நிக்கொலாய் கோகல்
நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறு நாவல் – பாகம் – 01

அறிமுக குறிப்பு: 1842-ல் எழுதப்பட்ட இந்த அவல நகைச்சுவை குறுநாவல் புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவின் சமூகநிலையையும், அங்கு நிலவிய அவலமும் அற்பத்தனமும் நிறைந்த வாழ்க்கையை திரைவிரித்துக் காட்டுகிறது.

இன்றும் உலகம் முழுவதுமே அவலமும் அற்பத்தனமும் விரவிக் கிடக்கிறது. அதற்கு எந்த வர்க்கமும் விதிவிலக்கல்ல. இந்தக் குறு நாவலைப் படிப்பதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள அற்பத்தனங்கள் மட்டுமின்றி நமக்குள்ளேயே வீற்றிருக்கும் அற்பவாதியையும் அடையாளம் காணமுடிந்தால், அற்பவாதத்தில் இருந்து நாம் விடுபடுவது எளிது தானே!

நிக்கொலாய் கோகல் (1809-1852).

ஆசிரியர் குறிப்பு: நிக்கொலாய் கோகல் (1809-1852)- பெயர் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர். ருஷ்ய இலக்கியத்தில் விமர்சன யதார்த்தவாதத்துக்கு அடிகோலியவர் கோகல். அவரது ‘தராஸ் புல்பா’, ‘உயிரற்ற ஆன்மாக்கள்’, ‘அரசு ஆய்வாளர்’ முதலிய படைப்புக்கள் பல அயல் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ‘மேல்கோட்டு’ (1839-1841) என்ற கதை கோகலின் ‘பீட்டர்ஸ்பர்க் கதைகள்’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

♥ ♥ ♥

… அந்தத் துறையில் – எந்தத் துறையில் என்று பெயர் குறிப்பிடாமலிருப்பதே நல்லது. துறைகள், ரெஜிமெண்டுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை விட, ஒரு வார்த்தையில் சொன்னால் அதிகார நிறுவனங்கள் எல்லாவற்றையும் விட அதிக ரோசமுள்ளவை உலகிலே வேறு எவையுமே கிடையாது. இந்தக் காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு ஏற்படும் சொந்த அவமானத்தைச் சமூகம் முழுவதற்கும் இழைக்கப்பட்ட அவமானமாகக் கருதுகிறான். எதோ ஒரு நகரத்தின் போலீஸ் கமிஷனர் (எந்த நகரமோ, எனக்கு நினைவு இல்லை) சமீபத்தில் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளித்ததாகவும், அரசு ஆணைகள் அனைத்தும் மீறப்பட்டு விட்டனவென்றும், தனது புனிதத் திருப்பெயர் வேண்டுமென்றே வீணாக இழுக்கப்பட்டிருக்கிறதென்றும் அதில் தெளிவாகக் குறிப்பிட்டதாகவும் கேள்விப்பட்டேன். தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவன் காதல் வருணனைகள் மிகுந்த நூல் ஒன்றின் பிரம்மாண்டமான தொகுப்பை (அந்த நூலில் அநேகமாகப் பத்து பக்கங்களுக்கு ஒரு தடவை எவனோ போலீஸ் கமிஷனர் – சில கட்டங்களில் குடிமயக்கத்துடன் இருக்கும் நிலையில் – வருணிக்கப்படுகிறான்) விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பினானாம். ஆகவே எல்லாவிதமான மனக் கசப்பையும் தவிர்க்கும் பொருட்டு நாம் இதை ஒரு துறை என மட்டுமே அழைப்போம்.

நல்லது. ஏதோ ஒரு துறையில் ஒரு எழுத்தன் வேலை செய்துவந்தான். அவன் வெகுவாகக் குறிப்பிடத்தக்க குணாம்சங்கள் வாய்ந்தவன் எனக் கூற முடியாது. கொஞ்சம் குட்டை, கொஞ்சம் அம்மைத் தழும்புள்ளவன், கொஞ்சம் செம்முடியன், கொஞ்சம் மந்தப் பார்வையன் போன்ற தோற்றமுள்ளவன், நெற்றி உச்சியில் சிறு வழுக்கையும் இரண்டு கன்னங்களிலும் சுருக்கங்களும் விழுந்தவன், மூல நோயாளி போன்ற சோகை பிடித்த நிறத்தினன்… அதற்கு நாமென்ன செய்வது? எல்லாம் பீட்டர்ஸ்பர்க் பருவ நிலையின் கோளாறு. அவனுடைய பதவியைப் பொருத்தவரை (நமக்குத்தான் எல்லாவற்றுக்கும் முன்பு பதவியைத் தெரிவித்து விடுவது அவசியமாயிற்றே), சாசுவதப் பட்டம் பெற்ற ஆலோசகன் என்று அழைக்கப்படும் பதவி அது.

நமது அரசாங்க நிர்வாகத் துறையிலுள்ள பதினான்கு பதவிகளில் ஒன்பதாவதான இந்தப் பதவியை, பதிலுக்குத்தாக்க முடியாதவர்கள் மேலெல்லாம் பாய்ந்து பிடுங்குவது என்ற பாராட்டுக்குரிய வழக்கம் கொண்ட பல வித எழுத்தாளர்கள் எள்ளி நகையாடியும் இகழ்ந்தும் வந்திருப்பது யாவரும் அறிந்ததே. இந்த எழுத்தனின் குலப்பெயர் பஷ்மாச்கின். இந்தப் பெயர் செருப்பு என்று பொருள்படும் பஷ்மாக் என்ற ருஷ்யச் சொல்லின் அடியாகப் பிறந்திருக்க வேண்டும் என்பது பெயரிலிருந்தே தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது; ஆனால் எந்தக் காலத்தில், எந்த வழியில் இப்பெயர் பஷ்மாக்கிலிருந்து கிளைத்தது என்பது ஒன்றுமே தெரியவில்லை.

படிக்க :
“போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத்தள்ளுங்கள்” : ரயில்வே அமைச்சர் !
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !

அவனுடைய தகப்பன், பாட்டன் மட்டுமல்ல, மைத்துனன் உள்பட பஷ்மாச்கின்கள் அனைவருமே காலணிகள் அணிந்தே நடந்தார்கள், அதிகமாய்ப் போனால் ஆண்டுக்கு மூன்று தடவை மட்டுமே காலணி அடிகளைப் பழுதுபார்த்துக்கொண்டார்கள். அவன் பெயர் அக்காக்கிய் அக்காக்கியெவிச். இது கொஞ்சம் விசித்திரமான பெயர் என்றும் தேடிப் புனையப்பட்டதென்றும் வாசகர்கள் நினைக்கக் கூடும். ஆனால் நாம் இந்தப் பெயரைத் தேடவே இல்லை எனவும் தாமாகவே ஏற்பட்ட நிலைமைகளின் காரணமாக அவனுக்கு வேறு எந்தப் பெயரும் சூட்ட இயலாது போயிற்று எனவும் உறுதி கூறுகிறோம். நடந்தது இதுதான்:

அக்காக்கிய் அக்காக்கியெவிச் பிறந்தது, என் நினைவு சரியாக இருந்தால், மார்ச்சு 23-ம் தேதி இரவில். அவனது காலஞ்சென்ற தாய், ஒரு எழுத்தனின் மனைவி, மிக நல்லவள். குழந்தைக்குப் பெயரிடுவதற்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் அவள் செய்தாள். கதவுக்கு எதிரே அவள் படுத்திருந்தாள். செனெட் துறை தலைமை எழுத்தன் இவான் யெரோஷ்கின் – மிக அருமையான மனிதர், குழந்தையின் ஞானத் தந்தை – அவளுக்கு வலப்புறம் நின்றிருந்தார். இடப்புறம் நின்றாள் ஞானத் தாய் அரீனா பேலப்ரூஷ்கவா, அபூர்வ குணவதி. குழந்தைக்கு இடுவதற்கு மூன்று பெயர்கள் தாய்க்கு முன் வைக்கப்பட்டன. மோக்கிய், ஸோஸ்ஸிய் என்பன அவற்றில் இரண்டு; இல்லாவிட்டால் தியாகி ஹோஸ்தஸாத்தின் பெயரைக் குழந்தைக்கு வைக்கலாம் எனச் சொல்லப்பட்டது. “ஊஹும்! எல்லாமே சரியில்லாத பெயர்கள்” என்று எண்ணினாள் தாயார்.

அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டுமென்று நாள்காட்டியில் மற்றொரு பக்கம் திருப்பப்பட்டது; அதிலும் மூன்று பெயர்கள் இருந்தன: திரிபீலிய், தூலா, வரகாசிய என. “நல்ல கண்ணராவிதான் போ! பெயர்களைத்தான் பாரேன்! உண்மையில், இந்த மாதிரி நான் என்றைக்கும் கேள்விப்பட்டது கிடையாது! வரதாத் என்றோ வரூஹ் என்றோ இருந்தாலாவது பரவாயில்லை. இங்கேயோ, திரிபீலிய், வரகாசிய் என்றல்லவா இருக்கின்றன!” என முதிய தாய் அங்கலாய்த்தாள். இன்னொரு பக்கத்தைப் புரட்டினார்கள். பாவ்ஸிக்காகிய், வாஃத்தீஸிய் என்ற பெயர்கள் வந்தன. “ஊம், இப்போது தெரிந்து கொண்டேன் தலையெழுத்து இதுதான் என்று. அப்படியானால் அப்பாவின் பெயரே குழந்தைக்கும் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் அப்பா பெயர் அக்காக்கிய், ஆகவே மகனையும் அக்காக்கிய் என்றே அழைப்போம்” என்றாள் தாயார். இவ்வாறு வாய்த்ததே அக்காக்கிய் அக்காக்கியெவிச் என்னும் பெயர்.

குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்விக்கப்பட்டது. அப்போது அவன் அழுத அழுகையையும் முகத்தைக் கோணிக் கொண்டு வலித்த வலிப்பையும் பார்த்ததால், தான் ஒரு காலத்தில் பட்டம் பெற்ற ஆலோசகனாகப் பதவி வகிக்கப் போவதை அவன் முன்னரே உணர்ந்திருந்தது போலத் தோன்றியது. ஆக, இது இவ்விதமே நிகழ்ந்தது.

இந்தச் சேதியை நாம் இவ்வளவு விளக்கக் காரணம், இது இன்றியமையாத முறையில் நேர்ந்தது என்பதையும் குழந்தைக்கு வேறு பெயர் சூட்ட எவ்வகையாலும் முடிந்திராது என்பதையும் வாசகர்கள் தாமே கண்டு கொள்வதற்காகத்தான்.

(தொடரும்)

                                                                                                          அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க