமபெனி புரோபைலில் இல்லாத பல விசயங்கள், “மணமகன்” தேவை விளம்பரத்திலும், கல்யாண மாலையிலும் ‘கப்’ அடிக்குதே? எப்படி? ‘சாதி’ ஒழிஞ்சிருச்சுன்னு நல்லாவே காமெடி பண்றீங்க?

        • \\கமபெனி புரோபைலில் இல்லாத பல விசயங்கள், “மணமகன்” தேவை விளம்பரத்திலும், கல்யாண மாலையிலும் ‘கப்’ அடிக்குதே? எப்படி?\\

          ‘கப்’ அடிக்குது என்று சுலபமாக சொல்லுகிறீர்கள், உங்களுக்கு ‘கப்’-பாக அவர்களுக்கு cup ஆக தெரிகிறது… சாதி, மதம் பார்த்து பெண் கொடுத்து பெண் எடுப்பது அனைத்து சமுதயாங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற நடைமுறை.. எங்கே சொல்லுங்கள் உங்கள் குடும்பத்திலும், உங்கள் உறவுகள் குடும்பத்திலும் இந்த வழக்கம் இல்லையென்று… ஒன்றிரண்டு காதல் திருமங்களை வேண்டுமானால் உதாரணமாக சொல்லலாமே தவிர, நமது மாமன், மச்சான், சித்தப்பன்,பங்காளிகள் மற்றனைத்து உறவுகள் குடும்பத்திலும் இந்த வழக்கம் தானே இருக்கிறது…

          \\‘சாதி’ ஒழிஞ்சிருச்சுன்னு நல்லாவே காமெடி பண்றீங்க?\\
          சாதி ஒழிந்துவிட்டது என்று சொல்லவே முடியாது… அரசாங்கமே சாதி சான்றிதழ் கொடுக்கும் வரை சாதி ஒழிவதென்பது கனவு தான்…
          ஆனால் முன்பு போல அல்லாமால் இப்போதைய சூழலில் யாரும் தங்கள் சாதியை பொது இடங்களில் விளம்பரப்படுத்தி கொள்வதில்லை.. பெயர்களின் முடிவில் சாதி விகுதி சேர்ப்பது இன்றைய தலைமுறையில் பெரும்பாலும் குறைந்துள்ளது…

          இந்த சூழலில் சாதி அரக்கனை அரசியல் கட்சிகள் மீண்டும் உரம் ஊற்றி வளர்த்து விடுவது தான் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.. ஒரு நபர் சார்ந்துள்ள கட்சியை வைத்து, அவருடைய வாகனங்களில் உள்ள கொடிகள், தலைவர் படங்கள் வைத்து அவர் எந்த சாதியை சேர்ந்தவர் எனபது தெளிவுபடுகிறது.. சாதாரண நடுத்தர வர்க்க அரசியல் சாரா இளைஞர்கள் கூட தங்கள் வாகனங்களில் முத்துராமலிங்கம், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் படம் போட்டு தங்களின் சாதியை அடையாளப்படுத்தும் அளவுக்கு அரசியல் தள்ளியது…

          முதலில் சாதி கட்சிகளை முற்றிலும் ஒழித்தால்தான் தான் சாதி ஒழிப்பு பற்றி நினைக்கவே முடியும்…

          • 1. காசு தான் பாக்குறாங்க… சாதி எல்லாம் அப்புறம் தான்னு சொல்லுறீங்க? சரி காசு இருக்கிற பள்ளன் கோவிலுக்குள் பூஜை செய்ய போகமுடியுமான்னு கேட்டா அதுக்கு உங்ககிட்ட பதிலை காணோம் ‘மனிதன்’? 2. நைட்டு சிப்டுல தம் அடிக்கிற பிபிஒ ஆட்களை தரம் பிரித்து அறிவது கஸ்டம் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் அதில் யாராவது ஒருவனுக்கு உங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்துவைப்பீர்களா என்றால் (துட்டு புராணம் காலி), “இல்லைஇல்லை ‘சாதி’ பாத்து தான் செய்யணும். அது தான் நடைமுறை பழக்கம்னு சொல்றீங்க”. அது எப்படி ஒரே நேரத்தில் காசும், சாதியும் மாறி மாறி உங்கள் கண்ணுக்கு வந்து செல்கிறது? எதை வைத்து எதை ஏமாற்றுகிறீர்கள்? காசை வைத்து சாதியையா? சாதியை வைத்து காசையா? 3. ‘சாதி’ சர்டிபிகேட் கேட்பதால் தான் சாதி உயிரோடு இருக்கிறது என்கிறீர்கள். ஒருவேளை ‘சாதி’ என்ற ஒன்றை உருவாக்கிய ஆதிமூலம் காற்றில் காணாமல் போய், அரசாங்க பதிவேட்டில் மட்டும் தான் ‘சாதி’ இருக்கிறது என்று இருந்தால் நீங்கள் சொல்லும் வாதம் சரி. அது தான் உண்மையா? சாதி கட்சிகளை ஒழித்தால் சாதி ஒழியும் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவற்றையும் தாண்டி சாதியை உயிர்ப்போடு வைத்திருக்கும் அடிநாதத்தை பற்றி நீங்கள் வாய்திறக்க மறுப்பதேன்? 4. இந்து சட்டங்களின் படி “இந்துக்களின் பல்வேறு விசயங்கள் அப்படியே கடைபிடிக்கப் படவேண்டும்” என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. சாதியின் ஊற்றுகண் ‘வர்ணாசிரம கொள்கை’. இந்து மதம் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. ‘இந்து’ மதத்தை பற்றி பேசாமல், திருமாவளவனையும், முத்துராமலிங்க தேவர் நபர்களையும் விமர்சிப்பது நடுநிலையாளருக்கு அழகா? 5. சாதியை விட காசு தான் முக்கியம் என்றால், ஏழ்மையான உயர்சாதி ஏழ்மையான தாழ்ந்தசாதி என்ற கூட்டங்களே இருந்திருக்க கூடாதே. உண்மை அப்படியா? உலக அளவில் பெயர்பெற்ற ஒரு கூத்துபட்டறையை சேர்ந்த தலித் (அழகி படத்தில் கட்டையனாக நடித்தவர்) இன்று கூட அவர் மேல்சாதி தெருபக்கம் செருப்பு போட்டு செல்ல முடியாதே. ஏன்?

            • சாதி ஒழிப்பையும், தீண்டாமை ஒழிப்பையும் குழப்பிக்கொள்ளுகிரீர்கள்… சாதி ஒழிப்பு என்பது மிகவும் கடினம்… 50 ஆண்டுகளாக பல பேர் போராடியும், முயற்சித்தும் பலன் இல்லை.. ஆனால் தீண்டாமை ஒழிப்பு என்பதற்கு ஓரளவுக்கு பலன் இருக்கிறது…

              நீங்கள் எந்த சாதியாக வேண்டுமானாலும் இருந்துட்டுப்போங்கள், ஆனால் மற்ற சாதி மனிதர்களை மனிதாபிமனத்தொடு மதிக்க கற்று கொள்ளுங்கள்.. அதுவே இப்போதைய தேவை…

              • //சாதி ஒழிப்பையும், தீண்டாமை ஒழிப்பையும் குழப்பிக்கொள்ளுகிரீர்கள்//
                நீங்கள் குழப்பாமல் விளக்கலாமே? எது எதனை சார்ந்தது? சாதி தீண்டாமையையா? இல்லை தீண்டாமை சாதியையா? சாதியை ஒழிக்க யாரு முயன்றார்கள்? ஏன் தோற்றுபோனார்கள்? அதையும் சற்று விளக்கினால் தேவலை.

                //நீங்கள் எந்த சாதியாக வேண்டுமானாலும் இருந்துட்டுப்போங்கள், ஆனால் மற்ற சாதி மனிதர்களை மனிதாபிமனத்தொடு மதிக்க கற்று கொள்ளுங்கள்.. அதுவே இப்போதைய தேவை…//
                முதலில் காசு தான் தேவை என்றீர்கள். பிறகு சாதியும் முக்கியம் என்றீர்கள். பிறகு மனிதாபிமானம் தான் இப்போதைய தேவை என்று சொல்கிறீர்கள். இதில் எது இருந்தால் இந்த சமுதாயம் ம்திக்கும் என்று குழப்பாமல் சொல்லுங்களேன்.

              • //இன்றைக்கு ஒரு மனிதன் பார்ப்பானா, பறையனா என்று தீர்மானிப்பது அவனிடம் உள்ள பணமும், நுனி நாக்கு ஆங்கில வளமும் தான்… பணம் வந்தால் பார்ப்பானும் பள்ளனும் ஒன்றுதான்… பணம் இல்லையென்றால் இரண்டு பேர் வாயிலும் மண்ணுதான்…//

                இது நீங்க சொன்னது தான் ‘மனிதன்’.

                //சாதி, மதம் பார்த்து பெண் கொடுத்து பெண் எடுப்பது அனைத்து சமுதயாங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற நடைமுறை//

                இதையும் நீங்கள் தான் சொன்னீர்கள் ‘மனிதன்’.

                //சாதி ஒழிப்பு என்பது மிகவும் கடினம்… 50 ஆண்டுகளாக பல பேர் போராடியும், முயற்சித்தும் பலன் இல்லை..//

                காசு இருந்தால் பள்ளனும்,பார்ப்பானும் ஒன்று என்று முழங்கிய நீங்கள், பிறகு ஒருபடி இறங்கி வந்து காசு இருந்தாலும் ‘சாதி’ பார்த்து திருமணம் செய்றது வழக்கம் தானே என்று சொல்லிவிட்டு, பிறகு அப்படிபட்ட ‘சாதியை’ ஒழிக்கவே முடியாது என்று முடித்துள்ளீர்கள். கடைசியா தொட்டுக்க ‘மனிதாபிமான’ ஊறுகாய் வேறு…!!! நீங்கள் சொன்னதில் இருந்தும், நீங்கள் சொல்லாமல் விட்டதில் இருந்தும் ‘சாதி’ என்பது பிளாஸ்டிக் மாதிரி என்று புலனாகிறது. எல்லாவற்றையும் தீர்மானிக்கவல்ல பணத்தால் ஏன் சாதியை ஒழிக்க முடியவில்லை? எங்கே இருக்கு சூட்சுமம்?

  4. இராம.கோபாலனின் பேச்சை பிறர் மதிக்கிறார்களா என்ன?
    அவரைப் போன்ற உளுத்துப் போன்றோரை மக்கள் என்றோ கைகழுவி விட்டனரே!

  5. In tamil nadu the Forward caste population (including brahmin,Roman christian, buddhist,jains and some upper caste hindus). Most of your article simply you are blaming brahmins. 97% of tamil population comes under reservation. In tamil nadu ,brahmins never involved in caste fights.if you have courage write about the original reason for caste fight in southern tamilnadu.

  6. இது போல கட்டுரைகள் பர்பனர்களுக்கு எதிரன தீண்டாமை உணர்வயே யேற்படடுதும். சமுதாய ஒட்றுமையை எரற்படுத்தாது.

    • // பர்பனர்களுக்கு எதிரன தீண்டாமை//
      இந்த மேட்டர் புதுசா இருக்கே? 🙂

  7. \\‘மேல்’சாதி அரசியல் தலைவர்கள் பலரும் எங்கு சென்றாலும் தன் சாதி சமையற்காரரையும் கூடவே அழைத்துச் செல்வார்கள்.\\
    அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் சமையல்காரர்களை கூடவே தான் அழைத்து செல்கின்றனர்… வேற புதுசா சொல்லுங்க…

    \\தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. முசுலீம்களுக்கும் இது பொருந்தும்.\\
    இஸ்லாமியர்கள் ஒன்றும் நீங்கள் கூறுவது போல யாருக்கும் அஞ்சி தனிதெருவில் வசிக்கவில்லை… அவர்கள் மத ஆலயங்களுக்கு அருகிலும், தமது உறவினர் மத்தியிலும் வாழ விருப்பபடுவதால் தான் கூடி வாழுகின்றனர்…

    \\சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது\\ இசுலாமிய மக்களின் தனிக்குடியிருப்புக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு சாதி வர்க்கத் துவேசமாகும். \\
    ஆர்.எஸ்.எஸ் என்ன ஒட்டு மொத்த இந்து சமுதாய பிரதிநிதிtயா… ஊருக்கு நாலு பேரு இருப்பானா அந்த இயக்கத்திலா.. அவன் வெறுத்தால் ஒட்டு மொத்த இந்துக்களே இஸ்லாமியரை வெறுப்பது போலவும், அதனால் அவர்கள் ஒதுங்கி வாழ்வதாகவும் கதை விடுவது மத வெறி தூண்டலாகும்..
    இசுலாமிய மக்களும், இந்து மக்களும் மச்சான், மாமூ என்று பழக்கிக்கொள்ளுவது தான் இன்றளவும் வழக்கமாக உள்ளது… அந்த ஒற்றுமையை பிரித்து துண்டாட முயற்சிக்கும் வகையில் பதிவு உள்ளது…

    \\ சாதி – மதக் கலவரங்களுக்காகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றால் – இந்து மதவெறியர்கள், சாதி வெறியர்கள் வாழும் அக்ரஹார – ‘மேல்’ சாதிக் தெருக்கள்தான் கண்காணிக்கப்பட வேண்டும்\\
    அதானே ஏன் ஆடு நினைவதை பார்த்து நீங்கள் அழுகிறீர்கள் என்று பார்த்தேன்… உமக்கு கவலை அக்ரகாரங்கள் கண்காணிப்பில்லாமல் போகிறதே… அங்கு ஆயிரமாயிரம் அணுகுண்டுகளும், ஆயுதங்களும் தயாராகிறதே என்பது தான்…
    கண்காணிக்கப்பட வேண்டியது அக்ரகாரங்களும் இல்லை, இஸ்லாமிய குடியிருப்புக்களும் அல்ல, மத வெறி உணர்வை ஊட்டி வளர்க்கும் ஒரு சில போராட்ட பிரிவினைவாத குழுக்களும், நக்சல் பாரி இயக்கங்களும் தான்..

    • //ஆர்.எஸ்.எஸ் என்ன ஒட்டு மொத்த இந்து சமுதாய பிரதிநிதிtயா… ஊருக்கு நாலு பேரு இருப்பானா அந்த இயக்கத்திலா.. அவன் வெறுத்தால் ஒட்டு மொத்த இந்துக்களே இஸ்லாமியரை வெறுப்பது போலவும்,//

      மனிதன் சார்! இதுக்கு முன்னாடி நீங்க RSS மோடி ரொம்ப நல்லவரு, அவர மாதிரி எல்லாரும் ஆட்சி செய்யனும்னு சொன்னீங்க. ரொம்ப நல்லவரு ஏன் RSS ல இருக்கனும்.

  8. இதனால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் செய்தி என்ன வென்றால்… நரவேட்டை மோடியின் தீவிர ரசிகரான ‘Manithan’ என்பவர் மனிதாபிமானம் பற்றி பேசித்திரிகிறார். அவரை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • இப்படி ஒருவரை முத்திரை குத்துவதன் மூலம் அவர் இனி என்ன மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இங்கு தேவை ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமே அன்றி, தனி மனித முத்திரை குத்துதல்களோ, தற்புகழ்ச்சியோ, தாக்குதலோ அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க