ஜி.டி.அகர்வால்.

ங்கை ஆற்றை பாதுகாக்க வேண்டி தொடர்ந்து 111 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த 86 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி.அகர்வால் கடந்த 11-10-2018 அன்று மரணமடைந்தார். முன்னதாக அவர் ரிஷிகேசில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்து துறவியாக மாறுவதற்கு முன்னதாக கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார்.  மேலும் தேசிய கங்கை நதி நீர் ஆணையக் குழுவில் இருந்தபோது ஆறுகளை பாதுகாக்க பல மட்டங்களில் இந்திய அரசுக்கு அறிவுறுத்தி வந்தார். கங்கை ஆறை தங்குதடையின்றி பாயச் செய்தல்,  நீர்த்தேக்கங்களுக்கிடையே கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டங்களை நிறுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை நீக்கி ஆற்றை தூய்மைப்படுத்தல் ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கி உண்ணாநோன்பு இருந்து வந்தார். ஐந்தாவது முறையான இந்த கடுமையான உண்ணாநோன்பே அவரது இறுதி நோன்பாக அமைந்து விட்டது.

அவர் உண்ணாநோன்பு தொடங்கிய பின்னர் அரசு அகர்வாலை டெல்லிக்கு வலுக்கட்டாயமாக கொண்டு சென்றது. அவருக்கு கட்டாய உணவு புகட்டியது. அவரது கோரிக்கைகளை மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கிறது. கங்கை ஆற்றின் பாதுகாப்பையும் தூய்மையையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் ஒரு காட்சிப்பொருளாக வைத்துள்ள இந்த அரசிடம் எதிர்பாராத ஒன்று இது. பா.ஜ.க. பதவிக்கு வந்தவுடன் நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரை கடந்த 2014-ம் ஆண்டு ஆரவாரமாக மாற்றியது.  நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க அமைச்சகம் என்ற பெயர் சூட்டி உமா பாரதியையும் அதற்கு அமைச்சராக்கியது. தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையம் (The National Ganga River Basin Authority) என்ற பெயர் தேசிய கங்கை மன்றமாக (National Ganga Council) மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் “நமமி கங்கா” என்ற புதிய திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டுக்குள் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவதை உறுதிப்படுத்த 20,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதே ஆண்டில் கங்கை புத்தாக்க மேலாண்மைத் திட்ட அறிக்கையும் (Ganga Rejuvenation Basin Management Programme) சமர்பிக்கப்பட்டது. திட்டங்களின் பெயரை மாற்றியிருப்பதை தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.  கங்கை புத்தாக்க அறிக்கையை வேறு அமைச்சரகங்களின் கருத்துகளுக்காக அனுப்பி அதனை இறுதி செய்வது பற்றி எந்த அக்கறையும் அரசு செலுத்தவில்லை.

தேசிய கங்கை ஆறு (புத்துயிர், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) சட்ட முன்வரைவு (2017)-ன் கீழ் “கங்கை ஆறுக்கான தேசியக்குழு” இன்னமும் காகிதமாகத்தான் உள்ளது. கங்கை பாதுகாப்புப்படை ஒன்றை உருவாக்கி கங்கை ஆற்றை மாசுப்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க அந்த முன்வரைவு வலியுறுத்தியது. கங்கையின் புத்தாக்கத்தை மேற்பார்வையிட அதிகாரிகளை  விட துறை சார் நிபுணர்கள் கொண்ட ஒரு தன்னாட்சி அமைப்பு இருந்தாலன்றி அந்த சட்ட முன்வரைவின் நோக்கம் நிறைவேறாது என்று அகர்வால் அதை கேள்விக்குட்படுத்தினார். தவிர, திட்டம் செல்லும் போக்கைப் பார்த்தால் மோடி அரசு, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்த முன்வரைவை செயல்படுத்த வாய்ப்பில்லை.

படிக்க:
நாமக்கட்டி ஆண்டால் பண்டாரம் பரதேசிகளே புரபசரு !
கங்காஸ்நானம், கான்சரில் மரணம்!

அதே நேரத்தில் நீர் வளத்துறை அமைச்சகம் அதனுடைய கவனத்தை டாம்பீகமான ஆற்று நீர் இணைப்பு திட்டத்திற்கு திருப்பியது. கங்கை, பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளை திசை திருப்பிவிடும் இத்திட்டத்திற்கு 6 இலட்சம் கோடி ரூபாய் (87 பில்லியன் டாலர்) செலவாகும் என கற்பனையாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதன்முதலில் 2002-ம் ஆண்டில் காங்கிரசு அரசு கற்பனையாக மிதக்க விடப்பட்ட இத்திட்டம் பின்னர் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் ஏற்படும் தொடர்ச்சியான வறட்சி மற்றும் வெள்ளங்கள் உள்ளிட்ட பேரிடர்களுக்கான மைய அரசின் தீர்வாக முன் வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கூடுதல் பயனாக ஆயிரக்கணக்கான மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. உண்மையில் இச்சிக்கலை இத்திட்டத்தால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இத்திட்டம் பல பகுதிகளில் பேரழிவை உண்டாக்கும் என்பது மட்டும் திண்ணம். சான்றாக, கென் ஆறு – பேட்வா ஆறு இணைப்பு (Ken-Betwa link) பண்ணா புலிகள் தேசியப்பூங்காவின் பெரும்பகுதியை மூழ்கடித்து விடும்.

நீர்மின் திட்டங்களைப் பொறுத்தவரை உறுதியான நடவடிக்கை எடுக்க இந்த அரசு தவறியிருக்கிறது. 2013-ம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய பிறகு அம்மாநிலத்தின் 24 நீர்மின் திட்டங்களை உச்சநீதி மன்றம் நிறுத்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக நீர் வளத்துறை அமைச்சகமும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் உச்ச நீதிமன்றத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. நிறுத்தப்பட்ட அந்த 24 திட்டங்களையும் மீளாய்வு செய்ய நீர்வளத்துறை அமைச்சகம் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டிருக்கிறது. இது இன்னும் நடக்கவில்லை. நிறுத்தப்பட்ட அத்திட்டங்களை தொடருமாறு மைய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை உத்தரகாண்ட் முதலமைச்சர் கேட்டுள்ளார். முன்னதாக புதிய நீர்மின் திட்டங்கள் எதுவும் கங்கையில் அனுமதிக்கமாட்டோம் என்று சென்ற ஆண்டு கத்காரி கூறியிருந்தார்.

கங்கை ஆற்றினை தூய்மையாக வைத்திருக்க தேவையான குறைந்தப்பட்ச அளவு தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்கான விதிமுறைகளை இந்த வாரம் நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள திட்டங்கள் இவ்விதிமுறைகளை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் பின்பற்ற வேண்டும். ஆனால் இது மிகவும் தாமதமாக இருக்கலாம். ஏற்கனவே உள்ள அனைத்து திட்டங்களும் உடனடியாக விரிவான மறு ஆய்வு செய்யப்படாவிட்டால் கங்கை ஆற்றிற்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை சரி செய்வது மிகவும் கடினம்.

இந்த நான்காண்டுகளில் கங்கையாற்றை தூய்மைப்படுத்தவும் பாதுகாக்கவும் வெற்றுக்கூச்சல்களை தவிர உருப்படியானவை  எதுவும்

வினவு செய்திப் பிரிவு

இந்த அரசு செய்தவற்றில் இல்லை. அதே சமயத்தில் ஆபத்தான மற்றும் தவறான சில வழிமுறைகளையும் இந்த அரசு முன்னெடுத்திருக்கிறது. இந்நிலையில் அகர்வாலின் மரணமானது எவ்வளவு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன, அதில் எவ்வளவு சொற்பமான அளவு வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டன என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இருக்கிறது.

நன்றி: scroll.in

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க