Tuesday, September 10, 2024
முகப்புசெய்திஇந்தியாஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் - இளைஞரின் துணிச்சல் !

அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !

ஹர்ஜித் சிங் முழங்குவதைப் பார்த்த அமித்ஷா உடனே அந்த சிறுவனை அப்புறப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு உத்திரவிட்டிருக்கிறார்.

-

ள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஞாயிறு அன்று தில்லி, பாபர்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டார். உடனே சுற்றியிருந்த பாஜக குண்டர்கள் அவரை முற்றுகையிட்டு தாக்கினர். சிலர் நாற்காலிகளாலும் தாக்கினர் என்றார் அந்த இளைஞர்.

முகத்திலும், முதுகிலும், காலிலும் சிறு காயங்களுடன் காணப்படும் ஹர்ஜித் சிங், அமித்ஷா பேச்சுக்கு நடுவில் முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த உடனே அவரை தூக்கிச் சென்ற தில்லி போலீசு காவல் நிலையத்தில் சிறை வைத்தது. இத்தனைக்கும் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர் மீது என்ன வழக்கு பதிவு செய்து லாக்கப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் போலீசு சொல்லவில்லை. அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள் அந்த இளைஞரிடம் ஒரு கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியிருக்கின்றனர்.

அதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று எழுத வைத்திருக்கின்றனர். என்ன செய்வதென்று தெரியாத அந்த இளைஞரும் அவ்வாறு எழுதிக் கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் அவரை விடுதலை செய்ய மாட்டோம் என காவல் துறை அதிகாரிகள் மிரட்டியிருக்கின்றனர்.

ஹர்ஜித் சிங்

தில்லி போலீசின் வடகிழக்கு துணை ஆணையர் பிரகாஷ் சூர்யா, அந்த இளைஞரான ஹர்ஜித் சிங்கின் வாக்குமூலம் பெறப்பட்டதை மறுத்திருக்கிறார்.  அவரிடமிருந்து ஏதும் எழுதி வாங்கவில்லை என்றும் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் பின்னர் அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் ஹர்ஜித் சிங் இந்த காவல் துறை அதிகாரியின் வாக்குமூலத்தை மறுத்திருப்பதோடு தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகக் கூறுகிறார். இத்தனைக்கும் அவரது உடல் காயம் பற்றி காவலர்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் காவலர்களின் மனிதாபிமானம் மருந்துக்கு கூட இல்லை.

தில்லி பல்கலையின் திறந்தவெளி படிப்பில் பி.ஏ அரசியல் அறிவியல் படிப்பின் இரண்டாம் வருடம் பயில்கிறார் ஹர்ஜித் சிங். ஞாயிற்றுக் கிழமை அமித்ஷா கூட்டத்தில் அவர் முழங்கிய போது அவரது டி ஷர்ட்டில் “இந்தியன்” என்று மட்டும் அச்சிடப்பட்டிருந்தது. அதை பாஜக குண்டர்கள் கிழித்திருக்கிறார்கள். இந்த சட்டையை மட்டுமல்ல இந்தியாவை சிதைப்பதையுமே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

“சீலம்பூரில் நடக்கும் குடியரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இடையில் பாபர்பூரில் நிறைய போலீசார் காணப்பட்டனர். என்ன என்று விசாரித்த போதுதான் அமித்ஷா அங்கு வர இருப்பது தெரிந்திருக்கிறது. அமித்ஷா பேசுவதைப் பார்த்த போது இதுதான் என்னுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்கு உகந்த தருணம் என்று முழங்கினேன்” என்கிறார் ஹர்ஜித் சிங்.

படிக்க:
♦ CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?

ஹர்ஜித் சிங் முழங்குவதைப் பார்த்த அமித்ஷா உடனே அந்த சிறுவனை அப்புறப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு உத்திரவிட்டிருக்கிறார்.

பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கையுள்ளதாக கூறும் ஹர்ஜித் சிங், மனித குலத்திற்கு எது சரி என்பதற்காக தொடரந்து பாடுபடுவேன் என்று கூறுகிறார். குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வரும் போது அரசாங்கம் குறிப்பிட்ட மதங்களைக் குறிப்பிடாமல் வெறுமனே சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்தியாவெங்கும் நடக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் அரங்குகளுக்கே பரவியிருக்கிறது. பாஜக-வின் பாசிசம் அடக்குமுறைகளால் வெற்றி பெற முடியாது என்பதை இந்த துணிச்சலான இளைஞரின் போராட்டம் காண்பிக்கிறது.

மதன்
நன்றி :  இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க