ழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டான்சுவாமி இன்று (05/07/2021) பிற்பகலில் மரணமடைந்தார். ஸ்டேன்சுவாமியின் மரணம், மக்களுக்காகப் போராடுபவர்களை ஒழித்துக்கட்டும் அரச பயங்கரவாதப் படுகொலையின் நேரடி சாட்சியாகும்.

ஜார்கண்ட் மாநிலப் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் போராடி வந்தவர் பாதிரியார் ஸ்டான்சுவாமி. உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப் பெறாமல், கார்ப்பரேட்டுகளின் இலாப வெறிக்காக துரத்தியடிக்கப்பட்ட பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரச்சினைகளுக்காக பல்வேறு சட்டரீதியான போராட்டங்களை மேற்கொண்டவர் ஸ்டான்சுவாமி.

பாசிச பாஜக அரசின் பழங்குடியின மக்கள் விரோத நிலைப்பாட்டை தமது தொடர் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி எல்கார் பரிஷத் ‘சதி’ வழக்கில் என்...-வால் (NIA) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

படிக்க :
♦ சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

சமூகச் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு என்றே புனையப்பட்ட எல்கார் பரிஷத் வழக்கில், மாவோயிஸ்ட்டுகளோடு சேர்ந்து பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

84 வயதான பாதிரியார் ஸ்டான்சுவாமி, நடுக்குவாத நோயால் (நரம்புத் தளர்ச்சி) பாதிக்கப்பட்டிருந்தார். கேட்கும் திறனையும் படிப்படியாக இழந்து வந்திருந்த அவர், சிறையில் நிற்க முடியாமல் பல முறை கீழே விழுந்து உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கைநடுக்கம் காரணமாக தண்ணீர்க் குவளையைக் கூட கையில் எடுத்து குடிக்க முடியாத நிலையில், அவர் தமக்கு குடிப்பதற்கு சிப்பர் (உறிஞ்சு குழாய் கொண்ட தண்ணீர் குவளை) வேண்டுமென்று கோரியிருந்தார். அதைக் கூட கொடுக்காமல் மறுத்தது சிறை நிர்வாகம்.

இதற்கு எதிராக என்... சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பதிலளித்த என்..., அவருக்கு சிப்பர் கொடுப்பது குறித்து பரிசீலிப்பதற்கு 20 நாள் அவகாசம் கேட்டது. இதுவே வக்கிரம் என்றால், என்...-வின் கோரிக்கைக்கு நீதிமன்றமும் அனுமதியளித்ததுதான் வக்கிரத்தின் உச்சம்.

போராட்டக் களத்தில் பாதிரியார் ஸ்டான்சுவாமி

சிறையில் ஸ்டான்சுவாமியின் உடல்நிலை மேலும் மோசமாகிப் போன சூழலிலும், அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது நீதிமன்றம். கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஸ்டான்சுவாமி அனுமதிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தான், ஸ்டான்சுவாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிறையில் முறையான சிகிச்சை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில்தான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போயிருக்கிறார் ஸ்டான்சுவாமி.

ஸ்டான் சுவாமி மரணம் என்பது நோயால் ஏற்பட்ட மரணம் அல்ல. சமூகச் செயற்பாட்டாளர்களை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலும், இந்தக் கும்பலுக்கு அடியாள் வேலைபார்க்கும் என்..வும் இவர்களுக்குத் துணை நிற்கும் நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையாகும்.

இதுவரையில் எல்கர்பரிஷத் வழக்கில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் என 20-க்கும் மேற்பட்டவர்களை மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது என்...

இந்த வழக்கில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டவரான ரோனா வில்சனின் மடிக் கணிணியிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு சதிக் கடிதத்தை, முகாந்திரமாக வைத்தே, இவ்வழக்கில் அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் கைது செய்தது. ஆனால் இந்தக் கடிதம் வெளியிலிருந்து ஒரு தீமென்பொருள் மூலமாக ரோனா வில்சனின் கணிணிக்குள் நுழைக்கப்பட்டது என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

படிக்க :
♦ மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

நீதிமன்றம் யோக்கியமானதாக இருந்திருக்கும் பட்சத்தில், போலியானது மற்றும் சதித்தனமாக திணிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்ட அந்த சதிக்’ கடிதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் வழக்கிலிருந்து விடுவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக அவர்கள் மீது போடப்பட்ட ஊபா சட்டப் பிரிவையாவது ரத்து செய்து அவர்கள் அனைவருக்கும் பிணை அளித்திருக்க வேண்டும்.

இவை எதையும் செய்யாமல், கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களின் வயதையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை சிறையில் வைத்து விசாரணைக் காலத்தையே தண்டனைக் காலமாக்கி அவர்களை சித்திரவதை செய்திருக்கின்றது, நீதிமன்றம். அதில் உச்சபட்சமாக, பாதிரியார் ஸ்டான்சுவாமிக்கு விசாரணைக் காலத்திலேயே மரண தண்டனையை வழங்கியிருக்கிறது.

விசாரணைக் காலத்தையே தண்டனையாக மாற்றும் நடைமுறையின் மூலம், மக்களுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை பாசிச ஆர்.எஸ்.எஸ். – மோடி கும்பல் அச்சுறுத்துவதற்குத் துணை போயிருக்கிறது நீதித்துறை.

ஸ்டான் சுவாமியின் மரணம், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே ஏற்பட்ட வெட்கக் கேடு. ஆனால் இன்னமும் அதை உணரக் கூட முடியாத அளவிற்கு அனைத்தையும் உதிர்த்துவிட்டு அமர்ந்திருக்கிறது இந்திய நீதித்துறை.

இன்று ஸ்டான் சுவாமி அரசு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அடுத்து படுகொலை செய்யப்படுவதற்காக சாய்பாபா, ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, சோமா சென் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ஸ்டான் சுவாமியை இழந்துவிட்டோம். அரசின் மக்கள் விரோதத் தன்மைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திய பிற சமூகச் செயற்பாட்டாளர்களையும் அடுத்ததாக இழக்கப் போகிறோமா ?

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலுக்கு கைக்கூலியாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) ஒட்டுமொத்தமாகக் களைக்கவும், விசாரணைக் காலத்தையே தண்டனைக் காலமாக்கி செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்படும் ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கறுப்புச்சட்டங்களை ரத்து செய்யவும் வீதியில் இறங்கிப் போராடுவதே பாதிரியார் ஸ்டான்சுவாமிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் !


சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க