Friday, December 9, 2022
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை

அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை

-

ஹோவ்னஜம் ஹீரோஜித்
ஹோவ்னஜம் ஹீரோஜித்

”எனக்கு இந்த அமைப்பு முறையின் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது. இருப்பதெல்லாம் உயிர் பயம் ஒன்று தான். சென்ற மாதம் நான் நீதிமன்றத்திலிருந்து திரும்பும் போது போலீஸ் கமாண்டோ பிரிவு ஒன்று என்னை வழிமறித்துப் பிடித்தது. நான் வேலை பார்த்த அதே மேற்கு இம்பால் காவல் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஐந்தாறு மணிநேரம் கொட்டடியில் வைத்து எனக்கு எந்ததெந்த தீவிரவாதக் குழுக்களோடு தொடர்பு உள்ளதென்று விசாரித்தார்கள். எனக்கு அவமானத்தில் உடலெல்லாம் பற்றியெறிந்தது… நான் அவர்களிடம் ‘அப்படி ஏதாவது ஆதாரம் இருந்தால் இதே இடத்தில் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள்’ என்று சொன்னேன்”

– ஹோவ்னஜம் ஹீரோஜித், மணிபூர் போலீஸ் கமாண்டோ.

ஹீரோஜித்தின் வாழ்க்கை நம்மிடம் ஒரே சமயத்தில் கலவையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது. மணிப்பூர் மாநில காவல் துறையின் இழிபுகழ் பெற்ற தீவிரவாத தடுப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய ஹீரோஜித், தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமார் நூற்றுக்கும் அதிகமானவரகளை போலி மோதல்களில் கொன்று குவித்த ‘பெருமை’ கொண்ட ஹீரோஜித், ஒரு கட்டத்தில் வேண்டாத சுமையான போது அவரது எஜமானர்களால் கைவிடப்பட்டார். மொட மொடப்பான சீருடைகளின் பாதுகாப்பில் வெடிக்கும் துப்பாக்கிகளுக்குப் பின் நின்று கொண்டிருந்த ஹீரோஜித், இன்று துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நிற்கிறார்.

’கதையின்’ சுவாரசியம் என்னவென்றால், தற்போது ஹீரோஜித்தை முறைத்துப் பார்ப்பது ‘தீவிரவாதிகளின்’ துப்பாக்கிகள் அல்ல – முன்பு அவரே பெருமிதத்துடன் சுமந்து திரிந்த போலீஸ் துப்பாக்கிகள் தாம் அவை.

fake-encounters
மொட மொடப்பான சீருடைகளின் பாதுகாப்பில் வெடிக்கும் துப்பாக்கிகளுக்குப் பின் நின்று கொண்டிருந்த ஹீரோஜித், இன்று துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நிற்கிறார்.

ஹீரோஜித் துப்பாக்கிகளின் பின்னிருந்து முன்னுக்கு வந்த கதையை – குறி பார்ப்பவரில் இருந்து குறி பார்க்கப்படுவராக மாறிய கதையை – நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கொலையாளியின் உளவியலைப் புரிந்து கொள்வது அல்ல நம் நோக்கம் – மாறாக, கொலைகளின் மீதும், கொலைகள் உண்டாக்கும் அச்சத்தின் மீதும், அந்த அச்சம் வழங்கும் அதிகாரத்தின், அதிகாரம் வழங்கும் திமிரின் மீதும் ஒரு மாபெரும் அமைப்பு நிலை கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மொத்த நாட்டையும் மக்களையும் அவ்வாறானதொரு அமைப்பே ஆள்கிறது எனும் போது, ஹீரோஜித்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் மேலும் அதிகரிக்கிறது.

1981-ம் ஆண்டு ஒரு பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்த ஹீரோஜித், மணிபூரின் இந்து மைத்தாய் இனத்தைச் சேர்ந்தவர். ஹீரோஜித்தின் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த சில ஏக்கர் விவசாய நிலம் முப்போகம் நெல் விளையும் பூமி. நெல் வயல் போக எஞ்சிய நிலத்தில் மூங்கிலும் காய்கறிகளும் வெள்ளாமை செய்தனர். அவரது தந்தை விவசாயம் தவிர அரசு பொது சுகாதாரத் துறையில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வந்தார்.

ஹீரோஜித்தின் விடலைப் பருவ வாழ்க்கையின் அக்கம் பக்கமாகவே வடகிழகு மாநிலங்களின் தேசிய இனப் பிரச்சினைகள் சீர்குலைந்த நிகழ்வும் நடந்தேறியது. மலைகளாலும், பர்மிய எல்லைக் கோடாலும் சூழப்பட்ட மணிபூரின் சமதளப் பகுதியில் இந்து மைத்தாய் இனத்தவர்கள் பெரும்பான்மையாகவும் மலைப் பிரதேசங்களில் நாகா மற்றும் குக்கி பழங்குடி இனத்தவர்களும் வாழ்ந்தனர்.

Manipur-protest-Delhi
நாகா பழங்குடியினர் தங்களுடைய நிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதை துவக்கம் முதலே ஏற்றுக் கொள்ளவில்லை

வரலாற்று ரீதியில் சுயேச்சயான ஆளுகையின் கீழ் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக பொருளாதார நிலையை தக்கவைத்திருந்த நாகா பழங்குடியினர், தங்களுடைய நிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதை துவக்கம் முதலே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய யூனியன் அரசுடன் நாகா பழங்குடியினர் நடத்தி வந்த ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் 1960-களில் ஒரு புதிய வேகத்தில் முன்னேறியது. உலகெங்கிலும் புரட்சிகர முகாம் மேல் கை எடுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் நடந்த நக்சல்பாரி பேரெழுச்சி வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்காக போராடி வந்த இயக்கங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.

பெயரளவிற்கு கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் எனத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட தேசிய இன விடுதலைப் போராட்டக் குழுக்கள், தங்களது லட்சியமாக ‘சோசலிசத்தை’ அறிவித்துக் கொண்டன. இந்நிலையில் அறுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகள் வரை வடகிழக்கின் போராளி இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இழுபறி நிலை நீடித்து வந்தது. இறுதியில் வெற்றிகரமாக போராளிக் குழுக்களுக்குள் ஊடுறுவிய இந்திய உளவுத்துறை அவற்றை ஒன்றுக்கு எதிராக ஒன்றாகத் திருப்பி விட்டது.

எண்பதுகளில் நாகாக்களுக்கு எதிராக குக்கி பழங்குடியினரையும் மைத்தாய் இனத்தவரையும் நிறுத்துவதில் இந்திய உளவுத்துறை வெற்றி பெற்றது. பத்தே ஆண்டுகளில் தேசிய இன விடுதலைப் போராட்டம் எனப்பட்டது, மற்ற இனத்தவருக்கு எதிரானதாக மடைமாறி பின் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதாக சீரழிந்து போனது. இன்றைய தேதியில் மைத்தாய் இனத்தவர்கள் மத்தியில் மட்டும் சுமார் 26 ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. நாகா குக்கி இனங்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட இயக்கங்களும் பல துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. ஒரு தேசிய இனப் போராட்டத்தில் தலையிட்டு இத்தகைய உள் சண்டைகளை உருவாக்குவதில் ஈழம், காஷ்மீரிலும் இந்திய உளவுத் துறை வெற்றி பெற்றதும் இப்படித்தான்.

”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்
”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்

நாகா தேசிய விடுதலைக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தின் வலுவான பின்புலத்தோடு செயல்பட்ட மைத்தாய் குழுக்கள் தொன்னூறுகளின் துவக்கத்தில் விறுவிறுப்பாக செயல்பட்ட காலத்தில் தான் விடலை வயதில் இருந்த ஹீரோஜித்தின் உலக கண்ணோட்டம் உருப்பெறத் துவங்கியிருந்தது. ஹீரோஜித்தின் தந்தை அரசு வேலையில் இருந்ததாலும், அவரது குடும்பத்திடம் வளமான விவசாய நிலம் இருந்ததும் பல்வேறு மைத்தாய் குழுக்களின் கண்களை உறுத்தியது. ஹீரோஜித்தின் வீட்டுக் கதவுகளை நிதி வசூலுக்காக அடிக்கடி மைத்தாய் போராளிகள் தட்டத் துவங்கினர்.

தனது பதினேழாவது வயதில் ஒரு நாள் வசூலுக்காக வந்த குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹீரோஜித், நிதி வசூலுக்காக தனது குடும்பத்தை தொல்லை செய்வதை நிறுத்தினால் தானே இயக்கத்தில் சேர்வதாக முன்வந்திருக்கிறார். பதறிப் போன குடும்பத்தினர் தலையிட்டு ஹீரோஜித்தை மீட்டிருக்கிறார்கள் – எனினும், தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொடியனுக்கு பாடம் புகட்ட நினைத்த மைத்தாய் போராளிகள் ஹீரோஜித்தை அடித்துத் துவைத்திருக்கிறார்கள்.

”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்.

பன்னிரண்டாம் வகுப்பு தேறிய பின் கீழ்நிலைக் காவலராக பணிக்குச் சேர்ந்த ஹீரோஜித் தனது இருபத்தியோராம் வயதில் – 2002 டிசம்பரில் – தனது கொலைக்கணக்கைத் துவங்கினார். அதுவரை அரசியல் ஸ்திரத்தன்மையற்று ஊசலாடிக் கொண்டிருந்த நிலை மாறி அதே ஆண்டு மார்ச் மாதம் ஒக்ராம் இபோபி சிங் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். தொன்னூறுகளோடு தேசிய இன போராளிக் குழுக்களையும் அவற்றின் லட்சியங்களையும் சமாதிகட்டி விட்டிருந்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அடுத்து அவசரமான தேவையாக இருந்தது “அமைதி”. எனவே, ஆயுதக் குழுக்களை கட்டுக்குள் வைக்கவும், கட்டுமீறிச் செயல்படுகிறவர்களை ஒழித்துக்கட்டவுமான தேவை அந்த சமயத்தில் எழுந்திருந்தது.

மேற்கு அயர்லாந்து போலீசிடம் எதிர்-பயங்கரவாத போர்த் தந்திரங்களில் (Counter-terrorism strategy) பயிற்சி பெற்றவரும், காஷ்மீர் போலீசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான யும்னம் ஜோய்குமாரை மணிபூர் மாநில பணிக்கு கோரிப் பெற்றார் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றிருந்த இபோபி சிங். புலனாய்வு செய்வது, விசாரணை அறிக்கை தயாரிப்பது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவது போன்ற வழக்கமான நடைமுறைகளின் மேல் நம்பிக்கையற்றவரான ஜோய்குமார், சந்தேகத்திற்குரிய யாரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்கிற சித்தாந்தம் கொண்டவர்.

joykumar
Dr. நிமாய்சந்த் லுவாங், பா.ஜ.க.வின் தீவிர உறுப்பினர்கள் முன்னாள் DGP ஜாய்க்குமார் மற்றும் மூத்த அரசியல்வாதி ஒக்ரம் ஜாய்

சுருங்கச் சொன்னால், கும்பல் கும்பலாக மக்களைக் கொன்று குவித்து விட்டால் எப்படியும் அந்த உயிர்களில் ஒன்றாவது ’பயங்கரவாதியாக’ இருப்பது நிச்சயம் – ஒருவேளை இல்லாவிட்டாலும் பழுதில்லை, கொலைகள் விளைவிக்கும் அச்சம் மக்களை அரசுக்கு எதிராக செயல்பட விடாமல் தடுக்கும் என்பதே ஜோய்குமார் மேலை நாடுகளில் கற்ற, காஷ்மீரில் சோதித்துப் பார்த்த “தீவிரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகளின் சாராம்சம். மாநில போலீசில் பொறுப்பேற்றுக் கொண்ட ஜோய்குமார் துடிப்பான காவலர்களைக் கொண்டு அதிரடிப்படை ஒன்றை அமைக்கிறார் – ஹீரோஜித் எந்தத் தயக்கமும் இன்றி அதில் சேர்கிறார். அதிரடிப்படையில் சேர்ந்தவுடன் ஹீரோஜித் முதன் முதலாக கொன்ற இருவரும் தீவிரவாதிகள் அல்ல – வெறும் சந்தேகத்திற்குரியவர்கள் தாம்.

“எனக்கு என்ன தேவையோ அதை நான் செய்யத் துவங்கிவிட்டேன்” – தனது முதல் கொலைகளை செய்து முடித்தபின் ஒரு ஆழ்ந்த அமைதியில் இருந்ததாகவும், அப்போது தனக்கு இப்படியாகத் தோன்றியதாகவும் குறிப்பிடுகிறார் ஹீரோஜித்.

அதன்பின் ஹீரோஜித் செய்த போலி மோதல் கொலைகளின் எண்ணிக்கையை சரியாகச் சொல்லத் திணறுகிறார். எண்ணிக்கையை நினைவு வைக்க முடியாத நிலையில், அதற்கெனத் தனியே ஒரு இரகசிய கையேட்டைப் பராமரித்துள்ளார். அவரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை நினைவுபடுத்திச் சொல்லுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டபோது,

”எப்படியும் நூற்றுக்கும் மேல் தான் இருக்க வேண்டும்” என்கிறார்

புதிதாக ஒரு உயிரைப் பறித்த நாளில் வீடு திரும்பும் ஹீரோஜித் உள்ளே நுழையும் முன் மனைவியை அழைப்பார். தனது உடைகளை வீட்டுக்கு வெளியே களைந்து விட்டு தலை முழுகிய பின் தான் வீட்டினுள் நுழைவார். தனது கணவன் ஒரு கொலையைச் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான் என்பதை அந்தப் பெண் புரிந்து கொள்ளும் போது, கொலைகளின் எண்ணிக்கை நூறைக் கடந்திருந்தன. போலி மோதல் ஒன்றை அரங்கேற்ற போலீசுக்குத் தேவைப்பட்டதெல்லாம் வெறும் சந்தேகம் மட்டும் தான்.

herojit
அதிரடிப்படையில் சேர்ந்தவுடன் ஹீரோஜித் முதன் முதலாக கொன்ற இருவரும் தீவிரவாதிகள் அல்ல – வெறும் சந்தேகத்திற்குரியவர்கள் தாம்

முகமது ஆசாத் கான் என்ற ‘தீவிரவாதியை’ ஹீரோஜித்தின் அதிரடிப்படைக் குழு வளைத்துப் பிடித்த போது அவனது வயது 12 – பிடித்த இடம் அவனது வீடு – ‘தீவிரவாதி’ பிடிபட்ட போது ஈடுபட்டிருந்த காரியம் – அவனது தாயின் மடியில் படுத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆசாத் கானின் குடும்பத்தினரின் கண்ணீரும் கதறலும் ஹீரோஜித்தையும் அவரோடு உடன் சென்ற போலீசாரையும் கடுகளவும் அசைக்கவில்லை. அந்தப் பையனை வீட்டிலிருந்து தர தரவென இழுத்து வந்த அரசின் ’வீரர்கள்’, அவன் குடும்பத்தார் பரிதவிப்போடு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனை அருகிலிருந்து வயலில் ஓட விட்டு முதுகில் சுட்டுக் கொன்றனர்.

“எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது.. சரியாக குறிபார்ப்பேன் என்பதைக் கடந்து, எனது வேலையை மிகச் சரியாக செய்வேன் என்று எனது அதிகாரிகளுக்குத் தெரியும்” மனசாட்சியோ, ’வீரர்களுக்கு’ நியாயவுணர்ச்சியோ மனதின் எந்த மூலையிலும் எட்டிப் பார்த்து விடக்கூடாது என்பதே அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. உத்தரவை எந்தக் கேள்விகளும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் வீதிகளில் உரிமை கேட்டுப் போராடிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கையாண்ட விதத்தைப் படித்தவர்களுக்கு உள்ளம் பதறியிருக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துவைத்து, அவர்கள் கையிலிருக்கும் குச்சிகளைப் பிடுங்கியெறிந்து விட்டு அவர்களைக் கொத்தாக அள்ளிச் சென்று ஊருக்கு வெளியே அவர்களுக்குப் பழக்கமில்லாத இடத்தில் விட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் போலீசின் மனசாட்சியும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஆசாத் கானைச் சுட்டுக் கொன்ற மணிபூர் போலீசின் மனசாட்சியும் வல்லுறவுக்கு ஆளான தில்லியைச் சேர்ந்த இளம்பெண் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை சொருகிக் கொன்றவனின் மனசாட்சியும் வேறு வேறு அல்ல.

ஹீரோஜித்தின் மனசாட்சியை உலுக்கப் போகும் சம்பவம் 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் காலை உணவுக்காக ஹீரோஜித் அமர்ந்திருந்த போது சக போலீஸ்காரர் தோயாமாவிடமிருந்து வயர்லெஸ் தகவல் ஒன்று கிடைக்கிறது. பகுதியில் உள்ள உள்ளூர் சந்தையின் அருகே அடையாளம் தெரியாதவர்களால் போலீஸ் ரோந்துப் படை ஒன்று தாக்கப்பட்டதாக அறிந்த ஹீரோஜித் உடனே அங்கு விரைகிறார்.

Manipur-fake-encounter-sanjit
போலி என்கவுண்ட்ரில் கொல்லப்பட்ட சஞ்சித்

“நான் அங்கே சென்ற போது தொயாமா 22 வயது பையன் ஒருத்தனை இழுத்து வந்தார். அவன் பெயர் சஞ்சித். நாங்கள் அவனிடம் விசாரித்துப் பார்த்தோம். அமைதியாக இருந்தான். அவன் தான் சுட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அந்த நேரம் பார்த்து அவனது செல்பேசி அழைத்தது. நான் தான் அதை எடுத்தேன்… செல்பேசியில் அழைத்தவர் சஞ்சித்தை விட்டு விடுமாறும்.. தேவைப்பட்டால் காசு வேண்டுமானாலும் கொடுத்து விடுவதாகவும் சொன்னார்.. எனக்கு இது ஒன்றே போதுமான ஆதாரமாக இருந்தது”

சஞ்சித்தை பக்கத்திலிருந்த மருந்துக் கடைக்குள் அழைத்து சென்று தனது கைத்துப்பாக்கியால் ஆறு முறை சுட்டுக் கொன்றார் ஹீரோஜித்.

“நான் எனது மேலதிகாரி அகோய்ம் ஜகலஜீத்திடம் சஞ்சித் பிடிபட்ட தகவலைத் தெரிவித்தேன். அதற்கு அவர் தீர்த்துக் கட்டிவிடுமாறு கூறினார். போலீஸ் தேடுதல் வேட்டையைக் கேள்விப்பட்டு வந்த மீடியாக்கள் சுற்றிலும் இருக்கிறார்களே என்றேன். அதற்கு, டி.ஜி.பி அனுமதி வாங்குவதையும் முதல்வருக்கு தகவல் அளிக்க வேண்டியதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. மீடியாவையும் சமாளித்துக் கொள்ளலாம்.. நீ சீக்கிரம் அவனை முடிக்கிற வழியைப் பார் என்று தெரிவித்தார்” என்கிறார் ஹீரோஜித்.

போலி மோதல் கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த மணிபூர் தாய்மார்கள் ஒன்று சேர்ந்து “ஈவ்ஃபாம்” (Eevfam – இரத்தத்துளிகள்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றின்படி மொத்தம் 1,528 போலி மோதல் கொலைகளை மணிபூர் போலீசார் அரங்கேற்றியுள்ளனர். சஞ்சித்தின் கொலையும் அந்த எண்ணிக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்க வேண்டிய ஒன்று தான் – ஆனால், தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தனது கேமராவில் பதிவு செய்திருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவற்றை வெளியிட்டார்.

சஞ்சித் மருந்துக் கடைக்குள் நின்று கொண்டிருந்த ரோந்துப் படையினரின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், திருப்பி தாக்கியதில் இறந்து விட்டாரென்றும் போலீசு அதிகாரிகள் எழுதிய விசாரணை அறிக்கையின் மை காய்வதற்குள் பத்திரிகையாளர் வெளியிட்ட புகைப்படங்கள் தெகல்காவில் வெளியாகியிருந்தது. அந்தப் புகைப்படங்களில், சஞ்சித் அமைதியாக போலீசாருடன் நடந்து வருவதும், போலீசார் விசாரிக்கும் போது பொறுமையாக பதில் சொல்வதும், பின்னர் அவனைத் தரதரவென இழுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குள் செல்வதும், சற்று நேரம் கழித்து பிணமாக இரண்டு கால்களையும் பிடித்து இழுத்து வந்து வாகனம் ஒன்றினுள் வீசுவதும் தெளிவாக பதிவாகியிருந்தது.

Eevfam
போலி மோதல் கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த மணிபூரி தாய்மார்கள் ஒன்று சேர்ந்து “ஈவ்ஃபாம்” (Eevfam – இரத்தத்துளிகள்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர்

ஏதுமறியாத இளைஞன் ஒருவன் பச்சையாக படுகொலை செய்யப்பட்டது ஆவணப் பூர்வமாக வெளியானதைக் கண்ட மனசாட்சியுள்ளவர்கள் திகைத்துப் போனார்கள் – மணிப்பூர் மக்களோ கொந்தளித்து எழுந்தனர். அடுத்த வந்த சில வாரங்களுக்கு போராட்டங்களால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்து போனது. போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் மாநில அரசு நிர்வாகம் திணறியது. உடனடியாக இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்பட்ட மாநில அரசு, ஹீரோஜித்தைக் கை கழுவியது. அவரைத் தற்காலிக இடைநீக்கம் செய்த போலீசு, தற்போது கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளது.

ஹீரோஜித் போலீசாக வேலை பார்த்த நாட்களில் மிகவும் நேர்மையானவர். கை நீட்டி லஞ்சம் வாங்காதவர். இடைநீக்கம் செய்யப்படுவதற்கு ஒருவருடம் முன்பு சிறந்த போலீசுக்கான மாநில அரசின் விருதை வாங்கியவர். அவரைப் பொறுத்தவரை போலீசு வேலை என்பது சம்பளத்திற்கானதல்ல – அது ஒரு கவுரவம். சீருடையைப் பார்த்து ஒதுங்கிப் போகும் மக்களின் அச்சம் ஹீரோஜித்திடம் ஒரு போதையை ஏற்படுத்தியது – அந்த போதையைத் தவிற பிற வஸ்துக்களை வாழ்நாளில் தொட்டே பாராத ’நல்லவர்’ ஹீரோஜித். குடியோ, புகையோ, பெண்கள் சகவாசமோ இல்லாத அவருக்கு லஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் இல்லை.

போலீசு வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின் தண்ணீரைப் பிரிந்த மீனாக துடித்திருக்கிறார் ஹீரோஜித்

சீருடையில்லாத வாழ்க்கை ஒருபுறம், தான் மிகவும் நேசித்த காவல்துறை ஒரு சிக்கல் என்று வந்த போது பல்லி வாலைத் துண்டிப்பது போல் கைகழுவி விட்டது இன்னொரு புறம், அடுத்து சொந்தக்காரர்கள் மத்தியில் கண்ணியமான போலீசுக்காரனாக அறியப்பட்டதெல்லாம் இப்போது சாயம் வெளுத்துப் போய் வெறும் சீருடைக் கொலையாளியாக இழிந்து போன நிலை, தனது கணவன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஈவிரக்கமின்றித் தீர்த்துக் கட்டிய கொலைகாரன் என்பதை அறிந்த அவர் மனைவியின் அதிர்ச்சி – இவையத்தனையும் ஒரு சேர ஹீரோஜித்தை உளவியல் சித்ரவதைக்குள்ளாக்கியதில் அவர் மன அழுத்த நோயில் வீழ்கிறார்.

herojith-way-to-court
ஹீரோஜித் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில்

சதா காலமும் தன்னை சுற்றிச்சுழலும் பழைய வாழ்க்கையின் நினைவுகளும், அவரால் பறிக்கப்பட்ட உயிர்களும், அவரைக் கண்டு அஞ்சிய விழிகளும் ஹீரோஜித்தின் தனிமையை உலுக்கியெடுத்திருக்க வேண்டும். வெகு சீக்கிரமாகவே அவர் போதைக்கு அடிமையானார்.

”நான் எப்போதும் புகைத்ததில்லை. ஆனால், தூக்கமற்ற இரவுகளைக் கழிக்க வேறு வழியின்றி போதை மருந்துகளை நாடினேன்”

உறக்கத்துக்காக போதை மருந்துகளை நாடிய ஹீரோஜித், ஒருகட்டத்தில் அவற்றுக்கு முழுமையாக அடிமையாகிவிட்ட நிலையில் தான் துறை விசாரணைகளின் உக்கிரமும் அதிகரிக்கிறது. அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதும், பல மணி நேரங்கள் விசாரணைக் கைதிகளோடு அமர வைக்கப்படுவதும், பின்னர் “எந்த இயக்கத்தோடு உனக்கு தொடர்புள்ளது” என்ற ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப பல பணி நேரங்கள் கேட்பதுமாக நடந்த விசாரணை நடவடிக்கைகள் ஹீரோஜித்தை உளவியல் ரீதியில் சித்தரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

என்றாலும், இன்றைக்கும் தான் செய்த கொலைகள் தவறானவை என்றோ, தனது செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்றோ ஹீரோஜித் கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை இறந்தவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே. மேலும், தனது முந்தைய போலீசு வாழ்க்கையை இன்னும் நேசிக்கிறார். அந்த வேலை அளித்த அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மக்களிடம் உண்டாக்கிய அச்சத்தையும் அந்த அச்சம் வழங்கிய சமூக அந்தஸ்த்தையும் நினைத்து மருகுகிறார். எனினும், தான் உயிராக நேசித்த போலீசைக் காட்டிக் கொடுப்பதற்கு ஹீரோஜித் தயங்கி வந்த சமயத்தில் தான் வண்டியின் அச்சு உடையத் தேவையான கடைசி மயிலறகை போலீசார் அதன் மேல் தூக்கிப் போட்டனர்.

அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது
அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது

ஹீரோஜித்துடன் அதிரடிப்படையில் வேலை பார்த்த நண்பர்களைக் கொண்ட குழு ஒன்று அவரது வீட்டை சோதனையிட்டது. மனைவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கிரிமினலைப் போல் அவரை இழுத்துச் செல்கிறார்கள். விசாரணை முடிந்து திரும்பிய ஹீரோஜித், மனதிற்குள் புழுங்குகிறார். அவர் முன் இருந்தது இரண்டே வாய்ப்புகள் தான் – ஒன்று, அமைதியாக இருந்து சஞ்சித் மரணத்திற்கான பழி அனைத்தையும் ஏற்றுக் கொள்வது; அல்லது, உண்மையை வெளியிடுவதன் மூலம் சஞ்சித் மட்டுமின்றி நடந்த கொலைகள் அத்தனையும் உத்தரவின் படி தான் நடந்தது என்பதை நிரூபித்து அதிகபட்ச தண்டனையில் இருந்து தப்பிப்பது. உடனடியாக பப்லு என்கிற வழக்கறிஞரைத் தொடர்பு கொள்கிறார். போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் சார்பாக சில நீதிமன்ற வழக்குகளை கையாண்டு வரும் பப்லு, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட.

2013-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இரகசிய இடம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து உண்மைகளையும் வெளியிட்டார் ஹீரோஜித். முதன் முறையாக போலி மோதல் கொலைகள் எப்படி ஏற்பாடு செய்யப்படுகின்றன, அதிகாரிகள் கொல்லப்பட வேண்டியவர்களை எப்படி தீர்மானிக்கின்றனர், கொலைக்கான உத்தரவுகள் யாரால் பிறப்பிக்கப்படுகின்றன, கொலை நடந்த பின் எழுதப்படும் கதைகளை உருவாக்குவது யார், ஊடகங்களின் மூலம் அந்தக் கதைகளை எப்படி பரப்புகின்றனர், ,நீதிமன்றத்தை சமாளிப்பது, மற்றும் இன்னபிற அரசு நடைமுறைகள் என – அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது.

வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த படை வீரர்களைக் குவித்து போராடும் மக்களை அடக்கும் உத்தி ஒரு கட்டத்தில் பலனளிக்காததோடு, இந்திய ஆளும் வர்க்ங்களுக்கு கசப்பான அனுபவங்களான போதுதான் ஒடுக்கப்படும் அதே மக்கள் பிரிவிலிருந்து, அதே தேசிய இனத்திலிருந்து ஹீரோஜித், ஜோய்குமார் போன்றவர்களை தெரிவு செய்கிறது ஆளும் கும்பல். ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை இயந்திரத்தின் பாகங்களாக ஹீரோஜித் போன்று ‘பாதிக்கப்பட்ட’ உள்ளூர்வாசிகளே பங்குபெறும் போது அடக்குமுறையின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கிறது

இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்?
இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்?

ஹீரோஜித் வெளியிட்ட உண்மைகளை இந்தியா வழக்கம் போல கடந்து சென்றாலும், வடகிழக்கு மாநிலங்களில் அது உண்டாக்கிய அதிரவலைகளோ இன்றளவும், அடங்கவில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் மாத்திரம் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கா விட்டால், ஹீரோஜித்துக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்காது என்கிற எதார்த்தத்தையும் சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். தான் செய்த கொலையொன்று படம் பிடிக்கப்பட்டு அம்பலப்பட்ட பின்னும் தனது போலீசு புத்தியை மாற்றிக் கொள்ள முன்வராத ஹீரோஜித், தான் வழிபட்ட போலீசு இயந்திரம் தனக்கே எதிராக திரும்பிய பின் தான் விழித்துக் கொள்கிறார்.

எனில், இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்? மணிப்பூர் என்கிற சின்னஞ்சிறிய மாநிலம் ஒன்றில் மட்டும் சுமார் அயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல்களிலும், கொட்டடிச் சித்திரவதைகளிலும் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்? ஹீரோஜித் பேசி விட்டார்.. தண்டகாரன்யத்திலும், காஷ்மீரிலும் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்ட ஆயிரக்கணக்கான படை வீரர்களிடம் இது போல் எத்தனை கதைகள் இருக்கும்? அவர்களால் பறிக்கப்பட்ட அப்பாவி உயிர்கள் எழுப்பும் பேச இயலாக் கேள்களுக்கு பதில் சொல்வது யார்?

உரிமை கோரிப் போராடும் மக்களை சித்திரவதை செய்து ஒடுக்கும் போலீஸ்காரர்கள் தங்கள் அந்திமக் காலத்தைக் குறித்து சிந்திக்கட்டும்; சொந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை வதைத்து விட்டு உங்களால் நிம்மதியாகக் கண் மூட முடியுமா? ஒரு நாள் விழித்துக் கொள்ளப் போகும் மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அடுத்த முறை லத்தியை ஓங்கும் முன் ஹீரோஜித்தை நினைத்துப் பாருங்கள்

”அப்பா, நீ ஒரு கொலைகாரனா என்று கேட்கப் போகும் எனது மகனுக்கு நான் என்ன பதிலைச் சொல்லப் போகிறேன்? – என்கிறார் ஹீரோஜித்

– தமிழரசன்.

நன்றி: The Guardian     (மூலக்கட்டுரை)

பின்குறிப்பு: இம்பாலில் ஆயுதமேந்தாத சஞ்சித் என்னும் இளைஞனை போலி மோதலில் கொல்லப்பட்டதை அம்பலபடுத்திய புகைப்படங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க