ஹாங்காங் அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்-ல் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை ஹாங்காங் – சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன.
கடந்த ஜுன் 30 அன்று இரவு 11 மணி முதல் “ஹாங்காங் சிறப்பு ஆட்சிப் பகுதியில் தேசியப் பாதுகாப்பிற்கான மக்கள் சீனக் குடியரசின் சட்டம்” என்று தலைப்பிடப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தார் ஹாங்காங்கின் தலைமைச் செயலரான கேரி லாம்.

ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயகக் கோரிக்கையாளர்களும் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் ஹாங்காங் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் விதமாக இந்தச் சட்டம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1-ம் தேதியன்று பல்வேறு ஜனநாயக கோரிக்கைகளை முன் வைத்து ஹாங்காங் நகரில் பேரணிகள் நடக்கும். இந்த ஆண்டும், ஜூலை 1-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவிருப்பதை ஒட்டி அதற்கு எதிராக மக்கள் பேரணி மற்றும் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யும் பொருட்டு கொரோனாவைக் காரணம் காட்டி பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதித்தது ஹாங்காங் நிர்வாகம்.

இந்தத் தடையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் இந்தச் சட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியிருக்கின்றனர். ஜுலை 1 அன்று நடந்த போராட்டங்களில் போலீசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில், சுமார் 370-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் மீது புதியதாக போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. எனினும் ஹாங்காங்கில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

படிக்க:
கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

ஹாங்காங் – தேசிய பாதுகாப்புச் சட்டம் :

ஹாங்காங்-கின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமானது, பிரிவினைவாதம், நாசகர வேலை, பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்க அன்னிய சக்திகளோடு கூட்டுச் சதியில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்கள் குறித்தும் அதற்கான தண்டனைகள் மற்றும் விசாரணை அமைப்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

இந்தப் புதிய சட்டத்தின்படி போக்குவரத்து வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரியக்கூடிய, வெடிக்கக் கூடிய பொருட்களை அழித்தல் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் பயங்கரவாதக் குற்றத்தின் (Terrorism) கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் போல இனி ஹாங்காங்கிலும் போலீசே வாகனத்தைக் கொளுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.

ஹாங்காங் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஹாங்காங் மீதோ, சீனா மீதோ பொருளாதாரத் தடை விதிக்க வெளிநாடுகளுக்கு கோரிக்கை விடுப்பதோ, ஹாங்காங் சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் இடையூறு ஏற்படுத்த அந்நிய நாடுகள், நிறுவனங்கள், அல்லது அமைப்புகளிடமிருந்து உத்தரவுகள் பெற்று செயல்படுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தப் புதிய தே.பா.சட்டத்தில் உள்ள அந்நிய நாடுகளுடன் கூட்டுச் சதி என்ற பிரிவின் கீழ் கைது செய்ய முடியும்.

சீனாவின் எந்த ஒரு பகுதியின் ராஜ்ஜிய நிலைமைகளை மாற்றுவது குறித்து அல்லது எந்தப் பகுதியையும் பிரிப்பது குறித்து திட்டமிடுவதும், அதற்கு ஏற்பாடு செய்வதும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதற்கு உதவுவதும், அத்தகைய செயல்களைத் தூண்டுவதும் கடுமையான பிரிவினைவாதக் குற்றமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஹாங்காங் நகரத்தின் சுய நிர்ணய உரிமை குறித்தோ அல்லது திபெத்தின் விடுதலை குறித்தோ யாரேனும் இனி சாதாரணமாகப் பேசினாலும்கூட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டிய குற்றத்திற்காகக் கைது செய்ய முடியும்.

புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், பெருமளவிலான தண்டத்தொகையும், பத்தாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் கூட கொடுக்க முடியும். மேலும் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்காக என்று கூறி சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறையும் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதாகவும், ஹாங்காங்-ன் தனிப்பட்ட அடிப்படை சட்டங்களுக்கு முரணாகவும் இருக்கிறது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக ஹாங்காங் நீதிமன்றங்களில் தனிப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஹாங்காங் நகரத்தின் தலைமைச் செயலருக்கு மட்டுமே உண்டு என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. ஒருவேளை குறிப்பான ஒரு வழக்கு மிகவும் ‘இரகசியம்’ வாய்ந்தது என தலைமைச் செயலர் முடிவு செய்தால், அந்த வழக்கு விசாரணை வெளிப்படையான நீதிமன்றத்தில் நடத்தப்படாமல், மூடிய அறைக்குள் நடத்த உத்தரவிடும் அதிகாரமும் அவருக்கு உண்டு. மிகவும் முக்கிய வழக்குகளை சீனாவில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றும் அதிகாரமும் தலைமைச் செயலருக்கு உண்டு.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாது. இதன் காரணமாக, அரசியல் கைதிகள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதற்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு. குறிப்பாக, ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் அரசியல் எதிரிகளை துரிதமாக முடக்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 55, சீன அரசின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஒன்று ஹாங்காங்கில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கிறது. அங்கு, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் கமிட்டி” ஹாங்காங்-கின் தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் கமிட்டியும் அதன் கீழ் செயல்படும் குழுவினரும், ஹாங்காங் நீதிமன்றம் மற்றும் போலீசின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பர். அதாவது, இந்த பிரிவு அலுவலர்களும், அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் மீதோ, மக்களின் மீதோ மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலோ, கொலை , கடத்தல் உள்ளிட்ட பாதகங்களைச் செய்தாலோ ஹாங்காங் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யவோ தண்டிக்கவோ முடியாது.

மேலும் இந்தக் கமிட்டியில் சீன அரசால் நியமிக்கப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர், இந்த கமிட்டியின் செயல்பாடுகளையும் ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புக் கொள்கைகளையும் வகுப்பார். ஊடகங்கள், இணையம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி பாடத்திட்டம் வரை இந்தக் கமிட்டி தனது அதிகாரத்தை செலுத்தத்தக்க வகையிலேயே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம், ஹாங்காங்கில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு மேலாக அதிகாரம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களிலிருந்த பெயரளவிலான ஜனநாயக அம்சங்களையும் இல்லாமல் போகச் செய்திருக்கிறது. இதை எதிர்த்துத்தான் ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர்.
ஹாங்காங்கில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சட்டத்தின் மேற்கூறிய சரத்துக்கள் அனைத்தும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) ,ஊபா சட்டம் (UAPA) மற்றும் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் (NIA Amendment Act) ஆகியவற்றின் மூலமாக ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்கும் என்.ஐ.ஏ பிரிவு போலீசு, என்.ஐ.ஏ. சட்டத் திருத்ததின்படி எந்த ஒரு மாநிலத்திலும் நுழைந்து யாரையும் கைது செய்து டில்லியில் சிறையிலிடைக்க முடியும். பிணை கிடையாது; இத்தகைய பயங்கரமான ஆட்தூக்கி சட்டங்கள் இங்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் திரள் போராட்டங்கள் எதுவும் இந்தியாவில் எழவில்லை. (பார்க்க: வினவு கட்டுரை)

இந்தியாவின் நிலைப்பாடு :

தற்போது ஹாங்காங்கில் கொண்டு வரப்பட்டிருக்கும், ஜனநாயக விரோத தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு, உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடான இந்தியா, எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறது. ஐக்கியநாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினரான ராஜீவ் சந்தர், “சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்தப் பார்வைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அதனை முறையாகவும், அக்கறையோடும், பொருட்டாகவும் பரிசீலிக்க வேண்டும். பெருமளவிலான இந்திய சமூகத்தினர் ஹாங்காங்கை தங்களது வசிப்பிடமாகக் கொண்டுள்ள காரணத்தால், இந்தியா இந்த நிலைமைகளை நெருக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

படிக்க:
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !
கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு ? ரத்து செய் !

இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் எந்த ஒரு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் வாய் திறக்காமல் மவுனித்து வந்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகமே கண்டித்த உய்கூர் முசுலீம் சிறுபான்மையின மக்கள் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் நடந்த ஜனநாயகத்திற்கான மாநாட்டில் பங்கேற்க ஹாங்காங் மற்றும் உய்கூர் பகுதியில் இருந்து வரவிருந்த இரண்டு செயற்பாட்டாளர்களுக்கு சீனாவின் மிரட்டலைத் தொடர்ந்து விசாவை ரத்து செய்தது இந்திய அரசு.

கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவியேற்ற போது, திபெத்தின் மீதான சீனாவின் உரிமையை எதிர்த்து உருவாக்கப்பட்ட நாடு கடந்த திபெத் அரசின் தலைவரான லேப்சங் சங்கே-விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் முறையாக 2019-ம் ஆண்டு மோடி பதவியேற்றபோது, சீனாவின் நற்பெயரைப் பெற வேண்டி, லோப்சங் சங்கே-வை அழைக்கவில்லை (ஆதாரம்: தி வயர்) என்பது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் சீனாவுக்கும், அதன் மனித உரிமை மீறலுக்கும் ஆதரவாக இந்தியா நிலைப்பாடு எடுத்த தருணங்கள். இப்போதும் சீனாவை மென்மையாகக் கூட கண்டிக்கவில்லை. இதன் பின்னணியில் மோடிக்கும் பாஜக-விற்கும் படியளக்கும் இந்திய தரகுமுதலாளிகளின் நலன் அடங்கியுள்ளது. அதற்கும் மேலாக, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதில் சீனாவுக்குத் தாம் எவ்விதத்திலும் சளைத்த நாடு இல்லை, என்பதை தமது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் துவங்கி சமீபத்திய என்.ஐ.ஏ. சட்டத் திருத்தம் வரை ஒவ்வொரு தருணத்திலும் இந்தியா நிரூபித்துள்ளதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஹாங்காங் போராட்டங்களின் வரலாறு :

ஹாங்காங்கில் கொண்டுவரப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக விரோதமாகவும் ஹாங்காங் நகரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஜனநாயக உரிமைகளை மறைமுகமாக ரத்து செய்யக் கூடியதாகவும் இருக்கும் காரணத்தினாலேயே ஹாங்காங் மக்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு, முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஹாங்காங் நகரிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஒன்றை ஹாங்காங் அரசாங்கம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக அந்த ஆண்டில் ஜூலை 1, அன்று ஹாங்காங் சீனாவோடு இணைந்த தினத்துக்கான பேரணியிலிருந்தே போராட்டங்கள் துவங்கின. கடுமையான ஒடுக்குமுறையை போலீசு மூலம் கட்டவிழ்த்துவிட்டது ஹாங்காங் அரசு. எனினும் விடாப்பிடியாக இந்த ஆட்கடத்தி சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடினர்.

ஹாங்காங்கின் தலைமைச் செயலரான கேரி லாம்.

இந்தப் போராட்டம் சுமார் 2 மாதங்கள் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக 2019, செப்டெம்பர் 4-ம் தேதி அன்று இந்தச் சட்டத்தை பின்வாங்கியது ஹாங்காங் அரசு. ஆயினும் அதனைத் தொடர்ந்தும் போராட்டங்கள் நடந்தன. ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டியும், அவர்களை விடுதலை செய்ய வேண்டியும் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களில் சீனாவின் ஆதிக்கத்தை அடையாளப்படுத்தும் கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தகர்க்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இளைஞர்கள் முகமூடி அணிந்து வந்து போராட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, முகமூடி அணியத் தடை விதிக்கும் அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது ஹாங்காங் அரசு. அந்த அளவிற்கு போராட்டத்தின் வீச்சு பெருமளவில் இருந்தது.
தற்போது இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் ஹாங்காங்-ன் தலைமைச் செயலர் கேரி லாம்-தான் கடந்த 2019-ம் ஆண்டு இந்த ஆட்தூக்கி சட்டத்தைக் கொண்டுவந்தவர். மக்களின் போராட்டம் வலுத்த பின்னர் இந்தச் சட்டத்தை பின்வாங்கி கொண்டார் ஹாங்காங் தலைமைச் செயலர் கேரி லாம்.

ஹாங்காங்கைப் பொறுத்தவரையில் ஹாங்காங்கின் தலைமைச் செயலருக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உண்டு. சுமார் 75 லட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங்கின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தகுதி படைத்த தலைமைச் செயலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதுதான் ஹாங்காங்கில் தற்போது இருக்கும் ஜனநாயகத்தின் லட்சணம்.

ஹாங்காங் : மக்கள் ஆட்சியல்ல – நேரடியான கார்ப்பரேட் ஆட்சி :

தற்போதைய நடைமுறைப்படி, 1200 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் கமிட்டியால் ஹாங்காங் தலைமைச் செயலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த 1200 பேரில் பெரும்பான்மையினர், பல்வேறு தொழிற்சாலைகள், தேசிய இனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதியாக அந்தந்த குழுமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.

ஹாங்காங் மக்களைப் பொறுத்தவரையில் அங்குள்ள மாவட்டக் கமிட்டிகளின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இந்தப் பிரதிநிதிகளும் தேர்வுக் கமிட்டியில் இடம்பெறுவர். ஹாங்காங்கில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலை, தன்னார்வ நிறுவனங்கள் சீனாவைச் சார்ந்து இயங்குவதாலேயே, இவர்களால் அனுப்பப்படும் தேர்வுக்குழு பிரதிநிதிகள் சீனாவின் ஆதரவு பெற்ற வேட்பாளரையே ஆதரிப்பர். ஆகவேதான் சீனாவின் நலன்களுக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை ஹாங்காங் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஹாங்காங்கில் தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த தேர்தல் மற்றும் ஆட்சி அமைப்பு முறை, நேரடியாக கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் நலன்களுக்காகச் செயல்படும் சிந்தானைக் குழாம்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மறைமுகமாக நடக்கும் கார்ப்பரேட் ஆட்சி, ஹாங்காங்கில் நேரடியாக நடக்கிறது.

ஹாங்காங் அரசின் அடிப்படை சட்டங்களில் ஹாங்காங் தலைமைச் செயலரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பதுதான் உச்சபட்ச இலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹாங்காங் மக்கள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். அனால் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகளை ஹாங்காங் அரசாங்கம் எடுக்கவில்லை.

ஹாங்காங் தலைமைச் செயலரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒரு சட்டதிருத்ததைக் கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவந்தது ஹாங்காங் அரசு. அதாவது ஹாங்காங் தலைமைச்செயலரை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம் (ஆதாரம்: தி கார்டியன்) என்றும், ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் என்றும் ஒரு சட்டடத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதாவது தமக்கு (சீனாவுக்கு) சாதகமானவர்களை மட்டுமே வாக்களிப்பதற்கான தகுதியுள்ளவர்களாக அங்கீகரிப்பதும் மற்றவர்களை புறக்கணிப்பதும்தான் இந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கம்.

இதற்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடைபெற்றன. உலகப் புகழ் பெற்ற மஞ்சள் குடை போராட்டம் பல வாரங்கள் நீடித்தது. பின்னர் இந்த தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையை ரத்து செய்தது ஹாங்காங் அரசு.

ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறை என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு நிகரானது. தற்போது சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருப்பதாகக் கூறப்படுகையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நடப்பதன் காரணம் என்ன என்பது குறித்து அறிய ஹாங்காங்கின் வரலாற்றைச் சற்று பார்க்கலாம்.

ஹாங்காங் – சீனா வரலாறு :

சீனாவின் மன்னராட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் தீவை கடந்த 1842-ம் ஆண்டு நடந்த முதல் ஓப்பியம் போரில் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் பின்னர் 1898-ம் ஆண்டு சீனாவிடமிருந்து கூடுதல் நிலப்பரப்புகளையும் சேர்த்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது பிரிட்டிஷ் அரசு. பிரிட்டன் ஆட்சியில் ஹாங்காங் ஒரு பெரும் வர்த்தக நகராக உருவாகியது.

தோழர் மாவோவின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949-ம் ஆண்டு சீனாவில் புரட்சியைச் சாதித்து மக்கள் சீனக் குடியரசைக் கட்டியமைத்தது. அப்போதும் ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாகவே இருந்துவந்தது.

பிரிட்டிஷ் காலனிய அரசை எதிர்த்து பல்வேறு விடுதலைப் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடந்துள்ளன. அவை அத்தனையும் பிரிட்டிஷ் அரசால் ஒடுக்கப்பட்டது. பின்னர் 1982-ம் ஆண்டு ஹங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கக் கோரி சீன அரசு பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 1997-ல் ஹாங்காங்கை சீனாவிடம் கைமாற்றுவதற்கான வேலைகளை இருநாடுகளும் தொடங்கின. ஹாங்காங்-ல் பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வந்த அதே ஆட்சி முறைகளையும், ஜனநாயக உரிமைகளையும் 2047-வரை (50 ஆண்டுகளுக்கு) நீடிக்கும்படியான மற்றும் அங்கு முதலீடு செய்திருக்கும் தமது நாட்டு முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும்படியான நிபந்தனைகளுடன் 1997-ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அதாவது பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், சீனாவின் காலனியாக தாரைவார்க்கப்பட்டது.

இந்த ஐம்பதாண்டுகளும் சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் இருக்கும் உறவு – “ஒரே நாடு, இரண்டு அமைப்பு முறை” என்பதாகும். அதாவது சட்டப்படி ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும். ஆனால் ஹாங்காங்கிற்கு என தனியான அடிப்படை அரசியல் சட்டமும், நீதித்துறையும், தன்னாட்சி கொண்ட நிர்வாக அரசும் நீடிக்கும். பல கட்சி ஜனநாயகம், பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை எல்லாம் ஹாங்காங்கில் உண்டு. ஐம்பதாண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு ஹாங்காங் அரசு எப்படி இயங்கவேண்டும் என்பதை சீனா முடிவு செய்யும். இதுதான் இந்த ஒப்பந்தததின் சாரம்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது முதல் இன்றுவரை தனது ஆதிக்கத்தை படிப்படியாக ஹாங்காங்கில் நிலைநாட்ட சீனா தொடர்ந்து எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் மக்கள் போராட்டத்தால் தோல்வியடைந்த நிலையில், இனி போராட்டங்களே நடைபெறாத வகையில் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹாங்காங் நகரம் அரசியல்ரீதியில் இரு பிரிவாக பிரிந்துள்ளது. இந்தியாவில் போலீசு ஒடுக்குமுறைக்கும், வலதுசாரி அரசியலுக்கும் ஆதரவாளர்கள் இருப்பது போல ஹாங்காங்கிலும் சீனாவின் ஒடுக்குமுறை சட்டங்களை ஆதரிக்கும் பிரிவினரும் இங்கு இருக்கின்றனர். அதே சமயத்தில் முழுமையான ஜனநாயக உரிமையையும், சீனாவின் பிடியிலிருந்து விடுதலையைக் கோரும் பிரிவினரும் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நாளில் இருபிரிவினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பெரும் பேரணிகளை நடத்துகின்றனர். இதில் மோதலும் ஏற்படுகிறது. சீன மேலாதிக்கத்தை ஆதரிக்கும் பிரிவினருக்கு ஆதரவாகவே ஹாங்காங் அரசும் போலீசும் செயல்படுகின்றன.

ஹாங்காங் மக்களைப் பொறுத்தவரையில் 1997-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஹாங்காங் ஒப்படைப்பு என்பது, பிரிட்டிஷ் காலனியிலிருந்து சீனாவின் காலனியாக ஹாங்காங் மாற்றப்பட்டதே ஒழிய காலனியாக்கத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை அல்ல. சீன அரசின் ஆசி பெற்ற கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக முறையிலான தேர்தல், எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ஆகியவை வேண்டும் என்பதே ஹாங்காங் மக்களின் கோரிக்கை.

ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது. தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் சுயாட்சி உரிமையைப் பறிக்கிறது. இந்தியாவும் ஜனநாயகம் எனும் பெயரில் சர்வாதிகார ஆட்சியையே நடத்தி வருகிறது. மக்களை ஒடுக்குகிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கிறது.

சீன அரசின் இது போன்ற ஒடுக்குமுறை முயற்சிகளை இதுவரை தங்களது போராட்டத்தால் முறியடித்திருக்கின்றனர் ஹாங்காங் மக்கள். இந்த முறையும் அவர்கள் வீதியில் தான் இருக்கிறார்கள். வெல்வதற்கான வாய்ப்பு உண்டு ! ஆனால் இதே ஒடுக்குமுறைகளை காலங்காலமாக அனுபவித்து வரும் நாம், எதிர்த்துப் போராடாமல் அதனோடு வாழப் பழகியிருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை ! மிகப்பெரும் அபாயமும் கூட !


– நந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க