ல்லையற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள, “உலக பத்திரிகை சுதந்திர தரவரிசை”யில் பட்டியலிடப்பட்டுள்ள 180 நாடுகளில், இந்தியா 142-வது இடத்தில் இருக்கிறது.

இதே அமைப்பு, பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் என 37 தலைவர்களின் பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலிலும் மோடி இடம்பெற்றுள்ளார். 

இந்தியப் பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான், மியான்மாரின் புதிய இராணுவ சர்வாதிகாரி மின் ஆங் ஹ்லைங், வட கொரியாவின் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரசிய அதிபர் விளாடிமிர் புடின், பெல்லாரஸின் அலெக்சாண்டர் லூகாஷென்கோ, ஈரானின் அலி காமனேனி, சிரிய அதிபர் பஷார் அல் அஸாட் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ மருத்துவர் தினம் : மருத்துவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !

இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களைப் பற்றி அடையாளப்படுத்துகையில், “பத்திரிகை தணிக்கைக்கான ஏற்பாடுகளை செய்தல், பத்திரிகையாளர்களை மனம்போன போக்கில் சிறையிலடைத்தல் அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுதல், தங்கள் கையில் இரத்தக்கறையின்றி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பத்திரிகையாளர்களைக் கொலை செய்தல்” ஆகியவற்றைச் செய்யும் நபர்களாகக் குறிப்பிடுகிறது.

தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, “பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள்” (Predators of Press Freedom) ஒவ்வொருவரும், பத்திரிகை சுதந்திரத்தை எப்படி எப்படியெல்லாம் நசுக்குகிறார்கள் என்ற வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இத்தகையோர் ஒவ்வொருவரும் எப்படி பத்திரிகையாளர்களை மட்டறுக்கிறார்கள் மற்றும் எப்படி துன்புறுத்துகிறாரக்ள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுவோரின் விருப்பமிக்க இலக்குகளைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளது. இவர்கள் குறிப்பாக ஒடுக்கும் ஊடக வெளியீட்டகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வகைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் தங்களது நடத்தையை நியாயப்படுத்தும் விதமாக இவர்கள் கொடுத்த நேர்காணல்கள் மற்றும் அவர்களது பேச்சுக்கள் ஆகியவற்றில் இருந்து முக்கியமான வரிகளையும் எடுத்துக் காட்டியுள்ளது இந்த அறிக்கை.

பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் 37-வது இடத்தைப் பிடித்துள்ள மோடியைப் பற்றியும் இந்தப் பத்திரிகை, மேற்கூறியவகையில் பரிசீலித்து விவரித்துள்ளது.

மோடியைப் பற்றி குறிப்பிடுகையில், 2014-ம் ஆண்டு மே 26 அன்று ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து பத்திரிகை சுதந்திரத்தை மோடி வேட்டையாடி வருவதாகக் தெரிவிக்கிறது. மேலும் அவரது வேட்டையாடும் வழிமுறையைப் பற்றி விவரிக்கையில் “தேசிய பிரபலவாதம் மற்றும் தவறான தகவல் பரப்புதல்” எனும் முறையை மோடி பயன்படுத்துவதாக தெரிவித்தது. மதச்சார்பற்றவர்கள் மீதும் பாஜகவை விமர்சிக்கும் ஊடகங்கள் மீதுமே அவரது அவரது முக்கியமான தாக்குதல்கள் இருப்பதாகக் கூறுகிறது.

மதச்சார்பற்றவர்களை (Seculars) நோயுற்றவர்கள் (Sickulars) என்றும், தம்மை விமர்சிக்கும் ஊடகங்களை(Press) விபச்சார ஊடகங்கள் (Presstitudes = Press + Prostitudes) என்றும் மோடியின் ஆதரவாளர்கள் பயன்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது இந்த அறிக்கை.

சுதந்திர ஊடகத்தின் மீதான மோடியின் தாக்குதல் குறித்து இந்த அறிக்கை குறிப்பிடுகையில், “குஜராத்தின் முதலமைச்சராக 2001-ம் ஆண்டு அமர்ந்த பிறகு, செய்திகள் மற்றும் தகவல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை சோதனை செய்யும் களமாக குஜராத்தை மோடி பயன்படுத்திக் கொண்டார் என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்தியப் பிரதமராக 2014-ம் ஆண்டு அமர்ந்ததும், அந்த வழிமுறையை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தினார்.

தனது தேசிய – பிரப்லவாத சித்தாந்தத்தை நியாயப்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு மையநீரோட்ட ஊடகங்களை நிரப்புவதையே தனது முன்னணி ஆயுதமாக மேற்கொண்டார். இதற்காக அவர் மிகப்பெரும் மீடியா சாம்ராஜ்ஜியத்தை சொந்தமாகக் கொண்டுள்ள ஒரு பெரும் பில்லினியர் தொழிலதிபருடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கிக் கொண்டார்.

ஊடக முதலாளிகளுடனான பிணைப்பு இரண்டு வழிமுறைகளில் வேலை செய்தது.

முன்னணி ஊடகங்களின் முதலாளிகளுடன் வெளிப்படையாக நெருக்கத்தைக் காட்டுவதன் மூலம் அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, மோடி அரசை விமர்சித்தால் பணி பறிபோய் விடும் எனும் அச்சத்தை ஏற்படுத்துவது முதல் வகை.

மோடியின் தீவிரமான பிரித்தாளும் மற்றும் அவதூறு பேச்சுக்களை ஒளிபரப்புவதன் மூலம், புதிய சாதனையை எட்டும் அளவிற்கு அந்த ஊடகங்களின் பார்வையாளர்களை அதிகரிப்பது என்பது இரண்டாவது வகை.

மேற்கண்ட இருவகையில் ஊடகங்களை சரிகட்டிய பிறகு மோடிக்கு மீதமிருப்பது, மோடியின் பிரித்தாளும் வழிமுறைகளைக் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வெளியீட்டகங்கள் மட்டும்தான். இதற்கு, சட்டரீதியான ஆயுதங்களை ஊடக சுதந்திரத்திற்கு எதிராகப் பயன்படுத்துகிறது மோடி அரசு. உதாரணமாக, தேசதுரோக வழக்கின் கீழ் வாழ்நாள் சிறைத் தண்டனை அபாயத்தோடு தான் பத்திரிகையாளர்கள் பணிபுரிகின்றனர்.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

இத்தகைய ஆயுதங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக இணையதளப் போராளிகள் எனப்படும் ட்ரோல்களின் படையை வைத்து சமூக வலைத்தளங்களில் அவர்களுக்குப் பிடிக்காத பத்திரிகையாளர்களுக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொள்வது மற்றும் அவ்வப்போது பத்திரிகையாளர்களைக் கொல்வதற்கு அழைப்புவிடுப்பது என்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. ” என்று விவரிக்கிறது இந்த அறிக்கை.

மேலும் இந்த அறிக்கை, 2017-ம் ஆண்டு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதையும், “இந்து தேசிய இயக்கத்தை இலக்காகக் கொண்ட இந்துத்துவாவின்” வெறியாட்டத்திற்குப் பலியானவர் அவர் என்பதையும் பதிவு செய்திருக்கிறது,

மேலும், மோடியை விமர்சித்த ராணா அய்யூப், பர்கா தத் போன்ற பெண் பத்திரிகையாளர்களின் மீது கூட்டுப் பாலியல் வன்முறை செலுத்த அழைப்பு விடுப்பது என கடுமையாகத் தாக்கியதையும் குறிப்பிட்டுள்ளது இந்த அறிக்கை.

கர்ணன்

செய்தி ஆதாரம் :
தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க