சிவாஜியின் வளர்ச்சி மற்றும் ஆட்சியின் பன்முக பரிமாணங்களை ஆய்வு செய்தல் :

சிவாஜி குறித்த வரலாற்று உண்மைகளை சங்கபரிவாரங்கள் மறைந்த வரலாற்று உண்மைகளை தனது சப்ரங் இணையதளத்தில் ”Sivaji in Secular Maharastra” என்ற பெயரில் கட்டுரைத் தொடர்களாக எழுதியிருந்தார், சமூகச் செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத். அதன் தமிழாக்கத்தை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்..

ராட்டிய நாட்டுப்புறப்பாடல்களில் குறுநில நாடுகளின் மன்னனாக உருவகப்படுத்தப்பட்ட சிவாஜி சமகால வரலாற்றாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதன் விளைவு : இந்து தீவிரவாதிகளால் அவர் கைப்பற்றப்பட்டதுடன் அரசியல் அதிகாரத்திற்கு குறிப்பாக அவர் முடிசூடப்பட்டதன் பின்னனியில் இருக்கும் சாதிய பரிணாமத்தை மறைப்பார்கள்.

SA Dange
தோழர் எஸ்.ஏ. டாங்கே

தோழர் எஸ்.ஏ. டாங்கே (SA Dange) மற்றும் கோவிந்த் பன்சாரே (Govind Pansare) ஆகியோர் தங்களது வீச்சான சொற்பொழிவில் மராட்டியத்தில் சிவாஜியின் வரலாற்றை திறம்பட அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஜடுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) முதல் ஜி.எஸ்.சர்தேசாய் (GS Sardesai) வரையிலான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் இவற்றை ஆய்வு செய்துள்ளனர். 1994 முதல் பன்முக இந்தியாவுக்கான கல்வி இயக்கமான KHOJ அமைப்பு சமூக ஆய்வுகள் மற்றும் வரலாற்றை கற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தி வருகிறது. வரலாற்றாசிரியர்களின் பணிகள் உள்ளடக்கிய சிலவற்றை இங்கு தொகுத்து தருகிறோம்.

கேள்வி 1: சிவாஜியின் படையில் முதன்மை படைத்தலைவர்கள் யார்?

பதில்: தௌலத் கான் மற்றும் சிட்டி மிஸ்ரி. இருவரும் முஸ்லிம்கள்.

கேள்வி 2: சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் யார்?

பதில்: முல்லா ஹைதர். இவரும் ஒரு முஸ்லிம் தான்.

கேள்வி 3: சிவாஜிக்கு மிக நம்பகமான மற்றும் நெருக்கமான வேலைக்காரரும் ஆக்ரா சிறையிலிருந்து அவர் தப்ப உதவியரும் யார்?

பதில்: மதானி மஹ்தர். இவரும் முஸ்லிம் தான்.

கேள்வி 4: ராய்காட்டிலுள்ள தன்னுடைய அரண்மனையின் முன்னால் நாள்தோறும் வழிபாட்டிற்காக செல்லும் ஜெகதீஸ்வர் கோவிலுக்கு அடுத்து சிவாஜி கட்டியது என்ன?

பதில்: முஸ்லிம்களின் தொழுகைக்காக சிறப்பான ஒரு பள்ளிவாசலை கட்டினார்.

(ஆனால் வரலாற்றில் கீர்த்தி பெற்ற பல்வேறு நபர்களை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் கபளிகரம் செய்துள்ளனர்.)

சிவாஜியைப் பற்றிய ஒரு சமச்சீரான புரிதலுக்கு பள்ளி மாணவர்களைப் பழக்கப்படுத்துவதற்கான ஒரு ஆய்வினை சீர்குலைப்பதாக சிவசேனா அச்சுறுத்துகிறது. ஒரு முன்னோடி கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக எந்த தவறும் செய்யாத போதும் பள்ளி நிர்வாகத்தை எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மும்பை காவல்துறை மிரட்டுகிறது.

sivajiஒருபுறம் நாட்டை பாகுபடுத்தும் போக்கு மற்றும் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்துடன் திரிப்பது குறித்த விவாதம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாராமுகமாக இருந்து வருகிறது. இச்சூழலில், சிவாஜியைப் பற்றிய ஒரு சமச்சீரான பகுத்தறிவு பார்வையை தரக்கூடிய ஒரு கையேட்டை வெளியிட்டதற்கு எதிராக மிரட்டல்களையும் நியாயமற்ற எதிர்ப்புகளையும் மராட்டியத்தை ஆளும் ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ்-எம்.சி.பி அரசு பார்க்க நேர்ந்தது.

டான் பாஸ்கோ குழுமத்தால் நடத்தப்படும் மூன்று பள்ளிகளில் வரலாற்றைப் பற்றிய புரிதலையும் கற்றலையும் மேம்படுத்துவதற்காக தீஸ்தா செதல்வாத் (KHOJ மதச்சார்பற்ற கல்வித் திட்டம் வழியாக) எழுதிய ஒரு கையேட்டை அறிமுகப்படுத்தியது தான் சிக்கலின் தொடக்கம். மும்பையில் டான் பாஸ்கோ குழுமத்தால் இயக்கப்படும் பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இக்கையேடு அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்றுப் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இக்கையேடுகள் வரலாற்று ஆசிரியர்களுக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான பத்து மாத கால ஒத்துழைப்பின் விளைவாகும்.

படிக்க:
♦ சூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் !
♦ இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே!

சிவாஜியைப் பற்றிய பல தகவல்களுடன் சாதியத் தடைக்கற்களை தாண்டி அவர் அதிகாரத்திற்கு வந்து புகழடைந்ததை பற்றியும் இக்கையேடு கூறுகிறது. அப்சல் கானையும் சீரான முறையில் இது அணுகுகிறது. கலாச்சார பாதுகாவலர்களாக தங்களை தாமே அறிவித்து கொண்டவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன.

பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களின் முழு ஒப்புதலுடன் மூன்றில் இரண்டு பள்ளிகளில் ஜூன் முதல் இச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால் போரிவாலியில் உள்ள மூன்றாவது பள்ளியில் கையேட்டின் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான கருத்துக்களால் எரிச்சலடைந்த சில பெற்றோர்கள் அதை திரும்ப பெறக்கோரி பள்ளி தலைவரிடம் புகாரளித்து ஏற்றுக்கொள்ளப்படாததால் சிவசேனாவின் உள்ளூர் ஷாகா ஒன்றை அணுகினர். சிவசேனாவின் மகிழ்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்?

மராட்டியத்தில் குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக குறுகிய வகுப்புவாத அமைப்பு ஒன்றினால் சிவாஜி ஊதி பெருக்கப்பட்டுள்ளார். பாடநூல்களின் தரத்தை உயர்த்த அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வன்முறைகளால் இவ்வமைப்புகள் தடுத்து நிறுத்துகின்றன. 1986-ம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடநூல்களை திருத்த மராட்டிய பாடநூல் கழகம் எடுத்த முயற்சிகள் கூட இப்பிற்போக்கு சக்திகளால் கவிழ்க்கப்பட்டது.

சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட இந்த பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன. தன்னுடைய வாழ்நாளில் மகத்தான வெற்றிகளையும் புகழுமடைந்த ஒரு மனிதர் தன்னை மன்னனாக முடிசூடுவதற்கு பெனாரஸிலிருந்து ஒரு பார்ப்பனரை வரவழைத்து பூணூல் அணிந்து புனிதமாக்கும் சடங்கை செய்ய வேண்டியிருந்த துயரக்கதையை புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள் பலர் எடுத்துரைத்துள்ளனர். சிவாஜிக்கான சடங்கை செய்ய ஒப்புக்கொண்ட பார்ப்பன பூசாரிக்கு கணிசமான பணத்தை கொடுத்து ஈடு செய்ய வேண்டியிருந்தது.

SHIV SENA BJPசிறிது காலத்திற்கு முன்பாக இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்ற சமூகத்தை பிளவுபடுத்தும் மதவாத அமைப்புகள் இந்த வரலாற்று உண்மைகளை கையிலெடுத்து அதற்கு பல வண்ணம் பூசி கலவரத்திற்கு முயன்றன. ஆனால் ஜெயந்த் கட்காரி, என்.ஆர் பதக், கோவிந்த் பன்சாரே மற்றும் சரத் படேல் போன்றவர்களின் தொடர் முயற்சியால் மராட்டியத்தில் சிவாஜியை பற்றிய உண்மையான கருத்துக்கள் புத்துயிர் பெற்றன. மூத்த தொழிற்சங்கவாதி எஸ்.ஏ. டாங்கே 1950-களின் பிற்பகுதியில் மராட்டிய தொழிலாளர்களிடம் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகளான தியான்ச்சி சிவாஜி (Tyanche Shivaji), ஆம்ச்சே சிவாஜி (Aamche Shivaji) சிவாஜியை ஒரு ‘இந்து’ மன்னனாக காட்டும் சூழ்ச்சியையும், சிவாஜியின் ஆட்சிப் பகுதிகளில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களிடையே சமரச போக்கை உருவாக்க அவரெடுத்த கடுமையான முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும் செயல்களையும் கடுமையாக எதிர்த்தன.

சிவசேனாவை பொருத்தவரை சிவாஜிக்கும் அப்சல் கானுக்கும் இடையிலான சண்டை என்பது முஸ்லிம்களுக்கெதிரான தங்களது அரசியலை அதாவது அவர்களுக்கெதிரான தங்களது வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு கருவி அவ்வளவே. சிவசேனாவினால் மராட்டிய நாட்டுப்புற பண்ணான போவாடாவில் அவை பாடல் ஒலிப்பேழைகளாக வெளியிடப்பட்டு புகழ் பெற்றன. கடந்த காலத்தை நிகழ்கால அரசியலுக்கு அவர்கள் பயன்படுத்துவதை தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் எதிர்த்தாலும் கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் அத்தகைய முயற்சிகள் முளையிலேயெ கிள்ளியெறியப்படுகின்றன.

சமீபத்தில் டான் பாஸ்கோ கல்வி நிறுவனத்திற்கு எதிராக சிவசேனாவின் மிரட்டல்களையும் பிறகு மாநில அரசு உறுப்புகளான காவல்துறையும் கல்வித்துறையும் எப்படி செயற்பட்டன என்பது குறித்தும் இதன் வரலாற்று ஒளியில் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

படிக்க:
♦ சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
♦ காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

2001, செப்டம்பர் 17-ம் தேதி காலையில் கையேட்டைத் திரும்ப பெற நிர்வாகத்தை பணிய வைக்க சில பெற்றோர்களால் முடியாமல் போன பிறகு, சிவாஜியை ‘சூத்திரன்’ என்று இழிவுப்படுத்தியதாகவும் இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும் கூறி போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனாவின் அறிவிப்பு பலகை ஒன்று பள்ளிக்கு வெளியே வைக்கப்பட்டது.

Don-Bosco
டாப் போஸ்கோ பள்ளி (மாதிரிப் படம்)

அந்த நேரத்தில் பள்ளி நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டது. ‘சர்ச்சைக்குரிய’ பகுதியை நிபுணர்களின் குழு ஒன்றின் முடிவிற்கு நாம் விட வேண்டும். ஆனால் பள்ளிக்கு விடப்பட்ட மிரட்டல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நான் சொன்னேன். அதே சமயத்தில் சிவசேனாவின் வன்முறை வரலாற்றுப் பின்னணியின் கரணமாக பள்ளிக்கு பாதுகாப்பு கோரி செப்டம்பர் 18 காவல்துறையை அணுகினேன்.

ஆனாலும் பள்ளி நிர்வாகம் எடுத்த சரியான நிலைபாட்டை ஆதரிக்காமல் சிவசேனாவின் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால் கையேட்டை திரும்ப பெறுவதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என்று அப்பகுதியின் காவல்துறை துணை ஆணையர் இரக்கமற்ற முறையில் பள்ளி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.

விளைவு: செப்டம்பர் 19 காலையன்று பள்ளிக்கு முன்பு வெற்றி மிதப்பில் திரண்ட சிவசேனா கும்பல் நிர்வாகத்தின் மன்னிப்பு கடிதத்தை நகல் எடுத்து பொது மக்களுக்கு கொடுத்தது. பள்ளி நிர்வாகம் அளித்த மன்னிப்பு கடிதம் சிவசேனாவின் கைகளுக்கு எப்படி சென்றது என்பதை போலீசுதான் விளக்க வேண்டும். போலீசு இதற்கு உடந்தை இல்லையெனில் ஆங்கில அகராதிகளில் திருத்தம் வேண்டும்.

அதே போல பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் பள்ளிக்கு வந்ததுடன் கையேடு திரும்ப பெறப்படும் என்றும் உறுதியளித்த ஆச்சரியமும் நிகழ்ந்தது.

இப்பின்னணியில் அரசு ஊழியர்களின் நடத்தை தொடர்பாக எழுந்த இந்த சிக்கல்கள் மராட்டிய மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மராட்டிய மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டு விவாதப்பொருள்களாகின. ஒன்று, வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் போலீசு செயற்பட்டது மற்றொன்று, வரலாற்றைப் பற்றிய புதிய கண்ணோட்டம் வழங்குவதை கல்வித்துறை கட்டுப்படுத்தியது தொடர்பானது.

செப்டம்பர் 17 திங்களன்று சிவசேனாவிடமிருந்து பாதுகாப்புக் கோரி உள்ளூர் போலீசை தொடர்பு கொள்ள பள்ளி நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்தாலும் துணை ஆணையர் எஸ்.எஸ் கேம்கரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மும்பையில் சிவசேனா உருவாக்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் மிரட்டல்களுடன் சேர்த்தே இதை பார்க்க வேண்டுமெயொழிய தனித்துப் பார்க்க முடியாது.

இதற்கு சில வாரங்களுக்கு முன்பு மும்பை அருகிலுள்ள தானேவிலிருந்த ஒரேயொரு மருத்துவமனையை சிவசேனா முழுவதுமாக நொறுக்கியது அதன் உண்மையான நிறத்தை காட்டியது. நோயாளிகளைக் காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த மருத்துவமனை மருத்துவர்களால் கூட இரண்டு நோயாளிகளுக்கு கூடுதலாக எத்தனை பேர் இறந்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. இந்த கும்பலின் ஆத்திரத்திற்கு காரணம்? சாலை விபத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேனாவின் தானே தலைவர் ஆனந்த் திகே இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். ரூ 9 கோடி மதிப்புள்ள மருத்துவமனை சொத்துக்கள் மற்றும் கருவிகளை நொடிப்பொழுதில் நொறுக்கித்தள்ளிய சேனாவிற்கு எதிராக செயல்படத் தவறியதற்காக காவற்துறை ஆணையரும் மற்ற போலிஸ்காரர்களும் இப்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன் விசாரணையை எதிர்கொள்கின்றனர். அந்த மருத்துவமனை பின்னர் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு
♦ பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

இவையெல்லாம் டான் பாக்ஸோ நிறுவனத்தை மிரட்டிக்கொண்டிருந்த சிவ சேனாவின் உடனடி செயல்பாடுகள் ஆகும். அந்நிறுவனத்திற்கு எதிரான சிவசேனாவின் மிரட்டல்கள் ஒருபுறமிருக்க, சிவ சேனாவின் மகளிர் அமைப்பினரோ மும்பை நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஆணையரை அடித்துள்ளனர். இந்த சூழ்நிலைகளில் நூற்றுக்கணக்கான இளம் குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு பள்ளி நிர்வாகத்தின் அச்சத்தை நீக்க காவல்துறை என்ன செய்கிறது?

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகமும் எழுத்தாளரும் பலமுறை தெளிவுப்படுத்திய போதிலும் துணை ஆணையர் எஸ்.எஸ் கேம்கர் மூலம் போரிவலி காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து கையேட்டை திரும்ப பெற வைத்திருக்கிறது. முதல் நாள் நேரில் சந்திக்க முயன்று வீணானதைத் தொடர்ந்து செப்டம்பர் 18, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தொலைபேசியில் நான் தொடர்பு கொண்ட பிறகு நகர காவல்துறை ஆணையர் எம்.என். சிங்கின் நடத்தை இன்னும் மோசமானது.

தொலைப்பேசி அழைப்பிற்கு பிறகு துணை ஆணையர் கெம்கரிடமிருந்து பள்ளிக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்தன. மேலும் திரை மறைவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோவுடனான கிறிஸ்தவ தொடர்புகளைப் பயன்படுத்தி “சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்குமாறு” பள்ளிக்கு சிங் எச்சரித்தார்.

அந்த நேரத்தில், அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக பிரிவு 142 (ஆயுதங்களுடன் கூட தடை) நடைமுறையில் இருந்தது. இந்த புறச்சூழல் மற்றும் சிவசேனாவின் வன்முறை வரலாற்றை பார்க்கும்போது சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் அதன் அணுகுமுறையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் துணை ஆணையர் எஸ்.எஸ். கெம்கர் மூலம் முன்னோடி கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தை மன்னிப்பு கோர செய்து கையேட்டையும் திரும்ப பெற செய்திருக்கிறார் ஆணையர்.

மாநில பள்ளிக்கல்வித்துறையும் இதையேதான் செய்திருக்கிறது. மேல்நிலை பள்ளிக்கல்வி துறைக்கான சட்ட விதிமுறைகளின் படி, பள்ளிகள் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. இருந்தும் மாநில அரசு இயல்புக்கு மாறாக நடந்து கொண்டுள்ளது.

நாட்டின் பிற மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ் / வி.எச்.பி நடத்தும் பல்லாயிரம் நிறுவனங்கள் காளான்களை போல பரவியிருக்கின்றன, வெறுப்பை பரப்பும் நூல்களை தடையேதுமில்லாமல் அவை பயன்படுத்துகின்றன. இதற்கெதிராக விசாரணை நடத்த ஆளும் ‘மதச்சார்பற்ற’ அரசுக்கு எப்போதாவது ‘தைரியம்’ இருக்கிறதா? வரலாற்றை பகுத்தறிவுடன் கற்றலுக்கும், மதவெறி மற்றும் வெறுப்பின்பால் பின்னப்படும் வலைகளை தூய்மைப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் நமது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக ஏன் இருக்கின்றன? மதவெறி மற்றும் ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் கும்பலுக்கு இது சவாலாக இல்லையே ஏன்?

இந்த வழக்கு தற்போது மகாராஸ்டிர மாநில மனித உரிமை ஆணையத்திடம் உள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர், 29-ம் நாள் நடக்க உள்ளது. அதே நேரத்தில் கையேட்டின் ஆசிரியருக்கு எதிராக 153 சி பிரிவின் கீழ் ஒரு வழக்கையும் போரிவலி காவல் நிலையம் தொடுத்துள்ளது.

(தொடரும்)


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க