ந்தியா நிர்வகித்து வந்த ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருந்த 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நீக்கியது மத்தியில் உள்ள இந்துத்துவ அரசாங்கம். நீக்கத்துக்குப் பின், ஜம்மு காஷ்மீரில் கடுமையான தடைகள் அமலாக்கப்பட்டன.

காஷ்மீர் தெருக்களில் 700,000 படையினர் நிறுத்தப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் சிறார்களையும்கூட இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்தது. மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக முடங்கியது.

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் பெண்கள் பல தசாப்தங்களாக நீடித்துவரும் மோதல்களால் அன்றாடம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் முடக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சற்றே தளர்த்தியிருந்தாலும், 70 ஆண்டுகாலம் பிரச்சினை நீடித்துவரும் நிலையில், மிக மோசமான ஒடுக்குமுறை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

கடந்த செவ்வாய்கிழமையோடு (12-11-2019) காஷ்மீர் முடக்கத்துக்கு உள்ளாகி 100 நாட்களாகிறது. அங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்தன. பணிக்காக காஷ்மீர் வந்திருந்த வேறு மாநில தொழிலாளர்கள் மூவர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பல கிரானேடு தாக்குதல்கள் நடந்தன. உள்ளூர்வாசி அல்லாத ஒருவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பின்வரும் ஒளிப்படங்கள் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கின்றன…

இந்திய பாராளுமன்றம் பிரிவு 370-ஐ நீக்கிய ஆகஸ்டு 5 அன்று காலை நேரத்தில் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் திரண்டன. இந்த முடிவை எதிர்த்து காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான படை அனுப்பப்பட்டன. பிரச்சினைக்குரிய இந்தப் பகுதியில் ஒவ்வொரு முனையிலும் ஆயுதம் தாங்கிய படைகள் நின்றன.

பிரிவு 370 நீக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், மத்திய அரசாங்கம் சுற்றுலா பயணிகள், இந்து ஆன்மீக பயணிகள், மாணவர்களை காஷ்மீரிலிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியது. இது இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை பீதியடைய வைத்தது. குழப்பம் மற்றும் பதட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான வெளியூர் தொழிலாளர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற ஸ்ரீநகர் சுற்றுலா வரவேற்பு மையத்தில் திரண்டனர். “இந்த பூலோக சொர்க்கத்திலிருந்து உண்மையில் எனக்குப் போக விருப்பமில்லை. வாழ்க்கைக்காக பணமீட்ட இங்கே வந்தபோது காஷ்மீர் மீதும் அதனுடைய மக்கள் மீது காதல் கொண்டேன். சூழ்நிலை காரணமாக இங்கிருந்து வெளியேறுவது தவிர எனக்கு வேறு வழியில்லை” என ஆகஸ்டில் தெரிவித்தார் மரவேலை செய்பவரான சுபம் சர்க்கார்.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !

பெருந்திரள் போராட்டம் நடக்கக்கூடும் என்கிற பயத்தில் ஆகஸ்டு 11-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட ஈத் அல் அத்வா-வின்போது காஷ்மீரில் தடை இறுக்கப்பட்டது. ‘என்னுடைய வாழ்நாளில் ஈத் தொழுகைக்காக அனுமதி மறுக்கப்பட்டது இது இரண்டாவது முறை. பகுதியில் உள்ள தலைவர்களிடம் ஈத் தொழுகையை வெளியிடத்திலும் சிறு குழுக்களாக மசூதிகளில் செய்யும்படி போலீசு வலியுறுத்தியது’ என்கிறார் இங்கே வசிக்கும் முகமது ரம்சான்.

ஸ்ரீநகரின் அன்சார் பகுதியில் ஈத் தொழுகைக்குப் பிறகு, சுதந்திரத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பிய காஷ்மீர் பெண்கள்.

பள்ளத்தாக்கு முழுவதும் கல்வி நிலையங்களில் படைகள் ஆக்கிரமித்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒரே இரவில் பதுங்கு குழிகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அரசாங்கம் கல்விக்கூடங்கள் திறப்பதை அறிவித்தபோது, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அச்சம் கொண்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிர்ப்புகளைத் தடுக்க இந்திய படைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன. நிராயுதபாணியாக நின்ற எதிர்ப்பாளர்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் கடுமையான காயங்களையும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்டு 5 முதல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகரின் ஹப்பா கடல் பகுதியில் இளம் சிறார்களுக்கும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நடந்த மோதலில் வீசப்பட்ட கற் குவியல் இது. படையினர் மீது கல் வீசுவதும் சுதந்திரம் கோரி முழக்கங்கள் எழுப்புவதும் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய போராட்ட முறையாகும்.

சோபியனிலிருந்து கைது செய்யப்பட்ட மேலாண்மை படிப்பு மாணவரான அகூப் ரஃபிக் வானியின் தாயார் பர்வீனா, ‘இந்திய படைகள் என் மகனை கொண்டு போன அந்த இரவு குறித்த நினைவு வந்துகொண்டே இருக்கிறது. அவனுடைய வருகைக்காக நான் காத்திருக்கிறேன்’ என்கிறார். ஆகஸ்டு 8-ம் தேதி இரவு வீட்டிலிருந்த வானியை கைது செய்தது இந்திய படை. கொடூரமான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் காஷ்மீருக்கு வெளியே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் 13,000 காஷ்மீர் சிறார்களை ஆகஸ்டு 5 முதல் கைது செய்துள்ளதாக ஐந்து பெண்களைக் கொண்ட உண்மையறியும் குழு தெரிவித்தது.

பட்காம் மாவட்டத்தில் உள்ள கிரெம்ஷோர் கிராமத்தில் ஆப்பிள் தோட்டத்தின் உரிமையாளரான குலாம் மொகினுதீன் மிர், இந்திய வர்த்தகருக்கு ஒரு பெட்டி ஆப்பிளை ரூ. 1000-க்கு விற்பனை செய்ததாகவும், பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் இந்தத் தொகையாக பாதியாகிவிட்டதாகவும் கூறுகிறார். ‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு பிரிவை இந்தியா நீக்கியதிலிருந்து எங்களுடைய தொழில் கடுமையான நட்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது’ என்கிறார் அவர்.

காஷ்மீருக்கு வெளியே அனுப்ப இருந்த ஆப்பிள் பெட்டிகளை அடையாளம் தெரியாத சிலர் அழித்துள்ளனர். இந்திய வணிகர்களுடன் வர்த்தகத்தை துண்டிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்ட பின், இப்படியான சம்பவங்கள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் நடந்து வருகின்றன. வெளியூரைச் சேர்ந்த மூன்று டிரக் ஓட்டுநர்களும், ஐந்து தொழிலாளர்கள் தெற்கு காஷ்மீரில் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3.5 மில்லியன் மக்கள் சார்ந்துள்ள ஆப்பிள் தொழில் காஷ்மீர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.

காஷ்மீர் பிராந்தியத்தில் வசிப்பவர்களிடையே மனம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதட்டம், அழுத்தம், கவலை உள்ளிட்ட பிரச்சினைகளை இந்திய அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் முடக்கம் ஏற்படுத்தி வருவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றன.

கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி நிலையங்களை திறந்து மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். ‘பல பெற்றோரிடம் அவர்கள் குழந்தைகள் இலவசமாக கல்வி கற்க அனுப்பும்படி என்னுடைய மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அழைத்து வருகிறேன். தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பெற்றோர் கேட்கின்றனர். இது சவாலானதாகவே உள்ளது’ என்கிறார் சரார் இ சரீஃப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான பிலால் அகமது.

ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்கப்பட்டதில் காயமடைந்த இவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகிறார். சந்தைகளில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் கிரானேடு தாக்குதல் நடத்தப்படுகிறது. ’நான் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்றபோது ஸ்ரீநகர் மத்திய சந்தையில் கிரானேடு வீசப்பட்டது. நான் அப்படியே விழுந்தேன், எழுந்தபோது மருத்துவமனையில் இருப்பது தெரிந்தது’ என்கிறார் முகமது யூனூஸ். பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.


கட்டுரை, படங்கள்: முக்தார் சஹூர்
அனிதா
நன்றிஅல்ஜசீரா. 

1 மறுமொழி

  1. உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பற்பல பிரச்சனைகள் நாடு, நாட்டின் அரசியல் சூழல் என்பன போன்ற பல காரணங்களால் தினம் தினம் அரங்கேறி வருகின்றன. பி.ச்சனைகளை ஊடக தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் நாம் உடனுக்குடனே அறிந்து கொள்கின்றோம். பிரச்சனைகள் உருவாக என்னென்ன காரணம் என்பதையும் அறிவோம். ஏன் எந்த பிரச்சனையுமே பிரச்சனையின் மத்தியில் வாழும் ஒட்டுமொத்த மனித இனத்தின் புன்னைகையில் தீர்வை தேடுவதில்லை? ஏன் அந்த தீர்வை அடைய முடிவதில்லை? காரணம் கூறுங்கள் தயவுசெய்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க