அயோத்தி : இருண்ட இரவு | பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு

டுத்த கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை / சீரழிவுகள் நடைமுறைப்படுத்த, முதலாளிகளுக்கு இன்று மோடி ஒரு அவசரத்தேவை, ஒருவேளை அயோத்தி இராமன் மோடியால் நீண்ட உறக்கத்தில் ஆழ்த்தப்படலாம் அல்லது மீண்டும் எழுப்பப்படலாம். தட்டி எழுப்பப்படுவதற்கு முன், இருண்டு கிடக்கும் இரகசியங்களை கட்டுடைக்க இந்நூல் பயன்படும்.

‘புதிய கலாச்சாரம்’ இதழில் வெளிவந்த இந்நூலின் ஆங்கில பதிப்பிற்கான விமர்சனமே இந்நூலை விடியலில் தமிழில் கொண்டுவரத் தூண்டியது. (நூலின் பதிப்புரையிலிருந்து)

1949-ம் ஆண்டு டிசம்பர் திங்கள், 23-ம்நாள், காலை 9 மணி பாபர் மசூதியுள் இராமர் சிலை வைக்கப்பட்டுப் பல மணிநேரம் கடந்த பின்னர், உ.பி. மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகர் காவல் நிலைய அதிகாரியான பண்டித் ராம்தேவ் துபே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்தார். அதில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147 (வன்முறையாகக் கலகம் செய்தல்), 448 (அத்துமீறி நுழைதல்), 295 (இறைவழிபாட்டு இடத்தின் புனிதத்தைக் குலைத்தல்) ஆகியவற்றின் கீழ், அபிராம்தாஸ், ராம்சகல்தாஸ், சுதர்சன்தாஸ், மற்றும் பெயர் தெரியாத 50 – 60 பேர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அந்த முதல் தகவல் அறிக்கைப் பதிவு இவ்வாறிருந்தது.

”காலை 7 மணி அளவில் நான் (ராம்தேவ்துபே) ‘ஜன்மபூமி’ இடத்திற்குச் சென்றேன். அங்கு காவற்பணியிலிருந்த காவலர் மாதா பிரசாத் (எண் 7, அயோத்தி காவல் நிலையம்) வழியாக நான் தெரிந்து கொண்டதாவது: பாபர் மசூதியின் சுற்றுச்சுவர் வாயில் பூட்டை உடைத்தும், சுவரிலும் படிக்கட்டிலும் தொத்தித் தவழ்ந்து ஏறியும் உள்ளே நுழைந்த 50 – 60 நபர்கள் ஸ்ரீபகவானின் சிலையை அங்கு நட்டி வைத்ததோடு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் காவி மற்றும் மஞ்சள் வண்ணங்களில் சீதா, இராமர் படங்களைக் கோடுகளாக எழுதினர். அந்த 50-60 நபர்களும் அதைச் செய்தபோது அங்கு காவற்பணியிலிருந்த ஹன்ஸ்ராஜ் (காவலர் எண் – 70) அவர்களைத் தடுத்தார். ஆயினும் அவர்கள் காவலரைப் பொருட்படுத்தவில்லை. அங்கு பாதுகாப்புப் பணி செய்த மாநில ஆயுதப் படையினர் அழைக்கப்பட்டனர்.

அதற்குள்ளாகக் கும்பல் மசூதிக்குள் நுழைந்து விட்டிருந்தது. அவ்விடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட  மூத்த அதிகாரிகள் செயலில் இறங்கினர். சில மணி நேரம் கடந்த பின்னர் 5000 – 6000 பேர் அங்கு கூடினர். மசூதிக்குள் நுழைய முயற்சி செய்த அவர்கள் மத முழக்கங்களை எழுப்பியவாறும், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் இருந்தனர். வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதனால் இசை கேடாக எதுவும் நிகழவில்லை. குற்றம் இழைத்தவர்களான (அபி) ராம்தாஸ், (ராம்) சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் பெயர் தெரியா 50 – 60 நபர்கள் அத்துமீறி வன்முறையாக மசூதிக்குள் நுழைந்து சிலையை நட்டி வைத்ததோடு, மசூதியில் புனிதத்தையும் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். பணியில் இருந்த அலுவலர்களும், பொதுமக்கள் பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். எனவே நிகழ்வு நன்றாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வு மெய்யெனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.” (நூலிலிருந்து பக்.29-30)

அயோத்தியிலிருந்து வெளியிடப்பட்ட இந்தி வார இதழான ”விரக்தா” மட்டுமே நடந்த நிகழ்வுகளை  பதிப்பித்து வெளியிட்டது. அதனுடைய ஆசிரியர் நன்கு அறியப்பட்டவரான இராம் கோபால் பாண்டே சரத் இந்து மகாசபை உறுப்பினர். ‘விரக்தா’ வெளியிட்ட செய்திகள் அனைத்தும் இந்து மதச் சார்புடையனவாகவே இருந்தன. மகாசபை உறுப்பினரை ஆசிரியராகக் கொண்ட விரக்தா உண்மை நிகழ்வுகளை வெளியிடும் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் இராமர் பாபர் மசூதிக்குள் தானே தோன்றினார் என்னும் ‘கடவுளின் செயலை’ முதன்முதலாக வெளியிட்டது இந்த இதழ்தான்.

பின்னாட்களில் இந்த இராம் கோபால் பாண்டே சரத் இந்தியில் ஒரு சிறு நூல் – ஸ்ரீ இராம ஜன்ம பூமி கா ரக்தா ரஞ்சித் இதிஹாஸ்  – இராமர் பிறந்த இடத்தின் குருதி தோய்ந்த வரலாறு எழுதி வெளியிட்டார் … அந்நூலில் கூறப்பட்டதாவது:

23-12-1949-ம் நாள் இந்தியாவுக்குப் பெருமைமிக்க நாள். அன்றுதான் நானூறு ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின் இராமருடைய பிறப்பிடம் மீட்கப்பட்டது. முந்தைய நாள் இரவின் போது நடந்தவை பற்றிக் கூற வேண்டுமானால் அந்த இரவில் இராமர் தனது பிறப்பிடத்தைத் தானே மீட்டுக் கொண்டார் என்பதை மட்டுமே கூற முடியும்”

இவ்வாறு விளக்கம் தந்த மதவாதிகள் இரவின் இருளில் நடத்தப்பட்ட வஞ்சகச் செயலாக்கத்தைத் திரையிட்டு மூடினார்கள். ஆனால் அந்த இரவின் போது நடந்த உண்மை நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து வெளிக் கொண்டு வர அரசோ, நிறுவனங்களோ, தனி ஆய்வர்களோ முயற்சி செய்யவே இல்லை. ‘கடவுளின் செயல்’ என்பது பொய்க் கதை என வெளிப்படுத்துவதும் ஒருவகைப்பட்ட ஆய்வே.  (நூலிலிருந்து பக்.12-13)

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

அயோத்தியில் நிகழ்த்தப்படவேண்டியவை, மற்றும் அதன் எதிர்விளைவுகள் ஆகியன குறித்து, அரசியல் கட்சி என்ற அளவில் மகாசபை நன்றாகவே அறிந்திருந்தது. நிகழ்த்தப்பட வேண்டிய செயல் ஆபத்துக்கள் நிறைந்தது. பாபர் மசூதிக்குள் அதிரடியாகப் புகுந்து ஆக்கிரமித்துக் கொள்வது என்பது காந்தி கொலைக்குப் பின் உருவாகிய எதிர்விளைவுகளைப் போலவும் ஆகிவிடக்கூடும். அதை விடுத்து வஞ்சக வழிமுறையைக் கையாண்டு, மசூதியைக் கைப்பற்றிக் கொள்வது எளிதாகவும் நல்ல பலன் தருவதாகவும் இருப்பதோடு, உணர்வுகளின் அடித்தளத்தில் இந்துக்களை ஒன்றுதிரட்டி, எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவற்றைத் திசை திருப்பவும் இயலும். திட்டமிட்டவாறு அயோத்தியில் நிகழ்த்தப்பட்டால் அதன் தாக்கம் பல தொடர் நிகழ்வுகளைச் செயல்படுத்தவும், நாடு முழுவதும் இந்து தீவிரவாதிகளுக்கு ஊக்கம் பெருகவும் வழிவகை செய்ய, அதன் வழிபட்டுத் தேசிய அரசியலிலிருந்து காங்கிரசை வெளியேற்றவும் இயலும்.

வெளிப்படையாகப் பேசப்படாத வேறொரு காரணமும் இருந்தது. முந்தைய நாட்களில் மகாசபை நல்ல வலுவுடன் இருந்த மராட்டியத்தில் கூட, மக்கள் எதிர்ப்பு மற்றும் அரசின் அடக்குமுறை ஆகிய காரணங்களால் கட்சி புத்துயிர் பெறுவது இயலாததாக இருந்தது. எனவே, புத்துயிர் பெறுவதற்கான ஒன்றைச் செயல்படுத்துவதற்கான இடமாக உ.பி. மாநிலத்தை மகாசபை சிந்திக்கத் தொடங்கியது. மேலும் அங்கு கட்சித் தலைவர்கள் செயல் ஊக்கம் நிறைந்தவர்களாக இருந்தனர். அங்கு பற்ற  வைத்தவுடன் வெடித்துச் சிதறக்கூடிய அளவிலான மதப்பூசல்கள் இருந்தன. அங்கிருந்த சமூக அமைப்பு மதங்களிடையே வெறுப்பை உருவாக்குதவற்கு ஏதுவானதாக இருந்தது. அனைத்திலும் மேலாக அங்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துத்துவ உணர்வுமிக்கவர்களாக இருந்தனர். எனவே அயோத்தியில் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிமிக்க திட்டம், இந்துமகா சபை வரலாற்றில் உ.பி. ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிடக்கூடும். கட்சி அதைத் தெளிவாகக் கண்டுகொண்டது. மகந்த் திக்விஜய் நாத் மற்றும் அவரது தளபதிகளான கோபால் சிங் விஷாரத், இராமச்சந்திரதாஸ் பரமஹன்ஸ், அபிராம்தாஸ் ஆகியோரும் அதைக் கண்டுகொண்டனர். (நூலிலிருந்து பக்.68-69)

இசுலாமிய வழிபாட்டு இடத்தை வன்முறையாகக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் குற்றவியல் வழிமுறைகளை கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. முதல் தகவல் அறிக்கையில் குற்றம் இழைத்தவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147 (கலகம் செய்தது), பிரிவு 275 (வழிபாட்டு இடத்தைத் தீட்டுப் படுத்தியது), பிரிவு 448 (அத்துமீறி நுழைந்தது) ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

1.2.1950 அன்று பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் குற்றவியல் வழக்கின் முக்கிய குற்றவாளி அபிராம்தாஸ் எனப் பெயர் கூறிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை. சில ஆண்டுகள் வரையில் இழுத்தடிக்கப்பட்ட இந்த குற்றவியல் வழக்கு, இறுதியில் உள்ளூர் இந்து மகா சபைத் தலைவர்கள் தொடுத்த உரிமையியல் வழக்கில் மூழ்கடிக்கப்பட்டது. (நூலிலிருந்து பக்.162)

இந்நூலைப்பற்றிய விரிவான மதிப்புரை : பாபர் மசூதியில் ராமன் குதித்த திருட்டு வரலாறு !

நூல் : அயோத்தி : இருண்ட இரவு
(பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு)
ஆசிரியர்கள் : கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே.ஜா
ஆங்கிலம் வழி தமிழில் : கே. சுப்பிரமணியன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576 772 ; 94434 68758
மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 248
விலை: ரூ 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagampanuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க