சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 17


காட்சி : 25 (தொடர்ச்சி…)

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர், தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோபந்த், சிட்னீஸ்.

சிவாஜி : மராட்டியர் ராஜ்யம் சம்பாதிக்க உழைத்தனர்; பிராமணர்கள் பட்டாபிஷேக வைபவத்திலே உண்டு களிப்பதா? இது எந்த வகையான நியாயம்?

காகப்பட்டர் : சாமான்யாளுக்கும் தெரியாத நியாயம் இது. இது நியதி. சாஸ்திரம்.

சிவாஜி : இவைகளுக்குப் பிறகு?

காகப்பட்டர் : பூணூல் தரிக்கப்படும். பூபதி ஆகலாம்.

சிவாஜி : (ஆட்களை அழைத்து) இவர் கட்டளைப் படி நடவுங்கள்.

காகப்பட்டர் : சிவாஜி! நீ இன்றே புறப்பட்டுப் போய் திவ்ய க்ஷேத்திரங்களைத் தரித்து, ஆங்காங்கு அர்ச்சனைகள் செய்துவிட்டு வரவேண்டும். அதற்குள் நான் இங்கு ஆக வேண்டிய ஆரம்பச் சடங்குகளைச் செய்து வைக்கிறேன்.

சிவாஜி : அவ்விதமே செய்கிறேன். திவ்ய க்ஷேத்திரங்களிலே என்னென்ன வகையான பூஜைகள் செய்ய வேண்டும்?

காகப்பட்டர் : பூஜைகள் இஷ்டம் போல் செய்யலாம். அந்தந்த திவ்ய க்ஷேத்திரங்களிலும் அனுஷ்டிக்க வேண்டிய பொதுவான ஒரு பூஜை முறை இருக்கிறது.

சிவாஜி : என்ன ஸ்வாமி அது?

காகப்பட்டர் : பிராமணனுக்குத் தானம் செய்வது விட்டலன் கோயிலானாலும், விநாயகர் ஆலயமானாலும், வேலேந்தி கோயிலானாலும், திரிசூல் கோயிலானாலும், கோயிலுள்ள மூர்த்தியாக இருப்பினும் பிராமணனுக்குத் தானம் தர வேண்டும். கோயிலைப் பற்றிய வித்தியாசம் பார்க்காமல்…

சிவாஜி : சென்று வருகிறேன். குருஜி…

காகப்பட்டர் : போய் வா போ போ, புண்ணியத்தைத் தேடு

(சிவாஜி போகிறான்) (சிவாஜி போன பிறகு ரங்கு வருதல்)

ரங்குப்பட்டர் : குருதேவா! இந்த மண்டலத்துக்கு முதல் அமைச்சராம்! நம்மளவராம். தங்களைக் காண …

காகப்பட்டர் : அழைத்து வாயேண்டா நம்மவா வருவதற்குமா தடை? போடா! போய் அழைத்து வா! அப்படியே அங்கு – மிங்கும் உலவிக் கொண்டிருக்கும் வாள் தூக்கிகளை, சந்தடி செய்யாமல் சற்று தூரமாகவே இருக்கச் சொல்லு. அவர் ஏதோ அந்தரங்கமான விஷயந்தான் பேச வருவார்.

(ரங்கு மோரோபந்த்தை அழைத்துவர)

மோரோபந்த் : நமஸ்தே, குருஜீ! நமஸ்தே !

காகப்பட்டர் : வருக பிரதம மந்திரியாரே! அமருக இப்படி அருகில், அடே, ரங்கு! பாலும் பழமும்.

மோரோபந்த் : வேண்டாம் ஸ்வாமி! நான் வந்திருப்பது…

காகப்பட்டர் : முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன்.

மோரோபந்த் : குருதேவா! இவர்?

காகப்பட்டர் : நமது சீடன்! பரம சீடன் தாராளமாகப் பேசலாம்.

மோரோபந்த் : தாங்கள் தயவு செய்து கோபியாமல் என் வார்த்தையைக் கேட்டருள வேண்டும். சிவாஜியை க்ஷத்திரியனாக்க, மகுடாபிஷேகம் செய்ய தாங்கள் வந்திருப்பது அவ்வளவு உத்கிருஷ்டமான காரியம் அல்ல என்பது என் அபிப்பிராயம்.

காகப்பட்டர் : தீர்க்க ஆலோசனைக்குப் பிறகே வரச் சம்மதித்தேன். மோரோ பண்டிதரே ஏன் தாங்கள் கலங்கக் காரணம்?

மோரோபந்த் : இந்தப் பட்டாபிஷேகம் பாவ காரியம் என்று சொல்லி இந்த முயற்சியைப் பலமாக எதிர்த்தவன் நான்.

காகப்பட்டர் : அப்படியா, ஏன் ?

மோரோபந்த் : சாஸ்திர விரோதம், புது சம்பிரதாயம் எதிர்கால ஆபத்து இந்த ஏற்பாடு என்பதால் தான். தாங்கள் அறியமாட்டீர்கள், மராட்டியத்தில் நடைபெற்று வரும் செயல்களை, பழைய ஐதீகங்களைப் பாழ்படுத்தும் ஓர் பயங்கர முயற்சியை சாது சன்யாசிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும். அவர்கள் எண்ணத்தின்படி காரியம் நடைபெற்றால், தாங்கள் சூத்திர சிவாஜியை க்ஷத்திரிய சிவாஜியாக்கினால், அவர்கள் வீசும் வலையில் நாடு விழுகிறது என்றுதான் அர்த்தம். வைதீக மார்க்கம் மங்கி மடியும். ஆரிய குலோத்தமா! இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா?

காகப்பட்டர் : மோரோ பண்டிதரே ! என் சிந்தனையைக் குழப்பி விட்டீரே! நான் சிவாஜிக்கு முடி சூட்டுவதுதான் நமது சனாதன மார்க்கத்துக்குப் புதிய பலம் என்று எண்ணியல்லவா இதற்குச் சம்மதித்தேன். கற்பாதித்தேன்.

மோரோபந்த் : பொதுப்படையாகப் பார்க்கும்போது தாங்கள் சொல்வது சரி. ஆனால் மராட்டியத்தின் இன்றைய நிலையை மட்டுமல்ல; எதிர்காலத்தையும் பற்றிக் கவனிக்கும்போது …

காகப்பட்டர் : கவனித்தாக வேண்டுமே மோரோ பண்டிதரே! நாம் செய்கிற காரியம் காலா காலத்துக்கும் பலன் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே. ஆமாம், அவசரக் கோலத்தில் நாம் நடந்துக் கொள்ளக் கூடாதே. தாங்கள் சொல்லியிருப்பது புதியதோர் சிக்கல். நான் எதிர்பாராதது.

மோரோபந்த் : சிவாஜி ராஜனாகட்டும். அதாவது, ராஜா வேலை பார்க்கட்டும். குருதேவா! ஆனால் அது அவனுடைய ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இருக்க வேண்டும். உரிமையாக்குவதும், தருமமாக்குவதும், வேத ஆகமச் சம்மதம் தருவதும், சாஸ்திரமுறைப்படி மகுடாபிஷேகம் செய்விப்பதும் க்ஷத்திரியனாக்குவதும் தான் ஆபத்து என்று கருதுகிறேன். சிவாஜியைச் க்ஷத்திரியனாக்கினால் குருஜீ, ஒரு புதிய பரம்பரையை உருவாக்குகிறார் என்றல்லவா பொருள். சிவாஜியின் மகன், பேரன், அவன் மகன் இப்படிப் பரம்பரையாய் ராஜாக்கள் ஆவர்; க்ஷத்திரியராவர்.

காகப்பட்டர் : புரிகிறது, மோரோ பண்டிதரே! நன்றாகப் புரிகிறது. இதற்காகத்தான் என் சம்மதம் பெற இவ்வளவு துடித்தனரோ? தந்திரக்காரர்கள். மோரோபந்த்! கவலைப்படாதீர். என் தீர்ப்பை மாற்றிக் கொள்கிறேன். பட்டாபிஷேகத்திற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறேன்.

மோரோபந்த் : ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். க்ஷமிக்கணும். மகா பண்டிதரான தங்களிடம் தர்க்கித்ததாக எண்ணிவிடக்கூடாது.

காகப்பட்டர் : மோரோபந்து நமக்குள் ஏன் இந்த வித்தியாசம்? உபச்சாரம் இருவருக்கும் ஒரே அபிலாஷை என்று இப்போது சொல்லுகிறேன். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது ஆரிய தர்மத்துக்கு லாபகரமானதா குலதர்மத்துக்கு ஏற்றதா என்பதைக் கவனித்துதான் செய்வேன்.

மோரோபந்த் : அதிலென்ன சந்தேகம்? ஆரிய தர்ம ரட்சகராகிய தங்களுக்குத் தெரியாததும் உண்டோ.

காகப்பட்டர் : போய் வாரும் சிவாஜிக்குப் பட்டமில்லை. போய்வாரும்.

மோரோபந்த் : எப்படிச் செய்தால் யுத்தம் என்று தங்களுக்குத் தோன்றுகிறதோ அவ்விதம் செய்யுங்கள் ஸ்வாமி. நான் வருகிறேன்.

(மோரோ போகிறார்)

ரங்குப்பட்டர் : என்ன ஸ்வாமி இது கிணறு வெட்ட புதுப்புது பூதங்களாகக் கிளம்பிண்டே வர்றதே. சிவாஜிக்குப் பட்டாபிஷேகம் கூடாதுன்னு இந்தப் பண்டிதர் சொல்றார். சிவாஜியிடமோ பேசி வாதாடி ஒரு முடிவுக்கு வந்தாச்சு. ஊர் பூராவும் அமர்க்களப்படறது, மகுடாபிஷேக வைபவ விஷயமா!

படிக்க:
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

காகப்பட்டர் : அதனாலே நம் தலையிலேயே நாம் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதா? மோரோ பண்டிதர் சொன்னதைத் தள்ளிவிட முடியுமா?

ரங்குப்பட்டர் : அப்படியானா சிவாஜிக்கும், சிட்னீசுக்கும் கொடுத்த வாக்கு?

காகப்பட்டர் : வேதவாக்கு மிஞ்சியாடா இதெல்லாம். மோரோ பண்டிதர் சொல்றார் பட்டம் கூடாதுண்ணு. தகுந்த காரணமும் காட்டறார்.

ரங்குப்பட்டர் : விபரீதமாகிப் போகும் ஸ்வாமி இப்போது நாம் மாத்திப் பேசினா.

காகப்பட்டர் : விபரீதமும் ஆகாது; வினாசமும் நேராது; தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.

ரங்குப்பட்டர் : ஆமாம் ஸ்வாமி நம்மவர் சொன்னா என்பதற்காக
அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படாது பாருங்கோ .

காகப்பட்டர் : எது செய்தாலும் சிலாக்கியம்? சிவாஜிக்கு முடிசூட்டுவது நல்லதா? மோரோ பண்டிதர் சொல்கிறபடி பட்டாபிஷேகத்தைத் தடுத்தால் நல்லதா என்பதை யோசிக்க வேணும். சாங்கோபாங்கமாக. நம்ம தர்மம் பாழாகக் கூடாது.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி நாம் சொன்ன எல்லா நிபந்தனைகளுக்கும் சிவாஜி சம்மதித்து விட்டார். ஹோமம், சமாராதனை, பிராமணாளுக்குத் தானம், துலாபாரம், சகலத்துக்கும் – சம்மதிக்கிறார். பாடம் உண்டு!

காகப்பட்டர் : பாடம் இருக்கோன்னோ ? இருந்தும் சமாராதனை செய்யறானே! தட்சணை தருகிறானேண்ணு பூரிச்சுப் போறே. என்னடா பிரமாதம் இதிலே. ஸ்ரீராமச் சந்திரருக்குப் பட்டாபிஷேகம் ஏற்பாடு ஆச்சேன்னோ ?

ரங்குப்பட்டர் : ஆமாம். ஏற்பாடாச்சு.

காகப்பட்டர் : கைகேயி செய்த காரியத்தாலே தடைப்பட்டு, ஸ்ரீராமச்சந்திரர் கானக வாசத்துக்குக் கிளம்ப நேரிட்டு விட்டதே! அப்போ அவரோடு கூடவே போயாகணும்னு சீதாப் பிராட்டியாரும், கிளம்பற போது, என்னடா நடந்தது?

ரங்குப்பட்டர் : ஸ்ரீராமச்சந்திரர் வைதேகி கானகத்திலே கொடிய துஷ்ட மிருகங்களெல்லாம் உலவும். நீ வரப்படாதுண்ணு ..

காகப்பட்டர் : மண்டு அந்தக் கட்டத்தைத் தாண்டுடா ! சீதாப்பிராட்டியாரைத் தன் கூட அழைச்சிண்டு போக ராமபிரான் சம்மதித்து விடுகிறார். பிறகு அதற்குப் பின்னாலே…

ரங்குப்பட்டர் : ஊர் முழுதும் புலம்பறது.

காகப்பட்டர் : தேசம் பூராவும் தானே அழறது. எவ்வளவு சோகமான கட்டம். பட்டத்துக்கு வர வேண்டிய இளவரசன் ராமபிரான். அதே நாளிலே, அரண்மனை நந்தவனத்திலே உலவ வேண்டிய ராணியை அழைச்சுண்டு ஆரண்யம் போறதுண்ணா அதைவிடச் சோகமான – துக்கமான சம்பவம் வேறே இருக்க முடியுமா?

ரங்குப்பட்டர் : முடியாது ஸ்வாமி முடியாது. இப்ப கூட பக்தா இந்தச் சம்பவத்தைப் படிச்சா கதறுராளே.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட சமயத்திலே ஸ்ரீராமச்சந்திரர் சீதாப்பிராட்டியாரைப் பார்த்து, திருவாபரணங்களை எல்லாம் கழற்றி பிராமணாளுக்குத் தானம் செய்துட்டு வாண்ணு சொன்னாரடா. எப்படிப்பட்ட சமயம்! ஊரே புலம்பிண்டிருக்கு. சீதாப்பிராட்டியாருக்கும் ராம பிரானுக்கும் பதினான்கு ஆண்டு கானக வாசம். அப்படிப்பட்ட கஷ்ட காலத்திலேயும் பிராமணாளுக்குத் தானம் கொடு, ஆபரணங்களைக் கழற்றிக் கொடுண்ணு சீதாப்பிராட்டியாருக்கு ராமபிரான் சொன்னதாகவும், சீதாப்பிராட்டி அது போலவே செய்ததாகவும் ராமாயணம் சொல்றது அசட்டு ரங்கு! நீ ராமாயணத்தைப் பாராயணம் செய்ததாகவும் சொல்றே. இந்த சிவாஜி செய்த தானாதிகளைப் பார்த்து, ஒரே ஆனந்தக் கூத்தாடுகிறாயே. ஆரண்யம் போகும் பொழுது அழுத கண்ணோடு இருந்த சீதா தேவியே பிராமணாளுக்குத் தானம் செய்திருக்கா. பட்டத்துக்கு வரப்போகிற சிவாஜி தானம் கொடுக்கிறதிலே என்னடாப்பா ஆச்சரியம். சமயம் எதுவாக இருந்தாலும், ஆனந்தமோ, துக்கமோ, எப்படிப்பட்ட சமயமானாலும் பிராமணாளுக்குத் தானம் தர வேணுமடா. அதுதானே சாஸ்திரம். சந்தோஷமான சமயத்திலே தானம் தருகிறாண்ணா அவாளோட சந்தோஷம் பல மடங்கு அதிகமாக வேணும்னு அர்த்தம். இதெல்லாம் நம்ம சாஸ்திரத்திலே இருக்குடா.

ரங்குப்பட்டர் : இருக்கு ஸ்வாமி, இருக்கு.

காகப்பட்டர் : ரங்கு ஒரு யோசனை. அபூர்வமான யோசனை உதிச்சிருக்கு. எடு, சுவடிகளை கொடு இப்படி.

(ரங்கு சுவடிகளைக் கொடுக்க, காகப்பட்டர் அதை வீச, ரங்கு எடுக்க)

டேமண்டு! அவைகள் அங்கேயே கிடக்கட்டும். ஒடு! போய் அந்த சிட்னீஸை வரச்சொல் உடனே.

(ரங்கு போதல், சிட்னீஸ் வருதல்)

காகப்பட்டர் : வாப்பா சிட்னீஸ்

சிட்னீஸ் : குருஜி ஏன் முகவாட்டமாய் இருக்கிறீர்! ஏடுகள் ஏன்
இப்படி ?

காகப்பட்டர் : ஏடுகள் என்னை வாட்ட, அவை போதும்டாப்பா சிட்னீஸ்! தேடித் தேடிப் பார்க்கிறேன். தெளிவு இல்லை; திகைப்புத்தான் அதிகமாயிண்டிருக்கு.

சிட்னீஸ் : எதற்கு ஸ்வாமி?

காகப்பட்டர் : எதற்கா? சிட்னீஸ் விஷயத்தை வீணாக வளர்த்த இஷ்டப்படவில்லை. பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுவிட்டனவா?

சிட்னீஸ் : ஆகா! தாமதம் இராது குருஜி. நூற்றுக்கணக்கானவர்கள் பணி செய்தபடி இருக்கிறார்கள்.

காகப்பட்டர் : பாபம்.. குழந்தை மனசு அவாளுக்கு..

சிட்னீஸ் : கொற்றவனிடத்தில் அவர்களுக்கு அவ்வளவு பக்தி குருதேவா!

காகப்பட்டர் : பரிதாபம் எல்லாவற்றையும் பாழ் செய்கின்றன இந்த ஏடுகள்.

சிட்னீஸ் : ஸ்வாமி! தாங்கள் சொல்லுவது?

காகப்பட்டர் : புரியவில்லையா சிட்னீஸ், பட்டாபிஷேக ஏற்பாட்டை நிறுத்திவிடு.

சிட்னீஸ் : நிறுத்திவிடுவதா? ஏன்?

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்