கேள்வி: //பொதுவாக மக்களின் செயல்பாடுகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள், காவல், அரசியல், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், அரசின் சில நடவடிக்கைகள், போன்றவற்றை பார்க்கும்போது அறம், நேசம், நெறிமுறை, மனிதம் அனைத்தும் ஒழிந்துவிட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.

அதேவேளையில் தனிமனிதனோடு பழகும்போது, சாலை விபத்தில் சிக்கியவரை காப்பது; உதவுவது, இன்னும் பிற நிகழ்வுகளில் மனிதமும் நேசமும் இறக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

தனிமனிதர்களின் கூடாரமே சமூகம் என்னும்போது, இந்த முரண்பாடுகள் எதனால் ஏற்படுகிறது? இவற்றை களையும் வழிகள் யாவை?

நன்றி//

– வெ. குணசேகரன்

ன்புள்ள குணசேகரன்,

“தி மாட்ரிக்ஸ் ரிலோடட் (The Matrix Reloaded – 2003)” திரைப்படத்தில் நாயகன் நியோவை தொடர்ந்து துரத்தும் ஏஜெண்ட் ஸ்மித் கூறும் உரையாடல் ஒன்றில் இப்படி வரும்.

The-Matrix“நாம் சுதந்திரமாக இருப்பதால் இங்கு இருக்கவில்லை. நமக்கு சுதந்திரம் இல்லை என்பதால் இங்கு இருக்கிறோம். இதிலிருந்து தப்பிச் செல்வதற்கு காரணம் ஏதுமில்லை; அதை மறுப்பதற்கு நோக்கமும் இல்லை. ஏனெனில் நோக்கமில்லாமல், நாம் இங்கு இருக்கமாட்டோம் என்பது நாமிருவரும் அறிவோம். அந்த நோக்கம்தான் நம்மை உருவாக்கியிருக்கிறது, நம்மை இணைத்திருக்கிறது. அந்நோக்கமே நம்மை இழுத்துச் செல்கிறது. அதுவே நம்மை வழிநடத்தவும் செய்கிறது, தூண்டிவிடவும் செய்கிறது. இந்நோக்கம்தான் நம்மை வரையறுத்திருக்கிறது. நம்மை பிணைக்கவும் செய்கிறது”

எந்திரங்களால் எழுதப்பட்ட மென்பொருளாக உலகம் மாறிவிட்டது. அதில் கனவு காண்பதால் எந்திரங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உயிருள்ள பொம்மைகளாக மக்கள். அதிலிருந்து மனித குலத்தை மீட்க வேண்டும் எனப் போராடும் சயான் போராளிகள். எந்திரங்களின் மென்பொருள் குறைபாடுகளை கண்டறியும் பொருட்டு சயான் விட்டு வைக்கப்படுகிறது. அந்த குறைபாடுகளின்  (Bug)  உச்சமாய் அதீத சக்தி கொண்ட நாயகன் நியோ. எந்திரங்களின் பக்கமிருந்து தோன்றிய மென்பொருள் குறைபாடாய் ஏஜெண்ட் ஸ்மித். இருவருக்கும் நடக்கும் போட்டி சண்டையில் எந்திரங்கள் தமது அடுத்த வெர்சனை சரி செய்வதாக தீர்மானிக்கிறது. சமயத்தில் அந்தச் சண்டை எந்திரங்கள் தீர்மானித்த வழியில் செல்லாமல் புதுப்புது முடிச்சுக்களோடு பயணிக்கிறது. சமநிலை பிறழ்கிறது. கனவு உலகிலிருந்து மனித குலம் யதார்த்த உலகிற்கு திரும்புமா? இல்லை மனித குலத்தின் இறுதி புகலிடமான சயான் அழிக்கப்படுமா? எந்திரங்களின் மென்பொருள் பரிசோதனையாக சயானும், நியோவும் அவனது கூட்டாளிகளும் பயன்படுகிறார்களா? இது மாட்ரிக்ஸ் வரிசையில் வந்த மூன்று திரைப்படங்களின் கதைச் சுருக்கம்.

இன்றைய நிஜ உலகும் மாட்ரிக்ஸ் போலவே இயங்குகிறது. நாம் நிஜ உலகில் பயணித்தாலும் சொத்துடமையினால் பிரிந்து போய் திட்டமிட்ட வழியில் வடிவமைக்கப்பட்ட நமது வாழ்க்கையை முதலாளித்துவம் எனும் மென்பொருள் தீர்மானித்திருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினையினால் நாம் சிணுங்கினாலோ, வெடித்தாலோ அவர்கள் அடுத்த வெர்சனை வாட்ஸ் அப் வெர்சன் போல வெளியிடுகிறார்கள். நிஜ உலகிலிருந்து துண்டிக்கப்படும் நமது சிந்தை மேலும் அன்னியமாகிறது. இப்படி போகிறது வாழ்க்கை.

படிக்க :
♦ தொலைகின்ற தருணங்களில் வழிநடத்தும் விரல்கள் – விஜயபாஸ்கர், பெரோஸ், சுதாகர்
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும் சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் என்பது உங்களது கேள்வி.

அறத்தை பொதுவில் மனித குல நற்குணங்களின் இலட்சியவாதம் என்று வரையறுத்தால் அது தனிநபர் சார்ந்து தோன்றியதா? இல்லை சமூகம் சார்ந்து பரிணமிக்கிறதா?

wolf became dogகாட்டு ஓநாயை வீட்டு நாயாக மாற்றிய மனித குலத்திற்கு அதன் பின் வேட்டைக்கு ஒரு துணை கிடைக்கிறது. ஆரம்பத்தில் இனக்குழுவில் இருந்த வயதான கிழவர்கள், கிழவிகளை விட நாய்களுக்கு மதிப்பு அதிகம். சமயத்தில் நாய்களுக்கு இறைச்சி இல்லை என வயது மூத்தோரை இரையாக கொடுத்திருக்கிறது மனித குலம். முதியோரை, நோயுற்றோரை, எளியோரை பராமரிக்க வேண்டும் என்ற பண்பாடு பற்றிக் கொள்ள வெகு காலமாகிறது. அந்தப் பராமரித்தலுக்கு வாழ்க்கைத் தேவைக்கான உற்பத்தி சற்றே அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இப்படி சமூக வாழ்க்கையின் இயக்கமே மனித குலத்தின் இணக்கத்தை கற்றுத் தருகிறது, உருவாக்குகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறை வந்ததும் முழு சமூகமும் உற்பத்தியில் பிணைக்கப்பட்டாலும் நுகர்வு, சொத்துடைமையில் முழு சமூகமும் பிரிக்கப்படுவதால் மனித குலம் இன்று தனித்தீவுகளாய் மாறி வருகிறது. நகர வாழ்க்கையோ, கிராம வாழ்க்கையோ ஒவ்வொருவருக்கும் மாநகர பேருந்து வழித்தடம் போல ஒரு தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அருகாமையில் உள்ள பிற தடங்களையோ, சற்று தூரத்தில் பயணிக்கும் தொலை தடங்களையோ யாரும் ஏறிட்டுப் பார்க்கமுடியாது. நமது தடத்தில் பயணிப்பதிலேயே ஆயிரத்தெட்டு சிக்கல்கள்.

ஒரு கையில் சுமைப்பை. மறு கையை பேருந்துப் படிக்கட்டில் இருக்கும் கூட்டத்தில் துழாவி கம்பியை பிடிக்கிறார் ஒரு சலவைத் தொழிலாளி. பேருந்து வேகமெடுக்கிறது. கூட்டத்தின் நெருக்குதலில் பிடித்த கை கம்பியை விடுகிறது. அது அவரது வாழ்க்கைக்கு உணவிடும் வலது கை. கீழே விழுகிறார். நேரம் நள்ளிரவு 11 மணி. கை மூட்டு விலகி தோள் எலும்பு உடைந்து போய் விட்டது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சொந்த கிராமத்திற்கு பயணிக்க இருந்தவர், பயணத்தை ரத்து செய்து விட்டு கிடைத்த பேருந்தை பிடித்து போரூர் பூந்தமல்லி சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு வருகிறார். முதலுதவிக்கு பிறகு அடுத்த நாள் காலையில் கை எலும்பு சிகிச்சைக்கு இலட்சத்திற்கு மேல் ஆகும் என்று அறிகிறார். உடனே தோளில் துணியையும், வலிக்கு வலி நிவாரணிகளையும் போட்டு விட்டு நூறடி சாலையில் இருக்கும் புத்தூர் கட்டு நிலையம் விரைகிறார்.

படிக்க :
♦ பூங்கொடிகள் வலிமையானவர்கள் !
♦ அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை

அங்கு ஆயிரத்தில் முடிகிறது அவரது சிகிச்சை. உண்மையில் அவரது மூட்டு இணைந்ததா, எலும்பு சேர்ந்ததா என்பதை எக்ஸ்ரே பார்த்து தெரிந்து கொள்ளக்கூட வழியில்லாத மக்கள் மருத்துவம் அது. தற்போது கை வலி விட்டபாடில்லை. புறநகர் அரசு மருத்துவமனை ஒன்றின் பிசியோ தெரப்பியில் ஐ.எஃப்.டி சிகிச்சை பெற்று வலியை குறைக்கிறார். கை இணைய மூன்று மாத காலம் ஆகுமென புத்தூர் வைத்தியர் தெரிவித்திருக்கிறார். பாரிமுனை பூக்கடையில் அவரது சலவை நிலையம் இருக்கிறது. நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாத்தியம் இன்று இல்லை. மனைவி இறந்து விட்டார். மகன்கள் கொடுக்கும் சிறு உதவியுடன் தனது வைத்தியத்தை தானே பார்த்துக் கொண்டு தோளில் போட்ட துண்டுடன் அரசு மருத்துவமனையிலிருந்து நம்முடன் உரையாடிவிட்டு மறைந்து போனார்.

puttur-kattuஒரு சலவைத் தொழிலாளிக்கு முறையான மருத்துவம் கிடைப்பதை இந்த சமூக அமைப்பு ஏன் உத்திரவாதப்படுத்தவில்லை. இன்னொரு புறம் மருத்துவச் செலவிற்கு விதவிதமாய் காப்பீடுகள். அந்தக் காப்பீடு பணம் முழுவதும் கிடைக்கும் வரை ஐசியூவில் வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகள். உனக்கு திடீரென்று விபத்து நடக்கும், திடீரென்று செத்துப் போவாய் என்று பயமுறுத்தியே காப்பீடுகள் கல்லா கட்டுகின்றன. ஏன் ஒரு மனிதன் இறந்து விட்டால் இந்த சமூகம் அவரது குடும்பத்தை காப்பற்ற வழியில்லாமல் இருக்கிறது? அதை பயமுறுத்துவதே ஒரு மாபெரும் தொழிலாக ஏன் இருக்க வேண்டும்? நாய்களுக்கு கிழவர்களை இரையாக்குவதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

இழப்பு இன்னதுதான் என தெரிந்தே நாம் நமது தெரிவுகளை தெரிவு செய்கிறோம். ஏனெனில் இங்கே தெரிவு உண்மையில் தெரிவில்லை, அது ஒரு நிர்ப்பந்தம்.

தேநீர்க் கடையில் தூக்க கலக்கத்துடன் வடை மாஸ்டர் உண்மையில் வட இந்திய மாஸ்டர் வெங்காயங்களை வெட்டிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் விரல்களை வெட்டி விட்டால் என்ன செய்வது? உரிமையாளரிடம் கேட்டால் இரவு விடிய விடிய செல்பேசியில் படம் பார்த்த கொழுப்பு என்று திட்டுகிறார். திட்டை கேட்டுக் கொண்டே சிரித்தவாறு பான் மசாலாவை உள்ளே தள்ளுகிறார் மாஸ்டர். கண்கள் சிவக்க வெங்காயம் தடையின்றி வெட்டப்படுகிறது. சொந்த ஊர் விட்டு, தாய்மொழி, பண்பாடு விலகி அன்னியமான ஊரில் ஏன் இப்படி? அவரைத் துரத்தியது எது? இங்கே வதைப்பது எது?

படிக்க :
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
♦ வங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை !

உழைத்துக் களைக்கலாம். ஆனால் களைப்புக்கு இடமில்லாத வதையாகி விட்டது இன்றைய உதிரி தொழிலாளிகளின் உழைப்பு. இந்த உழைப்புச் சிறையில் இருக்கும் இம்மக்கள் சமூகநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கோ, போராட்டங்களுக்கோ எப்படி வர முடியும்?

பெயருக்கு ஜனநாயகமும், அமலில் அதிகாரமும் இருக்கும் நாட்டில் ஊழல்தான் பணநாயகமாக வீற்றிருக்க முடியும். லஞ்ச லாவண்யங்களை அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களில் இருப்பதை நேரடியாக உணர முடிகிறது. ஆனால் முழு சமூகமும் மறைமுகமாக அதை நோக்கியே பயணிக்கிறது. சிலிண்டர் போடும் தொழிலாளிக்கு ஊதியம் மிகக் குறைவு. அதை ஈடுகட்ட அவர் வாடிக்கையாளர்களிடம் ஐம்பது ரூபாய் வாங்குகிறார். நாளிதழ்களின் ஊரக செய்தியாளர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு. அதை ஈடுகட்ட அவர் கவர் வாங்குகிறார். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. அதை ஈடுகட்ட அவர் டியூஷன் எடுக்கிறார். விடுதிகளின் பரிசாரர்களுக்கு ஊதியம் குறைவு. அதை ஈடுகட்ட அவர் வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் வாங்குகிறார். இவர்களெல்லாம் தமது தொழிலை இன்முகத்துடன் வாடிக்கையாளரோடு செய்ய இயலுமா?

modi-edappadi palaniswamiஇதெல்லாம் இந்த நிறுவனங்களுக்கு தெரிந்தே நடக்கும் நிகழ்வுகள். எடப்பாடி கோட்டு சூட்டுடன் வெளிநாடு சென்று வந்த கதையை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால்தான் கட்சி மற்றும் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். இது அதிகாரப்பூர்வ ஊழல். மோடியின் நூறு நாள் ஆட்சியை பாராட்டினால்தான் தொலைக்காட்சிகளுக்கு பிரச்சினை இல்லை.

ஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு தூங்குவதே இலட்சியம். குறிப்பிட்ட வேலை நேரத்தில் குறிப்பிட்ட சவாரிகளை முடித்தால்தான் ஊக்கத் தொகை கிடைக்கும். அதற்காக ஒரு தெரு தள்ளி இறங்கச் சொன்னாலும் வாடிக்கையாளரிடம் சிடுசிடுக்கிறார். இடுப்பொடிய வண்டி ஓட்டி உணவுகளை விநியோகிக்கும் தொழிலாளிகளுக்கு உணவில் சூடு சற்று குறைந்தால் வாடிக்கையாளரிடம் திட்டு. ரேட்டிங்கில் இழப்பீடு. பிறகு ஏன் அவர் சாலை விதிகளை மதிக்கப் போகிறார்? குடிநீர் லாரிகளும் ஒரு நாளில் இத்தனை சவாரி ஓட்டினால்தான் ஓட்டுநர்களுக்கு வருமானம். பிறகு ஏன் விபத்து நடக்காது?

இரக்கம் பார்க்காத சங்கிலித் திருடர்கள்; அவர்களது கையை ஒடித்து மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியிடும் இரக்கம் பார்க்காத போலீசு. “எந்த விசாரணைக்கும் கிட்டே வராதே, எட்டி நில்” என்பதை அறிவிப்பாய் போட்டுக் கொண்டு காஷ்மீரின் தெருக்களில் காத்துகிடக்கும் இரக்கமில்லாத இராணுவம். ஓய்வூதியத்திற்கும், சமூக நல திட்டங்களுக்கும் மக்களை இரக்கமின்றி அலையவிடும் அதிகார வர்க்கம்! அதே அதிகார வர்க்கத்தை இரக்கமின்றி அப்பார்ட்டுமென்டுகளுக்கும், பொறியியல் – மருத்துவக் கல்லூரிகளுக்கும் இலட்சங்கள், கோடிகளைக் கேட்டு அலைய விடும் முதலாளிகள்! அவர்கள் கையில் நடுநிலைமையென பீதாம்பரத்துடன் நடத்தப்படும் ஊடகங்கள்!

முழு சமூகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வன்முறை ஊழலுடன் பயணிக்கிறதோ? இன்னொருபுறம் பண்பாட்டு அரங்கில் நாளொரு மேனியாக பொழுதொரு விதமாக விதவிதமான கொலைகள்! வன்புணர்ச்சிகள்! இவரா குற்றம் புரிந்தார் என்று அதிர்ச்சியடையும் படியான சராசரி முகங்கள்! மொத்த சமூக அமைப்பும் ரணமாக மாறிவிட்டது. இதை எப்படி களைவது?

“துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.”

  • குறள் 378

இந்தக் குறளுக்கு சாலமன் பாப்பையாவின் விளக்கப்படி “துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.”

ஏழைகள் துன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்பது ஏன் ஒரு விதியாக இருக்க வேண்டும்? அந்த விதியை தோற்றுவித்த சமூக அமைப்பு எது? அந்த அமைப்பைத் திருத்தி ஏழைகளை விடுதலை செய்யும் வரை இந்த சமூகம் ரணப்படுவதை எப்படி மாற்ற முடியும்?

எனில் இந்த சமூக அமைப்பில் நம்பிக்கையூட்டும் அம்சம் ஏதுமில்லையா?

இருக்கிறது. 99% மக்கள் இன்றும் என்ன துன்பம் வந்தாலும் உழைத்துத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதோ, செய்யும் வேலையில் மோசடி செய்வதோ இல்லை. மீதம் இருக்கும் ஒரு சதவீதம்தான் நீங்கள் குறிப்பிடும் ஊழல் செய்யும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளி இன்னபிறர்.

we-are-the-99-percent இடையில் இருக்கும் நடுத்தர வர்க்கம் இரு தரப்பிலும் ஊசலாடினாலும் அதன் நிலையும் இன்றைக்கு உழைக்கும் மக்களின் பிரச்சினைகளோடே அணி சேர்கிறது.

இப்படி உழைப்பில் நேர்மையாகவும் ஏழ்மையை பல்லைக் கடித்துக் கொண்டும் ஓடும் மக்களை அரசியல் படுத்த வேண்டும். இரண்டாவது இந்த ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு இடமில்லை. அதுவே அதிகார வர்க்க தடித்தனத்தையும், ஊழலையும் மக்களுக்கு இன்னல்களையும் தோற்றுவிக்கிறது. அதன்படி போலி ஜனநாயகத்தை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை தோற்றுவிக்க வேண்டும். இந்த இரண்டும் என்று ஒன்று சேர்கிறதோ அன்று தனிமனிதனாகவும், சமூகமாகவும் மனித குலம் அறத்துடன் வாழும். (போலி ஜனநாயகம், புதிய ஜனநாயகம் குறித்து இன்னொரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்)

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க