ந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, ஜூலை 1,2021 அன்று மருத்துவர் தினத்தை ஒட்டி, மருத்துவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது வாழ்த்துச் செய்தியில், நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா பிரச்சினையில் பல்வேறு உயிர்களைக் காப்பாற்ற தமது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், “கொரோனா போராளிகளுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மருத்துவர்களுக்கு மரியாதையையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார் மோடி.

கொரோனா காலத்தில் மருத்துவர்களும் தமது உயிரை துச்சமாக மதித்து முன்களப் பணியாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 798 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பலியானதாக இந்திய மருத்துவக் கழகம் ஜூன் 30 அன்று வெளியிட்ட தகவல் தெரிவிக்க்கிறது.

படிக்க :
♦ தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !
♦ மருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் ?

அதாவது வெறும் 16 மாதங்களில் கிட்டத்தட்ட 800 மருத்துவர்கள் பலியாகியிருக்கின்றனர். இதற்கு கடந்த ஆண்டு முதல் அனைத்து மருத்துவர்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதாக கூறினார் மோடி.

டாம்பீகமாக அறிவிக்கப்பட்ட இந்தக் காப்பீட்டுத் திட்டம், நடைமுறையில் இறந்து போன மருத்துவர்களின் குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்ததா என்பது வரை உறுதிசெய்ய வேண்டியதுதான், ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை.

ஆனால் நடைமுறையில் என்ன நடந்தது என்பதை, சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் இரவீந்திர நாத் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

மத்திய அரசு அறிவித்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம், கடந்த ஓராண்டு காலத்தில் உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு, காப்பீட்டுத்தொகை முறையாக வழங்கப்பட வில்லை. ” என்று சுட்டிக்காட்டுகிறார் இரவீந்திரநாத். மேலும் இறந்த மருத்துவர்கள் குறித்த முழுமையான விவரம் கூட அரசாங்கத்திடம் இல்லை எனச் சாடியிருக்கிறார், மருத்துவர் இரவீந்திரநாத்.

மருத்துவர் இரவீந்திரநாத்

மேலும், “கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் வரைக்குமே, 800-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த டேட்டாவையே மத்திய அரசும், மாநில அரசும் சரியாகக் கணக்கெடுக்கவில்லை. வெறும் 120 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே குறிப்பிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார் இரவீந்திரநாத்.

அரசு என்பதன் வேலை, வெறுமனே திட்டம் போடுவதோடோ அல்லது அத்திட்டத்தை அறிவிப்பதோடோ நின்று விடுவதில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் பிரதானமாக இருக்கிறது. இப்படி மருத்துவர்களின் மரணம் குறைத்துக் காட்டப்படுவது குறித்து விமர்சனம் எழும்பிய பிறகும் மருத்துவர்கள் மீது மோடி அரசு அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

இதை விடக் கொடுமையான ஒரு சம்பவம், நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர் ராவ் அவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்களுக்கு முறையான N-95 முகக் கவசங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஒரு முகக் கவசத்தை 15 நாட்களுக்குப் பயன்படுத்த நிர்பந்திர்க்கிறார்கள் என்றும் பகிரங்கமாக காணொலியில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் 2020, ஏப்ரல் 8-ம் தேதி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மே மாதம் 16-ம் தேதியன்று நடுரோட்டில் வைத்து மருத்துவர் சுதாகர் ராவ் மீது காட்டுத்தனமான தாக்குதலைத் தொடுத்தது ஆந்திர போலீசு. பணியில் இருந்த அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தார் என அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவரை மனநலம் சரியற்றவர் என்று கூறி மனநல மருத்துவமனையிலும் சேர்த்தது.

ஒரு மருத்துவர் குறை கூறியதற்காக தாக்கப்பட்ட காணொலியும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வந்த பிறகும், அவரைத் தாக்கிய போலீசு மீது ஆந்திர அரசோ, மருத்துவர்களைப் போற்றுவதாகச் சொல்லும் மோடி அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இந்த மோடி தான் இறந்து போன மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறாராம்.

துறைரீதியான விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அவரை துன்புறுத்தி, மன அழுத்தத்துக்குள் தள்ளியது. அதன் காரணமாக கடந்த 2021, மே மாதம் 20-ம் தேதியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

படிக்க :
♦ தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !

மருத்துவர் சுதாகர் ராவ் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் தமது உரிமைகளைக் கேட்ட மருத்துவர்கள் வெவ்வேறு அளவுகளில் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டனர். கொரோனா காலகட்டத்தில் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை நியமிக்காமல், அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதன் காரணமாக அவர்களது மன அழுத்த அதிகமாகிறது. ஒரு இந்தியக் குடிமகனின் சராசரி வயது 67.9 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 57 – 59 ஆக மட்டுமே இருக்கிறது.

நமது ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்தும் மருத்துவர்கள், தொடர்ந்து மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக விரைவில் மரணமடைகின்றனர். நெடுங்காலமாக நீடித்து வரும் இந்த நிலையைப் போக்க இதுவரை மோடி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவுவது கை தட்டுவது என அனைத்துக் கேலிக் கூத்துக்களையும் கண் துடைப்புக்காக நடத்தியது மோடி அரசு.

கொரோனா காலகட்டம் முழுவதும் மருத்துவர்களை கைவிட்ட மோடி, மருத்துவர்கள் தினத்தன்று மருத்துவர்களின் புகழ்பாடுவது தான் வக்கிரத்தின் உச்சம்


கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க