பீமா கொரேகான் வழக்கை முகாந்திரமாக வைத்து வட இந்திய சமூகச் செயற்பாட்டாளர்களையும், அறிவுத் துறையினரையும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கு ஜோடித்துக் கைது செய்து இன்றளவும் விசாரணை என்னும் பெயரில் அவர்களுக்கு பிணை தராமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. என்.ஐ.ஏ எனும் ஆள்தூக்கி போலீசு கும்பலை வைத்துக் கொண்டு ஊபா, தேசத் துரோக சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் செயற்பாட்டாளர்களை முடக்கி வருகிறது மோடி அரசு.

அந்த வகையில் வட இந்தியாவில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களை முடக்கிய பின்னர், தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கை வைத்திருக்கிறது மோடி அரசு. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தலித் பழங்குடியின மற்றும் பெண்கள் விடுதலை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு மொத்தம் 25 பேரின் வீடுகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தேடுதல் நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ.

படிக்க :
♦ ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !

செயற்பாட்டாளர்கள் 25 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதலில், செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள், கணிணிகள், மடிக்கணிணிகள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை என்.ஐ.ஏ கைப்பற்றிச் சென்றதாக பி.யூ.சி.எல் அமைப்பு தெரிவிக்கிறது. மனித உரிமைகள் கூட்டமைப்பு, குடிமை உரிமைகள் அமைப்பு, ஆந்திரா குடிச் சுதந்திர கமிட்டி,  விரசம் (புரட்சிகர எழுத்தாளர்கள் கழகம்) உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருக்கிறது.

ஆந்திரப்பிரதேஷ் குடிச் சுதந்திர கமிட்டியைச் சேர்ந்த தெலுங்கானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாத் வெரோஸ், ஜன நாட்ய மண்டலி அமைப்பைச் சேர்ந்த டப்பு ரமேஷ், மனித உரிமைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.எஸ்.கிருண்ணா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பானி, வரலட்சுமி, அருண் உள்ளிட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளர்களைக் கைது செய்துள்ளது.

இவர்களைத் தவிர, சைதன்யா மகளிர் சங்கத்தைச் சேர்ந்த  தேவேந்திரா, சில்பா, ஸ்வப்னா, ராஜேஸ்வரி, பத்மா, ஆந்திரப்பிரதேஷ் சிவில் சுதந்திர கமிட்டியைச் சேர்ந்த ரகுநாத், சிட்டிபாபு, சிலிகா சந்திரசேகர், அமருலா பந்து மிருதுளா சங்கத்தைச் சேர்ந்த அஞ்சம்மா, சிரிஷா மற்றும் வழக்கறிஞர் கே.எஸ். செல்லம் ஆகியோர் வீட்டிலும் தேடுதலை நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொலைக்காட்சி  ஊடகவியலாளரான பங்கி நாகண்ணாவை மாவோயிஸ்ட்டுகளுக்கு தகவல் தொடர்பு கொண்டு செல்பவராகக் கூறி விசாகப்பட்டிணம் போலீசு கைது செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. கையாளத் துவங்கியது.

மாவோயிஸ்ட்டுகளுக்கு மருந்துகள், ஆவணங்கள் ஆகியவற்றை நாகண்ணா எடுத்துச் செல்லும்போது அவரைக் கைது செய்ததாக விசாகப்பட்டிணம் போலீசு தெரிவித்தது. விசாரணையின் போது பங்கி நாகண்ணா தாம் மாவோயிஸ்ட்டுகளுக்கும், சிவில் சமூகத்தவர்களுக்கு இடையிலான சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்ததாகவும் விசாகப்பட்டிணம் போலீசு கூறியது.

ஆந்திர போலீசு பதிவு செய்துள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதலை என்.ஐ.ஏ. நடத்தியுள்ளதாக பி.யூ.சி.எல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் மொத்தமாக சேர்த்து 80 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதில் 27 பேரின் பெயர்கள் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி ஆந்திர போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டது.

பீமா கொரேகான் வழக்கிலும் புனே போலீசு போலியாகத் தயாரித்த ஒரு கடிதத்தை முகாந்திரமாக வைத்துக் கொண்டு கடந்த ஆண்டு முதல் என்.ஐ.ஏ இந்த வழக்கை கையிலெடுத்தது. அதேபோல ஆந்திராவிலும் விசாகப்பட்டிணம் போலீசு போட்ட ஒரு வழக்கை இப்போது என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையைத் துவங்கியிருக்கிறது.

இந்த செயற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் சதி(120B), அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் அல்லது தொடுக்க முயற்சித்தல் (121), பிரிவு 121-ன் கீழ் தண்டிக்கத்தக்க செயல்களைச் செய்வதற்கான சதியில் ஈடுபடுதல் (121A), சட்ட விரோதமாகக் கூடுதல் (143), மரணத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை ஏந்தியிருத்தல் (144), தேசத் துரோகச் சட்டம் (124A), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA), ஆந்திரப்பிரதேஷ் பொதுப் பாதுகாப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டப் பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஜனநாயக விரோத சட்டங்கள், சட்ட விரோதக் கைதுகள் மற்றும் இந்திய அரசின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியவர்கள். மேலும், ஆணாதிக்க ஒடுக்குமுறை, இந்துத்துவத் தாக்குதல்கள், மக்களின் நிலம் மற்றும் வனத்தின் மீதான உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்துப் போராடியவர்கள் என்று பி.யூ.சி.எல் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

பீமா கொரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்களைச் சிக்க வைக்க இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் அவர்களது கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டன என்பது கணிணி சிறப்பு ஆய்வு நிறுவனத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு பிணை வழங்க மறுக்கிறது இந்து ராஷ்டிரத்தின் நீதிமன்றம்.

தற்போது ஆந்திராவின் செயற்பாட்டாளர்களிடமும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டது பாசிசக் கும்பல். நேற்று வட இந்தியா, இன்று ஆந்திரா தெலுங்கானா, நாளை தமிழ்நாடு தான் ! புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தின் மூலம் பாசிச ஒடுக்குமுறை அபாயத்தை எதிர் கொள்ளத் தயாராவோம் !!


கர்ணன்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க