காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !

ந்து தேசியவாதிகளின் மொழியில் கூறுவதென்றால், “காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.” இந்த இரண்டு மாதங்களில் பா.ஜ.க.-வின் செய்தித் தொடர்பாளர்களும் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் அமைச்சர்களும் காஷ்மீர் பற்றி விடுக்கும் செய்திகள் இவைதான். “ஜவஹர்லால் நேருவால்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர்ந்தது, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய காஷ்மீரை உருவாக்கிவிடுவோம், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.”

ஆகஸ்டு 5 -க்கு முன்பு காஷ்மீரில் நிலவிய சூழ்நிலை குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஆகஸ்டு 5-க்குப்  பிறகு அங்கு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கு என்ன நடைபெற்று வருகிறது என்பதே பெரும் மர்மமாக உள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசும் அவ்வரசின் ஊதுகுழல்களும் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகத் தினந்தோறும் அறிக்கைவிட்டு வருகிறார்கள்.

தெருவில் நடமாடுவோரைக் கண்கானிக்கும் அரசுப்படையினர். பிறந்த மண்ணிலேயே அந்நியனைப் போல நடத்தப்படும் காஷ்மீரிகள்.

இயல்பு நிலை என்பது என்ன? மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ்விதத் தடையுமின்றி நடத்துவதுதான் இயல்பு வாழ்க்கை. ஊரடங்கு உத்தரவுகளும், 144 தடையுத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தெருக்களில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டு, மக்களின் நடமாட்டமே கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைகளும் பள்ளிக்கூடங்களும் இயங்க முடியாத நிலையில் காஷ்மீர் மக்கள் எப்படி இயல்பாக வாழ முடியும்?

காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பீர்ஸதா ஆஷிக் 15.09.2019 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளேட்டில், “பள்ளத்தாக்கில் ஒரு திருமணம், ஒரு இறுதிச் சடங்கு” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அம்மூன்றும் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை “நமக்கு” எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

♦ ♦ ♦

ண்பது வயதைக் கடந்த மூதாட்டியான மைமுனா புகாரி, கடந்த ஆகஸ்டு மாத இறுதியில், மாலை நேரத்தில் மூப்பு காரணமாக மரணமடைந்து விடுகிறார். மைமுனா காஷ்மீரிகளுக்கே உரித்தான பழக்க வழக்கங்களில் ஊறிப் போனவர். குழந்தையோ, பெரியவர்களோ அனைவருக்கும் தனது கையால் ஊட்டிவிட வேண்டும் என்று விரும்பியவர். அதனால்தான் மைமுனாவை அவரது உறவினர்கள் அனைவரும் கடவுளின் கொடை எனப் பொருள் தரக்கூடிய உருதுச் சொல்லான மௌஜ் என அன்புடன் அழைத்து வந்தார்கள்.

மைமுனா, இறக்கும் தருவாயில் தான் பார்த்து வளர்ந்த அனைவரும் தனது அருகில் இருக்க வேண்டும் என விரும்பியிருக்கக் கூடும். தனது ஆசிகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்பியிருக்கக் கூடும். இவை எதுவுமே நிறைவேறாமல் அவர் இறந்துபோனார்.

பத்திரிக்கையாளர் பீர்ஸதா ஆஷிக்கிற்கு, இறந்து போன மைமுனா இரத்த உறவுமுறை சார்ந்த பாட்டி. மைமுனாவால் சோறு ஊட்டப்பட்டு வளர்ந்தவர் பீர்ஸதா ஆஷிக். அவருக்கும் மைமுனா இறந்து போன தகவல் கிடைக்கவில்லை. ஆகஸ்டு அன்று உள்ளூர் பத்திரிக்கையொன்றில் மைமுனாவின் இறப்பு குறித்து வெளியாகியிருந்த இரங்கல் செய்தியைப் பார்த்துத்தான் தனது பாட்டி இறந்து போனதை அவர் தெரிந்துகொண்டார். இதன் பெயர் இயல்பு நிலையா, துர்பாக்கிய நிலையா?

முள்வேலியின் ஊடாகத் தெரிகிறது ஆளரவமற்ற லால் சவுக் கடை வீதி. ஆளில்லாத வீதியே காஷ்மீரின் புதிய இயல்பு நிலை.

அந்த இரங்கல் செய்தியில், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை காரணமாக, மைமுனாவின் ஆன்மா சாந்தியடையும் பொருட்டு உறவினர்கள் அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்யும் சடங்கை வீட்டில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுப் போன அவலமான நிலை குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்து போனவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட முடியாத நிலையை, உங்களால் இயல்பு நிலை எனக் கூறமுடியுமா?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால், மைமுனா இறந்துபோன துக்கச் செய்தியை நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு உறவினர் வீட்டிற்கும் நேரில் சென்றுதான் சாவுச் செய்தியைச் சொல்ல முடியும் என்ற நிலையில் அன்று இரவு முழுவதும் முடிந்த மட்டிலும் உறவினர்கள் வீட்டைத் தேடிச் சென்றார்கள் பீர்ஸதா ஆஷிக்கின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அப்படிச் சொல்ல முடியாமல் விடுபட்டுப் போனவர்களுள் பீர்ஸதா ஆஷிக்கும் ஒருவர்.

மைமுனா இறந்த செய்தியை அறிந்தவர்களுள் யாருக்கெல்லாம் தெருவில் நடமாடும் இராணுவத்தின் அனுமதி கிடைத்ததோ, அவர்கள் மட்டும்தான் மைமுனாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடிந்தது, இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்ள முடிந்தது. மயானத்தில் சவக்குழியை வெட்டுபவருக்கும், மைமுனாவிற்கு இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் பெண் மதபோதகருக்கும்கூட சாவுச் செய்தியை உடனடியாகத் தெரிவிக்க முடியாமல் போனதால், மைமுனாவை அடக்கம் செய்வதற்கு மறுநாள் வரையிலும் காத்திருக்க நேர்ந்தது.

படிக்க :
♦ காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
♦ காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

மைமுனாவின் இறுதி ஊர்வலத்திலும், சவ அடக்கத்திலும் மிகக் குறைவான உறவினர்கள்தான் கலந்துகொள்ள முடிந்தது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடத்த வேண்டிய நான்காவது நாள் சடங்கிலும்கூட ஓரிரு உறவினர்கள்தான் கலந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், அந்த மயானம் அமைந்துள்ள நோவாட்டா பகுதி ஆகஸ்டு -5க்குப் பிறகு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று, முட்கம்பிகளால் தடுப்புப் போடப்பட்டு, முன் அனுமதியின்றிப் பொதுமக்கள் நுழைய முடியாத பகுதியாக மாற்றப்பட்டிருந்தது.

♦ ♦ ♦

மைமுனா இறந்துபோன ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, ஆகஸ்டு மதிய நேரத்தில் குலாம் மொகைதீனுக்குத் தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டது. குலாம் மொகைதீன் வேறு யாருமல்ல; பீர்ஸதா ஆஷிக்கின் மனைவியின் மாமா. வீட்டில் இருந்தவர்கள் குலாம் மொகைதீனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, அவரோ சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்.

மிகக் கடுமையான வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும், மரணம் காத்திருக்காது என்று தெரிந்திருந்த நிலையிலும் குலாம் மொகைதீன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாததற்குக் காரணம், வெளியில் சென்றிருந்த தனது மகன் வீட்டிற்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டான் என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார். அவனுக்குத் தகவல் சொல்ல வாய்ப்பில்லை என உறவினர்கள் எடுத்துச்சொன்ன பிறகும்கூட, குலாம் மொகைதீன் காத்திருக்க விரும்பினார், மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்.

வெளியில் செல்லும் இளைஞர்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் காஷ்மீரில் இன்று இயல்பு நிலை. அவர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்படலாம் அல்லது வேறு விபரீதங்கள்கூட நேரிடலாம்.

படிக்க :
♦ அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

நல்வாய்ப்பாக குலாம் மொகைதீனின் மகன் திரும்பி வந்துவிட, சாவின் விளிம்பில் நின்ற குலாம் மொகைதீனை ஒரு காரில் ஏற்றி – அவசர ஊர்தியில் அல்ல – மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள் உறவினர்கள். அங்கிருந்த இருதய நோய் மருத்துவரான இர்ஃபான், குலாம் மொகைதீனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, உயிர் பிழைப்பதற்குப் பத்து சதவீத வாய்ப்புக்கூட இல்லை என்ற அதிர்ச்சியான தகவலை உறவினர்களிடம் உணர்ச்சியின்றித் தெரிவித்தார்.

ஆனாலும், மருத்துவர் இர்ஃபான் நோயாளியைக் காப்பாற்ற அவசரமான அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அதற்கு உதவக்கூடிய மருத்துவர்களும், உதவியாளர்களும் அச்சமயத்தில் மருத்துவமனையில் இல்லை. அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்கு அலைபேசி வசதியும் இல்லை. ஒருமைப்பாட்டைக் காப்பதற்காகத் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டிருக்கும் கொடூரமான நிலையில், மருத்துவர் இர்ஃபான் மறுயோசனை எதுவுமின்றி, தனது காரிலேயே அந்த அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவர்கள், உதவியாளர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை அழைத்து வந்து அறுவைச் சிகிச்சையை நடத்தி முடித்தார்.

♦ ♦ ♦

ஸிர் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சுற்றுலா வழிகாட்டி. அவர், தன் மகன் யாஸிரின் திருமணத்தை ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று நடத்துவதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தார். தனது மகன் திருமண விருந்து திருப்திகரமாக இருக்க வேண்டுமென்பதற்கா 800 கிலோ அளவிற்கு இறைச்சி எடுத்துச் சமையல் செய்யவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஆகஸ்டு, 5-க்குப் பிறகு காஷ்மீரில் திணிக்கப்பட்ட புதிய இயல்பு நிலையின் காரணமாக, அவரது ஆசையெல்லாம் நிராசையாகிப் போனது. உறவினர்கள் அனைவருக்கும் திருமணப் பத்திரிகை தருவதுகூட சிக்கலாகிப் போனதால், நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பது என முடிவெடுத்தார் அவர். அலங்காரப் பந்தல் போடுவது, இசை நிகழ்ச்சி நடத்துவது என்பதெல்லாம் கைவிடப்பட்டன. 800 கிலோ இறைச்சிக்குப் பதிலாக, 200 கிலோ இறைச்சி எடுத்தால் போதும் எனத் திருமண விருந்தும் சுருக்கப்பட்டது.

திருமண ஆர்டர்கள் எல்லாம் நின்றுபோன நிலையில், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைக் கவலையுடன் பார்க்கும் சமையல் கலைஞர்கள்.

திருமண நிகழ்ச்சியை எந்த நேரத்திற்கு ஆரம்பித்து எவ்வளவு நேரத்திற்குள் முடிப்பது என்பதைக்கூட மணமகன், மணமகள் வீட்டார் கூடிப் பேசி முடிவெடுக்க முடியாத நிலை நிலவியதால், அங்கும் இங்குமாகத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதற்காக, மணமக்கள் வீடுகளுக்குச் சென்று திரும்பக்கூடிய வகையில் ஓர் உறவினரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகள், கயாம் என்ற பகுதியில் வசித்து வந்தார். அந்தப் பகுதியோ அதிதீவிரமான இராணுவக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பின் கீழும் இருக்கிறது. அங்கு சென்று திரும்புவது என்பது அசாதாரணமான ஒன்று.

திருமண நாளன்று முகமூடி அணிந்த சிலர் மணமகன் வீட்டிற்கு வந்து, காஷ்மீரே துயர்மிக்க ஒன்றாக இருப்பதால், பாட்டுப் பாடியோ, இசை நிகழ்ச்சி நடத்தியோ விழாவை நடத்தாதீர்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்கள்.

அதேநாளில் மணமகள் வீட்டிலிருந்து இன்னொரு செய்தி மணமகன் வீட்டிற்கு வந்தது. தமது பகுதியில் தினந்தோறும் இரவு ஒன்பது வரை இராணுவத்திற்கும் கல்லெறிபவர்களுக்கும் இடையே மோதல்கள் நடப்பது வாடிக்கையாக இருப்பதால், இரவு 10 மணிக்கு திருமண நிகழ்ச்சிக்காக மணமகள் வீட்டிற்கு வந்தால் போதும் எனத் தெரிவித்தது அச்செய்தி.

மணமகன் யாஸிரும் அச்செய்தியின்படி இரவு ஒன்பது மணிக்கு மணமகள் வீட்டிற்குச் செல்லத் தயாரானார். காஷ்மீர் முசுலீம் திருமண நிகழ்வுகளில் ஒரு சடங்கு கடைப்பிடிக்கப்படுவது உண்டு. மணமகன், மணமகள் வீட்டிற்குக் கிளம்பிச் செல்லும்போது, உறவினர்கள் மணமகனை வழிமறித்துத் தடுப்பார்கள். மணமகன் தன்னைத் தடுக்கும் உறவினர்களுக்குப் பணம் உள்ளிட்ட பரிசுகள் கொடுத்து வழி ஏற்படுத்திக் கொள்வார்.

அன்றும் யாஸிர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், உறவினர்களால் அல்ல. இந்திய இராணுவச் சிப்பாய்களால். தடுத்து நிறுத்திய இராணுவச் சிப்பாய்கள் யாஸிரிடம், “இந்த நேரத்தில் தேச விரோத சக்திகள் நடமாடுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான் இந்தச் சோதனை” எனக் கூறினார்கள். அவர்களிடம் யாஸிர், தான் தீவிரவாதி அல்ல, மணமகன் என நிரூபிக்க வேண்டியிருந்தது.

துக்கத்திற்கு அழ முடியாத நிலையை, மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டாட முடியாத நிலையை உங்களால் இயல்பு நிலை எனக் கூற முடியுமா? கூற முடியாதென்று நீங்கள் கருதினால், எச்சரிக்கை, உங்களை அவர்கள் ‘ஆண்டி இந்தியன்’ என முத்திரை குத்தவும் கூடும்.

மகேஷ்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

2 மறுமொழிகள்

  1. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் நம் நாட்டுத் தலைவர்களின் நிலைப்பாடு எப்படி இருந்தது? ஜின்னா அவர்கள் கேட்டதால் மட்டுமேதான் இப்பிரிவினை நிகழ்ந்ததா? RSTV மூலம் 10 episodes ஒளிபரப்பான samvidhaan நிகழ்ச்சியில் கூறப்பட்டவாறு ஆங்கிலேயர் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுகையில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பலரின் உழைப்பு வீணாகையில் நம் தலைவர்கள் ஒன்றிணைந்து எதிர்த்திருக்க வேண்டும் அல்லவா? வெறும் பேச்சு வார்த்தை அளவிலேயே எல்லாம் முடிந்து விட்டதே? இதன் உண்மைத்தன்மையை எந்த அளவு நம்புவதென்று கூறுங்கள்…

    • மகாலஷ்மி அவர்களே நீங்கள் கேள்வி பதில் பக்கத்தில் கேளுங்கள். மறுமொழிகள் கட்டுரைக்கான விவாதத்திற்கானது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க