ஜனவரி 29, 2019, பிரேசிலிய சுரங்க நிறுவனமான வேல் எஸ்.ஏ.பிரமடின் ஹோவுக்குச் (Vale SA Brumadinho) சொந்தமான தாதுக் கழிவுகள் நிரப்பும் அணை இடிந்து விழுந்த பிறகு அங்கிருந்து ஒரு மாடு மீட்கப்படுகிறது.

பிப்ரவரி 17, 2019, ஏமனின் வடமேற்கு பகுதியான ஹஜ்ஜாவில் (Hajjah) உள்ள அஸ்லம் (Aslam) மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள வெறும் 10 கிலோ எடையுள்ள 12 வயதான பாத்திமா இப்ராஹிம் ஹாதி (Fatima Ibrahim Hadi) அமர்ந்திருக்கிறார்.

மார்ச் 23, 2019, மொசாம்பிக், புஜியில் உள்ள ரிங் மைதானத்தின் தங்குமிடத்தில் 11 வயதான எனியா ஜோவாகின் லூயிஸ் (Enia Joaquin Luis) 6 வயதான தன்னுடைய சகோதரி லூயிசாவுடன் (Luisa) மழையிலிருந்து பாதுகாக்கும் நெகிழித்தாள்களுக்கிடையே விழித்தெழுகிறார். மார்ச் 14, 2019 அன்று மொசாம்பிக்கின் சதுப்பு நிலங்களைத் தாக்கிய இடாய் புயலினால் (Cyclone Idai) பலி எண்ணிக்கை 417 ஆக உயர்ந்தது. ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறு வாரங்களுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டத்தை இதுவரை தாக்கிய புயல்களிலேயே வலிமையான புயலாக மாறிய “கென்னத்” புயலால்(Cyclone Kenneth) மறுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏப்ரல் 24, 2019, சூடானின் கார்ட்டூமில் (Khartoum) உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்திற்கு வெளியே கை ஃபாக்ஸ் முகமூடி (Guy Fawkes mask) அணிந்த ஒரு சூடான் எதிர்ப்பாளர் தேசியக் கொடியை அசைக்கிறார்.

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமீபத்திய மோதல்களில் அழிக்கப்பட்ட காசா பகுதியைச் சேர்ந்த ஒரு கட்டிடத்திற்கு பக்கத்தில் பாலஸ்தீனிய குடும்பங்கள் முஸ்லீம்களின் புனித நோன்பு மாதமான 2019 மே 18 அன்று தங்களது நோன்பை முடித்துக் கொள்கின்றன.

ஜூன் 24, 2019 அன்று சால்வடோரை சேர்ந்த அகதியான ஆஸ்கார் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமிரெஸ் (Oscar Alberto Martinez Ramirez) மற்றும் அவரது அரவணைப்பில் இருக்கும் 23 மாத மகள் வலேரியா ஆகியோரின் உடல்கள் மெக்ஸிகோ, டமுலிபாஸ் மாநிலம், மாடமொரோஸில் உள்ள ரியோ பிராவோ (Rio Bravo) ஆற்றின் கரையோரத்தில் கிடக்கின்றன. ஒரு நல்ல வாழ்க்கையை தேடி தன்னுடைய சின்னஞ்சிறிய மகளை ராமிரெஸ் அமெரிக்கா அழைத்து செல்ல முயன்றார். ராமிரெஸ்ஸின் மனைவி டானியா வனேசா அவலோஸ் (Tania Vanessa Avalos), ஒரு நண்பரால் மீட்கப்பட்ட பின்னர் உயிர் பிழைத்ததாக டானியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14, 2019 அன்று அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸில் நடைபெற்ற ஆப்பிரிக்கா நாடுகளுக்கான கோப்பையை வெல்லும் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதி கால்பந்து ஆட்டத்தில் அல்ஜீரியா வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

ஆகஸ்ட் 11, 2019 அன்று, ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தின் போது பாதுகாப்பு கியர் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலக தடுப்புப்பிரிவு போலீஸ்காரர்களை தெருவொன்றில் எதிர்கொள்கின்றனர்.

2019 செப்டம்பர் 24-ம் தேதி, பொலிவியா, காட்டுத்தீயினால் ரோபோரில் (Robore) உள்ள ராஞ்சோ கிராண்டே (Rancho Grande) கிராமத்தில் பல ஹெக்டேர் காடுகள் அழிந்த பகுதியில் பொலிவிய இராணுவத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ரோந்து செல்வதற்கு முன்பாக வரிசையில் நிற்கிறார்கள்.

ஸ்ரீநகரில் அக்டோபர் 11, 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தலையில் முள் கம்பியை தலையில் சுற்றிக்கொண்டு காஷ்மீரி ஒருவர் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு தகுதியை இந்திய அரசாங்கம் நீக்கியதை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது.

படிக்க :
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

நவம்பர் 7, 2019 அன்று ஈராக், பாக்தாத்தில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்திற்கு (Tahrir Square) அருகே நடந்து வரும் போராட்டங்களின் போது “அவர்கள் எங்கள் பெண்கள்” என்ற அரபு சொற்களுடன் உள்ள சுவரோவியத்திற்கு அருகில் ஒரு பெண் அதைப்போல செய்கிறார்.

டிசம்பரில் சிலி அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ்காரர் ஒருவர் துரத்தும் அதே நேரத்தில் ஒரு நபர் கோலாவைப் பருகிக் கொண்டிருக்கும் காட்சி.


நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம் : சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க