பீமா கொரேகான் வழக்கில் மாவோஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மனித உரிமை செயற்பாட்டாளரும் 83 வயது முதியவருமான பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு பிணை தர ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், அவரது உடல்நிலை கருதி அவருக்கு தண்ணீர் குடிப்பதற்கான உறிஞ்சியை வழங்குவதற்குக் கூட  அனுமதியளிக்காமல் இழுத்தடிக்கிறது என்.ஐ.ஏ.

83 வயதாகும் ஸ்டான் பாதிரி கடந்த 40 ஆண்டுகளாக ஜார்கண்ட் காடுகளில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு தற்போது சிறை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அக்டோபர் 22-ம் தேதி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை கோரிய வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கிட்டத்தட்ட கேட்கும் திறனை இழந்து விட்டிருக்கிறார். சிறையிலும் பலமுறை கீழே விழுந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் அடிவயிற்றுப்பகுதியில் இதனால் அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது.

அதை தொடர்ந்து, நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் தண்ணீரை கூட கையால் பிடித்து குடிக்க முடியவில்லை என்றும், உறிந்து குடிப்பதற்கு உறிஞ்சி (Straw) மற்றும் சிப்பர் வேண்டும் என்று கேட்டு ஸ்டான் சுவாமி விண்ணபித்திருந்தார். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இது குறித்து முடிவெடுக்க 20 நாள் காலக்கெடு கேட்டுள்ளது.

படிக்க :
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

ஒரு உறிஞ்சி (Straw) வழங்குவது குறித்து முடிவெடுக்க 20 நாட்கள் கேட்பது குறித்து துளியும் யோசிக்காமல், 83 வயது முதியவரின் உயிர்வாழ்வதற்கான உரிமையைக் கூட உறுதிபடுத்துவதைப் பற்றி யோசிக்காமல், அதற்கு அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.

இது குறித்துக் கூறியுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி, “கொரொனா நோய் தொற்றுப்பரவலை முன்னிட்டு விசாரணைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று சட்டப்படி மாநில அளவில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரை, ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்டான் பாதிரிக்கு பொருந்தாது” என்றும் கூறியிருக்கிறார். “சிறையில் அளிக்கப்படும் சிகிச்சை சரியில்லை என்று அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை மாறாக, அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்கான விண்ணப்பத்தையே கொடுத்திருக்கிறார் ” என்று நீதிமன்றம் வியாக்கியானமும் அளித்திருக்கிறது.

“விண்ணப்பதாரர் வயதானவர் என்ற காரணத்தால் சிறை மருத்துவமனையில் தனியறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் சிகிச்சை கிடைக்காத அளவிற்கு அப்படி என்ன நோயினால் விண்ணப்பதாரர் பாதிக்கப்படுகிறார் என்பதை கற்பனையாக கூட விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை” என்று எகத்தாளமாகவும் நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது.

பாதிரியார் ஸ்டான் சுவாமி

உடல் ரீதியான கடுமையான பிரச்சினைகளோடு வாழ்ந்துவரும் பேராசிரியர் சாய்பாபா, வரவரராவ் உள்ளிட்டவர்களுக்கும் முறையான சிகிச்சையையும் அடிப்படை வசதிகளையும் மறுத்துள்ளது நீதிமன்றம்.  சமூகச் செயற்பாட்டாளர்களை, மனித உரிமைப் போராளிகளை ஆதாரமற்ற வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணைக் கைதிகளாகவே அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதையேசெயற்பாட்டாளர்களை முடக்குவதற்கான உத்தியாகவும், பிற சமூகச் செயற்பாட்டாளர்களை இதனைக் காட்டி மிரட்டும் உத்தியாகவும் செய்து வருகிறது.

பாசிசம் என்பது வெறும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கீழ் உள்ள இந்துத்துவக் கும்பலிடம் மட்டுமல்ல, அது அரசின் அத்தனை உறுப்புகளிலும் பரவி நீக்கமற நிறைந்திருப்பதையே என்.ஐ.ஏ-வின் 20 நாள் கோரிக்கையும், அதை அனுமதித்த நீதிமன்றத்தின் நடவடிக்கையும் காட்டுகிறது.

நம் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சமூகச் செயற்பாட்டாளர்களை, தீவிரவாதிகளாகச் சித்தரித்து சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்யும் இந்தக் கும்பலின் அடுத்த தாக்குதலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் ?


ஆறுமுகம்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க