கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. போதிய அளவு படுக்கைகள் இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துகள் தட்டுப்பாடு, கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்கப்படுவது, இறந்தவர்களின் சடலங்களை எரிக்கக் கூட வரிசையில் நிற்க வேண்டியிருந்த அவலநிலை இவையெல்லாம் இந்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் ஒரே நாளில் நடந்துவிடவில்லை.

அறிவியலாளர்கள் சொன்ன முன்னெச்சரிக்கைகளை மோடி அரசு அலட்சியம் செய்தது இந்த இரண்டாம் அலைப் பரவலுக்கு காரணமென்றாலும், மரண விகிதம் அதிகரித்ததற்கு முழுக்க முழுக்க இந்திய மருத்துவ கட்டமைப்பை தனியார்மயப்படுத்தியதுதான் அடிப்படைக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்
♦ கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

கடந்த 30 ஆண்டுகளாக பொது சுகாதாரத்துறையை நிதியில்லாமல் கைகழுவி விட்டதும், மருத்துவத் துறையை தனியாரின் லாப வேட்கைக்கு திறந்துவிட்டதன் விளைவுதான் இந்த அவலநிலைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஆதாரங்களுடன் நம்மால் நிறுவ முடியும்.

இந்திய பொது சுகாதாரத்துறையின் நசிவுக்கு, தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டதும், பொது சுகாதாரத்துறைக்கு போதிய நிதி ஒதுக்காததும், அதனை புறக்கணித்ததும்தான் அடிப்படைக் காரணம்.

மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை :

கொரோனா நோய்த் தொற்று இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை திரை கிழித்துக் காட்டியுள்ளது. படுக்கைகள், ICU வார்டுகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் இவற்றின் பற்றாக்குறைகள் ஒருபக்கம் இருக்கும் போது, இன்னொரு பக்கம் போதிய மருத்துவ ஊழியர்கள் இல்லாத நிலை முகத்தில் அறையும் எதார்த்தமாக நம் முன் நிற்கிறது. “படுக்கைகள் நோயாளிகள் குணப்படுத்துவதில்லை, மருத்துவர்கள்தான் குணப்படுத்துகிறார்கள்”.

கொரோனா பெருந்தொற்றுக்கான இந்தியாவின் எதிர்வினையை பெருமளவில் முடக்கிப் போட்டிருக்கிறது, மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை. இந்தியாவில் 10,000 நபர்களுக்கு 38 மருத்துவப் பணியாளர்கள் தான் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் வரைவளவு 10,000 நபர்களுக்கு குறைந்தபட்சம் 45 மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

உலக அளவில் இந்தியாவில் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது, அதே நேரத்தில் உலக அளவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

1.3 பில்லியன் மக்கள் தொகையிருக்கும் இந்தியாவில் மருத்துவர் – நோயாளி விகிதம் பாதாளத்தில் இருக்கிறது. 10,000 நபர்களுக்கு வெறும் 9 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் 3.2 மில்லியன் செவிலியர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 5,085 நிறுவனங்களின் இருந்து 3,35,000 பயிற்சி பெற்ற செவிலியர்கள் மருத்துவத் துறையில் நுழைகிறார்கள். இருப்பினும் 10,000 நபர்களுக்கு வெறும் 15 செவிலியர்கள்தான் இருக்கிறார்கள். 10,000 நபர்களுக்கு 5.3 படுக்கைகள் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

தொற்றை எதிர்கொள்ள 2,65,000 மருத்துவப் பணியாளர்களை மாநில அளவிலான ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதனடிப்படையில் மாநில அரசுகள் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்ததுதான். ஆனால், பீகார் மாநிலத்தில் 9,000 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில் 5,000 பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டது. டெல்லி அரசாங்கம் நான்காம் ஆண்டு ஐந்தாமாண்டு பயிலும் மருத்துவ மாணவர்களை  கொரோனா சேவையில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தினம் ரூ.1,000 – ரூ.2,000 வரை மதிப்பூதியம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது.

டெல்லி புனித ஸ்டீபன் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர், டாக்டர். மேத்திவ் வர்கீஸ் கூறுகையில், “வெண்டீலேட்டர்  படுக்கைகளை பொருத்தவரை சிக்கலான விசயம் என்னவென்றால், அதை இயக்குவதற்கான ஊழியர்கள்தான். எல்லா மருத்துவர்களும் அதை இயக்க முடியாது. எனக்கும் வெண்டீலேட்டரை எப்படி இயக்குவதென்று தெரியாது. ஒரு மருத்துவமனை  வெண்டீலேட்டர்களை வாங்கலாம் ஆனால், அதை இயக்குவதற்கான ஊழியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.”

000

மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறை :

எந்த சமூகத்திலும் பற்றாக்குறை என்பது சாதாரணமான விசயம்தான். ஆனால், இந்தியாவில் அடிப்படை மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறை என்பது முறைக்கேடான ஒன்றாகவே இருக்க முடியும்.

இந்தியா உலகின் மருந்தகம் என்னும் பெருமைக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில், இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மிகத் திறமையுடன் நேர்மாறாக்க பொறியியல் (Reverse Engineering) மூலமாக பொதுவான மருந்துகளை தயாரிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நாடு இந்தியா. உலகின் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருக்கிறது. அமெரிக்க மருந்து சந்தைக்காக மாத்திரைகளை தயாரிப்பதில் இந்தியா மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறது. ஆனால், இவையெதுவும் கொரோனா காலத்தில் இந்தியாவை காக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு அது தேவைப்படும் அளவிலும் வேகத்திலும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்களான Serum Institute of India மற்றும் Bharat Biotech மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் தான் இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி கிராக்கியான மாதத்திற்கு 90 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களால் மாதத்திற்கு 70 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும். இது தேவைப்படும் தடுப்பூசிகள் விட மிகக் குறைந்தது என்பது தெளிவு.

மோடி அரசு இந்தியாவின் அரசு தடுப்பூசி நிறுவனங்களையே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதை Down to Earth என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. Central Research Institute (CRI), BCG Vaccine Laboratory (BCGVL), Pasteur Institute of India (PII), HLL Biotech, Bharat Immunological and Biologicals Corporation Limited, Haffkine Bio-Pharmaceutical Corporation Limited, Human Biological Institute, Integrated Vaccine Complex in Tamilnadu. இந்த நிறுவனங்களையும், அவற்றின் திறன் மற்றும் அனுபவங்களையும் புறக்கணித்துவிட்டு இரண்டு தனியார் கார்ப்பரேட்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ஆம் தேதி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்போவதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், தடுப்பூசி தயாரிப்பில் மிகுந்த நிபுணத்துவமும், அதிக கொள்திறனும் கொண்ட நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதில் முக்கிய நிறுவனமான Integrated Vaccine Complex in Tamilnadu இடம்பெறவில்லை.

கடந்த மார்ச் 17-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மோடியிடம் காணொளி காட்சி உரையாடலின் போது, மும்பையிலுள்ள அரசு நிறுவனவமான Haffkine Institute-க்கு Covaxin தடுப்பூசியில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுதார். ஆனால், அது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு செய்யவில்லை.

அமெரிக்காவும், பிரிட்டனும் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை தங்கள் உள்நாட்டு தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவர்களுக்குள்ளே பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் சீனாவின் நிலைமை சீராகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்குபோதும் ஏற்றுமதி நடக்கிறது.

கடந்த 6 மாத காலத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் (Remdesivir) என்னும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ரெம்டெசிவிர் மருந்தையும் அதன் முக்கிய மருத்துவ உள்ளடக்கப் பொருட்களையும் (Active Pharmaceutical Ingredients) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ள போதிலும் இந்த ஏற்றுமதி நடந்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததை காரணமாக கொண்டு இந்த ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதே கொரோனா தொற்று குறைந்ததன்  காரணாமாக சந்தையின் கிராக்கி குறைந்து விட்டது என்று சொல்லி, ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை நிறுவனங்கள் சுறுக்கிக் கொண்டனர். இதன் விளைவாகவே தற்போதைய தட்டுப்பாடு.

கடந்த நவம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “இந்த ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றியதாகவோ மிகுந்த தொற்று பாதிப்புடையவர்களின் நிலையை மேம்படுத்தியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை” என்கிறது. இருந்தாலும், இதைப்பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தாமல், இந்த மருந்துக்காக மக்கள் உயிரை பணயம் வைத்து கூட்ட நெரிசலில் காத்துக் கிடக்க விட்டிருக்கிறது அரசு.

ஆக்சிஜன் பற்றாக்குறை :

வளர்ந்த நாடுகளின் சுகாதார அமைப்புகள் கூட ஸ்தம்பித்துப் போயிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் நோயிகளை கைவிடவில்லை. அங்கே பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையம் உள்ளது. அவர்கள் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்பட்டார்கள், காரணம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்துறைகளையெல்லாம் வளரும் பிந்தங்கிய நாடுகளுக்கு மாற்றிவிட்டார்கள். சீனா எப்படி இந்த சூழலை கடந்து வந்தது? சீனா வெண்டீலேட்டர்கள் இல்லாமல், மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்படவில்லை. அவர்கள் எந்த நோயாளியையும் படுக்கையில்லை என்று திருப்பி அனுப்பவில்லை.

இந்தியாவின் இரும்பு மற்றும் பிற உலோகங்களை தயாரிக்கும் தொழிற்துறைகள் தான் அதிகமாக ஆக்சிஜனை தயாரிக்கின்றன. ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள படி இந்தியாவின் ஒருநாள் ஆக்சிஜன் தயாரிப்பு அளவு 7,287 மெகா டன்னாக இருக்கிறது. மொத்த இருப்பாக 50,000 மெகா டன் ஆக்சிஜன் இருக்கிறது. இவை ஒரு நாளுக்கு தேவைப்படும் அளவான 3,842 மெகா டன்னை விட அதிகமாகும். ஆனால், அவை பெரும்பாலும் அதன் சொந்த தேவைக்காக மட்டுமே தயாரிக்கப் படுகின்றன.

இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்த தயாரிக்கப்பட்ட ஆக்சிசனை நாடு முழுவதும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பதுதான். அதற்கு தேவையான Cryogenic டாங்குகள் போதுமானதாக இல்லை. இந்தியா முழுவதும் வெறும் 1,170 Cryogenic டாங்குகள் தான் இருக்கிறது. ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் தளவாடங்கள் இல்லாமைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வது மத்திய, மாநில அரசின் பொறுப்பு. இவற்றை தீர்ப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருவதுபோல் செய்யும் நடவடிக்கைகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு அல்ல, அரசின் தோல்வியை மறைப்பதற்கும், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நியாப்படுத்தி கொள்வவதற்கும் ஒரு சில செயல்பாடுகளை செய்வதுபோல் ஊடகத்தில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

000

National Sample Survey புள்ளி விவரங்களின் படி, 2001-02 முதல் 2010-11 வரையிலான ஆண்டுகளில் தனிநபர் நடத்தும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், சிறு, குறு, மிகப்பெரிய நிறுவனமயமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதிலும் மிகப்பெரிய மருத்துவமனைகள் மிக விரைவாக வளர்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில் தனியாரின் பங்கு மிக அதிகமானது.  இந்திய நகரங்களில் 95 சதவீதம் மருத்துவமனைகள் அதாவது 13,413 மருத்துவமனைகள் தனியாருடையவை தான்.

இந்தியாவின் மொத்த மருத்துவ சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலரில் (2015) இருந்து ஐந்தாண்டுகளில் அதாவது 2020-ஆம் ஆண்டில் 280 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22.9 சதவீதமாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டன. உலகளாவிய பங்கு நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகளின் பங்குகளை கைப்பற்றியிருக்கின்றன. இதன் மூலமாக மக்களின் சுகாதாரத்தை காட்டிலும் இந்த பன்னாட்டு விகிதப்பங்கு நிறுவனங்கள் லாபமே, இந்திய மருத்துவக் கட்டமைப்பின் நோக்கமாக மாற்றப்பட்டது.

இந்திய தனியார் மருத்துவமனைகள் உடைமை என்பது இனிமேலும், மருத்துவத் துறை சார்ந்தவர்களின் கைகளிலும், உள்ளூர் முதலாளிகளின் கைகளிலும் இல்லை. அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகளின் பங்குகளை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு அந்நிய நாட்டு நிறுவனம் அப்பல்லோ (Apollo) நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவின் சிறு, குறு நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தியை பயன்படுத்தி அதன் கிளைகளை பரப்பி வருகிறது. மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனங்கள் கார்ப்பரேட் பாணியிலான நிர்வாக முறைகளை புகுத்தி சிறு, குறு கிளினிக்குகளையும், ஒற்றையாக பணிபுரியும் மருத்துவர்களையும் தங்கள் வலைப்பின்னலுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். HCL போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மருத்துவத்துறையில் கால்பதித்துள்ளன. பெரும் கார்ப்பரேட் மருத்துவமனிகளான Apollo, Fortis போன்றவற்றிற்கு  நோயாளிகளை பரிந்துரைப்பதன் வழியாக வருவாய் ஈட்டுகிறது இந்நிறுவனம்.

மருத்துவத்துறை என்பது வியாபார ரீதியாக நெருக்கடிகளற்ற லாபம் கொழிக்கும் துறையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ச்சி முகமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவின் மருத்துவத்துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருகின்றனர்.

சர்வதேச நிதி கழகத்தின் (International Finance Corporation) அலுவலர் கூறுகையில், “மருத்துவத்துறை மிக முக்கியமான உலகளாவிய லாபம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட வேகமாக வளர்ந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து மீண்டவுடன் மருத்துவ சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றாப்போல் தனியார் மருத்துவத் துறையை விரிவாக்க வேண்டும்” என்கிறார்.

தனியார்மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடுதான் இந்தியாவின் பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பு திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், சமூகத்திற்கான சேவையாக மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.

தனியார் மருத்துவத்துறை என்பது காப்பீட்டுத் திட்டத்தை பரவலாக்கியதன் மூலமாக ஏழை – நடுத்தர வர்க்கத்தையும் தனியார் மருத்துவ கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் மாநில அரசுகள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலமாக மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டரை பெறுவதற்கும், படுக்கைகள் காலியாக இல்லாத மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்கும் இந்த காப்பீட்டுத் திட்டம் எப்படி உதவும்?

மருத்துவத் துறையில் தனியார்மயமாக்களில் வெளிநாட்டு நிதியின் பங்கு அதிகரிக்கும் போது மருத்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் மருத்துவர்கள் கூட இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு லாபமே முதன்மையான நோக்கமாக கருதப்படுகிறது.

ஆக மொத்தத்தில், இந்திய மருத்துவத்துறை என்பது லாபத்தை மட்டுமே மையமாக கொண்டு ஒழுக்கமைக்கப்பட்டதாகவும் ஒரு சில நிறுவனங்களின் ஏகபோகமாகவும் மாறி வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை  தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் ஆகப் பெரும்பான்மையான ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாடு.

மருத்துவத் துறையை தனியார்மயமாகியது, அரசு மருத்துவ கட்டமைப்புக்கான செலவை குறைத்ததும், மிக மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்திருப்பதை தவிர்க்க, பொது சுகாதாரத்தில் நிறைய முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென்று வாதிடுகிறார்கள் பொது சுகாதார ஆர்வலர்கள்.

2018-ம் ஆண்டு இந்திய சுகாதரத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.5 சதவீதம் மட்டுமே செலவு செய்திருக்கிறது. இந்த நிலை சில பத்தாண்டுகளாக மாறாமல்தான் இருக்கிறது.

இந்த பலவீனமான மருத்துவக் கட்டமைப்பிற்குக் காரணம் தனியார்மயம்தான். தனியார் மருத்துவமனைகள் எப்போது முழு கொள்திறனுடன் இயங்குகின்றன. சாதாரண நாட்களில் உபரியாக படுக்கைகளை பராமரித்து வந்தால்தான் பெருந்தொற்று காலங்களில் அதைப் பயன்படுத்தி தொற்றை சமாளிக்க முடியும். ஆனால், எப்போதும் லாப நோக்கத்துடனே செயல்படும் தனியார் மருத்துவமனைகள் அதை செய்வதில்லை.

000

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

உண்மையில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் மீது அக்கறை இருந்தால்  பிரச்சனைகளுக்கான காரணத்தை சரி செய்ய வேண்டும். அதற்கு  பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பை மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் மேம்படுத்த வேண்டும். அதோடு இங்கு உள்ள தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இப்படி செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதி வாங்கும் பாரளுமன்றக் கட்சிகள் முன்வருவார்களா ? இவர்களை நம்பி பலனில்லை. அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்மடுத்தும்படி அரசை நிர்பந்தித்து வீதியில் இறங்கிப் போராடினால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும்.


ராஜேஷ்

செய்தி ஆதாரம் :
National Herald , People’s World , India Today , EPW , Business line

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க