நிக்கொலாய் கோகல்
நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 02

க்காக்கிய் எப்போது, எந்தத் தேதியில் துறையில் சேர்ந்தான், யார் அவனை நியமித்தார்கள் என்பதையெல்லாம் யாரும் நினைவு கூர முடியவில்லை. எத்தனையோ இயக்குநர்களும் வேறு பலவகை அதிகாரிகளும் வந்து போய்விட்டார்கள், ஆனால் அவன் மட்டும் அதே இடத்தில், அதே நிலைமையில், அதே வேலையில், அதாவது நகலெடுக்கும் எழுத்தன் வேலையில், இருந்து வந்தான். எழுத்தன் உடுப்பும் தலையில் வழுக்கையுமாக, இந்த வேலைக்கு முற்றிலும் தயாராகவே அவன் பிறந்திருக்க வேண்டும் என்று நாளடைவில் எல்லாருமே எண்ணத் தொடங்கி விட்டார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். துறையில் அவன்மீது யாரும் எவ்வித மரியாதையும் காட்டுவதில்லை. அவன் கடந்து செல்கையில் காவலாட்கள் எழுந்து நிற்பதுதான் கிடையாதென்றால் அவனை ஏறிட்டுப் பார்ப்பது கூட இல்லை – எதோ சாதாரண ஈயொன்று எதிர்பார்ப்பு அறை வழியாகப் பறந்து சென்றது போல. மேலதிகாரிகள் அவனிடம் ஒரே கண்டிப்புடன் இருந்தார்கள். உதவித் தலைமை எழுத்தன் ஒருவன் எதாவது காகிதத்தைக் கொண்டுவந்து, “கொஞ்சம் நகலெடுங்க” என்றோ, “இதோ பாருங்க, அருமையான, சுவையான விவகாரம்” என்றோ, நல்ல ஒழுங்குமுறைகளுள்ள அதிகார நிறுவனங்களில் வழங்குவது போல வேறு எதேனுமோ மகிழ்ச்சியாகச் சொல்லக்கூடச் செய்யாமல் அவன் மூக்குக்கு அடியில் நுழைப்பான்.

அவனோ, காகிதத்தை மட்டுமே நோக்கியவனாக, அதை வைத்தவன் யார், அதை வைப்பதற்கு அவனுக்கு உரிமையுண்டா என்று பார்க்காமலே அதை வாங்கிக்கொள்வான். உடனேயே அதற்கு நகலெழுதத் தொடங்கி விடுவான். இளம் எழுத்தர்கள், தங்கள் புத்திக்கு எட்டினமட்டில் அவனைப் பரிகசித்து எள்ளி நகையாடுவார்கள். அவனைப் பற்றிக் கற்பனை செய்த பலவிதக் கதைகளை அவன் முகத்துக்கு எதிரே சொல்லுவார்கள். அவனுடைய வீட்டுச் சொந்தக்காரியான எழுபது வயதுக் கிழவியைப் பற்றிக் கிண்டல் செய்வார்கள்; அவள் அவனை அடிப்பதாகக் கதைப்பார்கள்; அவளை எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று கேட்பார்கள். கிழிந்த காகிதத் துணுக்குகளை அவன் தலைமேல் உதிர்த்து, வெண்பனி பெய்கிறது என்பார்கள்.

அக்காக்கிய் அக்காக்கியெவிச் தனக்கெதிரே எவருமே இல்லை என்பது போல, ஒரு வார்த்தை கூடப் பதில் பேசாமல் காரியத்தில் முனைந்திருப்பான். இவற்றால் அவன் வேலைக்குக் குந்தகம் ஏற்படுவதும் கிடையாது. இந்தக் குறும்புகளும் கிண்டல்களும் நடந்து கொண்டிருக்கையில் அவன் நகலில் ஒரு பிழை கூட நேர்வதில்லை. பரிகாசம் பொறுக்க முடியாதபடி போய் விட்டால், யாராவது அவன் தோளுக்கடியில் இடித்துத் தள்ளி வேலையில் ஈடுபடவிடாமல் இடையூறு செய்தால் மட்டுமே அவன், “விடுங்க, ஐயா! ஏன் தொந்தரவு செய்றீங்க?” என்பான். அந்தச் சொற்களிலும் அவை வெளிப்படும் குரலிலும் ஏதோ விசித்திரமாகத் தொனிக்கும். இரக்கம் உண்டாக்கும்படி அதில் எதோ ஒலிக்கும். துறையில் புதிதாக வேலைக்கு அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் மற்றவர்களின் உதாரணத்தைப் பின்பற்றி அக்காக்கிய் அக்காக்கியெவிச்சைப் பரிகசிக்கத் தொடங்கியவன், அவன் சாந்தமாகக் கூறிய சொற்களைக் கேட்டதும் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து விட்டது போலச் சட்டென்று நிலைத்து நின்று விட்டான்; அது முதல் அவன் கண்களுக்கு எல்லாமே மாறிவிட்டன போலவும், எல்லாம் வேறு வடிவில் தென்பட்டன போலவும் தோன்றின. ஒழுங்கானவர்கள், கண்ணியவான்கள் எனக் கருதி அவன் அறிமுகம் செய்து கொண்டிருந்த நண்பர்களிடமிருந்து இனந்தெரியாத சக்தி ஒன்று அவனை உந்தித் தள்ளி வேறாக ஒதுக்கிவிட்டது.

படிக்க:
பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !
குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

இதற்கு அப்புறமும் வெகுகாலம் வரை, மிகச் சந்தோஷமான கணங்களில் கூட, குள்ள வடிவமும் வழுக்கைத் தலையுமான எழுத்தனின் உருவம், “விடுங்க, ஐயா! என் தொந்தரவு செய்றீங்க?” என்று கூறுவது போல அவனுக்குக் கற்பனையுண்டாகும், சோகம் ததும்பும் இச்சொற்களிலேயே “நான் உன் சகோதரனல்லவா?” என்ற அருத்தமும் ஒலிக்கும். பாவம், அந்த இளைஞன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொள்வான். மனிதனிடம் மனித இயல்பற்ற தன்மை எவ்வளவு இருக்கிறது; மிகமிகப் பண்பட்ட, கண்ணியமான நடையுடைபாவனைகளுக்குள்ளும் – அட கடவுளே! பெருந்தன்மைவாய்ந்தவன், கௌரவமுள்ளவன் என உயர் சமூகத்தினரால் மதிக்கப்படுபவனுக்குள் கூட – விலங்கியல்பு கொண்ட முரட்டுத்தனம் எவ்வளவு மறைந்திருக்கிறது என்பதைக் கண்டு வாழ்க்கையில் எத்தனையோ தரம் அவன் பதைபதைப்பான்….

அக்காக்கிய் போல வேலைக்காகவே வாழ்ந்தவனைக் காண்பது அரிதே. அவன் ஊக்கமாக வேலை செய்தான் என்றால் போதாது. இல்லை, அவன் காதலுடன் உழைத்தான். இங்கே, நகல் எழுதும் இந்த வேலையில், அவனுக்கு வண்ண வேறுபாடுகள் கொண்ட மகிழ்ச்சி பொங்கும் ஏதோ ஓர் உலகம் தென்பட்டது போலும். அவன் அனுபவித்த இன்பம் முகத்தில் மிளிர்ந்தது. சில எழுத்துக்கள் அவனுக்குச் சிறப்பாக உவப்பானவை. அவற்றை எழுதுகையில் அவனுக்குக் களிப்பு கட்டுமீறிப் பெருகும்: புன்னகைப்பான், கண் சிமிட்டுவான், உதடுகளால் உச்சரிப்பான். அவனுடைய பேனா வரையும் ஒவ்வொரு எழுத்தையும் அவன் முகத்திலே படித்துவிடலாம் போல தோன்றும்.

அவனது ஊக்கத்தின் அளவிற்கேற்ப அவனுக்கு பரிசளிப்பதாக இருந்தால் அவன் தானே விழும்படி அரசாங்க ஆலோசகர் பதவி வரை எட்டியிருப்பான்; ஆனால் சக எழுத்தர்கள் கிண்டல் செய்தது போல அவனுக்கு கிடைத்தது எல்லாம் கோட்டு மார்பில் உலோகப் பட்டயமும் மூலநோயும் தான். ஆனாலும் ஒருவருமே அவனை கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது. மிக உதார குணம் வாய்ந்த இயக்குனர் ஒருவன் அவனது நீண்டகால ஊழியத்துக்கு பரிசளிக்கும் நோக்கத்துடன் வழக்கமான நகல் எழுதும் வேலையை விட அதிக பொறுப்புள்ள வேலை அவனுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான்; அதாவது ஏற்கனவே தீர்ந்து போன விவகாரம் ஒன்றைப்பற்றி வேறு துறைக்கு அறிக்கை தயாரிக்கும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்டது; தஸ்தாவேஜின் தலைப்பை மாற்றுவதும் சில வினைச்சொற்களை தன்னிலைக்கு பதில் படர்க்கையில் எழுதுவது மட்டுமே அவன் செய்ய வேண்டியிருந்த வேலை. ஆனால், இந்தக் காரியத்தைச் செய்வதில் ஏற்பட்ட சிரமத்தால் அவன் உடலெல்லாம் ஒரேயடியாக வேர்த்துக் கொட்ட நெற்றியை மறுபடி மறுபடி தடவிக் கொண்டிருந்துவிட்டு கடைசியில், “என்னால் முடியாது. ஏதாவது நகல் எழுதுவதற்கு கொடுங்கள்” என சொல்லிவிட்டான். நகல் எழுதும் இந்த வேலைக்கு புறம்பாக அவன் வரையில் எதுவுமே இருக்கவில்லை போலப்பட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் …………………………………………………………………….   அடுத்த பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க