privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதொலைகின்ற தருணங்களில் வழிநடத்தும் விரல்கள் - விஜயபாஸ்கர், பெரோஸ், சுதாகர்

தொலைகின்ற தருணங்களில் வழிநடத்தும் விரல்கள் – விஜயபாஸ்கர், பெரோஸ், சுதாகர்

-

என் பார்வையில் வினவு – 15 : சு. விஜயபாஸ்கர்

ன்பார்ந்த வினவு தோழர்களே

எப்படி ஒரு ஊடகம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ, அப்படிப்பட்ட ஒரு ஊடகத்தை வினவின் ஊடாக நான் கண்டேன். ஆதிக்க சக்திகளுக்கு ஒத்து ஊதும் குழலாக இல்லாமல், சங்கு ஊதும் சக்தியாக இருப்பது கண்டு மகிழ்வடைகிறேன். ஒரு அலங்காரம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், பூசி மொழுகுதல் இல்லாமல் உண்மையை உரக்க சொல்லும் வினவு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வினவின் பிறந்த நாளும் என் பிறந்த நாளும் ஒருசேர வந்திருப்பது இன்னொரு மகிழ்ச்சி. என்ன வினவுக்கு கொஞ்சம் என்னைவிட வயது குறைவு.

பெரியார்
வீரமணி கும்பலிடமிருந்து பெரியார் விடுதலை?? (வினவு கட்டுரை)

நான் வினவை கடந்த இரண்டு ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். அதன் தாக்கம் என்னுள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் தாண்டி என் நண்பர்களிடம் போய் சேர்ந்து இருக்கிறது. பெரியார்வாதி என்ற அடிப்படையில் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும் என் எண்ணம் எனக்கு இருந்தது. வினவு வாசித்த பின்னர், தோழர்களிடம் பேசிய பின்னர், சாதி மறுப்பு திருமணம் மட்டுமே பண்ண வேண்டும் என்ற திண்ணமான உறுதி ஏற்பட்டது. நண்பர்கள் பலர் பெற்றவர்கள் பேச்சை கேள், பெற்று வளர்த்த காரணத்திற்காக அவர்கள் சொல்படி திருமணம் செய்து கொள் என அறிவுரை சொன்னதுண்டு. ஆனால் வினவின் தாக்கம் அந்த அறிவுரைகளை புறந்தள்ளி விட்டன. எனக்கு பதிவு எழுதும் அளவுக்கு நேரம் இருப்பதில்லை. சில நேரங்களில் திட்டமிடாமல் கிறுக்கியது உண்டு. வினவின் பதிவுகளை படிக்கும் போது நாம் கிறுக்கியது எவ்வளவு மோசமான குப்பை என்று அறிந்து கொள்ள முடியும்.

அடிப்படையில் நான் ஒரு பெரியாரிய வாதி. பெரியார் எந்த வித அலங்காரமும் இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தினார். எனக்கு பிடித்த, நல்ல இன்றைய பெரியார்வாதிகள் அந்த நிலையில் இருந்து வழுவி விட்டனர். ஆனால் வினவு அவ்வாறு நழுவ வில்லை. நண்பர் குமரன் கூறியது போல வினவுதான் எனக்கும் விக்கிபீடியா. யாரையாவது பற்றி அறிந்து கொள்ளவேண்டுமெனில் நான் முதலில் வருவது வினவைத் தேடித்தான்.

வினவிற்கு வரும் எதிர்ப்புகள், சந்தர்ப்பவாதிகளை அம்பலபடுத்துவதில் முதல் இடம் வினவுக்குதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபணம் செய்கின்றன. நமக்கு பிடித்தவர்கள் என்பதால் அவர்கள் செய்யும் தவறை நாம் பலநேரம் கண்டுகொள்வதில்லை. ஆனால் வினவிடம் அந்த சமரசம் இல்லை. நல்லது செய்யும் போதும், ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் போது ஏற்படும் சங்கடங்களின் போதும் துணை நிற்பதும் வினவிற்கே உரித்தான பண்பு.

சீமான், கொளத்தூர் மணி உட்பட்ட பலருக்கு அரசு இயந்திரம் சிக்கல் ஏற்படுத்திய போது, அதை எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் அதே சீமான்,மே 17 உட்பட்ட பலரின் தவறுகளை அம்பலப்படுத்தியாக இருக்கட்டும், வினாவிற்கு சரிநிகர் வினவேதான். இதைப்போன்ற வினவின் எழுத்துக்களின் வீச்சை அடுக்கிகொண்டே போகலாம்.

பாராட்டுகள் அதிகமாகும் வேளையில் செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் இருக்கின்றன என்பதை வினவின் தோழர்கள் உணர்ந்து இன்னும் பரந்த வீச்சுடன் செயல்படுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. உதவ நாங்கள் இருக்கிறோம். மக்களும் துணை நிற்பார்கள்.

வினவின் நக்கல் நடையை நான் பல நேரங்களில் ரசித்ததுண்டு. சில நேரங்களில் நக்கல் தூக்கலாகவும் இருந்ததுண்டு. அது என் பார்வையில் தவறாய் பட்டதில்லை. குறிப்பாக கடவுளர்களையும், நான்தான் கடவுள் என்று கூவும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் எழுத்து நடையை ரசித்ததுண்டு. உதாரணம் கூறவேண்டுமெனில் “ஒரு மேக வெடிப்புக்கே தன் மேல வாசலை இழந்து விட்ட சிவனோ கேதார்நாத்தில் மலைப்பிரதேசத்தில் குளிருக்கு நடுங்கியபடி அம்மணமாக நிற்கிறான்” என்று கூறும் போதாகட்டும், அல்லது “இத்தனை கடவுள்கள் இருந்தும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்த பக்தர்களை காப்பாற்ற வக்கில்லை” என்று கற்சிலைகளின் உண்மை நிலையை வெளிக் கொணறும் வேளைகளில் அதில் உள்ள நக்கல் நடையும், எள்ளல் தூக்கலாக இருப்பதையும் ரசிப்பதுண்டு.

வினவை இன்னும் பலருக்கு கொண்டு சேர்க்கவேண்டிய பணியை நீங்கள் முதலில் செய்தாக வேண்டும். உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று நாறும் குப்பையையே அல்லக்கைகள் உளறிக்கொட்டும் வேலை செய்யும் போது, உண்மையை ஊரறிய செய்யும் வேலையை செய்யும் உங்களது பணியை உலகுக்கு சொல்வதில் தவறேதும் இல்லை.

உங்களிடம் குறைகள் சொல்வதற்கு எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், தனிநபர் தாக்குதல்களை தவிர்க்கலாம். ஏனெனில் இன்றைய உலகில் ஒருவன் 100 விழுக்காடு நல்லவனாக இருப்பது என்பது மிகக்கடினம். ஆகவே சில நேரங்களில் சிலரை அரவணைத்து செல்வது மிக்க நலம் பயக்கும் என்பது என் கருத்து. ஊர் கூடித்தேர் இழுக்கலாம் என்பது பொதுவிதி.

நம்முடைய(எனக்கும் சேர்த்துதான்) அடுத்த பிறந்த நாளை நம்பிக்கையுடன் சிந்திப்போம்.

தோழமையுடன்
சு.விஜயபாஸ்கர்
http://periyarinporvaal.blogspot.sg/

என் பார்வையில் வினவு – 16 : சுதாகர் வெங்கடாசலம்

“தொலைகின்ற தருணங்களில்தான் நம்மை வழிநடத்துகிற விரல்கள் அவசியமாகிறது”.

அப்படி ஏகாதிபத்தியம், உலகமயமாக்கல் என நமக்கு அறியாமலேயே நம்மை இந்த பாதாள சாக்கடைக்குள் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் நாற்றங்களை இயல்பாய் ஏற்கவும் இன்றைய சமூக சூல்நிலைகள் நம்மை பழக்கிக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சிக்கியவனாய் உணர்ந்தபோது வினவின் விரல் அவசியமானது.

வினவின் வாசகனானால் உண்மையும் ஒருமுறை தன்னை உரசிப்பார்த்துக் கொள்ளும். வினவின் பணி பிரமிக்க வைக்கிறது. செங்கொடி தளத்திற்கு நன்றி. அதன் மூலமாகதான் வினவை நான் அடையாளம் கண்டேன்.இன்று நம் இயல்புகள் முரண்பாடுகளாய் தோன்றுமளவிற்கு பெருவாரியான மக்கள் முரண்பாடுகளோடேயே வாழவும் பழகிக்கொள்கின்றனர். இதனை ஒவ்வொருவருடனும் நம் கருத்து முரண்படுவதிலிருந்து அறிந்தேன்.

மண் மலடாகிக்கொண்டிருக்கின்றது. அது போல் மக்களும்தான் அவர்களின் சிந்தனைகளில். இரசாயன உரமும், பூச்சிக்கொல்லியும் மண்ணை மலடாக்கின. மதமும்,சாதியும், கடவுளும் நம் மக்களை மலடாக்கின. இயற்கையை மண் ஏற்காது விளைவு இயற்கையின் சீற்றம். இயல்பை மனிதம் ஏற்காது முதலாளித்துவத்தின் ஆட்டம்.

மண் அதன் தன்மைகள் உணர இயற்கையின் விவசாயம் வழி என்றால் மனிதன் அவன் உண்மைகள் உணர கம்யூனிசமே வழி. இங்கு பொய்களே வாழ்ந்து கொண்டுள்ளதால் அதை தகர்க்கும் வினவின் சிந்தனைகள் முரண்பாடாக தோன்றுகிறது. எனக்கு என் தந்தை உரைத்த நடைமுறைதான் இங்கும் பொருந்துகிறது.”நீ எல்லோருக்கும் நல்லவனாக வேண்டுமானால் எல்லோருக்கும் நேர்மையாக வாழமுடியாது,நீ எல்லோருக்கும் நேர்மையானவனாக வேண்டுமானால் எல்லோருக்கும் நல்லவனாக வாழமுடியாது-நல்லவனானால் உனக்கு மட்டுமே பயன்படுவாய் நேர்மையானவனானால் பொது வாழ்க்கைக்கு பயன்படுவாய்”. இந்த வாசகங்களின் ஊற்றுக்கண் யார் என்று நான் ஆராய்ந்ததில்லை. ஆனால் இதனை எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தைதான்.

முதலாளித்துவம் அதன் நடை,உடை,பாவனை எல்லாம் மாற்றிவிட்டது. அதனை பழைய முகவரியில் பார்க்க முற்படுவது அபத்தம்.நவீன முதலாளித்துவம் முக்காடு போட்டுக்கொண்டு நம்மீது மூன்றாம் உலகப்போரை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அதனை தன் ஒவ்வொரு கட்டுரைகளிலும் வினவு தோலுரிக்கிறது. எங்களைப் போன்றோருக்கு சலங்கையும் கட்டிவிடுகிறது.

வினவின் பணி மென்மேழும் தொடர வாழ்த்துக்கள்.

– சுதாகர் வெங்கடாசலம்

எங்கள் பார்வையில் வினவு – 17 : ஃபெரோஸ், அபு, நவாஸ்

ல்லோரும் என் பார்வையில் வினவு என சொல்லும் போது நாங்கள் மட்டும் எங்கள் பார்வையில் வினவு என்றே எழுத முடியும்..

ஆம், நான் என் பால்ய சிநேகிதர்கள் அபுதாஹீர், நவாஸ் எல்லாம் மதம் மீதான எங்கள் கேள்விகளுக்கு விடை தேடி அலைந்து கொண்டு இருந்த காலம்.

சமூக வலைத்தளமான ஆர்க்குட் மூலம் சில நண்பர்கள் எமக்கு அதற்கான விடைகளை அளித்தார்கள். அப்படியே கோவை பெரியார் படிப்பகமும் அதில் பெரும் பங்காற்றியது, அதன் பிறகு ஒரு ஆர்க்குட் நண்பர் மூலமாக எல்லா சனிக் கிழமையும் நாங்கள் கூட்டாக இணைந்து எழுத்தாளர் பாமரன் அறைக்கு சென்று இரவு முழுவதும் ஏதேனும் விஷயங்களை அவரோடு விவாதிப்பதன் மூலம் கற்றுக்கொண்டோம். அதே ஆர்க்குட்டில் அறிமுகமானார் சூப்பர் லிங்க் சென்னை எனும் பெயரிலான ஒரு முகம் அறியா நபர். அவர் தான் வினவு லிங்கை எங்களுக்கு ஆர்க்குட்டின் வழி வழங்கினார்.

அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ப்ரொவ்சிங் சென்டர் சென்று அப்பப்போ வினவு படிப்போம். சில பொழுதுகள் மறுமொழியும் பதிவோம். அவ்வாறு படிக்க துவங்கிய நாங்கள் அதன் பிறகு குழுவாக ப்ரிண்ட் அவுட் எடுத்து ஒன்றாக படிக்க துவங்கினோம். இப்போது எல்லோரிடமும் லேப்ட்டாப் இருப்பதால் தனித்தனியாக அவர் அவர் இடத்திலேயே படித்துக் கொள்கிறோம் எனினும் வாரம் ஒருமுறையேனும் வினவில் வரும் சில முக்கிய கட்டுரைகள் குறித்து விவாதிப்போம். அதன் பிறகு நான் ஒரு வலைப்பூ எனக்கென உறுவாக்கிக் கொண்டேன் அதைக் கூட வினவிலிருந்தே கற்றுக் கொண்டேன், அதே போல இலக்கிய உலகை சொல்லி எங்களை பயம் காட்டி வந்த வாசுதேவன் (இவர் ஒரு எக்ஸ் ஜெ,மோ விசிறி) எனும் பேஸ்புக் நண்பருக்கு வினவில் வெளிவந்த ”சில இலக்கிய மொக்கைகள்” எனும் பதிவுகளை முழுவதும் படித்ததன் ஊடாக அவரின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் சொல்லி நெருங்கி வர செய்ய முடிந்தது. இப்போது வாசுதேவனும் வினவின் ஆதரவாளரே…

தொடர்ந்து வினவை படிக்கும் நபர்களுக்கு ஒரு விஷயம் புரிபடும் அதிகார வர்கத்துக்கு வால் பிடிக்காமல் எல்லா விஷயங்களையும் சரியாக எதிர்கொண்டு களமாடுவது வினவுதான் என்பதே அது.

வினவு சரியாக இயங்குகிறது என்பதற்க்கு ஒரு பெரிய உதாரணம் காவி பயங்கரவாதிகள் வினவை துலுக்கா எனவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வினவை ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் என்றும் பின்னூட்டம் இடுவது.

வினவிடம் இனி எதிர்பார்ப்பது பெரும்பான்மையினர் சொல்லியது போல ஒலி,ஒளி பதிவுகளை அதிகப்படுத்துவதும், மழலைகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெளிவந்த கொண்டிருந்த புத்தகங்களை போல ஒரு பகுதியை மழலை இலக்கியமாக வெளியிடுவதும் பயனுள்ளதாக இருக்கும்

– ஃபெரோஸ், அபு, நவாஸ்