கேள்வி: //பாரத ரத்னா விருதும் பாஜக காவிகளும் பற்றி …?//

– செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கின்றது. மதன் மோகன் மாளவியா, அடல் பிகாரி வாஜ்பாய், பிரணாப் முகர்ஜி, பூபேன் அசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோர்தான் அந்த ஐவர்.

மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவர். காங்கிரசு தலைவராக இருந்தாலும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தியவர். முசுலீம்களுக்கு தனி வாக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதையும் கிலாபத் இயக்கத்தில் காங்கிரசு பங்கேற்பதையும் எதிர்த்தவர். அந்த வகையில் இவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொண்டாடி வருகிறது.

வாஜ்பாயியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அக்மார்க் ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜக-வின் பிரதமராக பணியாற்றியவர். பிரணாப் முகர்ஜி மோடியின் முதல் ஆட்சியில் பாஜக-வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவராக இருந்து ஒத்தூதிய காங்கிரசுகாரர். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் காங்கிரசுக் கட்சி கண்டனத்தையும் மீறி கலந்து கொண்டு சங்கிகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர். பூபேன் அசாரிகா மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்றாலும் தனது இறுதிக் காலத்தில் பாஜக-வில் இணைந்தார்.

நானாஜி தேஷ்முக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர். சங்கிகளின் ராமராஜ்ஜிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தவர். இந்தக் கொள்கைகள் என்பது சமூக ஏற்றத்தாழ்வை விட்டுவிட்டு தனிமனிதனைச் சீரமைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் உன்னால் முடியும் தம்பி வகையாறாதான். வல்லரசு

இப்படி பாரத ரத்னா விருதுப் பட்டியல் சங்கிகளின் மனம் கவர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இனி அத்வானி, கோட்சே, சாவர்க்கர், ஹெட்கேவார், சியாம் பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை கலைமாமணி விருதுகளை கண்டு கொள்ளாதது போல பாரத ரத்னாவையும் பாராமுகமாக விட்டு விட முடியாது. தொடர்ந்து விமரிசிக்க வேண்டும்.

நன்றி!

படிக்க:
100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை
♦ அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

♦ ♦ ♦

கேள்வி: //முதலாளித்துவ அமைப்பு முறை தோற்று வருவதாலேயே சோசலிசம் வந்து விடுமா?//

– சி.நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

முதலாளித்துவ அமைப்பு முறையின் தோல்வி அதன் இயங்கு முறையிலேயே உள்ளார்ந்து உள்ளது. தனி நபர் சொத்து குவிப்பும் – பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வருமானமிழப்பதையும், தனிப்பட்ட தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்தியும் – நாடு தழுவிய அராஜக உற்பத்தியுமான இரு முரண்பாடுகள் முதலாளித்துவம் தானே தோண்டிக் கொண்ட சவக் குழிகள். இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சொத்துடமையை சமூகத்திற்கு சொந்தமாக்குவதும், பெரும்பான்மை மக்களுக்கான திட்டமிட்ட மைய உற்பத்தியும் சோசலிசம் முன் வைக்கும் தீர்வுகள். அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அழிவிலிருந்து வந்தடைந்தே ஆகவேண்டிய மாற்றங்கள். அதைத்தான் புரட்சி என்கிறோம்.

இந்த மாற்றத்தை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சியே சாதித்துக் காட்டும். ரசியாவிலும், சீனாவிலும் அப்படித்தான் புரட்சிகள் நடந்தேறி சோசலிச சமூகம் உருவாக்கப்பட்டது. சரி இது வரலாறு மற்றும் அறிவியல்.

இன்றைய நிலைமையில் உலகெங்கிலும் அப்படி ஒரு சோசலிச முகாம் இல்லை. மார்க்சிய லெனினிய கட்சிகளும் பலவீனமாக உள்ளன. எந்த நாட்டிலும் அவை தீர்மானகரமான சக்தியாக இல்லை. அதே நேரம் முதலாளித்துவத்தின் தோல்வி, அதன் கட்டமைப்பு நெருக்கடி காரணமாக உலகெங்கிலும் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் வெடித்து வருகின்றன. தொடர்ந்து நடக்கின்றன. முதலாளித்துவம் ஒழியட்டும் என்ற அரசியல் முழக்கங்கள் ஐந்து கண்டங்களிலும் முழங்குகின்றன. இந்தப் போராட்டங்களினூடாக சில நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் பலமடைந்து சோசலிச புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருப்பதாக சொல்லலாம். அதன் மூலம் மீண்டும் இவ்வுலகில் ஒரு சோசலிச முகாம் தோன்றி உலகை வழிநடத்தலாம். அப்படி நடக்கவில்லை என்றால்?

முதலாளித்துவம் தனது உள் முரண்பாடுகளால் இந்த உலகை பெரும் போருக்குள் தள்ளி, சுற்றுச்சூழலை நாசம் செய்து அழிவைக் கொண்டு வரும்.

ஆகவே முதலாளித்துவத்தின் தோல்வி ஒரு அறிவியல் எனும் போது அதன் தீர்வில் இந்த உலகம் அழியுமா இல்லை புரட்சியால் காப்பாற்றப்படுமா என்ற இரண்டு தீர்வுகளே உள்ளன. மூன்றாவது ஏதுமில்லை.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //சீன அதிபரின் சென்னை வருகை எதற்காக?//

– சி. நெப்போலியன்

மோடியைப் போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனது பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளம்பரப்படுத்துகிறார். வருகையில் நடந்த கண்காட்சிகள், விருந்துகளில் இது ஒரு நோக்கம். மற்றொருபுறம் அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா பொருளாதார, அரசியல் அரங்கில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் முதலீடுகளைக் கொட்டி தனது செல்வாக்கு மண்டலங்களை வர்த்தகத்தின் மூலம் உருவாக்க விரும்புகிறது. இந்தியா, அமெரிக்காவின் அடியாளாக இருந்தாலும் வர்த்தகம் என்ற முறையில் சீனாவோடும் உறவாட வேண்டிய தேவை இருக்கிறது. சீன உறவை முற்றிலும் துண்டித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் பிரேசிலில் நடக்கும் பிரக்சிட் அமைப்பிலும் இந்தியா பங்கு பெறுகிறது. அமெரிக்காவிற்கு போட்டியான இந்த பொருளாதார அரசியல் அமைப்புகள் இப்போது பெரிய அளவிற்கு பங்களிப்பு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் செய்யலாம். அது அமெரிக்க சீன முரண்பாட்டின் வளர்ச்சியாகவும் பார்க்கலாம்.

நன்றி!

♦ ♦ ♦

படிக்க:
கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்
♦ கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?

கேள்வி: //சீனா மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன என புரியவில்லை?

சர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள் உலகை ஆட்டிப் படைக்கும் அதே பொழுது, சீனாவும் இந்த மே.நி. வல்லரசுகளை சாராமல் சுயமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காரணம் மாவோவின் கம்யூனிசம் அல்ல என்றும் அதிகாரவர்க்க முதலாளித்துவம் மாவோவின் காலத்திற்கு பின் சீனாவின் அதிகாரத்தை கைப்பற்றியதும்தான் காரணம் என தெரிகிறது.

ஆனால், பிற மேல்நிலை வல்லரசுகளுக்கு போட்டியாக வளர்ந்தது எப்படி? புரியவில்லை.

மற்றும், தற்போதைய உலக பொருளாதார மந்தத்தில் சீனாவும் சிக்கி உள்ளதா? தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்களின் சமீபத்திய நடவடிக்கைகளை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.//

– திப்பு

ன்புள்ள திப்பு,

முன்னர் பார்த்த கேள்வி பதிலின் தொடர்ச்சியாக சில விசயங்களைப் பார்க்கலாம். சீனா இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு வல்லரசு நாடு போல வளர்ந்து விட்டதா என்று கேட்டால் ஆம், அப்படி வளர்ந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டை விட சீனாவின் ராணுவ பட்ஜெட் அதிகம். அமெரிக்காவின் பட்ஜெட் இதை விட சில மடங்கு அதிகம் என்றாலும் இன்று அமெரிக்காவிற்கு அடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு சீனாதான்.

அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையில் புழங்கப்படும் சட்டை முதல் செல்பேசி வரை சீனாதான் தயாரிக்கிறது. அமெரிக்காவின் அன்றாட நுகர்வு சீனாவை நம்பி இருக்கிறது என்றால் மிகையில்லை. இன்னொரு புறம் சீனாவை புறந்தள்ளி பொருளாதார மேலாண்மையை பெறுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவோடு வர்த்தகப் போரை துவக்கியுள்ளார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு வரிகளை உயர்த்தி உள்ளது.

சீனா இந்த பிரம்மாண்டமான பொருளாதார நிலைமையை எப்படி அடைந்தது?

மாவோ காலம் வரையிலான சீனா அடிப்படைக் கட்டமைப்புகளை வலுவாக கட்டியது. பின்னர் டெங்சியோ பிங் காலத்தில் அந்த அடிப்படைக் கட்டமைப்பின் வலுவில் முதலாளித்துவ பொருளாதாரம் கொண்டு வரப்பட்டு வேகமாக பொருளாதாரம் வளர்ந்தது. திறமையான தொழிலாளர்கள், மலிவான கூலி, பிரம்மாண்டமான அடிக்கட்டமைப்பு வசதிகள், அதற்கு மலிவான கட்டணங்கள் என்று சீனாவில் கட்டமைப்பை வல்லரசு நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன. மறுபுறம் சீனாவும் இந்த வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது. இன்று அமெரிக்கா உள்ளிட்டு பல நாடுகள் வெளியிட்டுள்ள கடன்பத்திரங்களின் கணிசமான பகுதி சீனாவிடம்தான் உள்ளது. சோசலிசம் உருவாக்கிய மூலதனத்திரட்சியை சீன அதிகார வர்க்கம் திருடிக் கொண்டு இந்த முதலாளித்துவ வளர்ச்சியை சாதித்திருக்கிறது.

உலக பொருளாதார நெருக்கடியின் விளைவு சீனாவிலும் இருக்கிறது என்றாலும் வல்லரசு நாடுகள் போல பெரும் பாதிப்பு இல்லை. தனது நிதி மூலதனத்தை பெருக்கும் பொருட்டு சீனா உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகிறது. நிலத்திலும், நீரிலும் அது செயல்படுத்தி வரும் பட்டுவழிப்பாதை திட்டம் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களையும், சாலைகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருக்கும் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளிகளும், சீன அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.

சரி, சீனாவின் இந்த வளர்ச்சி உள்நாட்டில் என்ன சாதித்திருக்கிறது?

வாரத்திற்கு இரண்டு பில்லியனர்கள் புது வரவாக அறிமுகமாகும் அளவிற்கு பெரும் பணக்காரர்கள் சீனாவில் வளர்ந்து வருகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியிலேயே பெரும் பில்லியனர்கள் உறுப்பினர்களாகவும், பொறுப்பிலும் உள்ளனர். மறுபுறம் வறுமையும், வேலையின்மையும், சமூக நலத்திட்டங்களிலிருந்து மக்கள் தூக்கியெறியப்படுவதும் சீனாவில் நடக்கிறது. சீனத் தொழிலாளிகள் சீனாவின் கிழக்கு பொருளாதார மண்டல நகரங்களில் தம்பதி சகிதராக பணி புரிகின்றனர். ஆனால் அங்கே அவர்கள் ஒரு தரமான வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாக வாழ முடிவதில்லை. தமது குழந்தைகளை தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வயதான பெற்றோரிடம் விட்டு விட்டு நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பணிநேரமும் அதிகம். நல்ல கல்வி, நல்ல சுகாதாரம் ஆகியவை நகரங்களில் பெரும் செலவு பிடிக்கும் வண்ணம் இருப்பதால் சீனத் தொழிலாளிகளின் குடும்ப வேர் இன்னமும் கிராமங்களிலேயே இருக்கிறது.

இன்று உலகிலேயே அணு அணுவாய் குடிமக்களைக் கண்காணிக்கும் நாடாக சீனா உருவெடுத்துவிட்டது. தலைநகர் பீகிங்கில் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் கூட வாழ முடியாது. அப்படி பிழைக்கும் மக்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு நகரத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள். இப்படி வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு சீனாவில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் இன்னமும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியும், சுகாதாரமும், வேலையும் ஓரளவுக்கு வழங்கப்படுவதால் ஒட்டு மொத்த புள்ளிவிவரம் மற்ற நாடுகளை விட வாழ்க்கைத் தர மேம்பாட்டில் அதிகம் இருக்கும். இதற்கு, அங்கே வறுமை குறைந்து வருவதாக பொருள் இல்லை.

சீன முதலாளிகளுக்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகின்றன. பல முதலாளிகள் தமது சொத்துக்களை வரி இல்லா சொர்க்கங்களில் கொண்டு செல்கின்றனர். சீனாவின் பணக்காரக் குழந்தைகள் அனைத்தும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மகளே அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் படிக்கிறார். ஆனால் சீன அதிபரின் வருட ஊதியம் 22,000 டாலர் மட்டுமே. அதாவது மாதம் தோராயமாக ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தில் அவரது மகள் எப்படி அமெரிக்காவில் படிக்க முடியும்? அதற்கு சீனாவில் அனைவரும் ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள். சீன அதிபரின் மாமன், மச்சான், அத்திம்பேர் முதலாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதிபர் மகளின் கல்விச் செலவை ஏற்பார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். சீன கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் சீனாவின் ஏதாவது ஒரு தனியார் தொழிற்துறையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இந்த நிலைமைகள் அனைத்திற்கும் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற அரசியல் அமைப்பு சாதகமாக இருக்கிறது. நாட்டின் செல்வ வளங்களை வல்லரசு நாடுகளுக்கு விற்பதற்கும், பணக்காரர்களை உருவாக்குவதற்கும், ஏழைகளை நகரங்களில் வாழமுடியாதபடி செய்வதற்கும், போராட்டங்களை முடக்குவதற்கும் இந்த போலிக் கம்யூனிச ஆட்சி பொருத்தமாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க