மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் : அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை !

ரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது, எவ்வளவு அபராதம் விதிப்பது என்பதை மாநில அரசுகள் தீர்மானித்து வந்த உரிமையை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் பறித்து, நாடெங்கும் ஒரேவிதமான அபராதம், தண்டனையைத் தீர்மானிக்கும் உரிமையை மோடி அரசு எடுத்துக்கொண்டு விட்டது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் 5 இலட்சம் சாலை விபத்துக்களில் 1.5 இலட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்றும், போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான அபராதம், தண்டனை விதிப்பதன் மூலம்தான் இந்த எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனக் கூறி மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வாகன ஓட்டிகளை விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்துக் காவலர் : சட்டத்தை நடைமுறைப்படுத்தவா, இலஞ்சத்தைக் கறக்கவா ?

இச்சட்டத்திருத்தப்படி குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ.2000 வரை இருந்த அபராதத் தொகை ரூ.10,000-மாகவும், அதிக சுமை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ.2000 வரை இருந்த அபராதத் தொகை, ரூ 20,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும் போது முன்பிருந்த அபராதத் தொகையைவிட இனி பத்து மடங்கு கூடுதலாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

“குற்றத்திற்கு ஏற்றபடிதான் தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்பதுதான் இயற்கை நீதி. ஆனால் “ சிறு குற்றங்களுக்குக் கூடக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்”. அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பது பாசிஸ்டுகளின் வாதம். இப்பாசிச சித்தாந்தப்படிதான் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு, தமது வாழ்வாதாரத்திற்காக மோட்டார் வாகனங்களை நம்பியிருப்போரின் வாழ்வையே அழிக்கக்கூடியதாக உள்ளது, இச்சட்டத் திருத்தம்.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மீது போக்குவரத்து விதிமீறலுக்கு 46,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் தனக்கு அபராதம் விதித்த போலீசுக்காரனை அடித்திருக்கிறார்.

படிக்க :
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
♦ நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

அவரது ஆத்திரத்திற்கு நியாயமுண்டு. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரால் இத்தொகையைக் கட்ட முடியுமா? அப்படியே கடன் வாங்கிக் கட்டினாலும், அதிலிருந்து அவர் மீண்டு விடமுடியுமா? அபராதத் தொகையைக் கட்டுவதை விடச் சிறைக்குப் போவதே மேல் என்றுதான் அவர் முடிவெடுப்பார்.

இது போன்று நாடெங்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் இச்சட்டத்திற்கு எதிராகக் குமுறத் தொடங்கிய பிறகு, மாநில அரசுகள் அபராதத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது, மைய அரசு. எவ்வளவு அபராதம் விதிப்பது என்ற உரிமையை மைய அரசு வைத்துக் கொள்ளுமாம், சலுகையை மட்டும் மாநில அரசு அறிவிக்க வேண்டுமாம். இதன் பெயர் பெருந்தன்மையா அல்லது பித்தலாட்டமா?

இன்று வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர், இரு சக்கர வாகனத்தைக் கொண்டு உபேர், ஸோமாடோ ஆகிய நிறுவனங்களில் டெலிவரி பாய்ஸாக வேலை செய்து வருகின்றனர். இன்னும் பலர் ஆட்டோ அல்லது குட்டி யானை உள்ளிட்ட சிறு இரக வாகனங்களைக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர். இவர்களுள் பலரும் சாலை விதிகளை மதிப்பதில்லை என்பதே உண்மை. சாலை விதிகளை மீறுபவருக்குத் தக்க அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சாலை விபத்துக்களைக் குறைப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் சிறுசிறு வேலைகளையும், தொழில்களையும் தமது சொந்த முதலீட்டைக் கொண்டு  நடத்திவரும் அடித்தட்டு வர்க்கப் பிரிவினரை அடியோடு ஒழித்துக்கட்டி விடக் கூடியதாக இருக்கிறது.

சாலைகளைப் பராமரிக்காத அரசு சட்டத்தை மட்டும் கடுமையாக்குகிறது.

உண்மையில், பெரும்பாலான சாலை விபத்துக்கள் குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலும், குண்டும் குழியுமான சாலைகளாலும், சரியான மின்விளக்கு வசதிகள் இல்லாததாலும்தான் நடந்து வருகின்றன. 2017-ஆம் ஆண்டு வெளியான புள்ளி விவரப்படி, நாடு முழுக்க நடந்த விபத்துக்களில் 24% விபத்துக்கள் குடிபோதையால் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

தெருவுக்குத் தெருவும் நெடுஞ்சாலைகளிலும் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையைச் சிறிதுகூடக் குறைக்க மறுக்கும் அரசிற்கு, குடிப்பழக்கத்தைத் தொட்டில் பழக்கம் போல ஊட்டி வளர்த்துவரும் அரசிற்கு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தவறு என உபதேசிப்பதற்கோ அதனைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு அபராதத்தை அதிகமாக்குவதற்கோ ஏதேனும் தார்மீக அடிப்படையிருக்கிறதா?

ஒருபுறம் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியாரின் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, மறுபுறம் சாலைகளைப் பராமரிக்க மறுக்கிறார்கள். சாலைகளைக் குண்டும் குழியுமாக வைத்துக்கொண்டே தலைக்காயங்களால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க தலைக்கவசம் அணியச் சொல்லி உபதேசம் செய்கிறார்கள். 500 ரூபாய், 600 ரூபாய் பெறுமானமுள்ள தலைக்கவசங்களை அணியாமல் போனால், அந்த தவறுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள்.

படிக்க :
மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்
♦ சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

ஒருபுறத்தில் அதிவேகமாகச் செல்வதற்கென்றே நான்கு, எட்டு வழிச் சாலைகளை அமைத்துக்கொண்டு, அதிவேகமாகச் செல்லக்கூடிய அதிநவீன கார்களையும், பைக்குகளையும் உற்பத்தி செய்து சாலைகளில் ஓட விட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் “அதிவேகம் துரித மரணம்” என உபதேசிக்கிறார்கள். அதிவேகத்தைக் கண்காணித்து அபராதம் விதிக்கக் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.

உண்மையில் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கம் சாலை விபத்துக்களைக் குறைப்பதோ, வாகன ஓட்டுநர்கள் மத்தியில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோ அல்ல. மாறாக, மக்களைக் கொள்ளையடிப்பதற்கு செய்யப்பட்டிருக்கும் புதுவகை ஏற்பாடுதான் இது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1,45,000 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கும் மோடி அரசு சாதாரணப் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையாகப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சட்டபூர்வமாக வழிப்பறி செய்கிறது.

இன்னொருபுறத்தில் இச்சட்டத் திருத்தம் வாகன உதிரி பாகங்கள் விற்பனை, ஓட்டுநர் பயிற்சி மையங்கள், மெக்கானிக் ஷாப்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான தொழில்களைத் தரப்படுத்துவது என்ற பெயரில் தனியார்மயமாக்கும் சதித்தனங்களையும் கொண்டிருக்கிறது.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஒவ்வொன்றும் 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பரிசோதனைக் கூடம் மற்றும் பணிமனையுடன் இயக்கப்பட வேண்டுமென வரையறுக்கிறது இச்சட்டம். இதற்குத் தேவையான பெருமளவு முதலீட்டைத் தற்பொழுது பயிற்சிப் பள்ளிகளை நடத்திவரும் சிறு நிறுவனங்களால் செய்ய முடியாது. இச்சட்டத்தின் விளைவாக அத்தகைய சிறு நிறுவனங்கள் தமது கடைகளைக் காலிசெய்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

வாகன சோதனை என்ற பெயரில் கொல்லப்பட்ட திருச்சியைச் சேர்ந்த உஷா (இடது); மதுரையைச் சேர்ந்த விவேகானந்த குமார்.

நமது நாட்டில் பெரும்பாலான ஆட்டோ மெக்கானிக் ஷாப்கள் அதிகம் படித்திராத, சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால்தான் நடத்தப்படுகின்றன. தமது சொந்தக் கைக்காசையோ, கடன் வாங்கியோ மூலதனம் போட்டு நடத்தப்படும் இத்தகைய மெக்கானிக் ஷாப்புகளுக்குத் தகுதிச் சான்று அளிக்கும் உரிமையைத் தனியார் நிறுவனங்களிடம் தாரைவார்க்கத் திட்டமிடுகிறது, மைய அரசு.

மேலும், ஓட்டுநர் உரிமம் அளிப்பது, வாகனங்களுக்கு தகுதிச் சான்று, பெர்மிட் அளிப்பது, வாகனப் பதிவு, வாகனக் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, இவையனைத்திலும் மாநில அரசுகள் தலையிட முடியாதவாறு இவற்றை வருங்காலத்தில் தனியாரிடம் ஒப்படைக்கவும் திட்டமிடுகிறது  இச்சட்டம். இதன் விளைவாக இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களே தேவையற்றதாகிவிடும். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கும் இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் பொதுமக்கள் கோருகிறார்கள். ஆனால், மோடி அரசோ இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சாலைப்போக்கு வரத்துத் துறையையே அரசிடமிருந்து பறித்துத் தனியார்மயமாக்குகிறது. தனியார்மயமும் கார்ப்பரேட்மயமாக்கமும் வேறுவேறல்ல.

இக்கார்ப்பரேட் மயமாக்கம் பளிச்செனத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது, மோடி அரசு. தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து வருவதைப் போல, விவசாயச் சீர்திருத்தங்கள் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதைப் போல, இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

பூங்குழலி

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க