20.01.2024

ஜனவரி 22: ராமர் கோயில் திறப்பு விழா!
இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
இந்துராஷ்டிரத்திற்கான திறவு கோல்!

பத்திரிகை செய்தி

1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக குழந்தை ராமர் சிலையை வைத்து, ராமர் தானாகவே எழுந்தருளினார் என்று ஒரு கட்டுக் கதையை உருவாக்கி கலவரத்தைத் தொடங்கி வைத்த ஆர்எஸ்எஸ் கும்பல், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை திரட்டி கொண்டு போய் கலவரத்தை உருவாக்கி பாபர் மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ் கும்பல். அன்றைக்கு அந்த கலவரத்துக்கு தலைமை தாங்கிய அத்வானி இந்த நாட்டின் துணைப் பிரதமராக கூட இருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள், கலவரங்கள் எண்ணில் அடங்காதவை. குஜராத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என்பதை அறிவித்தது. அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இப்பொழுது இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் ஆட்சி இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து நொறுக்கி, தலித் மக்களுக்கும் பார்ப்பனர் அல்லாத இதர மக்களுக்கும் பெரும் அநீதியை இழைத்தது. உன்னாவ்வில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை, பெற்றோருக்கு தெரியாமலேயே இறந்துபோன அச்சிறுமியின் உடல் எரிக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்களை, அந்தப் பெண்ணின் முன்பே கொடூரமாகக் கொலை செய்து, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதாலேயே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் கூட, அந்த குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது யாராலும் மறக்க முடியாது. இந்து மத வெறி நடவடிக்கைகள் ஒருபுறம் இவ்வாறு இருக்கும் போது அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்காக ஒட்டுமொத்த நாடே சூறையாடப்பட்டு விட்டது.

அதற்கு எதிராக போராடுவோர் எல்லாம் கொடூரமாக நசுக்கப்பட்டனர். இவையெல்லாம் கடந்த 9 ஆண்டுகளில் பாசிச மோடி அமித்ஷா கும்பல் நடத்திய பாசிச நடவடிக்கைகளில் சில துளிகளே.

ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று காங்கிரசு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்த போதும், ராமர் கோயில் திறப்பு என்பது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்பதை சுட்டிக்காட்டவில்லை. இந்தியா கூட்டணிக்குள்ளேயே சில கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட்டமாக நடத்துவதற்கு அனைத்து வேலைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அட்சதை அரிசி கொடுப்பதும், கோயில் திறப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்புவதும் அதற்கான ஏற்பாடுகளும், கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பலால் நடந்தேறி வருகின்றன. பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற உணர்வே இல்லாதபடி பக்தி என்ற பெயரில் இந்து மக்களின் ஜனநாயக உணர்வை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கின்றது பாசிச கும்பல்.

1992 இல் பாபர் மசூதி இடிப்பின் போது இருந்த இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான சூழல் இப்போது இல்லை. அப்படிப்பட்ட சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் செயல்படவும் இல்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துப்படி இது ஒரு தேர்தல் அரசியல் பிரச்சாரம் என்பதாக மட்டுமே இருக்கிறது.

ஆனால் உண்மை அதுவல்ல; ராமர் கோயில் திறப்பு என்பது, இதுவரை இந்த நாட்டில் கூறப்பட்ட ஜனநாயகம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்திற்கும் சமாதி கட்டுவது தான். இந்த நாடு ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கானது என்பதை தான் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அறிவிக்கிறது. இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது இந்த நாட்டில் உள்ள இஸ்லாமியர் அல்லாத அனைத்து மக்களின் கடமை. இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முழங்க வேண்டும்.

ஜனவரி 22 பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் திறப்பு விழா என்றால் அதே நாளை ஆர்எஸ்எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிஸ்டுகளுக்கு எதிரான நாளாக மாற்றிக் காட்டுவோம். இந்து மதவெறி பாசிஸ்டுகள் அளித்த அட்சதை அரிசியையும் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் புறக்கணிப்போம். இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக, இந்த நாட்டை மோடி – அமித்ஷா பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு இழுத்துச் செல்வதற்கு எதிராக ஜனவரி 22 ஆம் தேதி அனைவரும் குரல் எழுப்புவோம் என்றும் தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு எதிரான அரணை கட்டியமைப்போம் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க