பொதுவில் பயண அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுப் போட்டு மொத்த விஷயமும் நமுத்துப் போய்விடும்.
பயண அனுபவம் என நான் கருதுவது செல்லும் ஊர்களின் அழகியல் அம்சங்களை பட்டியலிட்டுக் காட்டுவது எனும் அம்சத்தில் அல்ல. மாறாக மாறுபட்ட கலாச்சாரம், மற்றும் அந்தக் கலாச்சாரத்தில் அடித்தளமாய் இருக்கும் பொருளாதாரம், அந்தப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படும் அங்குள்ள மனிதர்களிடையே நிலவும் உறவுகள், அந்த உறவுகளினிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பதிந்து வைப்பதைத்தான். வடநாட்டுப் பயணம் என்பது என்னளவில் ஒரு முக்கியமான திருப்புமுனை.
ஒரு நாலைந்து ஆண்டுகள் முன்பு இந்தியா எனும் மாய நினைவுகளோடே தில்லியில் வந்திறங்கியவனை ஒரு உலுக்கு உலுக்கி நாம் உண்மையில் ஒரு எல்லைக்குள் இருக்கும் பல தேசத்தவர் என்பதை உணர வைத்தது.
இப்போது மீண்டும் தில்லி. இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.
தில்லி என்பது ஒரு அடையாளம். ஆளும் வர்க்க / மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆணவத்தினுடைய அடையாளம். தனது வளர்ச்சிக்கு உரமாய் இருந்தவர்களையெல்லாம் சீரணித்துச் சக்கையாகத் துப்பி விடும் துரோகத்தின் அடையாளம். புறக்கணிப்பைப் புறக்கணித்து இந்நகரின் மேன்மைக்காய் உழைத்து உழைத்து நடைபாதைகளில் கண்களில் வெறுமை தெறிக்கத் தங்கியிருக்கும் அந்த உழைக்கும் மக்களுடைய தியாகத்தின் அடையாளமும் இதே தில்லிதான்.
இப்போது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தப் போகிறார்கள். அதற்காக நகரத்துக்கு மேக்கப்போடும் வேலை வெகு வேகமாக நடந்து வருகிறது. முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்டும் உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்.
குர்காவ்ன், நோய்டா போன்ற சாடிலைட் நகரங்களில் வானை எட்டிப் பிடிக்க நிற்கும் பளபளப்பான ஒவ்வொரு கட்டிடமும் நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகளுண்டு. நான் வந்து சேர்ந்த இரண்டாவது நாளில் நோய்டாவில் நடைபாதையில் தங்கியிருந்த ஒரு கூலித் தொழிலாளி – ஒரு முதியவர் – நடுக்கும் குளிரில் செத்துப் போயிருந்தார். அவர் கட்டிடத் தொழிலாளியாய் பணிபுரிந்த கட்டடத்திற்கு மிக அருகாமையிலேயே ஒரு நடைபாதையோரம் வாழ்ந்து வந்தார். ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. ஆனால் அந்தக் கட்டிடத்திலியங்கும் அலுவகங்களில் வேலை பார்க்கும் எவரும் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட அருகில் வரவில்லை. இங்கே ஏழ்மையையும் வறுமையையும் தொற்று நோயைப் போல பார்த்து ஒதுக்குகிறார்கள்.
இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசத்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்.
வடக்கில் பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களை BIMARU என்கிறார்கள். இம்மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதாலும் அந்தந்த வட்டாரங்களில் பிழைக்க வேறு வழியில்லாததாலும் வீசியெறியப்படும் மக்கள் தில்லியில்தான் வந்து குவிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். இவர்கள் பெரும்பாலும் வசிப்பது நடைபாதைகளில்தான். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்படி பிள்ளை குட்டிகளோடு இடம் பெயர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. குர்காவ்ன், நோய்டா மற்றும் தில்லியின் பல பகுதிகளில் நடைபாதைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். மொத்த குடும்பமே ஏதோவொரு கூலி வேலைக்குச் சென்றால்தான் ஜீவனத்தை ஓட்ட முடியும். இவர்களுக்கான சுகாதார
வசதிகளோ, இந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்க ஏற்பாடோ எதுவும் கிடையாது. இவர்கள் இத்தனை சிரமத்துக்குள்ளும் ஒரு பெருநகரத்துக்கு இடம் பெயர்ந்து வர வெறுமே பொருளாதாரக் காரணங்கள் மட்டும்தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.
இங்கே வந்த சில நாட்களில் வேலை தள்ளிப் போய்க்கொண்டு இருந்ததால் கூட ஒரு பீகாரி நண்பனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு லும்பினி செல்லக் கிளம்பிவிட்டேன். பேருந்தில் அயோத்தி வரை செல்வது, அங்கே எனது கல்லூரி நண்பன் சரவணரகுபதியும் அவனது நண்பனும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதும், தொடர்ந்து லும்பினிக்கு இரண்டு புல்லட்டுகளில் சென்றுவிட்டு மீண்டும் அயோத்தியிருந்து தில்லிக்கு பேருந்தில் பயணம் என்பது திட்டம். இந்தப் பயணத்தின் இடையில் ஒரு நாள் ஏதாவது ஒரு சிறிய டவுனில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் பயணிப்பது என்றும் முடிந்தவரையில் தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியே பயணிப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டே கிளம்பினோம்.
திட்டமிட்டபடி வழியில் அயோத்தியில் என் நண்பன் சரவணனும் அவன் நண்பன் வைபவ் த்ரிபாத்தியும் எங்களோடு இணைந்து கொண்டனர். அங்கிருந்து இரண்டு புல்லட்களில் கோரக்பூர் கிளம்பினோம் – கிளம்பும் போதே மதியம் 3 ஆகிவிட்டது. பஸ்ட்டி எனும் நகரத்தைத் தாண்டியதும் ஒரு கிராமத்தில் வைபவ்வின் உறவினர் வீட்டில் தங்கினோம்.
அடுத்த நாள் விடியகாலை சீக்கிரம் எழுந்து திறந்த வெளிப் புல்கலைக்கழகத்தைத் தேடி நடந்த போது ஒரு தலித் குடியிருப்பைக் கடந்தோம் – காலை ஒரு மூன்று மணியிருக்கும். குடிசைகளில் அந்த நேரத்துக்கே சமையல் வேலை நடப்பதைக் காண முடிந்தது. வைபவ்விடம் விசாரித்தேன் – பொதுவாக இங்கே மொத்த குடும்பமும் பண்ணைகளின் நிலத்தில் வேலைக்குச் சென்று விடவேண்டும் என்பதால், காலையிலேயே மொத்த நாளுக்கும் சேர்த்து சப்பாத்தி சுட்டு வைத்துக்கொள்கிறார்கள். சப்ஜி என்று எதுவும் கிடையாது; ஒரு பச்சைமிளகாயை எடுத்து சப்பாத்தியை அதில் சுருட்டி அப்படியே சாப்பிட வேண்டியது தான். இதுவேதான் மதியத்துக்கும் இதுவேதான் இரவுக்கும். கோதுமையை பண்ணையாரே கொடுத்துவிடுவார் – கூலியில் பெரும்பாலும் கழித்து வடுவார். கூலியென்று பார்த்தாலும் ஆணுக்கு இருபது ரூபாயும் பெண்ணுக்கு பத்து ரூபாய்களும்தான்; சிறுவர்களின் வேலைக்கெல்லாம் கூலி கிடையாது. பெரும்பாலும் கூலிக்கு பதிலாய் தானியங்கள் கொடுத்து விடுவார்களாம்.
இதில் வேலை முடிந்ததா வீட்டுக்கு வந்தோமா என்றெல்லம் கிடையாது; பண்ணையார் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் போய் நிற்க வேண்டும். இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்பவர்களாம்; இப்போது பண்ணையாருக்கு முடிவெட்டுபவரின் தந்தை பண்ணையாரின் தந்தைக்கு வெட்டியிருப்பார் – இவர் மகன் பண்ணையாரின் மகனுக்கு எதிர்காலத்தில் முடிவெட்டுவார் – இப்படி! இங்கே பெரும் பண்ணைகளிடம்தான் நிலங்கள் மொத்தமும் குவிந்துள்ளன. தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களே (தமிழ்நாட்டைப் போலத்தான்). மொத்த குடும்பமும் – குஞ்சு குளுவான்கள் முதற்கொண்டு கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியென்பதே கிடையாது.
பெரும்பாலும் அங்கே நான் கவனித்தது நமது மாநிலத்துக்கும் அங்கேயுள்ள நிலைமைகளுக்கு மலையளவு இருந்த வித்தியாசத்தை. உத்திர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உயர்சாதியினருக்கு சட்டமே கிடையாது என்பது போல்தான் தெரிகிறது. சர்வசாதாரணமாக அங்கே நாட்டுத் துப்பாக்கிகள் தூக்கிய குண்டர்களுடன் உயர்சாதிப் பண்ணைகள் நடமாடுவதைக் கவனித்து இருக்கிறேன். பேருந்துகளில் அவர்கள் ஏறினால் டிக்கெட் எடுப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் தலித்துகள் இருக்கைகள் காலியாய் இருந்தாலும் உட்காருவதில்லை – குறிப்பாக இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு உயர் சாதிக்காரர் உட்கார்ந்து இருந்தால் அருகில் ஒரு தலித் உட்கார முடியாது.
நிலப்பிரபுத்துவம் தனது உச்சகட்ட கொடுமைகளை அங்கே கட்டவிழ்த்து விட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. முசாகர் எனும் ஒரு சாதியினரைப் பற்றி எனது பீகாரி நண்பன் சொன்னான் – தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் எனக்கு (இங்கே இரட்டைக் குவளையை முறையைக் கண்டிருந்தாலும் கூட) அவர்களைப் பற்றி கேள்வியுற்றதெல்லாம் கடுமையான வியப்பை உண்டாக்கியது. அங்கே வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வளைக்குள் நுழைவது போலத்தானிருக்குமாம்.
குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமாம். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாதாம். இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள். எனக்குத் தமிழகமும் பெரியாரும் நினைவுக்கு வந்தார் – உண்மையில் அந்த தாடிக்காரக் கிழவனுக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.
இது போன்ற சமூகக் காரணிகள், பொருளாதாரக் காரணிகளோடு இணைந்துதான் அவர்களை தில்லிக்கு விரட்டுகிறது – இங்கே தில்லியின் கருணையற்ற இதயத்தை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ நிர்பந்திக்கிறது. BIMARU மாநிலங்களின் பலபகுதிகளின் பொருளாதார நிலையும் சமூக ஒடுக்குமுறையும் நமது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
நாங்கள் பஸ்ட்டியிலிருந்து காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டோம் – வழியில் வைபவ்வின் புல்லட் இஞ்சின் சீஸ் ஆகி விட்டது. மிதமான வேகத்தில் கோரக்பூர் சென்றபோது மாலை நான்கு. ஒரு மெக்கானிக்கைப் பிடித்து ரீபோரிங் செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் தங்க இடம் பார்க்கவும், ஊரைச் சுற்றிப்பார்க்கவும் கால்நடையாகக் கிளம்பிவிட்டோம்.
இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் – நான் அங்குள்ள சாதி ஒடுக்குமுறைகள் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் பற்றியும் அவர்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது. அவர்களிடம் நம் மாநிலம் பற்றி நிறைய சொன்னேன். பிரதானமாக அவர்களுக்கு இருந்த ஆச்சர்யங்கள் இரண்டு – 1) அது ஏன் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்? 2) அது எப்படி கருணாநிதி ராமரைப் பற்றி இழிவாகப் பேசியும் தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்.. நீண்ட நேரமாக அவர்களுக்கு பெரியார், அவருக்கு முன் இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபுகள் போன்றவற்றை விளக்கினேன். மற்றபடி அங்குள்ள நிலைமைகளை அவர்களிடம் கேட்டறிந்ததனூடாகவும் இந்தப் பயணத்தில் இடையிடையே நிறுத்தி நேரில் கண்டவற்றினூடாகவும் எனக்கு பளிச்சென்று தெரிந்தவொன்று – தமிழ்நாட்டுக்கும் வட நாட்டிற்கும் இருந்த மலையளவிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகள்.
தமிழ்நாட்டில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுகிறார்கள் – இரட்டைக்குவளை முறையை இன்னும் ஒழிக்க முடியாத திராவிட ஆட்சி என்று உண்மைத்தமிழன் வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.. இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடும் செய்திகள் வருவதாலேயே அது நடப்பில் இருப்பது இவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் ஆண்டைகள் தம்மேல் ஏவிவிடும் ஒடுக்குமுறையை கேள்வி வரைமுறையில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதல்ல; அங்குள்ள பொருளாதாரச் சூழல் அவர்களை போராடும் ஒரு நிலைக்கு அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.
தமிழ்நாட்டில் ஒதுகுபுற கிராமங்களில் இருந்து அதிகபட்சம் மூன்று மணிநேர பேருந்துப் பயண தூரத்தில் ஏதேனும் ஒரு சிறு நகரமாவது இருக்கும். பேருந்துக் கட்டணமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு – பேருந்து இணைப்பின் அடர்த்தியும் வடக்கை ஒப்பிடும் போது அதிகம். கிராமப்புறங்களில் நிலத்தின் மேல் தலித்துகளுக்கு பொதுவாக இந்தியா முழுவதிலும் உரிமை கிடையாது. சாதி இந்துக்கள்தான் நிலங்களை வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே கிராமப்புறத்தில் தலித்துகள் கூலிவேலை பார்ப்பவராயும், சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்பவராயும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ( குறிப்பான சில விதிவிலக்குகள் இருக்கலாம்) தலித்துகள் முற்று முழுக்க தமது சோற்றுக்கு கிராமப்புற பண்ணையை நம்பித்தானிருக்க வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு கூலி வேலையாக வரும் தலித்துகள் இயல்பாகவே தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது அங்கு நிலவும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாமல் போராட எத்தனிக்கிறார்கள்.
உதாரணமாக நான் திருப்பூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது பக்கத்தில் ஒரு ஷெட்டில் கோவையின் ஏதோ ஒரு ஒதுக்குப்புற கிராமத்திலிருந்து இங்குள்ள பனியன் பட்டரையில் வேலைக்காக வந்திருந்தவர்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசிப்பார்த்த போது, அங்கே அவர்கள் கிராமத்தில் கவுண்டர்கள் இவர்களை மோசமான முறையில் ஒடுக்கிவந்ததும், இவர்கள் அதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன், அந்த வட்டாரத்திலிருக்கும் கவுண்டர்களெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு தமது நிலத்தில் வேலை தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும், எனவே இவர்கள் வீட்டுக்கொருவராகக் கிளம்பி திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டதாகவும் தெரியவந்தது.
இதில், இங்கும் அவர்கள் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி ஏதாவதொரு ஆதிக்க சாதிக்காரனாகத்தானிருப்பான், ஆனால் – அவர்கள் கிராமத்தில் சந்தித்த ஒடுக்குமுறை பிரதானமாக சாதி ரீதியிலானதும் அதற்கு சற்றும் குறையாத பொருளாதாரச் சுரண்டலும் – இங்கே பொருளாதார ஒடுக்குமுறையே பிரதானமானது; சாதி ரீதியிலான ஒடுக்குமுறையின் கணம் லேசாகக் குறைந்து அது தன் வடிவத்திலிருந்து மாறுபட்டு பொருளார அம்சங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் தமிழ்நாடு திராவிட ஆட்சிகளால் சொர்க்க புரியாகிவிட்டது எனும் அர்த்தத்தில் சொல்லவதாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமாணம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது. இங்கே மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தொழில்நிறுவனங்களில் குறைகூலிக்குச் செல்ல நிலபிரபுத்துவம் நிர்பந்திக்கிறது. மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளும் நிலபிரபுத்துவமும் கைகோர்த்துக் கொள்வது இந்த அம்சத்தில்தான். அமெரிக்கனுக்கு குறைந்த விலையில் டீசர்ட் கிடைக்க ஆலாந்துரையைச் சேர்ந்த கவுண்டனும் ஒரு மறைமுகக் காரணமாகிறான். ஒடுக்குமுறையானது அதன் வடிவத்தில் மாறுபட்டு வருகிறது – ஆனால் ஒடுக்குமுறைக்கான பிரதான காரணமான வளங்களின் மேல் அதிகாரமற்று இருப்பது அப்படியேதான் தொடர்கிறது.
ஆனால் இங்கே வடக்கில் நிலைமை சற்று வேறு விதமானது – சமூக ரீதியாக இன்னமும் மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இங்கே எளிதில் இடம்பெயர நகரங்கள் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. நாங்கள் பயணம் செய்த போது, காலையில் ஒரு நகரத்தைக் கண்டோமென்றால், மாலையில் தான் அடுத்த நகரத்தைப் பார்க்க முடியும். அங்கும் இடம்பெயர்ந்து வருபவருக்கெல்லாம் வேலை கொடுக்குமளவிற்கு தொழிற்சாலைகள் ஏதும் இருக்காது. கிராமத்தில் ஆண்டைகளின் ஒடுக்குமுறையைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து கிடப்பதைத் தாண்டி வேறு வாய்ப்புகள் குறைவு.
இப்போது இதன் பின்னணியில் வடக்கிலும் மத்தியிலும் சிலபகுதிகளில் மாவோயிஸ்டுகள் செலுத்திவரும் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே சாதி ரீதியில் / சமூக ரீதியில் / பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மாவொயிஸ்டுத் தோழர்கள் கம்யூனிஸ்டுகளாய் அல்ல; ஒரு மீட்பராகவோ, ஒரு தேவதூதராகவோதான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமாய் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் கீழ் புழுங்கிச் சாகும் மக்களின் விடுதலையும் கூட அந்தக் குழாயிலிருந்து நெருப்புப் பிழம்பாய்ப் புறப்படும் ஈயக்குண்டுகளின் உள்ளே தான் சூல் கொண்டு இருக்கிறது. மாவொயிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களின் மனங்களில் அசைக்கமுடியாத மாவீர்களாய் (invincible heros) வீற்றிருப்பார்கள் என்பதை மற்ற பகுதிகளில் நான் கண்ட நிலைமை எனக்கு உணர்த்தியது.
அந்த மக்கள் காக்கிச் சீருடையுடனும், கையில் கட்டிய சிவப்புப் பட்டையுடனும், போலீசிடம் இருந்து பறித்த ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும், பாதவுரை அணியாத வெறும் கால்களோடும், பசியில் உள்ளடங்கிய கண்களோடும், மலேரியா காய்ச்சல் மருந்துகளோடும் என்றைக்காவது வந்து சேரப்போகும் மக்கள் விடுதலைப் படையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தில்லியின் நடைபாதையில் தமக்கான இடத்தைத் தேடிக் கிளம்பிவிட வேண்டியது தான் – அங்கே இரத்தத்தை உறையவைக்கும் டிசம்பரின் கருணையற்ற குளிரும் – இரத்தத்தை ஆவியாக்கக் காத்திருக்கும் ஏப்ரல் வெயிலும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது.
கோரக்பூரின் ஒதுக்குப்புற சந்துகளில் நான் சில தாக்கூர்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியோடும் கண்களில் மரண பீதியோடும் வலம் வருவதைக் காண நேர்ந்தது. கிராமப்புறங்களின் அரசு இயந்திரமே இல்லை எனும் நிலையென்றால்; சிறு நகரங்களில் அந்த இயந்திரத்தின் அச்சாக ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். பெரும்பாலும் உழைக்கும் தலித் மக்களுக்காகவென்று பேச பிரதான ஓட்டுக் கட்சிகள் எவையும் கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்திலாவது ஓட்டுப்பொறுக்கிகள் ஏழைக் கிழவிகளைக் கட்டிப்பிடிப்பது போல போஸ் கொடுப்பதும், தலித் காலனிக்குள் வருவதும் என்று ஓட்டுப் பொருக்கவாவது ஸ்டண்ட் அடிப்பார்கள். வடக்கின் நிலைவேறு – நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில்தான் சாதி அரசியலே நடக்கிறது.
அடுத்தநாள் கோரக்பூரிலிருந்து காலை கிளம்பினோம் – அந்த மெக்கானிக் விடியவிடிய வேலை பார்த்திருக்கிறார். நிதானமான வேகத்தில் சென்று மகராஜ்கன்ச் எனும் இடத்தில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து லும்பினி சென்றடைந்தோம். புத்தர் பிறந்த இடம் இது தான். எனக்கு அதில் பெரிய அளவு ஆர்வம் இல்லை – போனது ஊரைச் சுற்ற – ஒரே இடத்தில் தேங்கி நிற்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அயோத்தி நோக்கி கிளம்பினோம். எனக்கு அயோத்தியில் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அங்கே இடிக்கப்பட்ட மசூதியையும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இராமன் கோயிலையும் காணவேண்டும் – முடிந்தால் சில போட்டோ க்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆவல்.
இதை நான் சரவணனிடம் சொல்லப்போக, அவன் பதறிவிட்டான். அது அங்கே கூட்டம் அதிகம் வரும் நாளென்றும், குறிப்பாக பண்டாரங்கள் அதிகமாக வருவார்கள் என்றும், வடநாட்டுச் சாமியார்கள் பொதுவில் காட்டான்களென்றும் சொல்லி பயமுறுத்தவே அந்த திட்டத்தை உடைப்பில் போட்டுவிட்டு நானும் எனது நண்பனும் பேருந்தில் தில்லிக்குக் கிளம்பிவிட்டோம்.
_______________________________
இன்று டிசம்பர் 31. அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே தெருவில் நடக்கும் கும்மாளங்களை வேடிக்கை பார்த்து நிற்கிறேன். சிகரெட்டின் காரமான புகை நுரையீரலெங்கும் பரவி குளிரை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது.. நாளை திரும்பவும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர். இன்னும் இன்னும் இப்படி தில்லிக்கு வந்து குளிரிலும் வெயிலிலும் வதைபட்டுச் சாக எத்தனையோ முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உத்திரபிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து நாளும் நாளும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மாயாவதியின் தங்க நிறச் சிலைகள் சிரித்துக் கொண்டிருந்ததை வரும் வழியில் பல இடங்களில் காண நேர்ந்தது.
அந்தச் சிலைகள் யாரைப் பார்த்து சிரிக்கிறது?
அற்புதமான ஆக்கம், அருமையான பகிர்வு வினவு.
இன்னும் பல நூறு வருடங்களிலும் BIMARU தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை அடைய முடியுமா என்பது சந்தேகமே. பெரியாருக்கு கோடி நன்றிகள்.
100 சதவீதம் உண்மை ! தமிழகம் ஒரு படி தாண்டிவிட்டது !
“தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமாணம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது”
உண்மை
வட மாநிலங்களின் சில்லிட வைக்கும் சாதியக் கொடுங்கோன்மைகளை ஒரு சிறிய பயணத்திலேயே உணரவைத்தமைக்கு நன்றி. தோழர் கார்க்கி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
வட இந்திய கிராமங்களில் சமூகக்கொடுமைகள் ஒப்பீட்டளவில் தமிழகத்தை விட அதிகம் என அறிந்திருந்தாலும், இந்தக்கட்டுரையினை படிக்கும்போது அந்த உண்மை சுடுகிறது.
செங்கொடி
நல்ல கட்டுரை. வட இந்தியாவிற்கும் ஒரு பெரியார் வேண்டும். ஜாதிய கட்டுபாடுகள் தளர்ந்தால்,பொருளாதார முன்னேற்றம் இயல்பாகவே நடக்கும்
வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியுள்ளது உண்மைதான்.அதற்கு ஒரு முக்கிய காரணி மக்கள் தொகைப் பெருக்கம்.விவசாயம் பொய்த்து போய்விடவில்லை.இன்னும் விவசாயம்தான் முக்கிய தொழில்.விவசாயத்தில் இத்தனை பேருக்கு வேலை இருக்கிறதா?.தென்னிந்தியாவில் கேரளம் மானுட வளர்ச்சி குறியீட்டு எண்ணில் முதலில் உள்ளது.அங்கு திராவிட இயக்கம் இருந்ததில்லையே. இடதுசாரிகளும்,காங்கிரசும் அங்கு நவீனமயமாக்கலை முன்னகர்த்தின. இதை ஒப்புக்கொள்வது உங்களுக்கு கடினம் என்றாலும் அதுதான் உண்மை.
’நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில்தான் சாதி அரசியலே நடக்கிறது.’ நில உடமை எந்த சாதிகளிடம் அதிகம் உள்ளது என்பது மாறுபடும், சில இடங்களில் ஜாட்கள், சில இடங்களில் காயஸ்தாக்கள், சில இடங்களில் யாதவ்கள் என்று.தலித்கள் நில உடமையை ஒப்பிட்டால் உ.பியை விட தமிழகம் பின் தங்கியுள்ளது.சந்தன் பிரசாத்தின் கட்டுரைகளை படியுங்கள். தேர்தல் அரசியலில் பழைய காலம் போல் இப்போது இல்லை.உ.பியில் மாயாவதியின் கட்சியின் பலமே தலித்கள்தான். முன்பு போல் அவர்களை நடத்தமுடியாது என்று எல்லோருக்கும் தெரியும்.ஷிவம் விஜ் எழுதியுள்ளதைப் படிக்கவும். ஹரியானா,பஞ்சாப் – இவை BIMARU மாநிலங்களை விட சிலவற்றில் முன்னேறியுள்ளவை,ஆனால் எல்லாவற்றிலும் அல்ல. ஜெயமோகன் போல் crude empricism அதாவது கண்ணால் பார்த்ததை,கேட்டதை வைத்து பில்டப் கொடுத்து எழுதும் போக்கினை தவிர்க்கவும்,அவர் இந்தியாவெங்கும் சுற்றினேன், மக்களிடம் முன்பு போல் உணவுப் பஞ்சம் இல்லை, பட்டினி இல்லை என்று எழுதுவார்.நீங்கள் அதே போல் ஒரு பயணத்தை வைத்துக் கொண்டு இதுதான் உண்மை என்று உரை நிகழ்த்திவிடாதீர்கள் 🙂
நன்றி..
“ஒரு பயணத்தை வைத்துக் கொண்டு இது தான் உண்மை என்று உரை நிகழ்த்திவிடாதீர்கள்” இல்லை அவ்வாறு செய்ய முனைவது நோக்கமாக
இல்லை.
விவசாயம் பிரதானமாகத் தான் இருக்கிறது. ஆனால் பரவலாக விவசாயிகள் அந்தத் தொழிலில் இருந்து விலக்கம் ஆவது (Depesentaization)
நடக்கிறது – இது இந்தியா முழுவதும் நடக்கிறது; மாறி மாறி வரும் பருவ நிலை, அரசு விவசாயத்துக்கு கடன் வழங்குவதும் முதலீடு செய்வதும்
குறைவது, காண்டிராக்ட் விவசாயம் பெருகியிருப்பது, விளைச்சலுக்கு விலைகிடைக்காமல் இருப்பது என்பது போன்ற பிரச்சினைகள் – இதில்
நிலமற்ற கூலி விவசாயிகள் மேல் தான் முதல் தாக்குதல்.
கடந்த மாதத்தில் (அல்லது டிசம்பரில்) தில்லியில் உ.பி / ஹரியான கரும்புவிவசாயிகள் விளைச்சலுக்கு சரியான விலை கேட்டு ஒரு பேரணி
நடத்தி நகரையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்கள். இதில் வேலை கிடைக்காது போகும் கூலி விவசாயிகள் பக்கத்தில் இருக்கும் நகரத்துக்கு
போய் வேறு கூலி வேலை பார்ப்பது என்கிற அம்சத்தில் தமிழகத்துக்கும் வடக்கின் நிலைக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்ட
முனைந்துள்ளேன்.
“கேரளத்தில் நவீனமயமாக்கல்” என்பதை ஒப்புக்கொள்ள உண்மையிலேயே கடினமாகத்தானிருக்கிறது 🙂
உ.பியில் மாயாவது தலித்துகளின் முற்றுமுழுதான பிரதிநிதி அல்ல. அங்கே அவரோடு பிராமனர்கள் இனைந்திருக்கிறார்கள்; மாயாவதியின் அரசியல் முடிவுகளில் அவர்களின் இடையீடு (influence) அதிகம். அவர்கள் அங்கே ஒரு பலமான ஓட்டுவங்கியாக இருக்கிறார்கள் என்பதை கவனத்தில்
கொள்ளவும்.
மற்றபடி தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக இருக்கிறது – வடக்கில் எல்லாம் பிழையாக இருக்கிறது எனும் அர்த்தம் வரும்படிக்கு எழுத வேண்டும்
என்பது எனது முனைப்பு அல்ல.
நவீனமயமாக்கலின் அதே வேளையில் மனிதனையும் அதே போல் நவீனமயமாக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறியதை போல் எந்த ஒரு அரசாங்கமும் தொலைநோக்கு பார்வையில் பார்பதில்லை.அவர்களை பொறுத்தவரை நகரத்தை நவீனபடுதியபிறகு அங்கு இருக்கும் உழைப்பாளிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள். நிலபிரபுக்களின் கொள்கையும் இறுதியில் இங்குதான் வந்து முடிகின்றன இதில் ஜாதி வேற்றுமை இருந்தால் வேலை இன்னும் சுலபம். மகாத்மா என்று அழைக்கப்பட்ட அந்த குறை புத்திக்காரன் அன்று உதித்த (நிலபிரபுக்களாக விரும்பாதவரை அவர்களுடைய நிலங்கள் சீர்திருத்தம் என்கின்ற பெயரில் அரசாங்கத்தால் பறிமுதல் செயபடாது என்று நான் உறுதி அளிக்கிறேன்) வார்தைகளின் பயனை இன்று இந்த துயரை உழைக்கும் வர்க்கம் அனுபவித்து கொண்டு இருக்கிறது
அருமை..
நல்ல இடுகை. நன்றி. ஆந்திரா, கருநாடக்கத்தில் கூட தமிழகம் அளவுக்கு உள்கட்டமைப்பும் சமூக முன்னேற்றமும் இல்லை என்று நண்பர்கள் கூறக் கேள்வி. குறிப்பாக, இலவசக் கல்வி – பொது மருத்துவம் – தொழில் வாய்ப்பு போன்ற துறைகளில்.
?மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர்”உங்களுக்கு செத்துக்கிடந்த முதியவரைப் பற்றியும் இனி சாகப் போகும் முதியவர்களைப் பற்றியும் கவலை. சிலருக்கு அழகு! பற்றியக் கவலை. முதியவருக்காக கவலைப் பட்டால் காமென் வெல்த் போட்டியைக் காண வரும் மேட்டுக்குடியினருக்கு டெல்லியை அழகாக காட்ட முடியுமா! இன்னும் சிலருக்கு அன்னிய செலவானி பற்றிய கவலை. அழகாக இருந்தால்தானே வெளிநாட்டவன் வேலை கொடுப்பான்.மயிறு வெட்டுவது முதல் பாலம் கட்டுவது வரை உழைக்கும் வர்க்கமேயானாலும் அவர்கள் அழகாக இருந்தால்தானே உள்ளுக்குள்ளே அசிங்கத்தையும் வக்கிரத்தையும் மறைத்து வைத்திருக்கும் முதலாளித்துவத்திற்கு அழகு.
//ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. //
அருமையான வரிகள்!
தேவையான கட்டுரை , அச்சுவடிவம் பெற்று அனைவரையும் சென்றைடய வேண்டும்.
தோழர் கார்க்கி உங்களிடம் சில கேள்விகள் இ-மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்,
vitudhalai@gmail.com
வேதனையான கட்டுரை. நான் பார்த்த வரையில் தமிழ் நாடு எவ்வளவோ பரவாயில்லை. நானும் சாதீயக் கொடுமைகளால் ஓரளவிற்கு பாதிக்கப் பட்ட ஒரு victim தான். ஆனால் வட மாநிலங்களை ஒப்பிடும்போது நாங்கள் அடைந்த அவமானங்கள், வேதனைகள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
உங்கள் பயணக்கட்டுரை ஊடாக பல தகவல்களை அறிய முடிகின்றது. சில இடங்களில் வேதனையாக உள்ளது. இவற்றை வாசிக்கும் போது தந்தை பெரியார் மீதான மதிப்பு கூடுகின்றது. ஒரு காலத்தின் அவசியமாக பெரியார் இருந்திருக்கின்றார். பெரியாரின் போராட்டப்பாதைகளை பொதுமடவுடமைக் கொள்கைகளை உள்வாங்கி காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருந்தால் தமிழ்நாடு என்னும் முன்னேறியிருக்கும் ஆனால் குடும்ப அரசியலாகவும் ஏகாதிபத்தியமாகவும் அவரின் வாரிசுகள் மாற்றியிருக்கின்றமை துயரமானது
ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும் இருக்கும் வரை தானே அரசியல்வியாதிகளுக்கு பொழப்பு!
/////முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்டும் உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்////
மிகச் சரியான வரிகள்……… எங்கே ஐயா, பார்பன்யத்திர்க்கும், முதலாளித்துவத்துக்கும் பொட்டவாள் எல்லாம் காணோம்………?????????? !!!!!!!!!!!!!!!!!!!
‘மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்’ – தில்லி அரசு!
‘ராஜ்தாக்கரேயின் வழியில் பிச்சைகாரர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது’
– தில்லி உயர்நீதி மன்றம் கண்டிப்பு.
தலைநகர் தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஜனவரி 2010-ல் துவங்க இருக்கின்றன. இதில் பங்கெடுக்க, பார்க்க-என வெளிநாட்டினர் லட்சகணக்கில் வருகை தருவார்கள். இவ்வேளையில், ஏற்கனவே தலைநகரில் கூட்டம் கூட்டமாய் வாழும் 65000 இந்திய பிச்சைகாரர்கள் வெளிநாட்டினரை தொல்லை படுத்தி, ‘வல்லரசு’ இந்தியாவின் ‘கெத்’-ஐ நாசப்படுத்திவிடுவார்கள் என முடிவெடுத்து, எல்லா பிச்சைகாரர்களையும் சிறையில் தள்ள முயன்றது. (பார்க்க முந்தைய பதிவு : காமென்வெல்த் போட்டியும் இந்திய பிச்சைகாரர்களும்!)
http://socratesjr2007.blogspot.com/2009/11/blog-post.html
”இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசத்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்” நல்ல கட்டுரை இன்னும் இரண்டு உலகத்தவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் எக்கேடு கேட்டல் எனக்கேன்ன நான் நல்ல செகுச இருக்கிறோன் அதுபோதும் என்று வாழும் நான்காம் உலகத்தவர்கள் தூர நோக்க சிந்தனையோடு இவர்கள் படும் கஷ்டங்களை பார்த்து போரட துனிகின்ற அமைதியாக இருந்தால் பின்னாளிள் தனக்கும் இதே நிலைதான் என்று உனர்ந்த 5ந்தாம் உலகத்தவர் இதில் நாம் எந்த உலகத்தவராக இருக்கிறோம் என்பதே விடை கானவேண்டிய கேள்வி?.
வட இந்தியர்கள் அவுஸ்ரேலியா இனவெறி நாடு என்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்தியாவில் தான் இனவெறி, சாதிவெறி அதிகம் இருக்கிறது.
சரியாக சொன்னீர்கள்
[…] […]
சாதிகள் இல்லை என்று சொல்கின்றவர்களுக்கு பதில் சொல்கின்ற படைப்பு.
அருமை..