Sunday, October 13, 2024
முகப்புஉலகம்ஆசியாதங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்....துபாய்!

தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!

-

துபாய்வளால் பேசமுடியவில்லை. தன் கதையைச் சொல்வதற்கு வாய் திறக்கும் போதெல்லாம் அவள் அழுகிறாள். வாழ்ந்து கெட்டவர்களுக்கே உரிய மங்கிப்போன பொலிவு கரேனின் முகத்தில் தெரிகிறது. துபாயின் மிகச்சிறந்த சர்வதேச நட்சத்திர விடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் அவளைப் பார்த்தேன். அங்கிருக்கும் ஒரு கார்தான் பல மாதங்களாக அவளுடைய வீடு. இது சட்டவிரோதம்தான் என்றாலும் அங்கு வேலை செய்யும் வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவளை விரட்டுவதற்கு மனம் வரவில்லை.  தன்னுடைய துபாய் கனவு இங்கே வந்து முடியும் என்று அவளும் நினைத்துப் பார்க்கவில்லை.

கரேன் கனடாவிலிருந்து இங்கு வந்தாள். ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் துபாய் கிளையில் தனக்கு உயர் பதவி கிடைத்திருப்பதாக அவள் கணவன் டானியேல் சொன்னபோது, “அங்கே வந்து பர்தாவெல்லாம் போட முடியாது. மது அருந்தாமல் இருக்கவும் முடியாது” என்று கூறி முதலில் மறுத்தாள் கரேன். பிறகு கணவன் மீது கொண்ட காதலால் வந்து விட்டாள்.

“இது வயது வந்தவர்களுக்கான டிஸ்னிலாந்து. துபாயின் அதிபர் ஷேக் முகமதுதான் இந்த டிஸ்னிலாந்தின் தந்திரக்கார எலி” என்கிறாள் கரேன். “வாழ்க்கை அற்புதமாக இருந்தது. பிரம்மாண்டமான அபார்ட்மென்டுகள், கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள், வரியே கிடையாது, 24 மணி நேரமும் விருந்து கொண்டாட்டம்தான். நாங்கள் துபாயைப் பருகி அதன் போதையில் திளைத்தோம்”

“டானியேல் இரண்டு சொத்துகள் வாங்கினான். நாங்கள் கொஞ்சம் கடனாளி ஆனோம். பண விவகாரங்களில் கறாராக இருப்பவனான டானியேலா கடன் வாங்குகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் ஒரு ஆண்டுக்குப் பின்னர்தான் தெரிந்தது. டானியேலுக்கு மூளையில் கட்டி. ஒரு ஆண்டுதான் உயிர் வாழ முடியும் என்றார் ஒரு டாக்டர்.  இன்னொருவர் எந்தப் பிரச்சினையும் இல்லை, சரியாகிவிடும் என்றார். கடன் வளர்ந்து கொண்டிருந்தது.”

“எனக்கு துபாயின் சட்டங்கள் பற்றி தெரியாது. இந்த ஊரில் கடனை அடைக்க முடியாவிட்டால் சிறைத்தண்டனையாம். இங்கிருந்து உடனே கிளம்பி விடுவோம் என்று நான் டானியேலிடம் கூறினேன். வேலையை ராஜினாமா செய்தால் கிடைக்கக் கூடிய செட்டில்மென்ட் பணத்தை வைத்து கடனை அடைப்பது, உடனே துபாயிலிருந்து கிளம்புவது என்று முடிவெடுத்தோம்.  ஒப்பந்தப்படி தரவேண்டிய தொகையைக் கொடுக்காமல் குறைத்துக் கொடுத்தது நிர்வாகம். கடனை அடைக்க முடியவில்லை. துபாயில் ஒரு ஊழியர் வேலையை ராஜினாமா செய்தால், கம்பெனி நிர்வாகம்அந்த தகவலை உடனே ஊழியரின் வங்கிக்கு தெரிவித்து விடும். கடன் நிலுவை இருந்தால் உங்கள் கணக்கை வங்கி முடக்கி விடும். நீங்கள் நாட்டை விட்டு வெளியே போக முடியாது” அப்புறம் நடந்தது என்ன என்று கரேனால் சொல்ல முடியவில்லை. அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். டானியேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் சிறையில் கரேன் அவனைப் பார்த்திருக்கிறாள். கடனுக்காக கைது செய்யப்பட்ட 27 வயது இலங்கைக்காரனுடன் டானியேல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தானாம். தன் குடும்பத்துக்கு நேரக்கூடிய அவமானத்தை எண்ணி வருந்திய அந்த இளைஞன் இரவில் பிளேடுகளை விழுங்கிவிட்டான். துடித்துக் கொண்டிருந்த அவனைக் காப்பாற்ற டானியேல் சிறைக்கதவை இடித்துக் கத்திக் கதறியும் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. டானியேலின் கண் எதிரிலேயே அந்த இளைஞன் துடித்து அடங்கியிருக்கிறான்.

கரேன் நண்பர்களின் தயவில் கொஞ்ச நாட்களை ஓட்டியிருக்கிறாள். “பிச்சை கேட்டு வாழ்வது அவமானமாக இருந்தது. நான் கனடாவில் சொந்தமாக கடைகள் வைத்திருந்தேன். இப்படி நான் வாழ்ந்ததில்லை” என்று உடைந்து அழுதாள் கரேன். டானியேலுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை. நீதிமன்ற விசாரணை எல்லாம் அரபி மொழியில்தான். ஒன்றும் புரியவில்லை. “என்னிடம் பணம் இல்லை. எதுவும் இல்லை. நான் இப்போது துபாயில் இருப்பதே சட்டவிரோதமாகத்தான். டானியேல் வெளியில் வரும்வரை காலம் தள்ளவேண்டும். எப்படியாவது” என் முகத்தைப் பார்க்கக் கூசி எங்கேயோ வெறித்தபடி, “ஒரு சாப்பாடு வாங்கித் தருவீர்களா?” என்று கேட்கிறாள் கரேன்.

துபாய் எங்கும் அவளைப் போல ஏகப்பட்ட வெளிநாட்டவர்கள். விமான நிலையங்களிலும், கார்களிலும் இரவு நேரத்தைக் கழிக்கின்றனர். இவர்கள் எல்லாம் சட்டவிரோதமாக இங்கே இருக்கிறார்கள்.

“துபாயைப் பற்றி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு நகரமே அல்ல. செப்பிடு வித்தை. இதனை நவீன உலகமாக காட்டிக் கவர்ந்திழுக்கிறார்கள். அது வெறும் மேல் பூச்சு.  அடியில் இருப்பது மத்தியகாலக் கொடுங்கோன்மை” என்கிறாள் கரேன்.

 •• ••

துபாய்
பாலைவனத்தில் திறந்தவெளி சொர்க்கம் - கண்ணுக்குத் தெரியாத நரகம்

முப்பது ஆண்டுகளுக்கு முன் இன்றைய துபாய் கள்ளிச்செடிகளும் தேள்களும் மட்டுமே நிறைந்திருந்த ஒரு பாலைவனம். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் முத்துக் குளிப்பதற்காக பாரசீகம், இந்தியா மற்றும் அரேபிய நாடுகளிலிருந்து பலர் இங்கே குடியேறினார்கள். தன் கண் முன் உள்ள அனைத்தையும் தின்றுவிடும் தபா என்றொரு ஒருவகை வெட்டுக்கிளியின் பெயரை இந்த ஊருக்கு அவர்கள் வைத்தார்கள். தபா, துபாய் ஆனது. 1971 இல்தான் பிரிட்டிஷ்காரர்கள் துபாயிலிருந்து வெளியேறினார்கள். அபுதாபியை ஒப்பிடும்போது துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. எனவே, துபாயின் ஷேக்கான மக்தூம், இந்த ஊரை வரி என்பதே இல்லாத நாடாக, சர்வதேச நிதிச்சூதாட்டம் மற்றும் சுற்றுலா  மையமாக மாற்றுவதென முடிவு செய்தார். உலகெங்கிலுமிருந்து கொட்டியது பணம். மக்கள் தொகையில் 95% வெளிநாட்டுக்காரர்கள். வானத்திலிருந்து திடீரென்று ஒரு நகரம் இந்தப் பாலைவனத்தின் மீது விழுந்ததைப் போல, முப்பதே ஆண்டுகளில் உருவாகிவிட்டது துபாய். ஒரே ஒரு தலைமுறைக்காலத்தில் அந்த மண்ணின் மைந்தர்கள் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுக்குள் தூக்கி வீசப்பட்டார்கள்.

துபாயை பேருந்தில் சுற்றிப்பார்க்க நீங்கள் கிளம்பினால், அதிலிருக்கும் சுற்றுலா  வழிகாட்டி, மிகவும் நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட குரலில் சொல்வார், “துபாயின் கொள்கை திறந்த கதவுகள், திறந்த மனம். இங்கே உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு-விரும்பிய துணிகளை வாங்கலாம்”. பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒவ்வொன்றாக நீங்கள் கடக்கும்போது, “இது உலக வர்த்தக மையக் கட்டிடம். இதையும் மாட்சிமை தங்கிய மன்னர்தான் கட்டினார்” என்கிறார் வழிகாட்டி. அது பொய். துபாயைக் கட்டியவர்கள் அடிமைகள்.  அவர்கள் இன்னும் இன்னும் அதைக் கட்டியபடியே இருக்கிறார்கள்.

ஒரு துபாய்க்குள் மூன்று வெவ்வேறு துபாய்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. கரேனைப் போன்ற வெளிநாட்டவர்கள், ஷேக் முகமதுவின் குடிமக்களான எமிரேட்டின் மைந்தர்கள், அப்புறம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர். இந்த நகரத்தைக் கட்டி எழுப்பிவிட்டு அதிலிருந்து வெளியேற வழிதெரியாமல் தவிப்பவர்கள்.

அன்றாடம் மாலைநேரத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை துபாய் நகரத்திலிருந்து அள்ளிச்சென்று, நகரத்துக்கு வெளியில் இருக்கும் கண் மறைவான ஒரு கான்கிரீட் பொட்டலில் கொட்டுகின்றன பேருந்துகள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள் ஒட்டக வண்டியில்தான் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தக் காட்சி கண்ணுக்கு உறுத்தலாக இருப்பதாக மேற்கத்திய கனவான்கள் சிலர் தெரிவித்ததால், பேருந்துகள் என்று அழைக்கப்படும் தகரக் கூண்டுகள் இப்பாலைவனத்தில் தொழிலாளிகளை அவித்துச் செல்கின்றன.

மைல் கணக்கில் கற்குவியல்களைப் போலச் சிதறிக் கிடக்கும் ஒரே மாதிரியான இந்தக் கான்கிரீட் கட்டிடங்களில் 3 இலட்சம் மனிதர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பெயர் சோனாப்பூர். அதாவது தங்க நகரம். உள்ளே கால் வைத்தவுடன் கழிவுநீரும் வியர்வையும் நாசியைப் பிளக்கின்றன. தங்கள் துயரத்தை யாரிடமாவது சொல்லத் துடிக்கும் ஒரு கூட்டம் உங்களை மொய்த்துக் கொள்கிறது.

சாஹினால் மொனிர் வங்கதேசத்தின் கங்கைச் சமவெளியிலிருந்து இங்கு வந்திருக்கும் 24 வயது இளைஞன். “உங்களை இங்கே கொண்டு வந்து தள்ளுவதற்காக துபாய் ஒரு சொர்க்கம் என்பார்கள். வந்து இறங்கிய பிறகுதான் புரியும். இது நரகம். “மாதம் 40,000 டாகா (வங்கதேச நாணயம்)சம்பளம்; 9 முதல் 5 வரை வேலை. நல்ல சாப்பாடு, தங்குமிடம். விசா எடுப்பதற்கு 2,20,000 டாகா செலவழித்தால் போதும். ஆறு மாத சம்பளத்தில் அந்தக் கடனை அடைத்து விடலாம்” என்றார்கள். இந்த சொர்க்கத்துக்கு வருவதற்காக பரம்பரை நிலத்தை விற்று, கந்து வட்டிக்கு கடனும் வாங்கினான் சாஹினால்.

துபாயில் வந்து இறங்கியதுமே பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டார்கள் கம்பெனிக்காரர்கள். ஐந்து நிமிடம் கூட வெயிலில் நிற்காதீர்களென்று மேல்நாட்டு சுற்றுலா பயணிகள் அக்கறையுடன் அறிவுருத்தப்படும் அந்த 55 டிகிரி வெயிலில், “14 மணிநேரம் கட்டிட வேலை. 9000 டாகா சம்பளம். பிடிக்கவில்லையா, இப்படியே திரும்பிப் போய்விடலாம்” என்று கறார் குரலில் சொன்னார்கள். “பாஸ்போர்ட் உங்களிடம் இருக்கிறது. என்னிடம் பணமும் இல்லை. நான் எப்படிப் போகமுடியும்?”

“நல்லது. அப்படியானால் வேலைக்கு கிளம்பு”

சாஹினால் பீதியடைந்தான். அவன் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் அனைவரும் பையன் துபாய் போன சந்தோசத்தில் இருப்பார்கள். பணத்தை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அவன் வாங்கிய கடனை அடைப்பதற்கே 2 வருசம் வேலை செய்யவேண்டும். சம்பளமோ ஊரில் அவன் சம்பாதித்ததை விடக் குறைவு.

அவன் தன்னுடைய அறையைக் காட்டினான். அது ஒரு கான்கிரீட் பொந்து. உள்ளே ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றடுக்கு படுக்கைகள். 11 பேர் அந்த அறையில். அறை நாறுகிறது. அந்தக் குடியிருப்பின் கழிவறைப் பொந்துகள் நிரம்பி ஈக்கள் மொய்க்கின்றன. அறையில் மின்விசிறி கூட இல்லை. “தூங்க முடியாது. இரவு முழுவதும் புழுக்கம். சூடு தாங்க முடியாவிட்டால் தரையில் படுப்போம், கூரை மேல் படுப்போம், எங்கு வேண்டுமானாலும் படுப்போம், கொஞ்சம் காற்றுக்காக.

கடல்நீரிலிருந்து தயாரிக்கப்படும் குடிநீர் வெள்ளை கேன்களில் வரும். சரியாக சுத்திகரிக்கப்படாத அந்த உப்புத் தண்ணீர்தான் குடிப்பதற்கு. தேடினாலும் வேறு தண்ணீர் கிடையாது.

துபாய்
55 டிகிரி வெப்பத்தில் வேலை; குடியிருப்பது பாலைவனப் பொந்தில்; தொழிலாளியா-அடிமையா?

வேலை? “கொடும் வெயிலில் 50 கிலோ செங்கல் அல்லது சிமென்டை சுமக்க வேண்டும்.  அந்த சூடு இருக்கிறதே, நாள் கணக்கில் அல்ல, வாரக்கணக்கில் சிறுநீரே வராது. உடம்பில் உள்ள தண்ணீர் எல்லாம் வியர்த்து வெளியேறி உடம்பு நாறும்.தலை சுற்றும். மேலேயிருந்து விழுந்தால் செத்து விடுவோம் என்று தெரியும். ஆனால் நிறுத்த முடியாது. நிறுத்தினால் சம்பள வெட்டு. இன்னும் அதிக காலம் இங்கே உழல வேண்டிவரும்.”

பளபளக்கும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 67 வது மாடியில் சாஹினால் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறான். அடுத்த மாடி, அடுத்த மாடி என்று, வானத்திற்குள், வெம்மைக்குள் அவன் கட்டிக் கொண்டே போவான். அந்தக் கட்டிடத்தின் பெயர் அவனுக்குத் தெரியாது. சாஹினால் வந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை அவன் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமான அந்த பளபளக்கும் துபாயைப் பார்த்ததில்லை. இருப்பினும் அதன் ஒவ்வொரு தளத்தையும் அவன்தான் கட்டியெழுப்புகிறான்.

அவனுக்கு கோபம் வரவில்லையா? “இங்கே யாரும் கோபத்தைக் காட்டுவதில்லை; முடியாது. போன வருடம், சில தொழிலாளர்கள் தங்களுக்கு 4 மாதமாக சம்பளம் தரவில்லை என்று வேலைநிறுத்தம் செய்தார்கள். அவர்களுடைய குடியிருப்பை சுற்றி முள்கம்பி வேலி போட்டு, போலீசு வளைத்துக் கொண்டது. தண்ணீர் பீரங்கியால் தாக்கி வேலைக்குத் துரத்தினார்கள். தலைமை தாங்கியவர்களுக்கு சிறைத் தண்டனை.

“ஏன் வந்தோம் என்று வருத்தப்படுகிறாயா சோஹினால்?”  எல்லோரும் தலை குனிந்தார்கள். “அதையெல்லாம் நினைக்க முடியுமா? வருத்தப்பட ஆரம்பித்தால்..” அந்த வாக்கியம் மவுனத்தில் முடிகிறது. இன்னொரு தொழிலாளி அந்த மவுனத்தைக் கலைக்கிறான். “என்னுடைய மண்ணை, குடும்பத்தை இழந்து விட்டேன். ஊரில் விவசாயம் செய்வோம். இங்கே எதுவும் முளைக்காது. எண்ணையும் கட்டிடங்களும் மட்டும்தான்.

பொருளாதார மந்தம் பரவத் தொடங்கியதும் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். பல கம்பெனிகள் அவர்களுடைய பாஸ்போர்ட்டையும் சம்பளத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். “இருந்தாலும் வங்கதேசத்துக்குத் திரும்பிப் போக முடியாது. அங்கே கந்துவட்டிக் காரன் காத்திருப்பான்.”

சம்பளம் கொடுக்காதது, பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொள்வது எல்லாம் சட்டவிரோதம்தான். ஆனால் துபாய் அரசின் ஒத்துழைப்போடுதான் எல்லாம் நடக்கிறது. சாஹினால் இங்கேயே செத்துப் போகலாம். தொழிலாளர் குடியிருப்புகளிலும், கட்டுமானப் பணி நடக்கும் இடங்களிலும் ஏராளமான தற்கொலைகள் நடப்பதாகவும், ஆனால் அவை விபத்துகள் என்று சித்தரிக்கப்படுவதாகவும், கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். வெப்பத்தினாலும், மிதமிஞ்சிய உழைப்பினாலும், தற்கொலைகளாலும் இறப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதை ஒரு மனித உரிமை அமைப்பு அம்பலமாக்கியது. 2005 ஆம் ஆண்டில் மட்டும் 971 இந்தியர்கள் துபாயில் இறந்துபோனதாக, இந்திய தூதரகமே கணக்கிட்டிருந்தது வெளியில் தெரிந்துவிட்டது. உடனே, ‘சாவுக்கணக்கு வைக்க வேண்டாம்’ என்று தூதரகங்கள் அறிவுருத்தப்பட்டுவிட்டன.

இரவு நான் சோஹினாலுடன் உட்கார்ந்திருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து கையில் உள்ள காசை சேர்த்து மலிவான ஒரு சாராயத்தை வாங்கி வந்து ஒரே மடக்கில் வெறி பிடித்தாற்போல விழுங்குகிறார்கள். மரத்துப் போக இதுதான் வழி என்கிறான் சோஹினால். தொலைதூர அடிவானில் அவன் கட்டியெழுப்பிய துபாய் மறந்தாற்போல் நின்று மின்னிக் கொண்டிருக்கிறது.

 •• ••

துபாய்
அமெரிக்க முதலாளிகளுடன் துபாயை ஆளும் ஷேக்குகள்! அடிமைகளை அழித்து எழுந்த அரசன் !!

சோஹினாலிடமிருந்து விடை பெற்று பத்து நிமிட கார் பயணத்தில் துபாயின் பிரம்மாண்டமான பளிங்கு மாளிகை ஒன்றில் நுழைந்து விட்டேன். அங்கிருந்து இங்கே – பிரமிப்பாகவும் தடுமாற்றமாகவும் இருக்கிறது. இங்கே தெருவுக்கு தெரு ஒரு மால். நுகர்வியத்தின் தேவாலயங்கள் பொழிகின்ற இந்தக் குளிரூட்டப்பட்ட  அருளில் வாடிக்கையாளர்கள் நனைகிறார்கள். சலிப்படைந்த ஒரு விற்பனைப் பெண் ஒன்றரை இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு ஆடையைக் காண்பித்து அதன் அருமை பெருமைகளை அலுப்பான குரலில் எனக்கு ஒப்பிக்கிறாள். இந்த அங்காடிகளில் காலம் நகர மறுக்கிறது. அதன் மின்விளக்குளின் ஒளியில், தரைகளின் பளபளப்பில் நாட்கள் அடையாளமிழந்து மங்குகின்றன.

குட்டைக் காற்சட்டை அணிந்த ஒரு 17 வயது டச்சுப் பெண்,  தன்னை மொய்க்கும் கண்களைக் கண்டு கொள்ளாமல் அங்கே திரிந்து கொண்டிருந்தாள். “இந்த சூடு, இந்த மால்கள், இந்த கடற்கரை! ஓ, நான் துபாயை காதலிக்கிறேன்!” என்றாள் அவள். “இது ஒரு அடிமைச் சமுதாயம் என்பது பற்றி உனக்கு அக்கறையில்லையா?” என்றேன்.

சோஹினாலைப் போல, இவளும் தலை குனிந்தாள். “அதையெல்லாம் பார்க்காமலிருக்க முயற்சிக்கிறேன்” என்றாள். எதார்த்தத்தை பார்க்காமலும் கேள்வி கேட்காமலும் இருப்பதற்கு இந்தப் பெண் 17 வயதிலேயே கற்றுக் கொண்டுவிட்டாள்.  அதெல்லாம் ரொம்பவும் வரம்பு மீறிய செயல்கள் என்று அவளுக்குப் புரிந்திருக்கிறது போலும்.

வெளிநாட்டவரையும் அடிமை வர்க்கத்தினரையும் அணுகுவது போல, எமிரேட்டின் குடிமக்களை அணுகி கேள்வி கேட்க முடியவில்லை. “உங்கள் நாடே வெளிநாட்டவர்களால் நிரம்பி வழிவது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?” கேட்டால் பெண்கள் வெறிக்கிறார்கள். ஆண்கள் அவமதிக்கப்பட்டது போல ஒரு பார்வை பார்க்கிறார்கள். எனவே வலைத்தளங்களைப் படித்துப் பார்த்து துபாயின் ஒரு இளைஞனைத் தெரிவு செய்து சந்தித்தேன். வேறெங்கே ஒரு மாலில்தான்.

அகமது அல் அதார். 23 வயது இளைஞன். நேர்த்தியாக கத்தரிக்கப்பட்ட தாடி, கச்சிதமான வெள்ளை அங்கி, விலை உயர்ந்த கண்ணாடி. லண்டன், லாஸ் எஞ்சல்ஸ், பாரிஸைப் பற்றி  மேலை நாட்டவரைக் காட்டிலும் தனக்கு நன்றாகத் தெரியும் என்பதை சுத்தமானஅமெரிக்க ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார். “இளைஞனாக இருப்பதற்கு உலகிலேயே சிறந்த இடம் இதுதான். பி.எச்டி வரையில் படிப்பதென்றாலும் அரசாங்கம் பணம் கொடுக்கிறது. திருமணமானால் இலவச வீடு. இலவச மருத்துவம் – இங்கே வேண்டாமென்றால் வெளிநாட்டு மருத்துவமனையில். தொலைபேசி இலவசம். அநேகமாக எல்லோருக்கும் ஒரு வேலைக்காரி, ஒரு தாதி, ஒரு ஓட்டுனர். வரி என்பதே கிடையாது. துபாயில் பிறந்திருக்கக்கூடாதா என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?”

இந்த துதிபாடல் மீது கேள்வி எழுப்ப நான் முயன்றவுடனே அவன் சொன்னான்,    “இதோ பாருங்கள். என்னுடைய தாத்தா அன்றாடம் காலையில் கண்விழித்தவுடன் கிணற்றுக்கு ஓடுவார். தண்ணீருக்காக அவர் சண்டை போடவேண்டும். கிணறுகள் வற்றி விட்டால் ஒட்டகத்தின் மூலம்தான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். நிரந்தரமாக பசி, தாகம், வேலையின்மை. என் தாத்தாவுக்கு கால் எலும்பு உடைந்தது. மருத்துவம் கிடையாது. ஆயுள் முழுதும் நொண்டிக்கொண்டிருந்தார். இப்போது எங்களைப் பாருங்கள்!”

அவர்களைப் பொருத்தவரை அரசாங்கம் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா. அது எப்படியோ பணம் பண்ணுகிறது. ஆனால் இவர்களுக்கு வாரிக்கொடுக்கிறது. ஆனால் எல்லா இளைஞர்களும் அகமதுவைப் போலத்தான் சிந்திக்கிறார்களா? பத்திரிகையாளரும் சீர்திருத்தவாதி என்று அறியப்படுபவருமான 31 வயது சுல்தான் அல் குசேமியை சந்தித்தேன். மேற்கத்திய உடை அணிந்திருந்தார். அதி வேகமாகப் பொரிந்து தள்ளினார்.“மக்கள் சோம்பேறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அப்பாவால் பெத்த பிள்ளைகளைக் கூட வளர்க்க முடியாதா என்ன? அரசாங்கம் ரொம்பவும் தான் சீராட்டுகிறது” என்று சீறினார்.

துபாய்
அடிமைகள் உழைப்பில் அதிசயங்கள் - துபாயின் செயற்கை தீவுகள்

ஆனால் அடிமை உழைப்புதான் துபாயை உருவாக்கியிருக்கிறது என்ற விசயத்தை நான் பேசத்தொடங்கியதுமே அவர் ஆத்திரப்பட்டார். “அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். உலகத்திலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மக்கள் நாங்கள்தான். இங்கே வருபவர்கள் எல்லோரும் மரியாதையாகத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்றார்.

சோனாப்பூர் என்றொரு இடம் இருப்பதாவது அவருக்குத் தெரியுமா? மெல்லக் கேட்டேன். அவர் ஆத்திரத்தில் வெடித்தார். “நியூயார்க்கில் மெக்சிகோகாரர்கள் மோசமாக நடத்தப்படவில்லையா? மக்களை கவுரவமாக நடத்தவேண்டும் என்று புரிந்து கொள்வதற்கே பிரிட்டனுக்கு எத்தனை காலம் பிடித்தது? நானும் லண்டனுக்கு வந்து ஆக்ஸ்போர்டு வீதியில் இருக்கும் வீடற்றவர்களைப் பற்றி எழுதி, ஒரு மோசமான நகரமாக அதை சித்தரிக்க முடியாதா? பிடிக்கவில்லை என்றால் தொழிலாளிகள் போகலாம். இந்தியனோ, ஆசியனோ.. பிடிக்கவில்லை என்றால் கிளம்பட்டுமே.”

“கிளம்பமுடியாதே. அவர்களுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்திருக்கிறார்கள். சம்பளமும் கொடுப்பதில்லை” என்றேன். உடனே “அப்படி நடந்திருந்தால் அது தவறுதான். யாராயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.

“நீங்கள் ஏன் தொழிலாளிகளின் வேலைநிறுத்த உரிமையைப் பறித்து அவர்கள் மீது வன்முறையை ஏவுகிறீர்கள்?” என்றேன். “கடவுளே, வேலை நிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்கவே முடியாது. அது பெரிய அசௌகரியம். வேலையை நிறுத்தி விட்டு தெருவுக்கு வருவார்கள். நாங்கள் பிரான்சு மாதிரி ஆவதை அனுமதிக்க முடியாது.” என்றார்.

“அப்படியானால் ஏமாற்றப்பட்ட தொழிலாளிகள் என்னதான் செய்வது?” என்று கேட்டேன். “நாட்டை விட்டுப் போகட்டும்” என்றார். நான் பெருமூச்சு விட்டேன்.   “மேலை நாட்டுக்காரர்களுக்கு எங்களைக் குறை சொல்வதே வேலையாகிருக்கிறது” என்று அலுத்துக் கொண்ட சுல்தான், தன் குரலை கீச்சுக்குரலாக மாற்றிக் கொண்டு, “மிருகங்களை நல்லபடியாக நடத்தமாட்டீர்களா?” “உங்கள் ஷாம்பூ விளம்பரத்தை கொஞ்சம் தரமாக செய்யக்கூடாதா?” “தொழிலாளிகளை கவுரவமாக நடத்தக்கூடாதா?” என்று கிண்டலாகப் பேசிக்காட்டினார்.

விலங்குகள், ஷாம்பூ விளம்பரம் அப்புறம் தொழிலாளிகள்! இந்த வரிசைக் கிரமத்தின் அமைப்பே உண்மையை எடுத்தியம்புகிறது.

“மேற்குலக பத்திரிகையாளர்கள் எங்களை விமரிசிப்பதன் மூலம், தங்கள் பாதங்களையே சுட்டுக் கொள்கிறார்கள்” என்று கூறி புன்னகைத்தார் சுல்தான்.  “துபாய் தோற்றுவிட்டால், மத்திய கிழக்கு மிகவும் அபாயகரமான பகுதியாக மாறும். ஒரு நவீன முஸ்லிம் நாடாக இருப்பது எப்படி என்பதை நாங்கள் காட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தோற்றால் துபாய் இரானின் வழியில் இசுலாமியப் பாதையில் சென்றுவிடும்”என்றார்.

 •• ••

புள் டெக்கர். இது பிரிட்டனிலிருந்து குடியேறியவர்கள் கூடும் ஓட்டல். “துபாயின் வாழ்க்கை முறைக்காகத்தான் இங்கே தங்குகிறோம்” என்று எல்லோரும் கூறுகிறார்கள். “அதென்ன வாழ்க்கை முறை?” என்று கேட்டால் பலருக்கு விளக்கத் தெரியவில்லை. ஆன் வார்க் என்ற பெண்மணி அதை விளக்குகிறார். “ அன்றாடம் இரவு இங்கே கேளிக்கைதான். நம் ஊரில் அப்படி கிடையாது. நிறைய ஓய்வு நேரம் இருக்கிறது. பணிப்பெண்களும் ஆட்களும் இருப்பதால் நமக்கு வேலை இல்லை. எப்போதும் பார்ட்டிதான்”

இருந்தாலும் துபாயில் அவர்களுக்கு ஏமாற்றமும் உண்டு. “இங்கே விபத்து கேசில் சிக்கிவிட்டால் அப்பப்பா பயங்கரம். ஒரு பிரிட்டிஷ் பெண் எவனோ ஒரு இந்தியன்மீது காரை ஏற்றிவிட்டாள். அதற்காக 4 நாள் அவளை லாக் அப்பில் வைத்து விட்டார்கள். இந்த இந்தியர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமென்றே காரில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். செத்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பணம் கிடைக்குமே அதற்குத்தான். ஆனால் போலீசு நம்மைத்தான் குற்றம் சொல்லும். பாவம் அந்தப் பெண்!” என்றாள் ஜூலிஸ் டெய்லர்.

“அதெல்லாம் இருக்கட்டும். ஜனநாயகமே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். சிலர் என்னை விநோதமாகக் கருதிப் பார்த்தார்கள். சிலர் தம்மை அவமானப் படுத்தியதாக கருதினார்கள். “இது அரேபியக் கலாச்சாரம்” என்று கத்தினான் ஒரு இளைஞன்.

பிறகு அழகு சாதனத் துறையில் வேலை செய்யும் ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். “சொந்த ஊரில் விலைபோகாதவன் எல்லாம் இங்கே வந்து சேர்கிறார்கள். தங்கள் தகுதிக்கு மீறிய உயர் பதவி, பணத்தில் திடீரென்று குளிப்பதால், தங்கள் தனித்திறமை பற்றி பினாத்துகிறார்கள். எதற்கும் லாயக்கில்லாத மனிதர்கள் உயர்பதவிகளில் நிறைந்திருப்பதை உலகில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. இங்கே ஐரோப்பியப் பெண்கள் செய்யும் அதே வேலையை பிலிப்பைன்ஸ் பெண்கள் செய்கிறார்கள் – ஆனால் அவர்களுக்கு கால் பங்கு சம்பளம்தான். பச்சையான நிறவெறி!” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

இந்தப் பெண் மட்டும் ஒரு விதிவிலக்கு. மற்றப்படி இங்கே மேல்நாட்டினர் அனைவரும் கருத்தொருமிக்கும் ஒரே விசயம் – பணிப்பெண்கள். நீங்கள் இங்கே ஒருபெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டுவிட்டால்,  அவள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டுவிடலாம். அதுதான் இங்கே மரபு. பிறகு அவளுக்கு என்ன வேலை, எப்போது ஓய்வு, எப்போது சம்பளம், அவள் யாருடன் பேசலாம், பேசக்கூடாது என்று அனைத்தையும் நீங்கள் முடிவு செய்யலாம்.

துபாய்
பகலிலும் இருண்டு போன அடிமைகளின் வாழக்கை மீது ஒளிமையாமான துபாயின் இரவு வாழ்க்கை

ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு சுற்றுலாப்பயணி சொன்னாள். “மால்களில் நடமாடுவதற்கே பயமாக இருக்கிறது. என்னைப் பார்த்தவுடன் பல பணிப்பெண்கள் ஓடி வருகிறார்கள். ‘காப்பாற்றுங்கள். என்னைக் கைதியாக வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு போன் பேச விடுவதில்லை. ஓய்வு நாளே இல்லை’ என்று கதறுகிறார்கள்.  ‘அப்படியா, தூதரகத்துக்கு தெரிவிக்கிறேன். எங்கே வேலை பார்க்கிறீர்கள். அந்த வீட்டின் முகவரியைச் சொல்லுங்கள்’ என்று கேட்டால் அவர்கள் யாருக்கும் முகவரி தெரிவதில்லை. தூதரகமோ இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. என்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை!” என்றாள்.

துபாயில் பெண்களுக்காக ஒரேயொரு விடுதிதான் இருக்கிறது. அதில் இருப்பவர்கள் அனைவரும் தப்பித்து வந்த பணிப்பெண்கள். மேலா மாதாரி என்ற எத்தியோப்பியப் பெண் தன் கதையை சொல்கிறாள். இது சொர்க்கம் என்று நம்பித்தான் 4 வயது மகளை ஊரில் விட்டு விட்டு அவள் இங்கே வந்திருக்கிறாள். நான்கு குழந்தைகள் கொண்ட ஒரு ஆஸ்திரேலிய குடும்பத்தில் வேலை. சொன்ன சம்பளத்தில் பாதிதான் கொடுத்தார்கள். அன்றாடம் 19 மணிநேர வேலை. விடுமுறை கேட்டதற்காக வீட்டு எசமானி அடித்திருக்கிறாள். இரண்டு வருட ஒப்பந்தம் முடியும்போதுதான் சம்பளம் தருவேன் என்கிறாள் எசமானி. ஒரு நாள் அடி பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு தப்பித்து வந்து எத்தியோப்பிய தூதரகத்தை தேடி இரண்டு நாட்கள் நடந்திருக்கிறாள். அவர்களோ பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வந்தால்தான் உன்னை ஊருக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள். “நாட்டை இழந்தேன். மகளை இழந்தேன். எல்லாவற்றையும் இழந்து விட்டேன்” என்கிறாள் மேலா.

“துபாயில் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்ன?” என்று டபுள் டெக்கர் ஓட்டலில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணிடம் கேட்டேன். “வேலைக்காரர்கள்” என்று அவள் கூவிய குரல் என் காதிலேயே இருக்கிறது. “நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களோ உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள்”

  •• ••

துபாய் முழுவதும் பல கிறுக்குத்தனமான திட்டங்கள் பொருளாதர மந்தத்தின் காரணமாகப் பாதியில் தொங்குகின்றன.  குளிரூட்டப்பட்ட கடற்கரை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கடல் மணலுக்கு அடியில் குளிரூட்டும் குழாய்கள். தண்ணீரில் கால் வைப்பதற்கு முன் பணக்காரர்களின் பாதங்கள் பொசுங்கிவிடக்கூடாதல்லவா – அதற்காக.

அட்லான்டிஸ் – செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு  தீவில் 1500 அறைகள் கொண்ட உல்லாச விடுதி. தென் ஆப்பிரிக்கப் பெண் எனக்கு விடுதியை சுற்றிக் காட்டுகிறாள். நெப்டியூன். இது 3 மாடிகள் கொண்ட ஒரு அறை. அறையின் கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே கடல்.  கட்டிலில் படுத்தால் கண்ணாடிக்கு அந்தப்புறத்திலிருந்து சுறாமீன்கள் உங்களை வெறிக்கும். இதுதான் உலகின் அதி உயர் ஆடம்பரம். அந்த ஓட்டலின் உணவு மேசையில் நான். என்னைத்தவிர ஒரு நாதியில்லை. பொருளாதார மந்தம். ஓட்டலே காலியாக இருக்கிறது. அட்லான்டிஸ் அழிந்து போன கண்டமல்லவா?

துபாயின் பெருமிதம் என்று கூறப்படும் புர்ஜ் அல ஆரப் விடுதி. லண்டனிலிருந்து வந்திருந்த ஒரு ஜோடியிடம் பேச்சுக்கொடுத்தேன். பத்து ஆண்டுகளாக வருகிறோம். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு மாற்றம் இருக்கும். வழக்கமாக நாங்கள் தங்கும் அறையின் சன்னலுக்கு வெளியே போன வருடம் கடல் இருந்தது. இந்த வருடம் அந்த இடத்தில் ஒரு தீவையே உருவாக்கி விட்டார்கள்.”

எங்கும் நிறைந்திருக்கும் வேலைக்கார அடிமைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். “அதற்காகத்தானே வருகிறோம். அற்புதம்! உங்களுக்காக உங்களை கையால் எந்த வேலையையும் நீங்கள் செய்ய முடியாது” என்றாள் மனைவி. கணவன் தொடர்ந்தான், “குளியலறைக்குப் போனால் கதவைத் திறந்து விடுகிறார்கள். குழாயையும் திறந்து விடுகிறார்கள். அதற்கப்புறம் உங்கள் முயற்சியில்தான் சிறுநீர் கழிக்கவேண்டும். அதற்கு அவர்கள் உதவ முடியாது”  சொல்லிவிட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

  •• ••

ங்கே நிலத்தடி நீர் கிடையாது. இருப்பது மிகவும் சொற்பம். துபாய் கடலைக் குடிக்கிறது. கடல்நீரை சுத்திகரித்துக் குடிநீராக்கும் நிலையங்கள் வளைகுடாவெங்கும் இருக்கின்றன. உலகிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர். பெட்ரோலைச் சுத்திகரித்து எடுப்பதைக் காட்டிலும் தண்ணீரை சுத்திகரிக்கும் செலவு இங்கே அதிகம். பொருளாதார நெருக்கடி முற்ற முற்ற இங்கே தண்ணீரும் வற்றத் தொடங்கும். ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே துபாயின் கையிருப்பு. ஏதாவது காரணத்தால் சுத்திகரிப்பு நின்றாலோ அல்லது எண்ணெய்க்கு மாற்றாக வேறொரு எரிபொருளை உலகம் கண்டுகொண்டாலோ .. அவ்வளவுதான்.

“இது பாலைவனம். அதன் சூழலை மறுக்க நாம் முயற்சிக்கிறோம். பாலைவனத்துடன் மோதினால் நாம் தோற்றுவிடுவோம்” என்கிறார் வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் இயக்குநர் முகமது ரவூப்.

“துபாயில் எல்லாமே பொய். காண்பதனைத்தும் பொய். மரங்கள் பொய், தொழிலாளிகளின் ஒப்பந்தங்கள் பொய், தீவுகள் பொய், புன்னகைகள் பொய், இந்தத் தண்ணீரும் பொய். ஆனால் நான் இங்கே சிக்கிவிட்டேன்” என்று சொல்லிப் பெருமூச்செறிந்து விட்டு  தொடர்கிறாள் வரவேற்பறையில் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண், “துபாய் ஒரு பாலைவனக் கானல்நீர். அது ஒரு மாயை. தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் தெரியும். தாகத்துடன் நெருங்கிச் சென்றால் வாய் நிறைய மணல்தான் கிடைக்கும்”

அவள் சொல்லி முடிப்பதற்குள் ஓட்டலுக்குள் ஒரு புதிய வாடிக்கையாளர் நுழைகிறார். “ஐயா, இன்றிரவு உங்களுக்கு எந்த விதத்தில் நான் உதவ முடியும்?” வலிந்து வரவழைக்கப்பட்ட துபாய் சிரிப்பில் விரிகிறது அவள் முகம்.

  •• ••

_____________________________________

மத்திய கிழக்கின் சொர்க்கமாகவும், மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் அரேபியத் தொழில்முனைவின் ஒளிமிக்க சின்னமாகவும் சித்தரிக்கப்படும் துபாயின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகிறார் ஜோஹன் ஹாரி. லண்டனிலிருந்து வெளிவரும் இன்டிபென்டெட் நாளேட்டில் (7.04.09) வெளிவந்த அவரது கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இது.

தமிழாக்கம்: மருதையன்

__________________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. நல்ல கட்டுரை. தமிழாக்கம் மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  2. பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    சரி, இப்போது இவ்வராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யப் போகிறோம்? உதாரணத்திற்கு, எஜமானர்கள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்வதை எப்படி தடுக்கலாம்? சம்பந்தப்பட்ட தூதரகங்கள் ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?

  3. அற்புதமான கட்டுரை. தமிழாக்கம் மிக மிக அருமை. தோழர் மருதையனுக்கும் அறியக்கொடுத்த வினவுக்கும் வாழ்த்துகள்.

  4. “மிஸ்டர் ஐய்யனார், நான் சென்னையிலதான் படிச்சேன். ஐ.ஐ.டி. கேள்விப்பட்டிருக்கீங்களா? அதில நான் ஏ கிரேடு. ஜஸ்ட் படிப்பை முடிச்சிட்டு படியிறங்கி வர்றேன், அப்படியே நாசாக்காரன் அள்ளிட்டான். கேம்பஸ் இன்டெர்வியூல, ‘எஃப்.சி. திருச்சி பிராமணாள்னு’ என் ரெஸ்யூம்ல பார்த்து கண்டுபிடிச்சுட்டான். இண்டர்வியூ பண்ணினவரும் பிராமின். அப்புறம்… நேரா நாசாதான். பத்து வருஷமாகுது. நீங்க எங்க படிச்சீங்க?”

    “நானா, கொட்டாம்பட்டி புத்து மாரியம்மன் ஐ.டி.ஐ. டிப்ளமா சார்.” என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டேன். ஏனோ என் படிப்பை இவரிடத்தில் சொல்வதற்கு மிகுந்த சங்கோஜமாயிருந்தது…
    http://puthiyapaaamaran.blogspot.in/2011/11/blog-post.html

    • இப்படி கஷ்டப்பட்டவருக்கு உதவி இருக்கீர்களா? துபாய், சிங்கப்பூர், மலேயா சென்று பாருங்கள்…
      நான் இப்படி சந்தித்த சில தமிழர்களுக்கு உதவியுள்ளேன்…நீங்கள் சொம்பைத்தூக்கிகொள்ளும் போதே எனக்கு புரிகிறது எப்படிப்பட்ட பாமரன் என்று…

      உருப்படியா ஒன்னும் செய்யாதீங்க….

      நான் பார்ப்பன ஜாதியில் பிறந்து வேலை கிடைக்க கஷ்ட்டப்பட்டவன் தான்….
      எவனும் ‘இந்தா அம்பி…வேலையைப்பிடிச்சிக்கோ’ என்று கொடுக்கவில்லை…

      என்னை முதன் முதலில் நேர்முகத்தேர்வில் தேர்ந்து எடுத்தது பார்ப்பனர் அல்லாத தமிழர்…
      அந்த நல்ல மனிதர் நாடார்…

      தேர்வின் பொழுது அவரும் என்னை ‘அவாள் / அம்பி’ என்று பார்க்கவில்லை…நானும் அவர் நாடார் என்று அறிந்திருக்கவில்லை…

        • தோலுக்கும் சூரியனுக்கும் தலைமுறைகளாக நடக்கும் இழுபறியில் தோல் நிறம் கருப்பது இயல்பு. நாடாரையும், பார்ப்பானையும் கருப்பு/வெள்ளைச் சாயம் பூசி (பூணூல் இல்லாமல்!) ஒன்றாக நிற்கவைத்தால் ’சாதி’ கண்டுபிடிப்பது கடினம். ‘இனத்தைப்’ பொருத்தவரை தமிழனும் பார்ப்பானும் காகேசிய ’இனம்தான்’..!!!

        • வை திஸ் நிற வெறி!!!

          நான் / தேர்வாளர்:
          இவர்களில் ஒருவர் கருப்பு, ஒருவர் சற்று சிகப்பு…

          வென்மை அழகு க்ரீம் விற்க்கும் வேலைக்குண்டான தேர்வ்வல்லாததாலும், இருவரும் நிற வெறி அற்றவர்களாகவும் இருந்ததால்நிறத்திற்கு வேலை இல்லாமல் போனது…

          • Have you seen any green colour pappan ??? it is impossible, you know why ??? மாடு மேஞ்சுட்டுப் போயிருக்கும்..

          • அப்படியா…புல்லரிக்கும் கண்டுபிடிப்பு…

            மனித குல பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் தீர்த்து விட்டீர்கள் போங்கள்!!!

            பார்ப்பனர் அல்லாத தமிழர் / இந்தியர் எல்லாம் ஒரே நிறத்திலுள்ள அப்பிரிக்காக்காரரா? ஐரோப்பியரா? சீனரா?

            சொரிக்குமார்…

            • திரு. பெயரில் மட்டும் வீரம் கொண்டவரே!, உங்களுக்கு ஒரு நாடார் உதவியதால் தெளிவு பிறந்திருக்கிறது. இந்தியாவில் முளைத்திருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களில் அவர்களின் அட்டகாசம் சொல்லால் சுருக்க முடியாதது. தென்மாவட்டங்களில் பல கல்வி நிறுவனங்கள் அவ்வாறான இன நிற வேறுபாடுகளற்ற மாணவர்களை தான் உருவாக்குகிறது. நிறுவனங்களுக்கு வந்தவுடன் இவர்களால்தான் அம்மாணவர்கள் தன் சமுதாய துணையை தேடி பின்னோக்கி ஓடுகிறார்கள். இங்கு யாருக்கும் சப்பைகட்டு கட்டுவது அர்த்தமற்றது.

              • mr. poonthiriyar, naadarkalum ungalaipola aathikka jaathikarargalthaney? en inth akola veri? oho.. neenga paramabaraila athikka jaathi, avanga panjathukku athikka jaathiya? illa avangalla neraiya Christians irukarathunalaya? avanga Church-la jaathi veri pidichu aadura aatatha paatha neenga remba santhosha paduveenga…

        • vinavu veeranoda comment-a block pannanumnu soldreengala Juno? illa ippo enna inga naadar pugal padirukkunu soldringala? naadarkalum oru athikka jaathi veri koottamey. Neenga enna pola oru Christian-nu nenaikiren (from your name). Neenga epdi? unga jaathikullathan kalyanam pannuveengala? illa Christhuvukul jaathi, inam, niram ellam illainu vaalbavara?

  5. துபாயின் சட்டதிட்டங்களை குறை சொல்வதற்கு முன் நம் மக்களுக்கு இதை போன்ற கட்டுறைகளை கொண்டு சேர்க்கவேண்டும்.

    // “இது ஒரு அடிமைச் சமுதாயம் என்பது பற்றி உனக்கு அக்கறையில்லையா?” என்றேன்.

    சோஹினாலைப் போல, இவளும் தலை குனிந்தாள். “அதையெல்லாம் பார்க்காமலிருக்க முயற்சிக்கிறேன்” என்றாள்.
    //

    🙁

  6. அருமையான கட்டுரை . தமிழாக்கம் மிகவும் சிறப்பு . ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனத்தை முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது. வாழ்த்துக்கள். அதெப்படி ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தாலே ஓவர் டைம் பணம் கேட்கும் ஐரோப்பியர்களும் வேலைக்கார அடிமைத்தனத்தை ஆதரிக்கிறார்கள் ?????

  7. இந்தியாவில் கொத்தடிமைகள் :

    http://www.thehindu.com/news/cities/Madurai/article3223615.ece
    Scarred and scared bonded labourers rescued from 3 States

    Shaven heads, malnourished bodies, burn scars, faces revealing psychological trauma and stuttering voices were all that one could see in the bonded labourers who were rescued from ‘murukku’ making units in Maharashtra, Odisha and Uttar Pradesh.

    Forty-two bonded labourers were rescued by the Madurai Rural Police after Superintendent of Police Asra Garg formed three special teams to rescue bonded labourers from these States and were brought to Madurai on Sunday. Fifteen among the 42 labourers were children and fell under the age of 18, burn scars from hot oil could be found among almost all the youths who were rescued. Eleven persons, both brokers and owners of the snack units were also arrested.

    Most of them were psychologically affected and need rehabilitation, they were reluctant to speak or react, some of them after great hesitation slowly opened up and said that, in cramped small rooms the boys worked for at least 18 to 20 hours a day with little food and rest.

    One of the victims said that the food served there was loathsome and it was a very frightening experience, the rooms were very hot, frying ‘murukku’ in hot pan for long hours caused burns and any slackness at work resulted in harsh beating. Hot water would be poured on them, if they slept longer than the stipulated duration…..

  8. // “கொடும் வெயிலில் 50 கிலோ செங்கல் அல்லது சிமென்டை சுமக்க வேண்டும். அந்த சூடு இருக்கிறதே, நாள் கணக்கில் அல்ல, வாரக்கணக்கில் சிறுநீரே வராது. //

    நகரத்தின் நரகம்.

  9. துபாய் சென்று வெளிநாட்டு வாழ்க்கை வாழ்வதாக கிராமங்களில் இருக்கும் அவர்கள் குடும்பம் பெருமைபட்டுக்கொள்ளும். அவர்கள் கொத்தடிமையாக இருந்ததை மறைத்துதான் குடும்பத்தை சுமக்கிறார் என்பது தெரியாது. அவர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பனம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க