ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது "ஊபா" சட்டத்தை ஏவுகிறது.  

06/10/2023

கார்ப்பரேட் கொள்ளைக்கான போரைக் குற்றம்சாட்டும்
ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக
ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள
தேசியப் புலனாய்வு முகமை(NIA)யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

பத்திரிகை செய்தி

அக்டோபர் 2, 2023 அன்று, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள பல்வேறு ஜனநாயக மற்றும் மக்களைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency – NIA என்ஐஏ) சோதனை நடத்தியுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO – சிடிஆர்ஓ), ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி (APCLC – ஏபிசிஎல்சி), சைதன்ய மகிளா சங்கம் (CMS -சிஎம்எஸ்), பிரகதிசீல கார்மிகா சமக்யா (PKS – பிகேஎஸ்), நாட்டுப்பற்றுமிக்க ஜனநாயக இயக்கம் (PDM – பிடிஎம்), பிரஜா கலா மண்டலி ((PKM – பிகேஎம்), வசந்த மேகம் (Vasantha Meghum), தெலுங்கு மொழியில் “விரசம்” (Virasam) எனப்படும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் (RWA – ஆர்டபிள்யூஏ), இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கம் (IAPL – ஐஏபிஎல்), குல நிர்மூலனா போராட்ட சமிதி (ஜாதி ஒழிப்புப் போராட்டக் குழு; KNPS – கேஎன்பிஎஸ்), அமருலா பந்து மித்ருலா சங்கம் (ABMS – ஏபிஎம்எஸ்), அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி (CRPP – சிஆர்பிபி), மனித உரிமைகள் மன்றம் (HRF – ஹெச்ஆர்எஃப்) உள்ளிட்ட அமைப்புகள் இந்தச் சோதனையில் குறிவைக்கப்பட்டன.

படிக்க : செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

இந்த சோதனையின் போது, பிரகதிசீல கார்மிக சமக்யா-வின் (PKS – பிகேஎஸ்) மாநில செயற்குழு உறுப்பினரான சந்திர நரசிம்முலு கைது செய்யப்பட்டார். 13 லட்சம் ரூபாய் மற்றும் பல தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கியை கைப்பற்றியதாக தேசியப் புலனாய்வு முகமை கூறியுள்ளது. ஆனால், இந்தப் பணமானது நடைபெறவுள்ள அவரது மகளின் திருமணச் செலவுகளுக்கானதாகும் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டிலிருந்து போடப்பட்டுள்ள “மாவோயிஸ்ட் தொடர்பு” வழக்கையொட்டி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கனிம வளமிக்க மத்திய இந்தியப் பகுதிகளில் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்த அமைப்பு குரல் கொடுத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (சிடிஆர்ஓ – இதில் ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி – APCLC – ஒரு உறுப்பு அமைப்பாகும்) 2023 ஜனவரி 11 அன்று தெற்கு பஸ்தார் பிராந்தியத்திலுள்ள பழங்குடியின கிராமங்களில் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான உண்மையறியும் நடவடிக்கையை மேற்கொண்டது. சிறிய ஆளில்லா விமானங்களைப் (ட்ரோன்களைப்) பயன்படுத்தி பல குண்டுகள் வீசப்பட்டதை கிராம மக்கள் உறுதி செய்தனர். இந்த வான்வழிக் குண்டுவீச்சு நடத்தப்பட்ட அதே நேரத்தில் ஹெலிகாப்டர்களும் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

“வானம் நெருப்பை உமிழ்ந்த போது” என்ற தலைப்பில் அக்டோபர் 2023-இல் வெளியிடப்பட்ட ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (சிடிஆர்ஓ) அறிக்கையானது, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் போலீசுத் துறையின் மோசடித்தனத்தை வெளிப்படுத்தியது. மேலும், “விரசம்” மற்றும் பிற முற்போக்கு அமைப்புகள் இணைந்து, பஸ்தாரில் தொடரும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கண்டித்து மார்ச் 2023-இல் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தன.

“மாவோயிஸ்ட் தொடர்பு” பற்றிய விசாரணைகள் என்ற பெயரில் தற்போது நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேசிய புலனாய்வு முகமையின் சோதனைகளில் ஒரு வகைமாதிரி (pattern) இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். நாம் உற்று நோக்கினால், நாட்டின் பழங்குடியின மக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றி வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தகைய “வளர்ச்சி” முறையை விமர்சிக்கும் ஜனநாயக அமைப்புகள், மக்களைச் சார்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. வெறிபிடித்த சுரங்க வேட்டை முடுக்கிவிடப்பட்டு பழங்குடியின மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவதையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலவளச் சூறையாடலையும், இந்தப் பகற்கொள்ளைக்கான போரில் “மாவோயிஸ்ட் பிரச்சினை” என்ற போர்வையில் நடத்தப்படும் அரசின் கொடூரமான அத்துமீறல்களையும் இந்த அமைப்புகள் எதிர்த்தன.

2018-ஆம் ஆண்டு பீமா கோரேகான் சதி வழக்கில் கார்ப்பரேட் கொள்ளையை விமர்சித்த ஜனநாயக செயல்பாட்டாளர்களைக் கைது செய்ததிலிருந்து இந்த சூனிய வேட்டையின் வகைமாதிரி தொடங்குகிறது. முயற்சிக்கப்பட்டும் சோதித்தறியப்பட்டதுமான இந்த உத்தியானது, பழங்குடியின மக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் மீதான சோதனைகளாக தொடர்ந்து இன்னமும் ஏவி விடப்படுகிறது.

படிக்க : “நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்ட், கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஜனநாயக உரிமைச் செயற்பாட்டாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. நியாம்கிரியில் உள்ள மக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றுவதை எதிர்க்கும் செயற்பாட்டாளர்கள் மீது “ஊபா” (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் “நியூஸ்கிளிக்” (NewsClick) என்ற செய்தி இணையதள அலுவலகத்திலும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் (சிபிஎம் CPI-M) செயலாளரான சீதாராம் யெச்சூரியின் இல்லத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தேசியப் புலனாய்வு முகமையின் சோதனைகள் நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு, டெல்லி போலீசுத் துறையின் சிறப்புப் பிரிவானது, நியூஸ்க்ளிக் அலுவலகம் மற்றும் சிபிஎம் தலைவர்களின் இல்லங்களில் சோதனைகளை நடத்தி, “சீனாவின் பயங்கரவாத நிதியளிப்பு” என்ற பொய் வழக்கைச் சோடித்தது. நியூக்ளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் மனிதவள மேலாண்மை அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோரைக் கைது செய்தது.

வளர்ந்து வரும் பார்ப்பன இந்துத்துவ பாசிசத்திற்கும், நமது மக்களின் மூலவளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கும் எதிராகப் பேசும் எந்தவொரு குரலையும் நசுக்கும் முயற்சியாகவே இந்தச் சோதனைகளை நாங்கள் பார்க்கிறோம். மக்கள் மத்தியில், குறிப்பாக மக்களுக்காகப் பேசும் ஜனநாயக சக்திகள் மத்தியில் சூனிய வேட்டை (அரசியல் எதிரிகள் மீது நடத்தப்படும் வேட்டை) மூலம் அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கி உயிர் பிழைத்திருக்கும் இந்த ஆட்சியில், எந்த எதிர்ப்புக் குரலும் விடுபடாது என்பதும் தெளிவாகிறது. அரசாங்க அமைப்புகளால் பயன்படுத்தப்படும் இந்த ஆயுதமானது, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் அல்லது உள்நாட்டு அரசியலில் சீன ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இத்தகைய ஜனநாயக சக்திகள் மீது வழக்கமாக முத்திரை குத்தப்படலாம்.

இத்தகைய தாக்குதல்கள் ஏன் தீவிரமடைந்துள்ளன என்பதை, ஜி-20 (G20) உச்சி மாநாட்டின் முடிவுகள், வனப் பாதுகாப்புச் சட்டங்களில் மாற்றங்கள் மற்றும் இந்திய ஒன்றியத்திற்கான பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவது ஆகியவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில், வனப் பகுதியிலுள்ள நிலத்தில் மேற்கொள்ளப்படும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கு உள்ளூர் கிராம சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று வனப் பாதுகாப்புச் சட்டங்கள் கோரின.

ஆனால், இப்போது 5 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதியிலுள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கு விதிவிலக்குகளை அளித்து, இந்தப் பாதுகாப்பு விதிமுறைகளை அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளது. இதன் மூலம் துணை ராணுவப் படைகள் போன்ற சிறப்பு அடிக்கட்டுமானங்களை இத்தகைய அனுமதி எதுவுமின்றி உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, மூலவளங்களைச் சூறையாடுவதற்கு எதிரான இயக்கத்தை நசுக்க உதவுவதாக அமையும்.

மேலும், மூலவளங்களை எளிதாகப் பிரித்தெடுப்பதற்காக, சுரங்கப் பகுதிகளுக்கு மேலாக உள்ள வன நிலம் தொடர்பாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது. அதிலும், உயிரியல் பூங்காக்கள், வேட்டைக்கான பகுதிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றின் கட்டுமானங்களுக்காக வன நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு விதிவிலக்குகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் உள்ளூர் மக்களை அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தங்கள் பிராந்தியத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலவளங்களைக் கொள்ளையடிப்பதற்கு வசதியாக, பல்வேறு மாநிலங்களும் வனச் சட்டங்களில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்துள்ளன. சமூக தாக்க மதிப்பீட்டிலிருந்து பெரும் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஒடிசா மாநில சட்டமன்றம் அண்மையில் நிறைவேற்றியுள்ளது.

வனச் சட்டங்களில் செய்யப்படும் இத்தகைய பரவலான மாற்றங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களால் முடுக்கிவிடப்படும் பேரழிவுகளுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்புகள் அரிக்கப்படுவதன் காரணமாக, தங்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் பேய்த்தனமாகத் தீவிரமடையும்; “வளர்ச்சி” என்ற பெயரில் சுரண்டல் கொள்ளை நியாயப்படுத்தப்படும்.

படிக்க : அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

இத்தகைய அடக்குமுறைகளின் பின்னணி இதுதான். கார்ப்பரேட் நிறுவனங்களது பேராசையின் ஆழங்காணமுடியாத குழியை நிரப்புவதற்கு அரசு முயற்சிக்கிறது. இதற்காக தேசியப் புலனாய்வு முகமையின் (NIA) மூலம் அரசானது சோதனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது “ஊபா” சட்டத்தை ஏவுகிறது.

மூலவளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளின் கையுறையாக உள்ள அரசின் வழிகாட்டுதலின் பேரில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஜனநாயக மற்றும் மக்களைச் சார்ந்த அமைப்புகள் மீதான தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சோதனையை கார்ப்பரேட்மயமாக்கலுக்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிரான அரங்கமானது, வன்மையாகக் கண்டிக்கிறது, நியூஸ்கிளிக் (NewClick), மார்க்சிஸ்ட் (CPM) கட்சித் தலைவர்கள் மற்றும் பிற ஜனநாயக உரிமைக்கான செயற்பாட்டாளர்கள் மீதான சோதனைகள் மற்றும் கைதுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தற்போது பார்ப்பன இந்துத்துவ பாசிச அரசை நிறுவுவதற்கான சடங்காச்சார நடைமுறையாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பரந்த விரிவான ஒற்றுமையையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் உருவாக்க அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மற்றும் தனிநபர்களை நாங்கள் அழைக்கிறோம். ஒரு தனிநபருக்கு எதிரான தாக்குதல் என்பது நம் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகும்.

– கார்ப்பரேட்மயமாக்கலுக்கும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான அரங்கம்,
(FORUM AGAINST CORPORATIZATION AND MILITARIZATION – FACAM), டெல்லி.

ஆங்கில மூலம்: countercurrents.org

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க